ஆளுமை: சேவையே வாழ்க்கை
- இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் படையின் கேப்டனாகவும் எளிய மக்களுக்குச் சேவை செய்த மருத்துவராகவும் அறியப்படுபவர் லட்சுமி சாகல்.
- படிப்பும் செல்வாக்கும் அரசியல் பின்புலமும் கொண்ட சுவாமிநாதன் - அம்மு தம்பதியின் மகள் லட்சுமி. சிறு வயதிலிருந்தே தன் அம்மாவுடன் சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்தார். சென்னை ராணி மேரி கல்லூரியில் படித்தபோது கதர் ஆடைகள் அணிவதை வழக்கமாக்கிக்கொண்டார். 1938இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தார்.
- மீரட் சதி வழக்கில் தொடர்புடையவராகக் குற்றம்சாட்டப்பட்ட சுகாசினி, லட்சுமியின் வீட்டில் தலைமறைவாக இருந்தார். அப்போது அவரிடம் லட்சுமி மார்க்சியம் கற்றுக்கொண்டார்; ரஷ்யப் புரட்சி குறித்தும் படித்தார். புரட்சியினால் மட்டுமே சமூக மாற்றம் சாத்தியம் என்ற எண்ணத்தை வந்தடைந்தபோது, காந்தியக் கொள்கையைக் கைவிட்டார் லட்சுமி.
- இரண்டாம் உலகப் போரின்போது உறவினர் ஒருவருக்கு மருத்துவம் பார்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றிருந்தார் லட்சுமி. அங்கே புலம்பெயர்ந்த இந்தியர்களின் நிலையைக் கண்டு வருந்தினார். அவர்களுக்குத் தம்மால் ஆன மருத்துவ உதவிகளைச் செய்தார். அப்போது நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் உருவானது. அதில் ஏராளமான புலம்பெயர்ந்த இந்தியர்கள் தாமாகச் சேவைசெய்ய முன்வந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி செய்துவந்த லட்சுமியை, சுபாஷ் சந்திர போஸ் சந்தித்தார். ‘ஜான்சி ராணி பெண்கள் படை’க்கு தலைமையேற்குமாறு கேட்டுக்கொண்டார். தெற்காசியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் பெண்கள் படை என்ற சிறப்பும் இந்தப் படைக்கு உண்டு.
- லட்சுமியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் மலேசியாவிலிருந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். சிங்கப்பூரிலிருந்து பர்மா வழியாக இந்தியாவை அடைவதற்கான கடினமான பயணத்தில் மிகுந்த நெஞ்சுரத்தோடு அவர்கள் சென்றனர். பர்மிய - இந்திய எல்லையில் ஆங்கிலேயப் படைகளிடம் சிக்கிகொண்ட பெண்கள், நச்சுக்கிழங்குகளைத் தின்று உயிர் துறந்தனர்.
- இந்திய தேசிய ராணுவத்தால் நடத்தப்பட்ட மருத்துவமனைக்கு வரும் காயமடைந்த வீரர்களுக்கு லட்சுமி சிகிச்சையளிக்க ஆரம்பித்தார். ஒருநாள் மருத்துவமனை என்பதை அறிந்தும் ஆங்கிலேயப் படை தாக்குதல் நடத்தியது. பதுங்குக்குழியில் இருந்த லட்சுமி உயிர்தப்பினார். கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார்.
- 1947இல் சக விடுதலைப் போராட்ட வீரரான பிரேம்குமார் சாகலைத் திருமணம் செய்துகொண்டார். கான்பூரில் குடியேறி, 97 வயது வரை ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவையை வழங்கினார். 2002இல் இடதுசாரிகளின் சார்பில் குடியரசுத் தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்தும் போட்டியிட்டு்ள்ளார்.
