TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 16

August 27 , 2022 712 days 397 0

திரையுலகம்: உலகம் சுற்றிய தமிழர்

  • மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் முழுநீள ஆவணப்படத்தை முதலில் உருவாக்கியவர் தமிழரான ஏ.கே.செட்டியார்.
  • தனது ஆவணப்படத்துக்காக இரண்டரை ஆண்டுகள், கப்பல் , விமானம் என ஒரு லட்சம் மைல்கள் உலகின் பல நாடுகளுக்குச் சுற்றித் திரிந்தார்.
  • 1910 தொடங்கி 1940 வரை 30 ஆண்டுகள் காந்தி சென்றுவந்த எந்த நாட்டையும் அவர் விட்டுவிடவில்லை. செல்லும் நாடுகளிலெல்லாம், காந்தியின் வருகையைப் படமாக்கிய சுயாதீன ஒளிப்பதிவுக் கலைஞர்கள், அரசு ஒளிப்பதிவாளர்கள் என நூறு பேரைச் சந்தித்து, 50 ஆயிரம் அடி காட்சிகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்தார்.
  • அதிலிருந்து காலவாரியாக 2 மணி நேரக் காட்சிகளைத் தொகுத்து, ‘மகாத்மா காந்தி: அவரது வாழ்க்கையின் சம்பவங்கள்’ என்கிற தலைப்பில் உருவாக்கிய ஆவணப்படத்தை 1940இல் தமிழில் வெளியிட்டபோது அவருக்கு 30 வயது.
  • இந்தியா சுதந்திரம் பெற்ற நிகழ்வு கோலாகலமாக அரங்கேறிக்கொண்டிருந்த ஆகஸ்ட் 15 அன்று இரவு, டெல்லியில் முதல் முறையாக ‘காந்தி’ ஆவணப்படம் திரையிடப்பட்டது.
  • அதன் பின்னர், காந்தியின் படுகொலைக்குப் பிறகான அவரது இறுதிக் காலத்தையும் சேர்த்து முழுமைப்படுத்தி இந்தி விவரணையுடன் 1950இல் வெளியிட்டார். இதே படத்தை ஹாலிவுட் கலைஞர்களின் துணையுடன் ஆங்கிலத்திலும் வடித்தெடுத்து 1950இல் அமெரிக்காவில் திரையிட்டார்.
  • அண்ணாமலை கருப்பன் செட்டியார் என்கிற ஏ.கே.செட்டியார், காரைக்குடியை அடுத்த கோட்டையூரில் பிறந்து, இளமையில் பர்மாவில் வளர்ந்தவர். 14 வயது முதல் சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அதுவே இதழியல் துறைக்கு அவரை இழுத்துவந்தது.
  • பர்மாவிலிருந்து வெளிவந்த ‘தனவணிகன்’ மாத இதழின் ஆசியராகச் சில காலம் பணியாற்றியவர், பின்னர் தமிழகம் திரும்பியதும் ‘குமரி மலர்’ என்கிற தமிழ்ப் பண்பாட்டு மாத இதழைத் தொடங்கினார். சுமார் 40 ஆண்டு காலம் அதன் ஆசியராகவும் பதிப்பாளராகவும் பொறுப்பேற்று நடத்தினார்.
  • தமிழர் பண்பாட்டை ஆவணப்படுத்துவதை ஓர் இயக்கம் போல் செய்துவந்த ‘குமரி மலரி’ல், எழுதாத தமிழ் ஆளுமைகள் குறைவு. பாரதியின் மீது பெரும் பக்தி கொண்டிருந்த ஏ.கே.செட்டியார், பாரதியின் தொகுக்கப்படாத படைப்புகளைத் தேடியெடுத்துப் பதிப்பிக்கும் பணியில் முன்னணியில் நின்றார். உலகம் சுற்றிய தமிழரான அவர், தமிழ் இதழியலுக்கும் தமிழ் ஆவணப்படத் துறைக்கும் பெரும் வெளிச்சமாக விளங்கியவர்.

