TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 18

August 29 , 2022 710 days 387 0

திரையுலகம்: இந்திய சினிமாவின் வரலாற்றை வரைந்தவர்

  • சர்வதேச சினிமா வரலாறு தொடங்கிய சில பத்தாண்டுகளுக்குள் இந்திய சினிமாக் கலையின் வரலாறு தொடங்கிவிட்டது. ஆனால், சுதந்திரத்துக்கு முன்பு நாடகத்துக்கு மாற்றாக இருந்த சினிமாக் கலை பற்றிய மதிப்பீடு எதுவும் உருவாகியிருக்கவில்லை. அதனால் இந்திய சினிமா வரலாற்றைச் சர்வதேச அரங்கில் எடுத்துக்காட்ட நம்மிடம் ஆவணங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை.
  • எல்லாத் துறைகளிலும் ஆவணப்படுத்துதலில் நாம் பின்தங்கி இருந்தோம். இதற்காகத் தன் வாழ்நாளைச் செலவிட்டவர் பி.கே.நாயர். திருவனந்தபுரத்தில் பிறந்து சினிமா இயக்கும் ஆசையுடன் பம்பாய்க்குப் போன இவரின் வாழ்க்கை, இந்திய சினிமாவின் முதன்மை ஆவண ஆய்வாளராக அவரை மாற்றிவிட்டது. ‘மதர் இந்தியா’ இயக்குநர் மெஹ்பூப் கான், ‘தேவதாஸ்’ இயக்குநர் விமல் ராய் ஆகியோரிடம் அவர் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் தனக்கு சினிமா இயக்கம் ஒத்துவராது என்பதை அவர் உணர்ந்துகொண்டார். இது அந்தத் தலைமுறையின் அபூர்வமான பண்பு.
  • ஆய்வுத் துறையில் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதனால் புனே இந்தியத் திரைப்படக் கல்லூரியில் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். இந்திய சினிமாவின் வரலாற்றை உரத்துச் சொல்வதற்கான சான்றுகளைத் தேடிய, அவரது ஆய்வுப் பயணம் அங்கிருந்துதான் தொடங்கியது. தேசியத் திரைப்பட ஆவணக் காப்பகத்தின் நிறுவனரான அவர், அரசு நிதி வாங்கிக்கொண்டு அலுவலகத்திலேயே இருக்கவில்லை.
  • இந்தியாவின் மூலை முடுக்குக்கெல்லாம் பயணம் செய்தார். நாசிக் அருகில் ஒரு கிராமத்தில் தாதாசாகேப் பால்கேயின் ‘காளிய மர்தன்’ படச்சுருள் இருப்பதாகத் தகவல் கிடைத்ததும், போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலகட்டத்தில் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு புறப்பட்டிருக்கிறார். ஒருமுறை படகோட்டி இல்லாமல் ஆற்றைக் கடந்திருக்கிறார். கல்கத்தாவில் வைக்கோலுக்கும் சாணி வரட்டிகளுக்கும் இடையில் ஈரத்தில் கிடந்த சில படச்சுருள்களை ஆவணப்படுத்தியிருக்கிறார். பழைய படங்களைத் தேடி சினிமாக் கொட்டகை, கொட்டகையாக அலைந்திருக்கிறார். இந்தத் தேடல் இந்தியாவைத் தாண்டியும் விரிந்திருக்கிறது.
  • தாய்லாந்தில் ஒரு பழைய திரையரங்கிலிருந்து ‘சதீஷ், சுகன்யா’ என்னும் படத்தையும் வங்கதேசத்திலிருந்து ‘தேவதாஸ்’ படத்தையும் இந்தியாவுக்குக் கொண்டுவந்து ஆவணப்படுத்தியிருக்கிறார்.
  • சுதந்திரத்துக்குப் பிறகு உருவான புதிய தலைமுறை சினிமாக் கலைஞர்களுக்கு பி.கே.நாயர் ஆவணப்படுத்திய படங்கள் இந்தியத் திரைப்பட வரலாற்றைக் கற்பித்தன. இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் பால்கேவைத் திரும்ப உயிர்பித்ததும் இந்திய சினிமாவின் பிறப்பைக் கண்டறிந்ததும் பி.கே.நாயர் என்ற தனிமனிதன் செய்த மகத்தான சாதனை.

