TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 19

August 30 , 2022 709 days 399 0

மகளிர்: நிலமற்றவர்களுக்கு நிலம்

  • சமூக அநீதிக்கு எதிராகவும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுத்துவருபவர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர், காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சர்வோதய இயக்கத்தில் இணைந்தார்.
  • காந்தியவாதியான ஜெகநாதனைச் சந்திக்கும் சூழலை அது ஏற்படுத்தித்தந்தது. சமூக அக்கறை இருவரையும் இணைத்தது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்து, அதை நிறைவேற்றிய லட்சியத் தம்பதி இவர்கள்.
  • காந்தியின் ஆன்மிகக் குருவான வினோபா பாவே வட இந்தியாவில் செயல்படுத்திய பூமிதான இயக்கம், பாதயாத்திரை (தங்கள் நிலத்தில் ஆறில் ஒரு பங்கை நிலமற்றவர்களுக்குத் தர வலியுறுத்தி நிலவுடைமையாளர்களைச் சந்திக்கும் யாத்திரை) போன்றவற்றில் ஜெகநாதன் பங்கேற்றார். அவர் தமிழ்நாடு திரும்பியதும் கிருஷ்ணம்மாளுடன் இணைந்து அந்தத் திட்டத்தை இங்கே செயல்படுத்தினார்.
  • கிராமங்களில்தான் இந்தியாவின் ஆன்மா இருக்கிறது என்கிற காந்தியின் கொள்கையைப் பின்பற்றியதால் கிராம மக்களிடையே இவர்கள் பணியாற்றினர். எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தனர். அதன் ஒரு பகுதிதான் பூமிதான இயக்கம்.
  • 1953 முதல் 1967 வரை ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தின் மூலம் கிடைத்த காடும் கரம்புமான தரிசு நிலத்தைப் பண்படுத்தி விவசாய நிலமாக்கும் நோக்கத்துடன் 1968இல் ‘சர்வ சேவா விவசாயிகள் சங்கம்’ இந்தத் தம்பதியால் தொடங்கப்பட்டது.
  • இந்தச் சங்கத்தை கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் தம்பதி தொடங்கிய அதே ஆண்டில் நடைபெற்ற ஒரு கொடூர நிகழ்வு அவர்களின் பாதையை மாற்றியது. அன்றைய தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வெண்மணியில் பெண்களும் குழந்தைகளுமாக 42 பேர் நிலவுடைமையாளர்களால் எரித்துக் கொல்லப்பட்டனர். அங்கே சென்ற இந்தத் தம்பதியினர் பாதிக்கப்பட்ட விவசாயக் கூலிகள் மத்தியில் வேலை செய்யத் தொடங்கினர்.
  • விவசாயக் கூலிகளை நிலவுடைமையாளர்கள் ஆக்கும் முனைப்புடன் 1981இல் ‘லாஃப்டி’ என்னும் அமைப்பை இவர்கள் தொடங்கினர். நிலவுடைமையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இந்த அமைப்பு பாலமாகச் செயல்பட்டது. ஏழைகள் நிலத்தை வாங்குவதற்கு ஏதுவாகக் கடனுதவி பெறும் வழிகளை ஏற்படுத்தித்தரும் கூட்டுறவு அமைப்பாகவும் ‘லாஃப்டி’ செயல்பட்டது.
  • தமிழகத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் ஏழைகளுக்குப் போய்ச்சேர இந்த அமைப்பு உதவியது. பிஹாரில் 32 ஆயிரம் ஏக்கர் நிலம் பட்டியலினத்தவருக்குக் கிடைக்கவும் கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் தம்பதி உதவியுள்ளனர்.
  • மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக அமைந்த இறால் பண்ணைகளுக்கு எதிராக ‘லாஃப்டி’ உறுப்பினர்களுடன் சேர்ந்து இவர்கள் போராடினர். தடியடி, குடிசை எரிப்பு, பொய்க் குற்றச்சாட்டு போன்றவற்றையெல்லாம் மீறி அகிம்சை வழியில் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
  • தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனம் (NEERI) இதில் தலையிட்டு ஆய்வு செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிடும்வரை, இவர்களின் போராட்டம் தொடர்ந்தது. 2013இல் ஜெகநாதன் மறைந்த பிறகும் தன் சமூகப் பணிகளைத் தொடர்ந்துவருகிறார் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்.

