TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 13

August 24 , 2022 715 days 431 0

மருத்துவம்: மனநல நரம்பியல் நிறுவனம்

  • மனநலம், நரம்பியல் தொடர்பான சிகிச்சையிலும், கல்வியிலும் இந்தியாவை உலகின் முதன்மை நாடாக மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்புதான் தேசிய மனநல நரம்பியல் நிறுவனம் (நிம்ஹான்ஸ்).
  • சார்லஸ் இர்விங் ஸ்மித் எனும் மருத்துவரால் 1847இல் தோற்றுவிக்கப்பட்ட பெங்களூர் மனநலக் காப்பகத்திலிருந்து இதன் வரலாறு தொடங்குகிறது. அந்தக் காப்பகம் 1925இல் மைசூர் மனநல மருத்துவமனையானது. இந்த மருத்துவமனையே 1974இல் அகில இந்திய மனநல நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு, தேசிய மனநல, நரம்பியல் நிறுவனம் ஆக்கப்பட்டது.
  • மனநலச் சிகிச்சையில் மட்டுமல்லாமல், மனநலக் கல்வியிலும், மனநலம் தொடர்பான ஆய்வுகளிலும் இதுவே இந்தியாவின் தலைசிறந்த நிறுவனமாக விளங்குகிறது.
  • கல்வி, ஆராய்ச்சி நோக்கங்களுக்காக 1975 இல் அங்கே திறக்கப்பட்ட மனித மூளை மாதிரிகளைச் சேகரிக்கும் நரம்பியல் அருங்காட்சியகம், உலக அளவில் பிரசித்திபெற்றது. மனநலக் கல்வி மேம்பாட்டில் ஆற்றிவரும் அளப்பரிய சேவையைக் கருத்தில்கொண்டு 1994இல் இந்த நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டது.
  • மனநலம் குறித்த தவறான புரிதலை நீக்கி, அது குறித்து வெளிப்படையாக உரையாடும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் பணியில் நிம்ஹான்ஸ் தீவிரமாக இயங்கிவருகிறது. இன்று இந்தியாவில் அதிகரித்திருக்கும் மனநலம் குறித்த விழிப்புணர்வுக்கு, நிம்ஹான்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி முன்னெடுப்புகளுக்கும் சமூகக் களப்பணிகளுக்கும் முக்கியப் பங்குண்டு.
  • மனநலம் தொடர்பாக ஆண்டுதோறும் நிம்ஹான்ஸ் நடத்தும் தேசிய மனநலக் கணக்கெடுப்பு அதன் சமூகக் களப்பணிகளில் முக்கியமானது.

தமிழ்நாடு: மகத்தான மதிய உணவுத் திட்டம்

  • சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தில் தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் ஒரு மகத்தான மக்கள் திட்டமாக உருவெடுத்தது. பசியோடு இருக்கும் ஏழை, எளிய குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைக்கவும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையிலும்தான் மதிய உணவுத் திட்டம் உருவானது.
  • நாட்டிலேயே முதன்முறையாகப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தமிழகத்தில்தான் தொடங்கப்பட்டது. சுதந்திரத்துக்கு முன்பே 1923 இல் சென்னை மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அன்றைய மதராஸ் மாகாணத்தை ஆண்ட நீதிக் கட்சி அரசு தொடங்கி வைத்தது.
  • சுதந்திரத்துக்குப் பிறகு மதராஸ் மாகாணத்தின் முதல்வராக இருந்த காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தினார். 1956 ஆம் ஆண்டில் மதிய உணவுத் திட்டத்தை மக்கள் பங்களிப்புடன் கூடிய திட்டமாக தமிழகம் முழுவதும் முழுமை அடையச் செய்தவர் காமராஜர்தான்.
  • அதன் தொடர்ச்சியாக 1982இல் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் இத்திட்டம் சத்துணவுத் திட்டமாக விரிவடைந்தது. அவருடைய ஆட்சிகாலத்தில்தான் ‘சத்துணவுத் திட்டம்' என்று தனித்துறையாக இத்திட்டம் செயல்படத் தொடங்கியது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் இத்திட்டம் இன்னும் மேம்படுத்தப்பட்டது.
  • தமிழகத்தைப் பார்த்துதான் பிற மாநிலங்களும் 2000க்குப் பிறகு மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தின. அந்த வகையில் இத்திட்டத்தைத் தொடங்கி இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்தது தமிழகம்தான்.

