TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 2

August 12 , 2022 727 days 435 0

விளையாட்டு: சுதந்திரத்துக்குப் பின் முதல் ஒலிம்பிக் பதக்கம்

  • சுதந்திர இந்தியாவில் விளையாட்டுத் துறையில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும், 1948 ஆம் ஆண்டில் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற தங்கப் பதக்கம் மிகப் பெரிய திருப்புமுனை.
  • ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி நிகழ்த்திய சாதனையைப் போல வேறு எந்த அணியும் செய்ததில்லை. 8 தங்கப் பதக்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களை இந்திய ஹாக்கி அணி வென்றுள்ளது.
  • இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1928ஆம் ஆண்டு முதலே ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி விளையாடி வருகிறது. 1928, 1932, 1936 எனத் தொடர்ச்சியாகத் தங்கப் பதக்கத்தை இந்தியா வென்றது. ஆனால், இந்தச் சாதனை நிகழ்ந்ததெல்லாம் பிரிட்டிஷ் இந்தியா காலத்தில்.
  • 1948இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான் இந்தியா ஒரு சுதந்திர நாடாக முதன்முறையாகப் பங்கேற்றது. காலனி நாடாக எந்த நாட்டிடம் இருந்ததோ அந்த நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இருந்துதான் இந்தியாவின் ஒலிம்பிக் பயணம் தொடங்கியது.
  • இந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரே ஒரு பதக்கத்தை வென்றது. அது, இந்திய ஹாக்கி அணி மூலம் கிடைத்த பதக்கம். இறுதிப் போட்டியில் நம்மை அடிமைப்படுத்திய இங்கிலாந்தை எதிர்த்துதான் இந்தியா விளையாடியது. அதில், 4-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
  • அந்த வகையில் சுதந்திரம் அடைந்த பிறகு 1948ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற தங்கப் பதக்கம், சுதந்திர இந்தியாவின் ஒலிம்பிக் பயணத்தின் சிறப்பான தொடக்கமாக அமைந்தது.

ஆட்சி: அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய முதல் அமைச்சரவை

  • பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15, 1947 அன்று நாட்டின் முதல் அமைச்சரவை அமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதமராக ஜவாஹர்லால் நேரு பொறுப்பேற்றார்; வெளியுறவுத் துறை, அறிவியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளைப் பிரதமர் கூடுதலாகக் கவனித்துக்கொண்டார்.
  • அவரைச் சேர்த்து 15 பேர் முதல் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். அமைச்சரவையில் நேருவுக்கு அடுத்த நிலையில் வல்லபபாய் படேல் இடம்பெற்றார்; நாட்டின் முதல் துணைப் பிரதமராகச் செயல்பட்ட அவர் உள்துறை, தகவல் ஒலிபரப்புத் துறையையும் கூடுதலாக கவனித்துக்கொண்டார்.
  • மகாத்மா காந்தியின் ஆலோசனைப்படி, சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்க வேண்டும், இந்தியாவின் அறிவாளிகள் இடம்பெற வேண்டும், காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இடம்பெற வேண்டும் என்று நேரு விரும்பினார்.
  • அந்த வகையில் இந்து, முஸ்லிம், கிறித்தவர், சீக்கியர், பார்ஸி சமூகங்களைச் சேர்ந்தவர்களும், தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவரும் முதல் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெற்றனர்; அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே பெண் ராஜ்குமாரி அம்ரித் கவுர்.
  • சட்ட அமைச்சராக பி.ஆர்.அம்பேத்கர், நிதியமைச்சராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம், தொழில்துறை அமைச்சராக சியாம பிரசாத் முகர்ஜி, கல்வி அமைச்சராக மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
  • 26 ஜனவரி 1950இல் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்படும் வரை, பிரிட்டிஷ் பேரரசின் டொமினியனாக இருந்த இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக சர் மவுண்ட் பேட்டனும், பிறகு ராஜாஜியும் பதவி வகித்தனர். நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் பொறுப்பேற்றார்.