கல்வி: கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய கொள்கை

  • கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று 1968இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது தேசிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டது. தேசிய ஒருமைப்பாட்டுக்குத் தேவையான விழுமியங்களை வளர்த்தெடுப்பதில் இந்தக் கல்விக் கொள்கை கவனம் செலுத்தியது. நாட்டின் பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சியில் கல்வி மகத்தான பங்களிப்பை ஆற்றக்கூடும் என்று இந்த கல்விக் கொள்கை அங்கீகரித்தது.
  • இந்திய அரசமைப்பு சட்டத்தின் 45ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறி, 14 வயதுவரை உள்ள அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும் என்கிறது. இந்த வழிகாட்டு நெறியை நிறைவேற்றுவதில் தேசிய கல்விக் கொள்கை 1968 கவனம் செலுத்தியது. நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உருவாக்குவது அந்தக் கல்விக் கொள்கையின் முதன்மை இலக்காக இருந்தது. மாற்றுத் திறனாளிகளுக்கும் கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினர் பகுதிகளில் வாழ்வோருக்கும் கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளித்தது. பெண் கல்விக்கும் கூடுதல் அழுத்தம் கொடுத்தது.
  • பல்கலைக்கழகங்களிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டிய தேவை இருப்பதை ஏற்றுக்கொண்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமலே அவற்றுக்கு உரிய வயதைக் கடந்துவிட்டோருக்கு அடிப்படைக் கல்வியை அளிக்கும் முதியோர் கல்வி உள்ளிட்ட திட்டங்களின் மூலம் நாட்டின் எழுத்தறிவு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்றது. கற்பித்தலில் தரத்தை உறுதிசெய்வதற்கான ஆசிரியர் பயிற்சி, தொழிற்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துதலும் இந்தக் கல்விக் கொள்கையின் நோக்கங்களாக இருந்தன.
  • இந்தி, ஆங்கிலம், மாநில மொழி ஆகிய மூன்று மொழிகளை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்றது. அனைத்துப் பாடங்களையும் தாய்மொழிவழியில் கற்பிப்பதையும் ஆதரித்தது. இந்தி மொழியை தேசிய ஒருமைப்பாட்டுக்கான கருவியாகக் கருதிய இந்தக் கல்விக் கொள்கை, நாடு முழுவதும் அது மேம்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரைப்படி பள்ளிக் கல்வி 10+2+3 என்று வரையறுக்கப்பட்டது.
  • பல முற்போக்கான இலக்குகளை வெளிப்படுத்திய தேசிய கல்விக் கொள்கை 1968 தனது இலக்குகள் பலவற்றை எட்டத் தவறியது. நிதிப் பற்றாக்குறையே இதற்கு முதன்மையான காரணம்.