இலக்கியம்: சிற்றிதழ்கள் வளர்த்த தமிழ் இலக்கியம்
- சுதந்திரத்துக்குப் பிறகான தமிழ் இலக்கியம் நவீனமடைந்ததில் தமிழ் சிற்றிதழ்களின் பங்கு முக்கியமானது. இந்தக் காலகட்டம், சிற்றிதழ் இயக்கம் என இலக்கிய வரலாற்றில் அறியப்படுகிறது. இந்திய சுதந்திரத்துக்கு முன்பு ‘மணிக்கொடி’ இதழ், நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு வித்திட்டாலும், அது விருட்சமாக வளர்ந்தது சுதந்திரத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில்தான். அந்த வகையில் ‘மணிக்கொடி’ காலகட்டத்தவரான எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் முதன்மையானது.
- ‘எழுத்து’, 1959இல் எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவை ஆசிரியராகக் கொண்டு மாத இதழாக வெளிவந்தது. தமிழ்ப் புதுக்கவிதை வளர்ச்சிக்கு இந்த இதழ் களம் அமைத்துக்கொடுத்தது. க.நா.சுப்ரமண்யம், ந.பிச்சமூர்த்தி, நகுலன், சுந்தர ராமசாமி, பிரமிள், எஸ்.வைத்தீஸ்வரன், சி.மணி போன்ற முதல் தலைமுறை கவிஞர்கள் பலரும் இந்த இதழில் தொடர்ந்து எழுதினர். வில்லியம் பாக்னர், ஜேம்ஸ் ஜாய்ஸ், ஆண்டன் செகாவ், ஹென்றி ஜேம்ஸ் போன்ற அயல் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து ‘எழுத்து’ தொடர்ந்து வெளியிட்டது. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ‘எழுத்து’ இதழ் ஓர் இயக்கமாக இருந்தது.
- எழுத்தாளர் க.நா.சு. 1964இல் ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் ஓர் இலக்கிய இதழை நடத்தினார். இலக்கியக் கோட்பாடுகளுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். படைப்புரீதியான புதிய முயற்சிகளை அதில் பதிப்பித்தார். சுந்தர ராமசாமி, நகுலன், ஆர்.சூடாமணி, வல்லிக்கண்ணன், வெங்கட் சாமிநாதன், எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன், தி.க.சிவசங்கரன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் இதில் பங்களித்துவந்தனர்.
- ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழின் நிருபராக டெல்லியில் பணியாற்றிய கி.கஸ்தூரிரங்கன் ‘கணையாழி’ இதழை 1965இல் தொடங்கினார். இந்த இதழ் இளம் எழுத்தாளர்கள் பலருக்கும் களம் அமைத்துக் கொடுத்தது. அசோகமித்திரன் இதன் ஆசிரியராக இருந்த கட்டம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எழுத்து இதழில் எழுதிய கவிஞர் சி.மணி ‘நடை’ என்ற பெயரில் காலாண்டிதழை 1968இல் தொடங்கினார். இந்த இதழ், நவீன ஓவியங்களைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டது. கவிஞர்கள் ஞானக்கூத்தன், எஸ்.வைத்தீஸ்வரன் தொடர்ந்து எழுதினர். நாடக ஆளுமையான ந. முத்துசாமியின் கதைகளும் ‘நடை’யில் வெளிவந்தன.
- எழுத்தாளார் நா.கிருஷ்ணமூர்த்தியை ஆசிரியராகக் கொண்டு ‘கசடதபற’ இதழ் 1970இல் தொடங்கப்பட்டது. இந்த இதழில் ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, ஐராவதம், ந. முத்துசாமி, அசோகமித்திரன் ஆகியோர் பங்களித்துள்ளனர். பின்னால் பெரும் பெயர்பெற்ற எழுத்தாளர் பாலகுமாரனும் இந்த இதழில் பங்களித்துள்ளார். நூலகராகப் பணியாற்றிய தேவ சித்திரபாரதி ‘ஞானரதம்’ (1970) என்ற பெயரில் ஒரு சிற்றிதழைக் கொண்டு வந்தார். ஜெயகாந்தன் இதன் ஆசிரியராகச் சில காலம் இருந்தார். வனமாலிகையின் ‘சதங்கை’, சுந்தர ராமசாமியின் ‘காலச்சுவடு’, ராஜமார்த்தாண்டனின் ‘கொல்லிப்பாவை’ போன்ற இதழ்களும் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவை.
