TNPSC Thervupettagam

சுங்கச் சாவடிகள் குறித்த தலையங்கம்

April 5 , 2022 854 days 447 0
  • ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, தரமாகக் கட்டமைக்கப்பட்ட சாலைகள் மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
  • இந்த சாலைகளை அமைப்பதற்கான மொத்த செலவும், சுங்கக் கட்டணமாக சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.
  • இந்தியா சுதந்திரமடைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான், மேலைநாடுகளைப் போல சுத்தமான, அகலமான சாலைக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை நமது ஆட்சியாளர்களுக்குத் தோன்றியது.
  • அதன் விளைவாக, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தங்க நாற்கரச் சாலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் உள்ள மாநிலச் சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டன.

முறைகேடு இல்லை

  • சாலைகள் விரிவாக்கத்துக்கான நிலங்களைக் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகளால், ஆரம்பத்தில் இந்தத் திட்டப் பணிகள் மந்த கதியில் நடைபெற்றன.
  • 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நீதிமன்றங்களில் நிலுவையிலிருந்த வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, நான்கு வழிச் சாலை திட்டப் பணிகள் வேகமெடுத்தன.
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக ஆட்சியில் நான்கு வழிச் சாலைகள், ஆறு வழிச் சாலைகளாகவும், எட்டு வழிச் சாலைகளாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன.
  • மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.
  • "தனியார் பங்களிப்புடன் கட்டுதல்-பராமரித்தல்-ஒப்படைத்தல்' என்ற அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
  • இந்தச் சாலைகளை அமைப்பதற்கான செலவுத் தொகையை ஈடுகட்டும் வகையில், குறிப்பிட்ட ஆண்டுகள் வரை வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலித்துக் கொள்வதற்கு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
  • நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுகள் கடந்த பிறகு, சாலைகளின் பராமரிப்புக்காக தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கின்றன.
  • சாலை அமைப்பதற்கான செலவை ஈடுகட்ட சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் தவறில்லை. ஆனால், சாலை பராமரிப்புக்கு முந்தைய கட்டணத்தைவிட அதிகக் கட்டணம் வசூலிப்பதன் நியாயம்தான் புரியவில்லை.
  • நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை இரு தொகுதிகளாகப் பிரித்து, ஆண்டுதோறும் ஏப்ரல் 1, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. 2008-ஆம் ஆண்டைய சுங்கக் கட்டண விதிகளின்படி, ஒட்டுமொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் இந்தக் கட்டண உயர்வு மேற்கொள்ளப்படுகிறது.
  • சுங்கக் கட்டணம் உயர்ந்தால், சரக்கு வாகனங்களுக்கான வாடகை அதிகரித்து அதன் எதிரொலியாக அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • தமிழகத்தில் மொத்தமுள்ள 48 சுங்கச் சாவடிகளில் 24}இல் கடந்த 1-ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • சென்னை மதுரவாயல் - வாலாஜா பிரிவில் உள்ள நெமிலி, சென்னசமுத்திரம் ஆகிய இரு சுங்கச் சாவடிகளில் மட்டும் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை.
  • தமிழகத்தில் 22 சுங்கச் சாவடிகளில் கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு 10 சதவீதமும், நல்லூர் சுங்கச் சாவடியில் 40 சதவீதமும், சூரப்பட்டில் 16 சதவீதமும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • தரமான சாலைகளால் கனரக வாகனங்களின் பராமரிப்புச் செலவும், பழுது ஏற்படுவதும் குறைவதோடு, நெடுஞ்சாலை அருகே வாகனங்களை நிறுத்துவதற்கும் ஓட்டுநர்கள் ஓய்வெடுப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறுகிறது.
  • இந்த வசதிகளுக்காக வானக ஓட்டிகள் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்றும் இதில் தவறு காண முடியாது என்றும் அந்த ஆணையம் சுட்டிக்காட்டுகிறது.
  • வளர்ச்சி அடைந்த எல்லா நாடுகளிலும் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. ஆனால் எந்தவொரு சுங்கச் சாவடியிலும், எந்த வாகனமும் ஒரு வினாடிகூட நிற்க வேண்டிய அவசியமில்லை.
  • இங்கே இருப்பதுபோல, ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் அவலம் உலகில் வேறெங்கும் கிடையாது.
  • தடையில்லாமல் விரைந்து பயணிப்பதற்காகத்தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை ஆணையம் நினைவில் கொள்ளவேண்டும்.
  • திருநெல்வேலியிலிருந்து 625 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கு காரில் வருவதற்கு 12 சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தியாக வேண்டும்.
  • 60 கி.மீ. தொலைவுக்கு ஒன்று என்ற அடிப்படையில் சுங்கச் சாவடிகள் இருப்பதை மூன்று மாதங்களுக்குள் உறுதி செய்வோம் என அண்மையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார். ஆனால், தமிழகத்தில் 40/45 கி.மீ. தொலைவுக்குள் ஒன்று என்ற அடிப்படையில் சுங்கச் சாவடிகள் அதிக அளவில் நிறுவப்பட்டுள்ளன.
  • இதை முறைப்படுத்தி, தேவையற்ற இடங்களில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றுவதற்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, தனியார் நிறுவனங்கள் கட்டண முறைகேடு செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது என்பதில் மகிழ்ச்சி.
  • ஆனால், அதே நேரத்தில், குறைந்த சுங்கக் கட்டணம், தடையில்லாப் பயணம், தரமான சாலைகள் என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும்.

நன்றி: தினமணி (05 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்