இலக்கியம்: பிரிவினை பிரித்த காதல்

  • சமீபத்தில் புக்கர் பரிசு வழியாகக் கவனம் பெற்ற எழுத்தாளர் கீதாஞ்சலிஸ்ரீ. இந்திய மொழி எழுத்தாளர் ஒருவர் புக்கர் பரிசு வாங்குவது இதுவே முதல் முறை. இதற்கு முன் சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய், கிரண் தேசாய், அரவிந்த் அடிகா ஆகியோர் நேரடி ஆங்கிலப் படைப்புகளுக்காக புக்கர் பரிசு வாங்கியிருக்கிறார்கள்.
  • கீதாஞ்சலிஸ்ரீ ‘ரீட் சமாதி’ என்ற தன் இந்தி நாவலின் மொழிபெயர்ப்புக்காக புக்கர் பரிசைப் பெற்றிருக்கிறார். டெய்சி ராக்வெல் இதன் மொழிபெயர்ப்பாளர். தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசிரியர் ஏ.கே.ராமனுஜத்தின் மாணவர் டெய்சி. கீதாஞ்சலிஸ்ரீயின் நாவலுக்கான இந்த அங்கீகாரத்தில், மொழிபெயர்ப்பின் பங்கும் பேசப்பட்டுவருகிறது.
  • கீதாஞ்சலியின் இந்த நாவல் குஷ்வந்த் சிங், சல்மான் ருஷ்டி எனப் பலரும் எடுத்துக்கொண்ட இந்தியப் பிரிவினையை பேசுபொருளாகக் கொண்டது. மகள், மனைவி, அம்மா, பாட்டி எனச் சமூகம் வகுத்துள்ள அந்தஸ்துகளில் வாழ்ந்த மா என்ற 80 வயதுப் பெண், அந்தச் சமூகம் வகுத்த கோடுகளைத் தாண்டும் கதை இது. இதில் ஸ்தூலமாக பாகிஸ்தான் எல்லைக் கோட்டையும் அவர் தாண்டுகிறார். அவருடைய பதின் பருவத்தில் பிரிட்டிஷார் வெளியேறுவதற்கு் முன் கிழித்த கோடு அது.
  • மாவின் கணவருடைய இறப்பிலிருந்து இந்த நாவல் தொடங்குகிறது. மகன் வீட்டில் மருமகள், பேரன்களுடன் வசிக்கும் அவர், அதற்குப் பிறகு தனிமையில் முடங்கிப் போகிறார். யாரிடமும் பேசாமல் அறைக்குள் கிடக்கிறார். சமூக ஒழுக்கங்களை அனுசரிக்கும் தன் மகனுடைய வீட்டிலிருந்து ஒரு நாள் அவர் காணாமல் போகிறார்.
  • தனித்து வாழும் சுதந்திரச் சிந்தனையாளரான தன் மகள் வீட்டில் அவர் இருப்பதை நாவல் கண்டுபிடித்துச் சொல்கிறது. அங்கு அவருக்குச் சுதந்திரம் கிடைக்கிறது. அவருடைய மகள், பெண்களின் பாலியல் சுதந்திரம் குறித்தெல்லாம் எழுதக்கூடிய பெண்ணியவாதி என நாவல் விவரிக்கிறது.
  • மாவுக்கு ரோசி என்கிற திருநங்கையின் நட்பு கிடைக்கிறது. மனைவி, அம்மா, அத்தை, பாட்டி என்ற சமூக அடையாளங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் களைய மாவுக்கு அவர் உதவுகிறார். கடைசியில் எண்பதாம் வயதில் அவர் தன்னலம் பேணுபவராக, சுதந்திரவாதியாக மாறுகிறார். மகளின், அம்மாவின் கதாபாத்திரங்களை கீதாஞ்சலி இந்த இடங்களில் மாற்றிக் கொடுக்கிறார்.
  • மா, பாகிஸ்தானுக்குச் செல்ல நினைக்கிறார். இந்த நாவலில் எதிர்பாராத் திருப்பம் நிகழ்கிறது. ஒரு பெண்ணியக் கதை, ஒரு பிரிவினை அரசியல் சார்ந்த கதையாகிறது. மகளையும் ரோசியையும் கூட்டிக்கொண்டு கடவுச் சீட்டு இல்லாமல் எல்லைக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைகிறார் மா.
  • ஒரு காவல் அதிகாரியிடம் தன் கணவனைக் காணச் செல்கிறேன். அவர் பெயர் அலி அன்வர் என்கிறார் மா. இந்த இடத்தில் நாவல் எழுச்சி கொள்கிறது. மா, சந்திரபிரபா எனும் பதின் பெண்ணாகவும் ஆகிறார். பிரிவினை பிரித்த காதலின் வேதனைப் பாடலாகவும் இந்த நாவல் விரிவுகொள்கிறது.
  • தனிமனித வாழ்க்கையில் அரசியல் நிகழ்த்தும் குறுக்கீடு, பெண்கள் மீதான சமூக அடையாளச் சுமை என இந்த நாவல் காத்திரமான விஷயங்களைப் பேசுகிறது. ஆனால், மொழியளவில் எளிமையையும் அங்கதத்தையும் கொண்டுள்ளது. இந்த விசேஷமான அம்சம் நாவலின் சர்வதேச அங்கீகாரத்துக்கான காரணம் எனலாம்.