- கோவையிலிருந்து வந்த ‘வானம்பாடி’ இதழ் (1970), தமிழ் இலக்கியச் சூழலில் ஓர் இயக்கமாகப் பார்க்கப்படுகிறது. மீரா, மு. மேத்தா, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், பா.செயப்பிரகாசம், கோ. ராஜாராம் போன்ற கவிஞர்கள் இந்த இதழ் மூலம் கவனம் பெற்றனர். இடதுசாரித் தலைவர் ப.ஜீவானந்தம் ஆசிரியராக இருந்து 1954இலிருந்து கொண்டுவந்த ‘தாமரை’ தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது. ரஷ்ய, பிற மொழி இலக்கியங்களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது. பிரபஞ்சன், வண்ணநிலவன், பூமணி, கந்தர்வன், பா.செயப்பிரகாசம், ஆர்.கே.லிங்கன், தனுஷ்கோடி ராமசாமி, கு.சின்னப்பபாரதி போன்ற எழுத்தாளர்கள் இந்த இதழில் தொடர்ந்து எழுதிவந்தனர்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய இதழாக வெளிவரும் ‘செம்மலர்’ எழுத்தாளர்கள் பலரையும் அறிமுகப்படுத்தி தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியது. ராஜேந்திர சோழன், தணிகைச் செல்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, கந்தர்வன், தமிழ்ச்செல்வன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி உள்ளிட்டோர் இந்த இதழில் எழுதியுள்ளனர். எழுதுவதற்கு ஊடகம் இல்லாக் காலகட்டத்தில் தமிழில் இலக்கிய ரசனைமிக்க, அரசியல் சுரனைமிக்க போக்குகள் உருவாக சிற்றிதழ்கள் களமாக இருந்தன.
மகளிர்: நெருக்கடி நிலைக்கு எதிரான குரல்
- இந்திய சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் அரசியல் அடக்குமுறையை எதிர்த்தவர் ஸ்நேகலதா ரெட்டி. ஆந்திர மாநிலத்தில் 1932இல் பிறந்த ஸ்நேகலதா, இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாட்டுடன் இருந்தார். ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இந்திய உடைகளை அணிந்தும் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக் கொண்டும் கல்லூரிக்குச் சென்றார்.
- ஸ்நேகலதா - பட்டாபிராம் தம்பதி, சுதந்திரப் போராட்ட வீரர் ராம்மனோகர் லோகியாவின் செயல்பாடுகளால் கவரப்பட்டு அவரைப் பின்பற்றி போராட்டங்களில் ஈடுபட்டனர். 1975இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின்போது தொடரப்பட்ட வழக்குகளில் முக்கியமானது ‘பரோடா டைனமைட் வழக்கு’. குற்றப்பத்திரிகையில் ஸ்நேகலதாவின் பெயர் இடம்பெறாதபோதும், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் குழுவினரின் செயலுக்கு அவர் உடந்தையாக இருந்ததாகச் சொல்லப்பட்டு மிசா (Maintenance of Internal Security Act) சட்டத்தின்கீழ் ஸ்நேகலதா கைது செய்யப்பட்டார்.
- 1976 மே 2 அன்று கைதுசெய்யப்பட்டு, எந்த விசாரணையும் இன்றி பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நாள்பட்ட ஆஸ்துமா வால் பாதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை சிறையில் அனுபவித்த கொடுமைகளாலும் சிகிச்சை மறுக்கப்பட்டதாலும் மோசமடைந்தது. இருந்தபோதும் சிறைக் கைதிகளின் உரிமைக்காகப் போராடினார். சிறைக் கைதிகள் கண்மூடித்தனமாகத் தாக்கப்படுவதைக் கண்டித்தார். சிறையில் வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
- சிறையில் இருந்தபோது அங்கே நடந்த வற்றைச் சிறு நாட்குறிப்பேட்டில் ஸ்நேகலதா பதிவுசெய்துவந்தார். அவரது டைரிக் குறிப்பு களைத் தொகுத்து கர்நாடக மனித உரிமைகள் ஆணையம் 1977இல் புத்தகமாக வெளியிட்டது. பெண்ணிய வரலாற்று ஆய்வாளரான உமா சக்ரவர்த்தி, ஸ்நேகலதாவின் அரசியல் செயல் பாடுகளையும் அவரது சிறை அனுபவங்களையும் மையமாக வைத்து, ‘Prison Diaries’ என்கிற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார்.