விளையாட்டு: ஹாக்கி பிதாமகன்

  • இந்திய ஹாக்கி அணியை உலக அரங்கில் தலைநிமிர வைத்தவர் மேஜர் தியான் சந்த். பிரிட்டிஷ் ராணுவத்தில் 16 வயதிலேயே இணைந்து பணியாற்றினார். சிறு வயது முதலே ஹாக்கியில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த தியான் சந்த், ராணுவத்தில் சேர்ந்த பிறகும் ஹாக்கியில் ஆர்வத்துடனேயே இருந்தார்.
  • 1928 ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்கில்தான் ஹாக்கி முதன்முதலாகச் சேர்க்கப்பட்டது. அந்த அறிமுக ஒலிம்பிக்கிலேயே இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்றது. இத்தொடரில் 5 போட்டிகளில் 14 கோல்களை அடித்து, இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார் தியான் சந்த். தொடர்ந்து 1932 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கிலும் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்ல அவர் காரணமாக இருந்தார். 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாகக் களமிறங்கிய தியான் சந்த், இந்தியாவுக்குத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தார்.
  • ஜெர்மனிக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியைக் காண அந்நாட்டு சர்வாதிகாரி ஹிட்லர் வந்திருந்தார். இப்போட்டியில் 6 கோல்களை அடித்த தியான் சந்தின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த ஹிட்லர், அவரை ஜெர்மனி ராணுவத்தில் சேர அழைப்பு விடுத்த வரலாறும் உண்டு. ஆனால், தியான் சந்த் அதற்கு மறுப்பு தெரிவித்தார். என்றாலும் ‘ஹாக்கி மாயாவி’ (Wizard of Hockey) என்கிற பட்டத்தை அவருக்கு வழங்கி ஹிட்லர் கௌரவப்படுத்தினார்.
  • இந்த ஒலிம்பிக்கிற்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளிலிருந்து விலகியிருந்த தியான் சந்த், 1956இல் மேஜர் பதவியோடு இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றார். பிறகு இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராகச் சிறிது காலம் இருந்தார். தியான் சந்தின் பிறந்தநாள் ஆண்டுதோறும் தேசிய விளையாட்டுத் தினமாகக் (ஆகஸ்ட் 29) கொண்டாடப்பட்டுவருகிறது. தேசிய அளவில் விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘கேல் ரத்னா விருது’ம் இவருடைய பெயரிலேயே வழங்கப்படுகிறது.