அறிவியல்: விண் முட்டும் வளர்ச்சி

  • நாடு சுதந்திரம் அடைந்து 15 ஆண்டுகள் கழித்தே இந்தியாவின் விண்வெளி கனவு மெல்லமெல்ல நனவுக்கு வரத் தொடங்கியது. 1962இல் அப்போதைய பிரதமர் நேருவின் வழிகாட்டுதலின்படி ‘INCOSPAR’ எனும் விண்வெளி ஆராய்ச்சி குழுவை டாக்டர் விக்ரம் சாராபாய் உருவாக்கினார். அதில் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அப்துல் கலாமும் ஓர் உறுப்பினர். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், ‘இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ)’ என அது பெயர் மாற்றப்பட்டது. அமெரிக்காவும் ரஷ்யாவும் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பிய காலகட்டத்தில்தான், பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கும் இஸ்ரோ விண்வெளி அறிவியலில் தளிர்நடை போடத் தொடங்கியது.
  • அந்த அமைப்பு 1975 ஏப்ரல் 19 அன்று முதன்முதலாக வடிவமைத்த ‘ஆரியப்பட்டா’ செயற்கைக்கோள், சோவியத் ஒன்றியத்தின் இண்டர்காஸ்மோஸ் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் விண்வெளித் துறையில் இஸ்ரோ நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் அளப்பரியவை. 114 விண்கல செலுத்து முயற்சிகள், 84 ஏவுகல செலுத்து முயற்சிகள், 13 மாணவர் செயற்கைக்கோள்கள், 2 மறுநுழைவுப் பணிகள், 34 நாடுகளின் 342 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துதல் உள்ளிட்ட பல விண்வெளித் திட்டங்களை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது.
  • புவி கண்காணிப்பு, தகவல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை ஆய்வுகள், விவசாயம் ஆகியவற்றுக்கு இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்டங்கள் பெரிதும் வலுசேர்த்து வருகின்றன. நீர் பாதுகாப்புக்கும் பேரிடர் மேலாண்மைக்கும் இஸ்ரோவின் தரவுகள் பேருதவியாக இருக்கின்றன. குறைந்த செலவில் இஸ்ரோவால் நிலவுக்கு ஏவப்பட்ட சந்திரயானும், செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட மங்கள்யானும் இன்று விண்வெளி அறிவியலில் இந்தியாவை அமெரிக்க, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக உயர்த்தியுள்ளன. இன்றைய தேதியில், விண்வெளி அறிவியலிலும் விண்வெளித் தொழில்நுட்பத்திலும் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