அறிவியல்: முதல் முயற்சியில் வென்ற மங்கள்யான்

  • செவ்வாய்க் கோள் ஆராய்ச்சிக்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சி 1960களிலேயே தொடங்கிவிட்டது. 2013க்கு முன்புவரை இந்த வகையில் வெற்றி அடைந்திருந்த நாடுகள் ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் கூட்டமைப்பு மட்டுமே.
  • இந்த நிலையில்தான், செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டப் பாதைக்குள் முதல் முயற்சியிலேயே விண்கலத்தை நிலைநிறுத்திய நாடு என்ற பெருமையை 2013இல் இந்தியா பெற்றது.
  • 'மங்கள்யான்' விண்கலத்தை 'செவ்வாய் சுற்றுக்கலன் திட்ட'த்தின் (Mars Orbiter Mission) கீழ் இஸ்ரோ 2013 நவம்பர் 5 அன்று விண்ணில் செலுத்தியது. அந்த விண்கலன் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாகச் சென்றடைந்தது.
  • இந்தத் திட்டத்திற்கு ஆன செலவு 450 கோடி ரூபாய் மட்டுமே. உலகிலேயே செவ்வாய் கோளுக்கு மிகக் குறைந்த செலவில் அனுப்பப்பட்ட விண்கலம் என்கிற பெருமையும் இதற்கு உண்டு.
  • மங்கள்யானில் அதி நவீன கேமராக்கள், கடந்த 7 ஆண்டுகளாகச் செவ்வாய்க் கோளில் ஏற்படும் சூறாவளி உள்ளிட்ட நிகழ்வுகளை ஒளிப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பிவருகின்றன. மார்ஸ் கலர் கேமரா (Mars Color Camera) மூலம் apoapsis நிலையிலிருந்து, அதாவது 72,000 கி.மீ. தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒளிப்படங்கள் செவ்வாய் கோளின் வளிமண்டலத்தின் மேகங்கள், தூசு, எதிரொளித்திறன் குறித்த தரவுகளை வழங்குகின்றன.
  • Periapsis நிலையிலிருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் செவ்வாயின் மேற்பரப்பு பற்றிய செய்திகளை வழங்குகிறது. இந்தியாவின் அறிவியல் திறனை உலகுக்கு அழுத்தந்திருத்தமாக உணர்த்திய திட்டம் இது.

ஆளுமை: பல்துறை வித்தகர் கமலாதேவி

  • அன்றைய மதராஸ் மாகாணத்தில் மங்களூரில் செல்வாக்கு மிக்கக் குடும்பத்தில் பிறந்து, 14 வயதில் திருமணமாகி, 16 வயதில் இணையை இழந்தார் கமலாதேவி. பிறகு லண்டனில் உயர்கல்வி முடித்து இந்தியா திரும்பியவர், 1923இல் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். எழுத்தாளரும் கவிஞருமான ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயவைத் திருமணம் செய்துகொண்டார்.
  • 1926இல் சென்னை மாகாணச் சட்டசபைக்குப் போட்டியிட்டார். இதன் மூலம் ஆட்சிப் பதவி ஒன்றுக்கான தேர்தலில் நின்ற முதல் இந்தியப் பெண் என்கிற சிறப்பைப் பெற்றார். 1927இல் அகில இந்தியப் பெண்கள் மாநாட்டை நடத்தினார்.
  • உப்புச் சத்தியாகிரகத்தில் பெண்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, காந்தியின் சம்மதத்தைப் பெற்றார். ஆங்கிலேய அரசின் தடையை மீறி உப்பு எடுத்ததால், சட்டத்தை மீறிய குற்றத்துக்காகச் சுமார் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்தார் கமலா.
  • பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அமெரிக்கா சென்றபோது எலினார் ரூஸ்வெல்ட், பெண்ணுரிமைப் போராளி மார்கரெட் சாங்கர் ஆகியோருடன் நட்புகொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது லண்டனில் இருந்த கமலா, பல்வேறு நாடுகளில் இருந்த இந்தியர்களை ஒன்றுதிரட்டி, விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவைப் பெற்றார்.
  • நாடு திரும்பியவர், இந்தியப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட சுமார் 50 ஆயிரம் மக்களுக்கு ஃபரிதாபாத்தில் தங்கும் இடம், உணவு, மருத்துவம் கொடுத்துக் காப்பாற்றினார். குணமடைந்த ஏராளமான பெண்களின் வாழ்வாதாரத்துக்குக் கைவினைத் தொழில்களைக் கற்றுக்கொடுத்தார்.
  • கலை, கைவினைப் பொருள்களை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டினார். நாடு முழுவதும் மத்தியக் கைவினைத் தொழில் காட்சியகத்தை (Central Cottage Industries Emporium) அமைப்பதில் பெரும் பங்காற்றினார்.
  • பெண்களின் உரிமைகள் தொடர்பாகப் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். அமெரிக்காவின் புகழ்பெற்ற பெண்ணியலாளரான குளோரியா ஸ்டீனம் இவருடைய புத்தகத்துக்கு முன்னுரை வழங்கியிருக்கிறார். அந்தக் காலத்தில் பெண்களுக்கு இருந்த கடும் கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்து மறுமணம், விவாகரத்து, திரைப்பட நடிப்பு போன்றவற்றில் முன்மாதிரியாகத் திகழ்ந்த கமலா, 85 வயதில் மறைந்தார்.