மகளிர்: குரலற்றவர்களின் குரல்

  • பிரிட்டிஷ் இந்தியாவின் வங்க மாகாணத்தில் (இன்றைய வங்கதேசம்) பிறந்த மகாஸ்வேதா தேவி, அடக்குமுறைக்கும் ஆணாதிக்கத்துக்கும் எதிராக ஒலித்த பெண்ணியக் குரல்களில் முதன்மையானவர்.
  • 13 வயதில் சிறார் கதைகள் எழுதத் தொடங்கிவிட்டாலும் 30 வயதில் அவர் எழுதிய ‘ஜான்சியின் ராணி’தான் எழுத்தாளராக அவரது முதல் படைப்பு என்று கருதப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் சாதியக் கட்டுமானங்களாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வாலும் அல்லல்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றார்.
  • கற்பனைக் கதைகளுக்கும் மகாஸ்வேதா தேவிக்கும் ஏழாம்பொருத்தம். இவர் படைத்தவை எல்லாமே வாழ்க்கைக் கதைகள்தாம். ஏழை விவசாயிகள், பழங்குடியினர், ஆதரவற்ற பெண்கள், சுரண்டலுக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்படும் பெண்கள் போன்றோரைத் தன் கதைகளின் மாந்தர்களாக்கினார். விளிம்புநிலை மக்களுக்குத் தன் கதைகளில் புராண அடையாளம் கொடுத்து, அவர்களது உரிமைக் குரலை ஒலிக்கவைத்தார்.
  • எழுத்தாளராக மட்டுமல்லாமல் உண்மையை உலகுக்குச் சொல்லும் இதழாளராகவும் அவர் அறியப்பட்டார். ஒடுக்கப்பட்டோர் மீது நிகழ்த்தப்படும் அடக்குமுறையையும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் கட்டுரைகளின் வாயிலாக ஆவணப்படுத்தினார்.
  • அதிகாரமற்ற எளிவர்களின் குரலாக ஒலிக்கும் வகையில் ‘போர்திகா’ என்கிற காலாண்டிதழை நடத்தினார். சிறந்த சமூக அரசியல் விமர்சகராகவும் செயல்பட்டார். திருமண உறவிலிருந்து வெளியேறுவது என்பது அரிதாக இருந்த 1960-களில் துணிவுடன் மணவிலக்குப் பெற்றார். திருமண வாழ்க்கையின் காயங்களும் கசடுகளும் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கினாலும் எளியவர்களுக்காக எழுதுவதைத் தவம்போல் தொடர்ந்தார்.
  • மகாஸ்வேதா தேவியின் படைப்புகள் சமகால அரசியல் செயல்பாடுகளின் எதிரொலியாக வெளிப்பட்டன. தங்கள் காடுகளுக்குள் ஆங்கிலேயர்கள் நுழைவதை எதிர்த்த வங்க மாகாணத்தின் (தற்போதைய ஜார்கண்ட்) சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவைப் பற்றி இவர் எழுதிய ‘காட்டின் உரிமை’, எழுபதுகளில் வங்கத்தில் எழுச்சிபெற்ற நக்சலைட் இயக்கம் குறித்த ‘மதர் ஆஃப் 1084’, சந்தால் பழங்குடியினப் பெண்ணைப் பற்றிய ‘திரௌபதி’, பழங்குடியினப் பெண்ணின் அனுமதியின்றி அவரைப் படம்பிடித்த புகைப்படக் கலைஞர் பற்றிய ‘காங்கோர்’ போன்றவை மகாஸ்வேதா தேவியின் முக்கியப் படைப்புகள்.
  • தன் சுயசரிதையை எழுதத் தொடங்கியவர், அது முற்றுபெறும் முன்பே இறந்துவிட்டார். ஆனால், அவரது படைப்புகள் இறவாப் புகழுடன் அவரது சரித்திரத்தைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