இலக்கியம்: இலக்கியம் வளர்க்கும் தேசிய அமைப்பு

  • இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் இலக்கிய வளர்ச்சிக்காக சாகித்திய அகாடமி 1954 மார்ச் 12இல் தொடங்கப்பட்டது. இதன் மூலம் எழுத்து இலக்கியத்தில் பங்களிப்பு செய்தவர்களுக்கு விருது வழங்கும் நடைமுறையும் தொடங்கப்பட்டது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் தொடக்க விழா நடைபெற்றது.
  • ஜவாஹர்லால் நேரு தலைமையிலான இந்த அகாடமியில் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், அபுல் கலாம் ஆசாத், ராஜாஜி, கே.எம்.பணிக்கர், கே.எம்.முன்ஷி, ஜாகிர் ஹுசைன், உமா சங்கர் ஜோஷி, மகாதேவி வர்மா, டி.வி.குண்டப்பா, ராம்தாரிஷிங் தினகர் உள்ளிட்டவர்கள் உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர். இதன் அலுவலகம் டெல்லி ரவீந்திர பவனில் தொடங்கப்பட்டு, இயங்கிவருகிறது.
  • 1955இலிருந்து இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு விருதும் வழங்கப்பட்டது. தமிழில் ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழ் இன்பம்’ கட்டுரைத் தொகுப்புக்குச் சிறந்த நூலுக்கான சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.
  • இந்தியாவின் மாநில மொழி இலக்கிய வளர்ச்சிக்காகக் கருத்தரங்குகள், கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளை சாகித்திய அகாடமி நடத்திவருகிறது; இலக்கிய வளர்ச்சியில் ஈடுபடுவோருக்கு இலக்கிய நல்கை அளித்துவருகிறது; தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இலக்கிய நூல்களையும் பதிப்பித்துவருகிறது; சாகித்திய அகாடமி விருது பெற்ற பிறமொழி நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்து வெளியிடுகிறது. அதேபோல் தமிழ் நூல்களையும் பிற மொழிகளில் பதிப்பித்துவருகிறது.

மருத்துவம்: சோதனைக் குழாய் குழந்தை எனும் சாதனை

  • கடந்த நூற்றாண்டின் மகத்தான அறிவியல் சாதனைகளில் முக்கியமானது ’சோதனைக் குழாய் குழந்தை’. கருப்பைக்கு வெளியே ஆணின் விந்தணுவையும் பெண்ணின் கருமுட்டையையும் இணைத்து கருவைச் செயற்கையாக உருவாக்கும் முறை அது.
  • இந்தியாவில் 1978, அக்டோபர் 3 அன்று அது சாத்தியமானது. அதை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியவர் டாக்டர் சுபாஷ் முகர்ஜி. அந்த வகையில் பிறந்த முதல் குழந்தை துர்கா. உலக அளவில் ‘சோதனைக் குழாய்’ முறையில் பிறந்த இரண்டாவது குழந்தை துர்கா.
  • துர்கா எனும் கனவைச் செயற்கை முறையில் நனவாக்கி, மாபெரும் சாதனையைப் படைத்த அந்த மருத்துவருக்கு அப்போது பாராட்டுகளோ புகழோ கிடைக்கவில்லை. மாறாக, கண்டனங்களும் அவமரியாதைகளுமே பரிசாகக் கிடைத்தன. அவரது அறிவியல் விளக்கங்களைக் கேட்கவும் எவரும் தயாராக இல்லை.
  • நடைமுறையில் சாத்தியமற்றது என அவருடைய அரிய சாதனை புறந்தள்ளப்பட்டது. அது மருத்துவ மோசடி என்று அரசு அறிவித்தது. அவரைத் தற்கொலைக்கு இட்டுச்சென்ற துன்புறுத்தல்கள் அவை.
  • 1986இல் டாக்டர் டி.சி.அனந்தகுமார் இரண்டாவது சோதனைக் குழாய் குழந்தையை உருவாக்கிய பின்னரே, சுபாஷ் முகர்ஜியின் சாதனை ஏற்றுக்கொள்ளப்பட்டது; அவரின் மகத்துவத்தை உலகம் அறிந்தது. வாழும்போது கிடைக்காத அங்கீகாரமும் மரியாதையும் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னரே முகர்ஜிக்குக் கிடைத்தன.
  • 2002இல் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் முகர்ஜியின் சாதனையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அவரால் இந்தப் புவிக்கு வந்த துர்கா எனும் கனுப்பிரியா அகர்வால், தனது 25ஆம் பிறந்த நாள் அன்று தனது பிறப்பு குறித்தும் முகர்ஜி குறித்தும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் காணக் கிடைக்கிறது. அந்தப் பேட்டி டாக்டர் சுபாஷ் முகர்ஜியின் சாதனையை வரலாற்றில் நிலைநிறுத்தி உள்ளது.