சுகாதாரத் திட்டங்களைப் பரவலாக்கிய இயக்கம்

  • தேசிய ஊரக சுகாதார இயக்கம் (NRHM) எனும் நலத்திட்டத்தை மத்திய அரசு ஏப்ரல் 12, 2005 அன்று அறிமுகப்படுத்தியது. பலவீனமான பொதுச் சுகாதார குறியீடு கொண்ட 18 மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், அங்கு உருவாக்கிய ஆரோக்கியமான மாற்றங்களின் காரணமாக, நாடு முழுமைக்கும் பின்னர் விரிவுபடுத்தப்பட்டது.
  • இந்தியாவில் சுகாதார திட்டங்களின் பரவலாக்கத்துக்கு இன்று என்.ஆர்.ஹெச்.எம். முக்கியக் காரணமாக உள்ளது. பொருளாதார ஏற்றதாழ்வுகளால் பொதுச் சுகாதாரத்தில் நிலவும் சமத்துவமின்மையைக் குறைக்க உதவுவதில் இந்த இயக்கம் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அளித்துவருகிறது.
  • இந்தியாவில் ஆரம்ப சுகாதார வசதிகள் புத்துயிர் பெற்றதற்கும், ஐ.நா.வின் ‘புத்தாயிர வளர்ச்சி இலக்குகளை' அடைவதற்கும் இந்த இயக்கமே பெருமளவில் உதவியுள்ளது. இந்த இயக்கத்தின் முன்னெடுப்புகளின் காரணமாக, இந்தியாவில் சுகாதாரச் சேவைகளின் தரம் பெருமளவு உயர்ந்துள்ளது.
  • இந்தத் திட்டத்தின் அடித்தளமாகச் சமூக சுகாதாரப் பணியாளர்கள் (ASHAs) இருக்கின்றனர். அதில் பெண்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர். 2005இல் ஏழு லட்சமாக இருந்த ஆஷாக்களின் எண்ணிக்கை தற்போது ஒரு கோடியைத் தாண்டிவிட்டது. பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களின் உடல்நலத்தையும், ஊட்டச்சத்தையும் மேம்படுத்தி சிகிச்சை வழங்குவதை ஆஷாக்கள் எளிதாக்குகின்றனர். நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதையும் மருத்துவ வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
  • இவர்களின் தன்னலமற்ற சேவையினால், இந்தியாவில் ஒரு வயதை நிறைவுசெய்யாத குழந்தைகளின் இறப்பு விகிதம் 28/1000 எனவும், மகப்பேறின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் 113/100,000 எனவும் குறைந்துள்ளன. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஆஷாக்கள் ஆற்றிய பணியை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில், தடுப்பூசி வழங்கலில் நாடு படைத்திருக்கும் சாதனைக்கு இவர்களே அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்.

ஆளுமை: தோழர் இ.எம்.எஸ்.

  • இந்தியாவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பொதுவுடைமை அரசின் முதல்வர் இ.எம்.எஸ். என்றழைக்கப்படும் இளங்குளம் மணக்கல் சங்கரன் நம்பூதிரிபாட். அரசியல் வாதி, சமூக சீர்த்திருத்தவாதி, எழுத்தாளர் எனப் பன்முகப் பங்களிப்பைத் தந்தவராக இவர் அறியப்படுகிறார்.
  • கேரளத்தின் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்த இ.எம்.எஸ்., சமூகத்தில் நிலவிய சாதிப் பாகுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்து வலுவாகக் குரல் கொடுத்தார். சாதி ஒழிப்புக்காகப் போராடிய இயக்கங்களில் தம்மை இணைத்துக்கொண்டார்.
  • பின்னர் காங்கிரஸில் இணைந்து, உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். 1934இல் ‘காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி'யின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். 1934 முதல் 1940 வரை அதன் அகில இந்திய இணைச் செயலாளராகப் பணியாற்றினார். 1939இல் சென்னை சட்டமன்ற உறுப்பினரானார்.
  • ஏழைத் தொழிலாளர்களின் நலன் நோக்கி அவரது கவனம் திரும்பியபோது, பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கேரளத்தில் ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி’யைக் கட்டியெழுப்பினார்.
  • பொதுவுடைமைக் கட்சியின் சார்பாக 1957 இல் அதிகப் பெரும்பான்மையுடன் தேர்தலில் வென்று, இந்தியாவில் முதல் பொதுவுடைமை மாநில அரசை அமைத்து, வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். முதல்வராகப் பொறுப்பேற்று கல்வி, நிலச்சீர்திருத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். இந்திய அரசமைப்பு கூறு 356ஐப் பயன்படுத்தி இவருடைய ஆட்சி 1959இல் கலைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை நேரு அரசாங்கத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தியது.
  • அடுத்துவந்த ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவராகச் சிறப்பாகச் செயலாற்றிய இ.எம்.எஸ்., 1967இல் இரண்டாவது முறையாக கேரளத்தின் முதல்வரானார். மாநிலத்தில் அதிகாரம் - வளங்களைப் பரவலாக்குவது, 100 சதவீத எழுத்தறிவைக் கொண்டுவருவது ஆகியவை அவருடைய முக்கிய நோக்கங்களாக இருந்தன.
  • பொதுவுடைமைக் கட்சியில் பிளவு ஏற்பட்ட போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் இ.எம்.எஸ். அந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோதே மத்தியக்குழு, அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இ.எம்.எஸ்., இறுதிவரை அந்தப் பதவிகளை வகித்தார்.
  • அரசியல்வாதியாக மட்டுமின்றி ஓர் எழுத்தாளராகவும் ஏராளமான படைப்புகளை அளித்திருக்கிறார். மலையாளம், ஆங்கிலம் ஆகியவற்றில் அவர் எழுதிய நூல்கள் ‘இ.எம்.எஸ்., சஞ்சிகா' என்கிற பெயரில் வெளியிடப்பட்டன. ‘கேரளத்தின் வரலாறு', ‘வேதங்களின் நாடு', ‘இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு' உள்ளிட்ட நூல்கள் புகழ்பெற்றவை. 89 வயதில் இறக்கும் வரை இயக்கத்துக்காக எழுதிக்கொண்டிருந்தார். இன்றும் பொதுவுடைமைக் கட்சியினரை எழுத்துகளாலும் சிந்தனையாலும் வழிநடத்திக்கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்றம்: இந்திய ஜனநாயகத்தின் கண்ணாடி