காந்தியடிகளுக்கு செய்ய வேண்டிய கைம்மாறு

  • தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளை அறிவற்ற ஒருவர் புதுதில்லியில் வெள்ளிக்கிழமை படுகொலை செய்துவிட்டார். கொல்லப்பட்ட விதம், மீண்டும் நினைவுகூர முடியாதபடிக்கு மிகவும் துக்ககரமானது. அவருடைய மறைவால் நாட்டைச் சோக இருள் சூழ்ந்திருக்கிறது, இதிலிருந்து விடுபடுவது எளிதல்ல.
  • இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு நாட்டு மக்களுக்கான வானொலி உரையில் கூறியதைப் போல, காந்தியடிகள் நமக்கு போதித்த அறிவுரைகள், துணிச்சலான வழிகாட்டுதல், ஈடு இணையற்ற தீர்க்க சிந்தனை, எளிதில் குலையாத பொறுமை, தாங்கொணாத பேரிடர் காலங்களிலும் காக்க வேண்டிய அமைதி ஆகியவற்றை - நெடிய இந்த நாட்டின் வரலாற்றில் இதுவரை ஏற்பட்டிராத - இந்தச் சூழலில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.
  • தேசப் பிரிவினையால் ஏற்பட்ட கொந்தளிப்பான இந்தச் சூழலிலும் காந்தியடிகளின் உறுதியான வழிகாட்டுதல், தவறேதும் இல்லாத முடிவுகள், தோல்வி ஏற்படாது என்ற நிச்சயமான உளப்பாங்கு ஆகியவை நமக்கு வழிகாட்ட வேண்டும்.
  • உலகமெங்கும் அவருடைய மறைவை அடுத்து ஆயிரக்கணக்கான இரங்கல் செய்திகளும் புகழஞ்சலிகளும் வானொலிகளிலும் தந்திக் கம்பிகளிலும் இடையறாது ஒலித்துக்கொண்டிருப்பது, எப்படித் தன்னுடைய கீர்த்தியால் ஒரு சமாதானத் தூதராக உலகையே அவர் வசப்படுத்தியிருந்தார் என்பதை உணர்த்துகின்றன. அதனால்தான் உலக மக்களை அடிமைத் தளைகளிலிருந்து விடுவிக்கவந்த இரண்டாவது ரட்சகர் என்று அவரைப் போற்றுகிறார்கள்.
  • உலகம் முழுவதும் பாராட்டும்படியான அவருடைய புகழுக்கும் செல்வாக்குக்கும் பின்னுள்ள ரகசியம்தான் என்ன? அதற்குக் காரணம் அவருடைய பண்பாடு – எல்லாவிதமான நற்குணங்களுக்கும் உறைவிடமான பண்பாடு. எந்த ஒரு விஷயத்தையும் அவர் நெருங்கியும் ஆழ்ந்தும் சிந்தித்தார்.
  • எந்த ஒன்றிலும் சத்தியத்தையே அவர் தெளிவாகவும் துணிச்சலாகவும் நாடினார். மற்றவர்கள் வாய்மொழியாகச் சொல்வதை மட்டும் அவர் கேட்டுக்கொள்ளவில்லை. வெற்றிபெறுவதற்கான கூறுகள் எவை என்று என்றைக்குமே அவர் ஆராய்ந்ததில்லை. உண்மையான நம்பிக்கையுடனேயே பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அணுகினார், நண்பர்களின் வற்புறுத்தலோ, எதிரிகளின் கூர்வாள்களோ அவரைப் பலவீனப்படுத்தியதில்லை.