ஆடை கட்டிய இந்தியா

  • லட்சக்கணக்கான நூலிழைகளைச் சேர்த்து ஒரு துணியை நெய்வது எவ்வளவு சிரமமான காரியமோ, அதேபோல சுதந்திர இந்தியாவின் முக்கால் நூற்றாண்டு ஆடை வரலாற்றைச் சொல்வதும் சிரமமானதே!
  • இதுதான் இந்தியாவின் ஆடை’ என்று ஒன்றைப் பொதுமைப்படுத்திச் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்ப ஆடைகள் அணியப்படுகின்றன. இவ்வளவு விதமான ஆடைகள் புழக்கத்தில் இருந்தாலும் எல்லாருக்கும் ஆடை அணியும் வாய்ப்பு கிடைத்திருந்ததா என்றால், அதுவும் இல்லை. ஒரு காலத்தில் குறிப்பிட்ட சாதிப் பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது என்ற எழுதப்படாத சட்டம் இருந்தது. பல ஆண்டுப் போராட்டத்துக்குப் பிறகே ரவிக்கை அணியும் உரிமையை அவர்கள் பெற்றார்கள். அதேபோல சட்டையும் தோளில் துண்டும் அணியும் உரிமை குறிப்பிட்ட சாதி ஆண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. காலம் செல்லச்செல்ல மக்களின் பார்வை விரிவடைய, அனைத்து ஆண்களும் சட்டை அணிவதற்கும் துண்டு போடுவதற்கும் உரிமை கிடைத்தது.
  • சுதந்திரப் போராட்டத்தில்... - சுதந்திரப் போராட்டத்தில் இந்திய ஆடைகளின் விற்பனையைத் தடுப்பதற்காக, ஐரோப்பாவிலிருந்து மலிவான விலையில் ஆடைகள் விற்பனைக்கு வந்தன. ஆடைகள் எவ்வளவு மலிவாகக் கிடைத்தாலும் அந்நிய ஆடைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார் காந்தி. ஏராளமான மக்கள் அந்நியத் துணிகளை நெருப்பில் இட்டு, தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதத்தில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது காதியும் கைத்தறியும் செழிக்கக் காரணமாக அமைந்தது.
  • ஆடை என்பது நம் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடியது’ என்பார்கள். அந்தக் கூற்றையும் பொய்யாக்கியவர் காந்தி. அவர் ஒருமுறை மதுரைக்குச் சென்றிருந்தபோது எளிய மனிதர் ஒருவரின் ஆடையைக் கண்டு, தன்னுடைய ஆடைகளைத் துறந்து வேட்டி, துண்டுக்கு மாறினார். அதே ஆடையில்தான் உலகமெங்கும் சென்றுவந்தார். இந்த எளிய ஆடை அவருக்கு மேலும் மரியாதையைத் தேடித் தந்ததே தவிர, எவ்விதத்திலும் அவருடைய புகழைக் குறைக்கவில்லை.
  • காந்தி காலத்தில் மிக நேர்த்தியாக ஆடை அணிந்த நேருவின் 'ஜாக்கெட்', முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகும் உயர்பதவிகளில் இருப்பவர்கள் விரும்பி அணியக்கூடிய ஒன்றாகத் திகழ்கிறது.
  • சுதந்திரத்துக்குப் பிறகு... - நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றாலும்கூட, மக்களின் வாழ்க்கை முறையில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து விடுபட முடியாத விஷயங்களில் ஆடையும் ஒன்று. விடுதலைக்குப் பிறகு இந்திய ஆடைகளில் மேற்கத்திய பாணி அதிக தாக்கத்தைச் செலுத்தியது.
  • பிரிவினை ஏற்படுத்திய பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து 1980களில் மீண்ட இந்தியா, ஃபேஷன் துறையில் அடியெடுத்து வைத்தது. ஜவுளித் தொழில் வேகமாக வளர ஆரம்பித்தது. கைத்தறி, பருத்தியின் செல்வாக்கு குறைந்து, பாலியெஸ்டர் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. சாயம் போகாமல் நீண்ட காலத்துக்கு உழைப்பதால், மக்களிடம் இன்றுவரை அது செல்வாக்குப் பெற்றிருக்கிறது.
  • அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இன்று நான்கரை கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஜவுளி தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கைத்தறி தொடர்பான பணிகளில் இருக்கிறார்கள். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் ஈடுபடும் வேலை நெசவு சார்ந்ததே.