  • வடிவம் இன்னமும் மாறவில்லை. கம்பீரமான குவிமாடம், அரை வட்ட வடிவத்திலான அறைகள், மரத்தால் செய்யப்பட்ட அழகிய மேஜைகள். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரே கட்டிடத்தில்தான் அமைந்துள்ளன. காலையில் கூட்டங்கள் தொடங்கிவிடும்.
  • கடந்த 47 ஆண்டுகளாக இப்படித்தான் நாடாளுமன்றம் செயல்படுகிறது. அவைக்குத் தலைமை வகிக்க அவைத் தலைவர் வருகிறார் என்பதை, அவைக் காவலர்களின் தலைவர் உரத்த குரலில் கட்டியமாகக் கூவி அறிவிப்பார். அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து தலை தாழ்த்தி அவருக்கு மரியாதை செலுத்துவார்கள். இவை தவிர ஏனைய அம்சங்கள் நாளாகநாளாக மாறிக்கொண்டே வருகின்றன.
  • மக்களவையின் 545 இருக்கை களிலும் மாநிலங்களவையின் 244 இருக்கைகளிலும் புதிய முகங்கள் அலங்கரிக்கின்றன. உறுப்பினர்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதும் பிறகு பதவியிழப்பதும் தொடர்கிறது. மிகச் சிலர்தான் அபூர்வமாகத் தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றனர்.
  • இந்தக் காலகட்டத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையும் எதிர்க் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையும் உயர்வதும் தாழ்வதுமாக மாறிமாறி நிகழ்கின்றன. இந்தியா முழுவதும் வாழும் கோடிக்கணக்கான வாக்காளர்களின் கூட்டு முடிவுக்கேற்ப ஆளும் – எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை மாறிக் கொண்டேயிருக்கிறது. நாடாளுமன்ற அவைக் கூட்டங்கள் உண்மையிலேயே உற்சாகம் அளிப்பவை – நாட்டின் வரலாறை அசலாகக் காட்டுகிற இடம் நாடாளுமன்றம்.