  • அவருடைய வாழ்நாள் முழுவதும் எந்தக் கண்டமாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் எப்படிப்பட்ட தட்ப-வெப்பநிலை நிலவும் பிரதேசமாக இருந்தாலும் – தென்னாப்பிரிக்காவாக இருந்தாலும் சபர்மதி அல்லது பிஹாரின் மலை அடிவாரத்தில் உள்ள சம்பாரண் மாவட்ட அவுரி சாகுபடியாளர்கள் மத்தியிலாக இருந்தாலும் - அவரை முழுமையாக நம்பலாம் என்ற உணர்வோடு விசுவாசத்துடன்தான் மக்கள் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். அப்படியொரு நம்பிக்கையை ஏற்படுத்தியதால்தான், மக்களுடைய எண்ணங்களை உருவாக்குவதிலும் அதை வழிநடத்துவதிலும் அவர் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தார்.
  • இனிக்கஇனிக்கப் பேசும் வழக்கம் அவரிடமில்லை, ஆனால், செயல்திட்டங்கள் இருந்தன. மற்றவர்களிடம் இல்லாத முக்கிய அம்சம் - ஆக்கபூர்வமான திட்டங்களோடு அவர் இருந்தார் என்பதுதான். அடுத்தவர்களுடைய திட்டங்களையும் பேச்சுகளையும் வெறுமனே அவர் கண்டித்துக் கொண்டிருக்க மாட்டார். அவர்களுடைய வழிமுறையைவிட சிறந்ததொரு வழிமுறை இருப்பதை அவர்களுக்கே சுட்டிக்காட்டுவார்.
  • காந்தியடிகள் தனித்துவமான சிந்தனையைக் கொண்டிருந்தார், அவருடைய வாழ்க்கை சனாதன தர்மத்தை வழிமுறையாகக் கொண்டிருந்தது. அவருடைய சிந்தனையையும் வாழ்க்கை முறையையும் - நவீன சிந்தனைக்குத் தடையாக இருப்பது என்று கண்டித்து ஒதுக்கிவிட முடியாது.
  • ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வாழ்ந்த அவர் காலத்திய தலைவர்கள் பலரும், அவருடைய எளிமையான வாழ்க்கை முறை, உயர்ந்த சிந்தனை, கடுமையான அடக்குமுறைகளைச் சந்திக்க நேர்ந்தாலும் முழுமையான அகிம்சை வழியிலான சத்தியாகிரகப் போராட்டம், அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சேவை என்ற அவருடைய சிந்தனை – செயல்களால் பெரிதும் கவரப்பட்டனர்.
