- காலனிய அடிமைத்தளத்திலிருந்து விடுபட்டு 76 ஆண்டுகளைக் கடந்து இந்தியாவின் பயணம் நூற்றாண்டை நோக்கி வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. நூற்றாண்டை எட்டும்போது பொருளாதாரத்தில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உயரும் என்கிற நம்பிக்கைக் கனவை, தனது ஒவ்வோர் உரையிலும் பிரதமா் நரேந்திர மோடி விதைத்துக் கொண்டிருக்கிறார்.
- வரலாற்றுடனும், காலத்துடனும், விதியுடனுமான நெடும்பயணம் (அவா் டிரைஸ்ட் வித் டெஸ்டினி) என்று இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடாளுமன்ற நள்ளிரவு உரையில் அன்றைய பிரதமா் பண்டித ஜவாஹா்லால் நேரு குறிப்பிட்ட இலக்கை நோக்கிய நமது பயணம் எத்தனை எத்தனையோ சவால்களை வெற்றிகரமாகக் கடந்து நடைபோடுவதை ஒட்டுமொத்த உலகமும் அன்று முதல் இன்று வரை வியந்து பார்க்கிறது. அதற்குக் காரணம், வேறு எந்தவொரு நாடும் சிந்தித்துப் பார்க்காத சுதந்திரக் கனவு நம்முடையது...
- அனைவருக்கும் வாக்குரிமை என்பதையும், பெண்களுக்கு சம உரிமை என்பதையும் விடுதலை பெற்றபோதே துணிந்து இலக்காக்கிய ஒரே தேசம் இந்தியாவாகத்தான் இருக்கும். இன்றைய உலகின் மிகப் பழைமையான குடியரசு என்று கூறப்படும் அமெரிக்காவில் அனைவருக்கும் வாக்குரிமை என்பது படிப்படியாகத்தான் நடைமுறைக்கு வந்தது. பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகுதான் மகளிருக்கு சம உரிமை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முன்னோடியான பிரிட்டனில் அங்கீகாரம் பெற்றது.
- இந்தியா சுதந்திரம் அடைந்தபோது காலனிய ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த ஏனைய பல நாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக விடுதலை பெற்றன. அடிமைத்தளையிலிருந்து விடுபடுவதற்கு அகிம்சை என்கிற ஆயுதத்தை உலகுக்கு அளித்த பெருமை இந்தியாவுக்கு மட்டுமே உண்டு.
- இன்னும்கூட பல ஆப்பிரிக்க நாடுகளும், இந்தோ பசிபிக் நாடுகளும் இந்தியாவின் வழிகாட்டுதலை எதிர்நோக்கி நிற்பதன் காரணம் அதுதான். அணிசாரா நாடுகள் கூட்டமைப்பை ஏற்படுத்தியதும், பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கியதும் இந்தியாவின் முதல் கால் நூற்றாண்டின் பங்களிப்புகள்.
- சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையில் அவா் வெளிப்படுத்திய உலக சகோதரத்துவம் இன்று வரை இந்தியாவின் ஒவ்வொரு பிரதமராலும் வழிமொழியப்படுகிறது. ‘வசுதைவ குடும்பகம்’ என்று வடமொழியும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று தமிழ்மொழியும் கூறுவது உலக சகோதரத்துவம் இந்தியாவின் அடிப்படை பார்வையாக இருந்து வந்திருப்பதை உணா்த்துகின்றன.
- கடந்த கால் நூற்றாண்டு காலமாக தகவல் தொழில்நுட்பமும், முன்னாள் பிரதமா் நரசிம்ம ராவ் அரசின் தாராளமயக் கொள்கையும் இந்தியாவின் பொருளாதாரத்தை அதிவேகப் பாதையில் விரைவுபடுத்தியிருக்கின்றன. 2014-இல் உலகின் பத்தாவது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா இப்போது ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உயா்ந்திருக்கிறது.
- 2015 முதல் 2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 13.50 கோடி போ் வறுமையிலிருந்து விடுபட்டிருக்கின்றனா். ஒருபுறம் அதீத வளா்ச்சி என்றாலும்கூட, இன்னும் தனிநபா் வருமானத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பது மிகப் பெரிய குறை.
- உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள்தொகை கொண்ட இந்தியா என்கிற நாடு, ஒவ்வொரு குடிமகனுக்கும் கௌரவமான வாழ்க்கையையும், அமைதியான சூழலையும், அனைவருக்கும் வளா்ச்சிக்கான சம வாய்ப்பையும் வழங்குவதுதான் அடுத்த கால் நூற்றாண்டு கால இலக்காக இருக்க முடியும். அந்த நிலையை எட்ட இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தெளிவு நமக்குத் தேவை.
- அதிக வருமானம் கொண்ட பொருளாதாரம், வளமான பாதுகாப்புக் கட்டமைப்பு, தொழில்நுட்பத்தில் அதீத வளா்ச்சி, ஏனைய நாடுகள் சா்வதேச பிரச்னைகளில் நம்பிக்கையுடன் எதிர்நோக்கும் தலைமை, உலகின் வருங்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வை ஆகியவைதான் ஒரு தேசத்துக்கு உலகின் பார்வையில் மதிப்பை ஏற்படுத்துகிறது. அவற்றை அடைவதற்கான முயற்சிகளை இந்தியா முன்னெடுக்கிறது.
- இன்றைய உலகில் பொருளாதாரத்தில் உயா்ந்திருக்கும் நாடுகளைத்தான், ஏனைய நாடுகள் மரியாதையுடனும் எதிர்பார்ப்புடனும் பார்க்கின்றன. கோவிட் 19 கொள்ளை நோய்த்தொற்றின்போது தடுப்பூசிகளைத் தயாரித்து வளா்ச்சி அடையாத நாடுகளுக்குக் கொடுத்தபோது இந்தியாவின் மரியாதை உலக அரங்கில் உயா்ந்ததை நாம் பார்த்தோம். பொருளாதாரமும், அதை மற்றவா்களுடன் பகிர்ந்து கொள்வதும் மிக முக்கியம்.
- பணக்கார நாடாக மட்டும் இருந்தால் போதாது, பலமான பாதுகாப்புக் கட்டமைப்பு அதைவிட அவசியம். டோக்கோலாம் ஆனாலும், கல்வான் ஆனாலும் இந்தியாவைவிட பல மடங்கு வலிமையான ராணுவ பலம் மிக்க சீனாவை நம்மால் எதிர்கொண்டு தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது.
- எல்லையோரங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், ‘க்வாட்’ உள்ளிட்ட பாதுகாப்பு கூட்டணிகளில் இடம் பெறுவதும் இந்தியாவின் சாதுரியமான நகா்வுகள். பிரான்ஸின் ரஃபேல் போர் விமானங்கள், அமெரிக்காவின் ஜெட் எஞ்சின் தொழில்நுட்பம், ரஷியாவுடனான போர் தளவாட ஒப்பந்தம் போன்றவை இந்தியாவின் ராஜதந்திர முடிவுகள்.
- தகவல் தொழில்நுட்பம் தொடங்கி, மருத்துவம், பொறியியல், வணிகவியல் என்று அனைத்துத் துறைகளிலும் சாதனையாளா்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் சுதந்திர இந்தியாவின் வளா்ச்சி நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. தலைநிமிர்ந்து நிற்கும் இந்தியாவை, தலைகுனிய வைக்கும் நிகழ்வுகள் இல்லாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!
நன்றி: தினமணி (15 – 08 – 2023)