மாறிவரும் தோற்ற வடிவம்

  • நாடாளுமன்றத்தின் தோற்ற வடிவமானது கடந்த பல ஆண்டுகளாக மாறிக்கொண்டே வந்திருக்கிறது. அது அப்படித்தான் மாறியாக வேண்டும். உயிர்ப்புள்ள நிறுவனம் என்கிற வகையில், அரசியலின் இயக்கவியலுக்கு ஏற்ப அதுவும் மாற வேண்டும். நாடாளுமன்றத்தின் செயல்பாட்டுத் தரத்திலும் மிகப் பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.
  • சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றத்தில் தொடக்கக் காலத்தில் முக்கிய முடிவுகள் அனைத்துமே நன்கு விவாதிக்கப்பட்டு, பிறகு கருத்தொற்றுமை அடிப்படையிலேயே எடுக்கப்பட்டன. அந்த நடைமுறை இப்போது நொறுங்கிவிட்டது. புதிதுபுதிதாகப் பிரச்சினைகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.
  • ஆமாம், நாடாளுமன்றத்தின் பெரும் பாலான அம்சங்கள் மாறிவிட்டன, அதன் செயல்பாட்டின் தரமும்கூட. ஆம், எல்லாரும் பொதுவாக நம்புவதைப் போல அதன் தரத்திலும் சரிவு ஏற்பட்டுவருகிறது. ஆனால் இப்படிச் சொல்லும்போது அவரவர் கண்ணோட்டத்தில், அளவுக் கதிகமாக இதைப் பொதுமைப்படுத்தி ‘இப்படித்தான்…’ என்று அறுதி யிட்டுக் கூறிவிடுகிறார்கள். இது நாடாளுமன்றத்தைப் பற்றிய கண்ணோட்டத்தைச் சற்றே திசைதிருப்புகிறது.
  • நாடாளுமன்ற விவாதங்களில் கண்ணியமான பேச்சு குறைந்து வருகிறது, நாடாளுமன்ற மரபுகளை எல்லா தருணங்களிலும் கடைப்பிடிப்பதில்லை என்பதெல்லாம் உண்மைதான். அவையை ஒழுங்காக நடத்தவிடாமல் கூச்சலும் இடையூறுகளும் அதிகரிப்பதால் அவையை ஒத்திவைப்பது அதிகரித்துவருகிறது.
  • அவையின் நடவடிக்கைகளைப் பாதிக்காமல், அவரவர்களுக்கான வரம்புக்குள் செயல்பட வேண்டும் என்ற வரையறை அடிக்கடி மீறப்படுகிறது. தங்களுடைய கருத்துகளை அவைத் தலைவரின் அனுமதியோடு பேசாமல், அவையின் மையப் பகுதிக்கு ஓடிவந்து கூச்சலிடுவதும் எதிர்க் கூச்சலிடுவதும் அடிக்கடி நடக்கிறது. மாநில சட்டப்பேரவைகளில் நடைபெறும், அவைக்குள்ளேயே அமர்ந்து அவையை நடத்தவிடாமல் தடுக்கும் ‘தர்ணா’ என்கிற போராட்ட முறை, நல்ல வேளையாக இதுவரை நாடாளுமன்றத்தில் அரங்கேறவில்லை.
  • அதேபோல, ஒலி வாங்கிகளைத் திருகி எடுத்து எதிர் வரிசை மீது வீசுவது, காகிதக் கட்டுகளிலும் புத்தகங்களிலும் காகிதம் பறக்காமலிருக்க வைக்கப்படும் கனமான கட்டைகளையும் யாரும் தூக்கி வீசாமல் இருக்கின்றனர். அவ்வளவு ஏன் கைகலப்புகள்கூட நடைபெறாமல் கண்ணியம் காக்கப்படுகிறது.
  • கடந்த காலத்தில் அவை நடத்தை விதிமுறைகளைக் கரைத்துக் குடித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் – ராம் மனோகர் லோகியா, மது லிமாயே போன்றவர்கள், ஒரு பிரச்சினையைப் பேச அவைத்தலைவரிடம் விதிகளைச் சுட்டிக்காட்டி அனுமதி பெற்றுப் பேசிவிடுவார்கள். இப்போது அப்படிப் பேச முற்படாமல் எவ்வளவு உரக்கக் கத்த முடியுமோ, அந்த அளவுக்குக் கத்தி அவையில் எந்த அலுவலும் நடக்க முடியாமல் தடுத்துவிடுகின்றனர்.
  • கடந்த மக்களவையில் நாடாளுமன்றம் கூடிய நேரத்தில் பத்தில் ஒரு பங்கு நேரம் - உறுப்பினர்களின் குறுக்கீடுகளாலும் ஒத்திவைப்புகளாலுமே வீணானது. இதனால் மிக முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மசோதாக்களைக் கொண்டுவரவும் அவற்றின் மீது விவாதம் நடத்தவும் நேரம் இல்லாமல் போனது. மக்களவை சட்டமியற்ற தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் 22.16% நேரத்தை மட்டுமே 1991-96 காலத்தில் பயன்படுத்தியது. முதலாவது மக்களவையில் (1952-57) 49% நேரத்தை சட்டமியற்றுவதற்கு அவை பயன்படுத்தியுள்ளது.