தொழில்: மீன் உற்பத்தியில் முன்னேற்றம்

  • மீன் உற்பத்தியில் உலக நாடுகளிடையே முன்னணியில் இருக்கிறது இந்தியா. 7,516 கி.மீ. நீளக் கடற்கரையைக் கொண்டுள்ள இந்தியாவில் 3,827 மீனவ கிராமங்கள், 1,914 பாரம்பரிய மீன் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.
  • ஒட்டுமொத்த மீன் உற்பத்தியில் நன்னீர் மீன்பிடித்தல் 55% ஆக இருக்கிறது. மீன் உற்பத்தியில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக விளங்கும் இந்தியா, உலகளாவிய மீன் உற்பத்திக்கு 7.96% பங்களிக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக, நீர்வாழ்வன வளர்ப்பு (aquaculture) மூலம் அதிக மீன் உற்பத்தி செய்யும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது.
  • 1950-51இல் 7.52 லட்சம் டன்களாக இருந்த இந்தியாவின் மீன் உற்பத்தி, 2018-19ஆம் ஆண்டுகளில் 125.90 லட்சம் டன்களை (17 மடங்கு அதிகம்) எட்டியிருப்பதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு - பால்வள அமைச்சகத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது.
  • 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த மீன் உற்பத்தி 14.73 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மீன் உற்பத்தி 1.07% பங்களிக்கிறது. மீன்வள ஏற்றுமதி மூலம் ரூ.334.41 பில்லியன் வருவாய் ஈட்டப்படுவதாக தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் கூறுகிறது.
  • மத்திய அரசின் மீன்வளத் திட்டங்களின் அடிப்படையில், 2025 நிதியாண்டுக்குள் மீன் ஏற்றுமதி 1 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் சுமார் 40 லட்சம் மீனவர்கள் இருக்கிறார்கள்; மீன்வளத் துறை இந்தியா முழுவதும் சுமார் 1.45 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. ஒவ்வோர் ஆண்டும்ஜூலை 10 அன்று தேசிய மீன் உற்பத்தியாளர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு யார் முக்கியக் காரணம்

  • இந்து, முஸ்லிம் உறவுகளில் 1937ஆம் ஆண்டு முக்கியப் பங்கு வகித்தது. மதம் சார்ந்த விருப்பு-வெறுப்புகள், சமூக அணுகுமுறை காரணமாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலிருந்த வேறுபாடுகள் பிறகு நிறுவனமயப்படத் தொடங்கின.
  • ஜின்னா இந்தச் சூழலை நன்கு பயன்படுத்திக் கொண்டு பிரிவினைக்கான தீயை முஸ்லிம்கள் மனதில் நன்கு வளர்த்தெடுத்தார். இப்படியாக உத்தரப் பிரதேசம்தான் (ஐக்கிய மாகாணம்) பாகிஸ்தான் என்ற தனி நாடு பிறக்க, தொட்டிலாகிவிட்டது என்று ஆசாத் பிறகு சுட்டிக்காட்டினார்.
  • முஸ்லிம் லீக் கேட்டதைப் போல இரண்டு இடங்களை அமைச்சரவையில் அதற்கு அளித்திருந்தால், பிறகு அந்தக் கட்சியே காங்கிரஸில் இணைந்திருக்கும் என்றும் ஆசாத் கருதினார்.
  • ஆனால், கலீகுஸ்ஸமான் என்ற ஐக்கிய மாகாண முஸ்லிம் லீக் தலைவர், காங்கிரஸுடனான ஆட்சிப் பகிர்வு ஒப்பந்தத்துக்கு - ஏற்க முடியாத ஒரு நிபந்தனையை விதித்தபோது நேரு என்னதான் செய்வார்? மதம் சார்ந்த விவகாரங்களில் முஸ்லிம் உறுப்பினர்கள் அவர்களுடைய மனசாட்சிப்படி வாக்களிக்கும் உரிமை வேண்டும் (கட்சி கட்டளையிடக் கூடாது) என்று நிபந்தனை விதித்தார். மதம் சார்ந்த விவகாரங்கள் என்றால் என்ன? அதை வரையறுப்பது யார்?
  • இந்த நிபந்தனைக்குத் தன்னுடைய பதில் என்ன என்று கலீகுஸ்ஸமானுக்கு 1937 ஜூன் 27இல் நேரு ஒரு கடிதம் எழுதினார்: “என்னைப் பொறுத்தவரையில் இதுவரையிலும் – இனி வருங்காலத்திலும், நான் மிகவும் போற்றும் லட்சியங்களுக்காகத்தான் செயல்படுவேன், என்னுடைய செயல்களால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து கவலைப்படமாட்டேன்.
  • (பொது) வாழ்க்கையை நடத்துவது மிகப் பெரிய சுமையான வேலை, ஆனால் சில லட்சியங்களுக்காகத்தான் கடுமையாகப் பாடுபட்டுக் கொண்டிருக் கிறேன் என்பதே எனக்கு மனச் சாந்தி அளிக்கிறது” என்று அந்தக் கடிதத்தில் விளக்கியிருந்தார்.