  • தேசத்தின் தந்தை நம்மைவிட்டுப் போய்விட்டார். நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்? இனி நம்முடைய கடமைகள் என்ன? காந்தியடிகளின் நம்பிக்கைக்குரிய தளகர்த்தர்களான நம்முடைய தலைவர்கள் பண்டிட் ஜவாஹர்லால் நேருவும் சர்தார் வல்லபபாய் படேலும், மறைந்த தலைவர் நமக்குக் காட்டியுள்ள வழியில் நடக்க, ஞானம் என்ற கைவிளக்கை ஏந்தி நிற்கின்றனர். இசக்கியேலால் சுட்டிக்காட்டப்பட்ட இஸ்ரவேலர்களின் காவல்காரரைப் போன்றவர் காந்தியடிகள்.
  • காந்தியடிகள் தன்னுடைய கடமையைச் செய்துவிட்டார். நம்மை எதிர்நோக்கியுள்ள
  • தூண்டுதல்கள், ஆபத்துகள் குறித்து நம்மை எச்சரித்திருக்கிறார். தன்னுடைய ஆன்மாவையே தன்னைப் படைத்த இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டார். பிரதமரும் படேலும் வானொலி உரையில் கூறியதைப் போல இனி நாம் நம் கடமைகளைச் செய்ய வேண்டும். முதலில் நாம் மதமாச்சரிய விஷம் தோய்ந்த இந்தச் சூழலிலிருந்து வெளிவருவோம். பிரதமர் சுட்டிக்காட்டியபடி, நம்மைச் சூழ்ந்துள்ள பேரிடர்களிலிருந்து மீளுவோம்.
  • அந்தத் தீமைகள் ஒன்றல்ல பல, சாதாரணமானவை அல்ல மிகப் பெரியவை. மனம்போன போக்கிலோ, மோசமான வகையிலோ இவற்றிலிருந்து மீள முயலக் கூடாது. நம்முடைய அன்புக்குரிய தலைவர் நமக்கு போதித்த வகையிலேயே இதிலிருந்து மீள வேண்டும். நம்முடைய பார்வையைக் கோபம் மறைத்துவிடக் கூடாது.
  • பகுத்தறிவற்ற சிந்தனைகள் நம்முடைய மனங்களைத் திசைதிருப்பிவிடக் கூடாது. குறுகிய கண்ணோட்டம், குழு சார்ந்த சிந்தனை, பொறாமை போன்றவை நமக்கு ஏற்பட்டுவிடக் கூடாது.
  • அனைத்து வர்க்கத்தாரும் மதத்தாரும், சாதியாரும் ஒரே கடவுளின் குழந்தைகள்தான். அனைவருக்கும் அனைத்திலும் சம உரிமை உண்டு, அனைவருக்கும் சமமான கடமைகளும் உண்டு, ஒற்றுமையுணர்வுடனும் தூய அன்புடனும் நாட்டின் ஒருமைப்பாட்டைக் கருத்தில்கொண்டு இணைந்தே வாழ்வோம் என்கிற உறுதிமொழியை இந்நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது அசோகரின் இந்தியா, அக்பரின் இந்தியா என்று உலக மக்களிடம் காலங்காலமாக பெருமையுடன் சொல்லிவரும் நம் பாரம்பரியத்தைக் காப்பாற்றவும், தொடரச்செய்யவும் ஒற்றுமையாகச் செயல்படுவோம்.

நன்றி: தி இந்து (24 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்