யாருக்கான நாடாளுமன்றம்?

  • அரசு நிர்வாகத்தின் அனைத்து விதமான விவகாரங்கள் தொடர்பாகவும் தகவல்களை முழுதாகக் கறந்துவிடக்கூடிய அரிய வாய்ப்புள்ள ‘கேள்வி நேரம்’ என்பது நாளுக்கு நாள் முக்கியத்துவம் இழந்துவருகிறது. கடந்த மக்களவையில் கேள்வி நேரத்துக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் 11.8% மட்டுமே உறுப்பினர்களால் பயன்படுத்திக் கொள்ளப் பட்டது.
  • 1970 - களில் அந்தப் பயன்பாடு 14% ஆக இருந்தது. நாடாளுமன்ற நடவடிக்கை களைத் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கிய பிறகு நிலைமை மோசமாகிவிட்டது; மக்களால் பார்க்கப்படவும் அவர்களுடைய கவனத்தை ஈர்க்கவும் - ஒருவர் மற்றவரைவிட அதிகமாகச் செயல்படுவதைப் போல காட்டிக் கொள்ள வேண்டும் என்று அமளி, கூச்சல்களில் ஈடுபடுகின்றனர்.
  • நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்களும் கூச்சல்களும் தங்களுக்கு அதிர்ச்சியும் வியப்பும் அளிப்பதாக பள்ளிக்கூடக் குழந்தைகளே அவைத் தலைவர்களுக்குக் கடிதம் எழுதும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. ‘நாடு முழுவதும் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது, இருக்கைக்குச் செல்லுங்கள் – அவை நடவடிக்கைகளை நடத்த அனுமதியுங்கள்’ என்று அவைக்குத் தலைமை வகிப்பவர் பலமுறை கெஞ்சிக் கேட்டுக்கொள்வது வழக்கமாகிவிட்டது.
  • நாடாளுமன்றம் முறையாகச் செயல்படுவதற்கான நடைமுறைகளை வலுப்படுத்தவில்லை என்றால், நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பே நாளடைவில் தன்னுடைய முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் இழந்துவிடும்’ என்று சமீபத்திய ஆய்வறிக்கை எச்சரித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.
  • அரசு நிர்வாக இயந்திரம் மக்களுக்குப் பதில் அளிக்கும் விதமாக, நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் – கேள்விகளுக்குப் பதில் சொல்லும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அனைத்து நடைமுறைகளையும் சீர்திருத்தி வலுப்படுத்த வேண்டும் என்ற புரிதல், இப்போது அனைத்துத் தரப்பினராலும் உணரப்படுகிறது.

