TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 11

August 21 , 2022 718 days 395 0

லட்சியத்தை நோக்கிய பயணம்

  • அநேக ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு லட்சியத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கினோம், இப்போது அந்த லட்சியம் கைகூடுவதற்கான நேரம் வந்துள்ளது; நாம் அன்று ஏற்றுக்கொண்ட சபதத்தை முழுமையாக மட்டுமல்ல செறிவாகவும் நிறைவேற்ற வேண்டும்.
  • இரவு மணி 12 அடிக்கும்போது உலகம் தூங்கிக்கொண்டிருக்கும், இந்தியா உறக்கத்திலிருந்து விழிக்கும், சுதந்திரம் பெறும். அற்புதமான ஒரு தருணம் வாய்த்துள்ளது வரலாற்றில் அப்படி எப்போதாவது ஒருமுறைதான் அபூர்வமான தருணம் வாய்க்கிறது; நாம் பழையனவற்றிலிருந்து புதியனவற்றுக்குள் அடியெடுத்துவைக்கிறோம்; ஒரு காலகட்டம் முடிந்து தேசத்தின் ஆன்மா விடுதலை பெறுகிறது. நீ்ண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலிருந்து விடுபட்டு தனது உள்ளத்திலிருக்கும் விருப்பத்தை அது தெரிவிக்கிறது.
  • இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மனித குலத்தின் எண்ணற்ற பிறருக்கும் சேவையாற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள பொருத்தமான, புனிதமான தருணம் இதுவே.
  • (டெல்லியில் இந்திய அரசமைப்பை வகுப்பதற்கான பேரவையில், 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் ஜவாஹர்லால் நேரு ஆற்றிய உரையின் ஒரு பகுதி).

நாடா, மதமா

  • 1949 நவம்பரில் டெல்லியில் நடைபெற்ற அரசமைப்பு அவையின் முதல் நிறைவு உரையில், இந்தியர்கள் தங்கள் மதத்தைவிட நாடே உயர்வு எனக் கருதுவார்களா? அல்லது நாட்டைவிட மதமே உயர்வு எனக் கருதுவார்களா என அம்பேத்கர் கேள்வி எழுப்பினார். அரசியலில் பக்தி அல்லது நாயக வழிபாடு ஏற்படுத்தும் ஆபத்துகளையும், சமூக ஜனநாயகத்தை உறுதிப்படுத்தாத அரசியல் ஜனநாயகத்தின் ஆபத்துகள் குறித்தும் அந்த உரையில் அவர் எச்சரித்தார்.

ஜே.பி.யின் எழுச்சியுரை

  • 1975, ஜூன் 25 அன்று புது டெல்லி ராம் லீலா மைதானத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடியிருந்தனர். கவிஞர் ராம்தாரி சிங் தின்கர் எழுதிய ‘சிங்காசன் காலி கரோ கி ஜனதா ஆத்தி ஹை’ (சிம்மாசனத்திலிருந்து ஆட்சியாளர்களைத் துரத்த மக்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்) எனும் கவிதையை மேற்கோள் காட்டி சோஷலிஸ்ட் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் உரையாற்றினார். இந்திரா காந்திக்கு எதிராக நாம் அனைவரும் ஒரு எழுச்சிமிகுந்த சவாலை முன்னெடுக்க வேண்டும் என்று ஜேபி அப்போது வலியுறுத்தினார். அந்த உரைக்கு சில மணி நேரத்துக்குப் பின்னர் நள்ளிரவில், நாட்டில் நெருக்கடி நிலையை இந்திரா காந்தி பிறப்பித்தார்.

தமிழ்நாடு அமலான நில உச்ச வரம்புச் சட்டம்

  • சுதந்திர இந்தியாவில் கொண்டு வரப்பட்ட நில உச்ச வரம்புச் சட்டம் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. நிலங்கள் ஒரு நபரிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ குவிவதைத் தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டதுதான் நில உச்ச வரம்புச் சட்டம். இதன்படி தனிநபர்களின் நில உரிமைக்கு உச்ச வரம்பை நிர்ணயித்து, உபரி நிலங்களை அரசு கையகப்படுத்தியது.
  • இந்தச் சட்டம் 1958இல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. தற்போதுள்ள உடைமைகள் மீது உச்சவரம்பு நிர்ணயிப்பது; எதிர்காலத்தில் வாங்கப்படும் நிலங்கள் மீது உச்சவரம்பு நிர்ணயிப்பது என இரண்டு அம்சங்களை இச்சட்டம் கொண்டிருந்தது. அதே வேளையில் விவசாயத்தைச் சீராக்குவதையும் இச்சட்டம் நோக்கமாகக்கொண்டிருந்தது.
  • இச்சட்டத்தைப் பின்பற்றி 1961இல் தமிழகத்தில் நிலச் சீர்திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி தமிழகத்தில் 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று உச்சவரம்பு அமல்படுத்தப்பட்டது. ஆனால், தமிழகத்தில் 1970ஆம் ஆண்டில் இச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி குடும்பத்துக்கு 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்பது 15 ஏக்கராகக் குறைக்கப்பட்டது. இதன் பின்னர் நில உச்சவரம்பு சட்டத்தைப் பயன்படுத்தி கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் நிலமற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன.
  • பிறகு, இச்சட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களையும் வகையில் பினாமி மாற்றுத் தடுப்புச் சட்டமும் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது. சுதந்திர இந்தியாவில் நில உச்ச வரம்புச் சட்டத்தைக் அமல்படுத்திய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

கல்வி: கல்விக்கு ஜிடிபியில் ஆறு சதவீதம்

  • 1964இல் கல்வியின் அனைத்து அம்சங்களையும் ஆராய்வதற்காக அன்றைய பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக இருந்த டி.எஸ்.கோத்தாரி தலைமையில் கோத்தாரி கல்வி ஆணையம் அமைக்கப்பட்டது.
  • முதியோர் கல்வி, கல்வி நிர்வாகம், கல்விக்கான நிதி, உயர்கல்வி, மனிதவளம், கற்பித்தல் வழிமுறைகளும் நுட்பங்களும், அறிவியல் கல்வி, மாணவர் நலன், ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர் நிலை, பிற்பட்ட வகுப்பினருக்கான கல்வி, பெண் கல்வி, கல்வித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கான 19 பணிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன.
  • பள்ளிக் கல்வி 10 ஆண்டுகள், எஸ்.எஸ்.எல்.ஸி., பியுசிக்கான இண்டர்மீடியேட் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள், பட்டப்படிப்பு மூன்று ஆண்டுகள் என்கிற வகையில் கல்வி அமைப்பை 10 2 3 என்று இந்த ஆணையம் பிரித்தது. பள்ளிகளும் கல்லூரிகளும் இயங்கும் நாட்களின் எண்ணிக்கை முறையே 230, 216 என்று அதிகரிக்கப்பட வேண்டும்; தேசிய விடுமுறைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்; ஒரு கல்வியாண்டின் பாட நேரம் ஆயிரம் மணி நேரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது, நாட்டின் ஜிடிபியில் ஆறு சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. நாட்டுக்கு தேசியக் கல்விக் கொள்கை தேவை என்பதையும் சுட்டிக்காட்டியது.

நன்றி: தி இந்து (21 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்