நேரு ஏன் மறுத்தார்?

  • முஸ்லிம் லீகுக்குப் புத்துயிர் அளித்தது நேருவின் நடவடிக்கைதான் என்கிற புத்தகம் 1959இல் வெளியான பிறகு, முஸ்லிம் லீகுக்கு ஏன் இடம்தர மறுத்தார் என்பதற்கான விளக்கத்தை நேரு அளித்தார். “ஐக்கிய மாகாணத்தில் (உத்தரப் பிரதேசம்) நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்று ஆர்வமாக இருந்தேன். மிகப் பெரிய நிலச் சுவான்தாரர்களைக் கொண்டிருந்ததால் முஸ்லிம் லீகை ஆட்சியில் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை” என்று தெளிவுபடுத்தினார் நேரு.
  • முஸ்லிம் லீகின் நிபந்தனையை நிராகரித்த பிறகு நேரு அறிவித்தார், “இனி (இந்திய அரசியலில்) இரண்டு பெரிய சக்திகள்தான் களத்தில் முக்கியம், ஒன்று பிரிட்டிஷ் அரசு, இன்னொன்று காங்கிரஸ்”. ஜின்னா அவருக்குப் பதிலடி கொடுத்தார், “மூன்றாவதாக ஒரு சக்தி இருக்கிறது – அது முஸ்லிம் லீக்”. ஜின்னா எந்த அளவுக்குச் சரியாகச் சொல்லியிருக்கிறார்!
  • முஸ்லிம் லீக் என்கிற காற்று வீசும் திசைக்கேற்ப, பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ஆட்சிக் கப்பலின் பாய்மரத் திசையை மாற்றியமைத்தது. இந்தியாவிடம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோதெல்லாம், ‘முஸ்லிம் லீகுடனும் ஆலோசனை கலப்போம்’ என்று காங்கிரஸுக்கு நெருக்கடி தந்தது. இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவதை மறுக்கும் ‘ரத்து அதிகாரம்’ இப்போது முஸ்லிம் லீகிடம் - அதாவது ஜின்னாவிடம்தான் இருக்கிறது என்பதை காங்கிரஸ் தெளிவாக உணர்ந்துகொண்டது.

உள்ளார்ந்த காரணங்கள்

  • முஸ்லிம் லீக் உருவானதே பிரிட்டிஷாரின் தூண்டுதலால்தான். டாக்காவில் 1906 டிசம்பர் 30இல் முஸ்லிம் லீக் உருவானபோது, அதன் முதல் தீர்மானமே இதை அங்கீகரித்துத்தான் இயற்றப்பட்டது. “இந்திய முஸ்லிம்களிடையே பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாச உணர்வை வளர்ப்போம்” என்பதுதான் முதல் தீர்மானம்.
  • ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற பிரிட்டிஷ்காரரால் 1885இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்ட போதும், அந்தக் கட்சி பிரிட்டிஷ் அரசுக்கு என்றுமே விசுவாசம் தெரிவித்ததில்லை. முஸ்லிம் லீக் கட்சி முஸ்லிம்களை மட்டுமே தனது இயக்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொண்டது.
  • இந்திய தேசிய காங்கிரஸ் அனைத்து சமுதாயங்களையும் சேர்த்துக் கொண்டது. கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக 1857இல் சிப்பாய்க் கலகம் நடைபெற்ற பிறகு முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டது. ஆனால், முஸ்லிம் லீக் கட்சியோ பின்னாளில் பிரிட்டிஷாருக்கு இணக்கமாக நடந்துகொள்ளத் தொடங்கியது. இனி வரும் காலத்தில் பிரிட்டிஷார் இந்தியர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரங்களையாவது தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒரு கட்டத்தில் நிலவியது.
  • முஸ்லிம் லீக் உருவானாதால் என்ன விளைவு களை ஏற்படுத்தியிருந்தாலும், தங்களுடைய நலனும் இந்துக்களின் நலனும் ஒன்றல்ல என்று பெரும்பாலான முஸ்லிம்கள் சிந்திக்கத் தொடங்கியிருந்தார்கள். அதற்குப் பிறகு இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கூட்டுச் செயல்பாடு இருந்ததே தவிர, ஐக்கியமான தேசிய இயக்கத்துக்கு வழிகோலவில்லை. 1909இல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்பட்ட பிறகு இரு சமூகங்களிடையே பிணைப்பு மேலும் அரிதாகிவிட்டது.
  • வேறு வகையில் சொல்வதானால், இந்திய தேசத்தை சுமார் 800 ஆண்டுகள் தாங்கள் ஆட்சி புரிந்த செல்வாக்கான காலத்தை முஸ்லிம்கள் மறந்துவிடவில்லை. பல தெய்வங்களை வழிபடுகிற – பல்வேறு சாதிகளாகப் பிரிந்து கிடக்கிற இந்துக்களிடமிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்திருந்தனர். முஸ்லிம்களின் இந்த உணர்வை பிரிட்டிஷார் தங்களுக்குச் சாதகமாக முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