ஊழலும் எதிர்வினையும்

  • நாள் செல்லச்செல்ல, நாடாளுமன்றம் தங்களுக்காகச் செயல்படாமல், தங்களின் உணர்வுகளை மதிக்காமல் செயல்படுகிறது என்று நாடு முழுவதும் உள்ள மக்கள் தெரிந்துகொண்டு வருகின்றனர். நாடாளு மன்றம் என்பது தனக்குரிய கடமைகளை நிறைவேற்றாமல் விதிவிலக்கான அமைப்பாக இருந்துவிட முடியாது.
  • கடந்த காலத்தைவிட உயர் இடங்களில் ஊழல் அதிகரித்து வருகிறது. ஆனால் அப்படி வெளிப் படும் ஊழல்கள் உடனடியாக, முழுமையாக தண்டிக்கப்படுவதில்லை. நேருவுக்கு மிகவும் பிடித்தவராக இருந்தபோதிலும் நிதியமைச்சர் டி.டி.கே. கிருஷ்மாச்சாரி முந்த்ரா ஊழலில் பதவி விலக நேர்ந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களே ஊழலில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட இரண்டு நிகழ்வுகள் நாட்டையே உலுக்கின.
  • 1951இல் எச்.ஜி. முட்கல் என்ற உறுப்பினர் நாடாளுமன்றத்துக்கு முன்னோடியாக உருவாக்கப்பட்ட அரசமைப்பு அவையின் உறுப்பினர், 1974இல் துல்மோகன் ராம் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களுடைய கவனத்தை ஈர்த்தன. மும்பை தங்கம்-வெள்ளி வியாபாரிகளின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் பேசுவதற்காகவும் அவர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காகவும் முட்கல் திட்டமிட்டுச் செயல்பட்டது தெரியவந்ததால், முழுமையான விசாரணைக்குப் பிறகு நாடாளுமன்றத்திலிருந்தே விலக்கப்பட்டார்.
  • வர்த்தக அமைச்சகத்திடமிருந்து சாதகமான முடிவைப் பெறுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போல போலிக் கையெழுத்திட்டு, போலியாக ஆவணம் தயாரித்து அளித்ததாக துல்மோகன் ராம் என்ற உறுப்பினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. நாடாளுமன்றம் அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டாலும், நீதித்துறை அவருடைய வழக்கை விசாரித்து சிறையில் அடைத்தது. இவ்விருவரும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் என்பதால் காங்கிரஸ் கட்சிக்குத் தார்மிகரீதியாக மிகப் பெரிய பின்னடைவும் களங்கமும் ஏற்பட்டன.
  • அதற்குப் பிறகு மிகப் பெரிய ஊழல்கள் பற்றியெல்லாம் பேசப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் போஃபர்ஸ் பீரங்கி பேரம், எச்டிடபிள்யூ ரக நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் தொடர்பான பேரம், சர்க்கரை ஊழல், பங்குச் சந்தையில் செயற்கையாக விலையேற்றம் செய்ய வைத்து அப்பாவி முதலீட்டாளர்களின் பணத்தைக் கோடிக்கணக்கில் சூறையாடிய பங்குத் தரகர் ஹர்ஷத் மேத்தா, போலி ஆவணங்கள் மூலம் வங்கிகளிடம் பெருந்தொகையை ஊக வியாபாரத்துக்காகக் கடனாகப் பெற்ற ஊழல், தொலைத்தொடர்புத் துறை ஊழல், யூரியா உர முறைகேடு என்று அடுத்தடுத்து ஊழல்கள் பற்றிய தகவல்கள் வெளியாகின்றன.
  • இவற்றில் பெரும்பாலானவற்றை நீதித்துறை விசாரணைக்கு உள்படுத்தி தண்டனை வழங்கும் வேலையை நாடாளுமன்றம் மேற்கொள்ளவில்லை. ஆனால், சில ஊழல்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையின் கவனத்துக்குக் கொண்டு வந்தது பாராட்டுக்குரியது. இப்படி ஊழல்களை அம்பலப்படுத்தியதாலும் தவறு செய்தவர்களைத் தண்டனைபெற வைத்த தாலும் ஆளும் கட்சிக்கு அரசியல்ரீதியாக பேரிழப்பு ஏற்பட்டது சாதாரண விஷயமல்ல.

நன்றி: தி இந்து (30 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்