  • பெண்களும் ஃபேஷனும்: சுதந்திரத்துக்குப் பிறகு பெரும்பாலான பெண்கள் சட்டை, பாவாடை அணிந்து புடவை கட்டும் வழக்கத்துக்கு மாறினார்கள். ஆரம்பத்தில் புடவைக்கு ஏற்ப அதே வண்ண ரவிக்கை அணியும் வழக்கம் இல்லை. பின்னர் பொருத்தமான ரவிக்கையை அணியும் வழக்கம் வந்தது. தற்போது புடவையிலேயே ரவிக்கைக்கான துணியும் சேர்ந்தே வருவதால், தனியாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண நாள்களுக்குச் சாதாரண ஆடைகளும் விசேஷங்களுக்குச் சிறப்பான ஆடைகளும் அணியும் வழக்கம் அதிகரித்தது. ஆரம்பத்தில் அவசியத்துக்கு அணியப்பட்ட ஆடை, பிறகு ஃபேஷனுக்கு அணியும் நிலைக்குச் சென்றது.
  • திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து ஆடைகளை அணியும் வழக்கமும் உருவானது. ரவிக்கையில் நீளக் கை, குட்டைக் கை, பஃப் கை, முழுக்கை, வட்டக் கழுத்து, சதுரக் கழுத்து, படகுக் கழுத்து எனக் கதாநாயகிகள் அணியும் விதத்தைப் பார்த்துப் பெண்கள் ரவிக்கைகளைத் தைத்துக்கொண்டார்கள்.
  • தொண்ணூறுகளில் பாவாடை, தாவணியி லிருந்து பெண்கள் சிறிதுசிறிதாக சுடிதாருக்கு மாறி, இன்று பெரும்பாலான இந்திய இளம் பெண்களின் ஆடையாக அது நிலைத்துவிட்டது. தாவணி, புடவையிலிருக்கும் வசதிக் குறைபாடு சுடிதாரில் இல்லை என்பதால் பெண்களின் மனங்களை வென்றுவிட்டது!
  • இன்றைய இளம் தலைமுறை பாவடை தாவணியைப் புறக்கணித்தாலும், அதுக்கு நெருங்கிய உறவான வட இந்திய ‘லெஹங்கா’ என்ற நவீன வடிவத்துக்குத் தங்கள் ஆதரவை நல்கிவருகிறார்கள்.
  • இந்தியா முழுவதும் பல்வேறு விதங்களாகப் புடவைகளை அணிந்துவந்த பெண்கள், இன்று பெரும்பாலும் ஒரே விதமாக அணியும் நிலைக்கு வந்துவிட்டார்கள். கணவனை இழந்த பெண்கள் வெள்ளைச் சட்டை, வெள்ளைப் புடவை அணியும் வழக்கம் ஒருவழியாக வழக்கொழிந்துவிட்டது. இரவு நேரத்தில் மட்டுமே அணிய ஆரம்பித்த ‘நைட்டி’ இன்று நேரம் காலம், இடம் பொருள் பார்க்காத பெண்களின் விருப்பத்துக்குரிய ஆடையாக மாறிவிட்டது!
  • ஆடைகளில் எவ்வளவோ முன்னேற்றம் வந்துவிட்டாலும் இன்றும் பெண்கள் அணியும் ஆடைகள் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு முதல் காரணமாக, அவர்கள் அணியும் ஆடைகள் தேவையற்று முன்னிறுத்தப்படுகின்றன. சமீபத்தில் கேரள நீதிமன்றம் ஒரு வழக்கில், ‘பாதிக்கப் பட்டதாகச் சொல்லும் பெண், பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய வகையில் ஆடை அணிந்திருந்தார்’ என்று கூறி, பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் அளித்தது அதிர்ச்சியான விஷயமே.
  • ஆண்களும் ஆடைகளும்: புடவையைப் போலவே வேட்டியும் முண்டு, கன்னட பஞ்சகச்சம், வங்காள கோச்சானோ, மகாராஷ்டிர தோத்தார், ராஜஸ்தானி டுலாங்கி தோத்தி, பஞ்சாபி சத்ரா என்று விதவிதமாக அணியப்படுகிறது. குர்தா வேட்டியும் குர்தா பைஜாமாவும் இன்றும் புழக்கத்தில் இருக்கின்றன.
  • வேட்டி கட்டாத இன்றைய இளைய தலைமுறையைக் கவர்வதற்காக வெல்க்ரோவும் பாக்கெட்டும் வைத்த வேட்டிகளும் தயாரிக்கப்பட்டு புதிய சந்தையை உருவாக்கியுள்ளன.
  • தோளில் துண்டு அணியும் பழக்கமும் இருந்தது. அரசியல்வாதிகள் வெள்ளை வேட்டி, சட்டை, துண்டுகளில் தங்களுக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கினர். கதர் துண்டு, தேங்காய்ப்பூ துண்டு, கம்பளித் துண்டு என்று துண்டிலும் பல மாற்றங்களை அவர்கள் கொண்டுவந்தனர். இன்றோ துண்டு அணியும் வழக்கம் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம்.
  • திரைப்படங்களில் கதாநாயகர்கள் அணியும் பெல்பாட்டம், ஸ்லிம் ஃபிட், ஜாகர்ஸ், கார்கோ, ப்ளீட்டட், டிராக்சூட் போன்றவற்றைப் பார்த்து, ஆண்களும் தங்கள் ஃபேஷனை மாற்றிக் கொள்கிறார்கள். அதேபோல் கேஷுவல், ஃபார்மல், முழுக்கை, அரைக்கை, ஸ்லிம் ஃபிட் எனச் சட்டைகளிலும் பல விதங்கள் இருக்கின்றன.
  • ஒரு முறை அணிந்த வேட்டியைத் துவைக்காமல் பயன்படுத்த முடியாது என்றால், ஜீன்ஸை விருப்பமும் நேரமும் இருக்கும்போது துவைக்கலாம் என்ற அளவுக்கு வசதியாக இருப்பதால், இளைஞர்களின் மனத்தில் அது சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டது! இவை போக லுங்கி, அரைக்கால் சட்டை, டிசர்ட்டை போன்று வீட்டில் பயன்படுத்தும் ஆடைகளும் உண்டு.