சேரவே முடியாதா?

  • மத அடிப்படையிலான தேசப் பிரிவினை முஸ்லிம்களின் நோக்கத்தைப் பூர்த்தி செய்து விட்டதா? எனக்குத் தெரியாது. பாகிஸ்தானில் பிரிவினை என்று சொல்வதையே மக்கள் தவிர்க்கின்றனர். ஆகஸ்ட் 14 நாளில் அவர்கள் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றோம் என்ற உணர்வைவிட, இந்துக்களின் ஆட்சி என்ற நிலையிலிருந்து விடுதலை பெற்றோம் என்ற உணர்வையே பெரிதும் கொண்டிருக்கின்றனர். இந்துக்களின் ஆதிக்கம், இந்துக்களின் அச்சுறுத்தல் இல்லாமல் தாங்கள் சுதந்திரமாக வாழ்வதாகப் பாகிஸ்தானியர்கள் கருதுவதை அந்த நாட்டுக்குச் சில முறை சென்றபோது நேரிலேயே கண்டேன்.
  • இந்தப் பிரிவினையால் அதிகம் இழப்புக்கு உள்ளானவர்கள் முஸ்லிம்கள் என்றே கருதுகின்றேன். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் என்ற மூன்று நாடுகளில் முஸ்லிம்கள் பிரிந்து கிடக்கிறார்கள். பிளவுபடாத இந்தியாவில் அவர்களுடைய எண்ணிக்கை காரணமாக அரசியலில் அவர்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய செல்வாக்கையும் அதிகாரத்தையும் எண்ணிப் பார்க்கிறேன். மூன்று நாடுகளையும் சேர்த்தால் அவர்களுடைய எண்ணிக்கையும் வாக்குகள் பலமும் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல் இருந்திருக்கும்.
  • இந்தியத் துணைக் கண்டம் மீண்டும் ஒன்றுசேரும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், இந்த நாடுகளின் மக்கள் தங்களுடைய அச்சம், அவநம்பிக்கை ஆகியவை தீர்ந்து, நில எல்லைகளைப் பிரிக்கும் தடுப்புகளைத் தகர்த்து, தனி அடையாளங்களை மறந்து, ஒற்றுமைப்பட்டு பொது நலனுக்காகச் சேர்ந்து வாழ்வார்கள் என்று நம்புகிறேன்.
  • அப்படிப்பட்ட ஒரு காலம் - அவர்கள் கனவு கண்டதையும்விட நல்லதொரு வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும். ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் பாகிஸ்தானில் உள்ள என்னுடைய சொந்த ஊரான சியால்கோட்டை விட்டுப் புறப்பட்டபோது எனக்கு இருந்த – இப்போதும் நாம் வளர்த்துக்கொண்டிருக்கும் ஒரே நம்பிக்கை இதுதான். துணைக்கண்டத்தை வெகு காலமாக மூழ்கடித்துக்கொண்டிருக்கும் வெறுப்பு – விரோதம் என்ற உணர்ச்சிப் பெருங்கடலில் மூழ்கிவிடாமல், நான் பற்றிக்கொண்டு மிதக்கும் ஒரே துரும்பு இந்த நம்பிக்கை மட்டுமே!

நன்றி: தி இந்து (27 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்