- ஸ்நேகலதாவின் உடல்நிலை மோசமடைந் ததையடுத்து எங்கே அவர் சிறையிலேயே இறந்துவிடுவாரோ என்று பயந்து 1977 ஜனவரி 15 அன்று பரோலில் வெளியே அனுப்பப்பட்டார். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு உடலும் மனமும் பாதிக்கபட்டிருந்தவர், வெளியே அனுப்பப்பட்ட ஐந்தாம் நாள் மரணமடைந்தார்.
அறிவியல்: நிலவில் நீர் கண்ட சந்திரயான்
- இஸ்ரோவால் 2008 அக்டோபர் 22இல் ஆளில்லாத விண்கலம் சந்திரயான் நிலவுக்குச் செலுத்தப்பட்டது. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் இது.
- சந்திரயான் விண்கலத்தைச் சுமந்துசென்ற பி.எஸ்.எல்.வி ஏவுகலம் புவியின் சுற்றுப்பாதையில் முதலில் அதை நிலைநிறுத்தியது. அதன் பின்னர் அந்த விண்கலத்தின் முன்னுந்து அமைப்பு நிலவை நோக்கி அதைச் செலுத்தி, நிலவுக்கு மேலே 100 கி.மீ. சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. அந்த விண்கலத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆய்வுக் கருவிகளும், நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவை தயாரித்த ஆய்வுக் கருவிகளும் இடம்பெற்றிருந்தன.
- சந்திரயானின் ஆய்வு, நிலவின் பரப்பில் அதிக அளவில் நீர் இருப்பதைக் கண்டறிந்தது. அந்தக் கண்டறிதல் நிலவு குறித்த ஆய்வுகளில் முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் பின்னர் சர்வதேச நாடுகள், நிலவு குறித்த ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கின.
- சந்திரயான் திட்டத்துக்கு ஆன செலவு இந்திய மதிப்பில் ரூபாய் 400 கோடி. நிலவைச் சுற்றியபடியே இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படும் விதமாக சந்திரயான் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக விண்ணில் செலுத்தப்பட்ட 312 நாட்களிலேயே அது தரைக்கட்டுப்பாடு நிலையத்துட னான தொடர்பை இழந்தது. மைக்ரோ ஒளிக்கற்றை மூலம் நாசா விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் சந்திரயான் செயலிழந்த நிலையில் நிலவுக்கு மேலே 200 கி.மீ தொலைவில் சுற்றிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பத்து மாதங்களே செயல் பட்டாலும் சந்திரயான் தனது திட்ட நோக்கத்தில் 95 சதவீதத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துவிட்டது.
- 2019 ஜூலை 22 அன்று சந்திரயான் – 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருந்த சந்திரயான்-2 விண்கலத்தின் தரையிறங்கு கலம் விக்ரம், 2019, செப்டம்பர் 7 அன்று நிலவில் தரையிறங்கத் தொடங்கியது. ஆனால், நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் உயரத்திலிருந்தபோது தரையிறங்கு கலம் விக்ரமுடன் தகவல்தொடர்பை இஸ்ரோ இழந்துவிட்டது. ஒருவேளை விக்ரம் வெற்றிகரமாகத் தரையிறங்கி இருந்தால், அது நிலவு குறித்த ஆய்வில் இன்னொரு மைல்கல்லாக இருந்திருக்கும்.
நன்றி: தி இந்து (25 – 08 – 2022)