வீடு தேடிவரும் ஆடைகள்

  • அந்தக் காலத்தில் தலையில் துணிகளைச் சுமந்துகொண்டு, வீடுவீடாக வந்து ஆட்கள் விற்பனை செய்துகொண்டிருந்தார்கள். முழுப் பணத்தையும் கொடுத்து வாங்க இயலாதவர்கள், ஒவ்வொரு மாதமும் சிறு தொகை கொடுத்து வாங்குவார்கள். இந்த வழக்கம் ஏறக்குறைய ஒழிந்துவிட்டது. மக்கள் கடைகளுக்குச் சென்று நிறைய துணிகளைத் தேடி, தங்களுக்குப் பிடித்த ஆடைகளை வாங்க ஆரம்பித்தனர். தற்போது இணையவழி விற்பனை மூலம், மீண்டும் ஆடைகள் இல்லம் தேடி வர ஆரம்பித்துவிட்டன.
  • ஒருகாலத்தில் விலை உயர்ந்த ஆடைகளை பொருளாதார வசதியில் பின்தங்கியவர்களால் வாங்க இயலாத சூழல் இருந்தது. இன்றோ அவற்றை மலிவு விலையிலும் கொண்டுவந்து, எல்லாரின் விருப்பத்தையும் பூர்த்தி செய்ய முடிவது வரவேற்கத்தக்கது.
  • தேவை - விசேஷங்களுக்காக மட்டுமே வாங்கப்பட்ட ஆடைகள், இன்று ஃபேஷனுக்காக வாங்கப்படுகின்றன. கடன் அட்டை மூலம் ஆன்லைனில் தேர்ந்தெடுக்கப்படும் ஆடைகள், வீட்டுக்கே வந்து சேர்ந்துவிடுவதால், ஆடம்பரச் செலவாகவும் இது மாறிவருகிறது. அதேபோல இன்றைய துணிகளில் சில வகைகள் எளிதில் கிழிவதும் இல்லை, மண்ணில் மட்கிப் போவதும் இல்லை என்பதால் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
  • எவ்வளவு காலம் ஆனாலும் எவ்வளவு ஃபேஷன்கள் வந்தாலும் விசேஷங்களில் அணியும் ஆடைகளாக சேலை, வேட்டி இருந்துகொண்டுதான் இருக்கும்! ஃபேஷன் தொழில் மேலும் மேலும் முன்னேறிக்கொண்டுதான் இருக்கும்! ஆடை என்பது ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட விருப்பம், வசதியைச் சார்ந்தது. எல்லாருக்கும் அவரவர் விரும்பிய ஆடைகளை அணிய உரிமை இருக்கிறது.
  • என்னதான் முன்னேற்றம் வந்தாலும் பெண்கள் அணியும் ஆடைகளில் கைக்குட்டை, பணம், திறன்பேசி போன்றவற்றை வைக்கும் விதத்தில் ஒரு பாக்கெட் வைத்துத் தைக்க இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ?

நன்றி: தி இந்து (29 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்