கல்வி: பெருமைசேர்க்கும் உயர்கல்வி நிறுவனங்கள்

  • சுதந்திரத்துக்குப் பிறகு கல்வியை அனைவருக்கும் கொண்டுசேர்ப்பதற்கான தீவிர முயற்சிகள் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டன. அப்போதிருந்த பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிறுவனங்களும் அதற்குப் போதுமானவையாக இல்லை. புதிய கல்விப் பிரிவுகளை உள்ளடக்க வேண்டிய தேவையும் இருந்தது.
  • எனவே, புதிய பல பல்கலைக்கழகங்களையும் உயர்கல்வி நிறுவனங்களையும் தொடங்குவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டது.
  • 1951 இல் கரக்பூரில் முதல் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஐஐடி) தொடங்கப்பட்டது. இன்று இந்தியாவின் 23 நகரங்களில் ஐடிடிகள் இயங்கிவருகின்றன. 1961இல் இந்திய மேலாண்மைக் கல்விக் கழகம் (ஐஐஎம்) கல்கத்தாவில் தொடங்கப்பட்டது.
  • இன்று 20 இந்திய நகரங்களில் ஐஐஎம்கள் இயங்கிவருகின்றன. மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த இரண்டு உயர்கல்வி அமைப்புகளும் முறையே தொழில்நுட்பக் கல்வி, மேலாண்மைக் கல்வியில் சர்வதேச அளவில் மதிப்பைப் பெறும் சிறந்த பட்டதாரிகளை உருவாக்கிவருகின்றன. ஐஐடிகள் ஆய்வுப் புலத்திலும் பல முக்கியமான பங்களிப்புகளை செலுத்திவருகின்றன.
  • 1969இல் தொடங்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யு) இந்திய அளவில் கலை, சமூகவியல் சார்ந்த பாடங்களுக்கான சிறந்த கல்வி நிறுவனமாக கருதப்படுகிறது. 2019இல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்ற அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற அறிஞர்களை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
  • இவை தவிர நூற்றாண்டுகளைக் கடந்தவையும் சுதந்திரத்துக்குப் பிறகு தொடங்கப்பட்டவையுமான பல பல்கலைகழகங்களும் உயர்கல்வி நிறுவனங்களும் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துவருகின்றன.
  • 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்வதேசப் பல்கலைக்கழகங்களுக்கான க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல் ஆயிரம் இடங்களில் இந்தியாவின் 27 உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. சுதந்திர இந்தியாவில் உயர்கல்வி அடைந்திருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு இதுவே சான்று. அதே நேரம் முதல் 150 இடங்களில் ஒன்றுகூட இல்லை என்பது இந்திய உயர்கல்வி பயணிக்க வேண்டிய தொலைவையும் சேர்த்தே நினைவுறுத்துகிறது.

ஒன்றுபட்ட இந்தியா

  • ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், மொழிவாரி மாநில கோரிக்கை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், பட்டாபி சீதாராமய்யா தலைமையில் (ஜேவிபி) துணைக் குழுவின் அறிக்கை, ஆந்திர மாநிலத்தை மட்டும் உருவாக்கலாம் என்று அனுமதித்தது.
  • அதைக்கூட மொழி அடிப்படையிலானதாக அது கருதவில்லை. இருப்பினும் அந்த அறிக்கைக்குப் பிறகு மொழிவாரி மாநில கோரிக்கைகள் படிப்படியாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. தனி ஆந்திர மாநிலம் கோரி பொட்டி ஸ்ரீராமுலு மதராஸ் மாகாணத்தில் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில், அவர் உயிரிழந்த பிறகு போராட்டம் தீவிரமடைந்தது.

மக்கள் போராட்டம்

  • மதராஸ் மாகாணத்தின் மலபார் பகுதியில் முன்னாளில் கொச்சி, திருவிதாங்கூர் சமஸ்தானங்களின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதிகளை இணைத்து ஐக்கிய கேரளம் என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற போராட்டம் மக்களுடைய ஆதரவைப் பெற்றது.
  • கம்யூனிஸ்டுகள் அதில் முக்கியப் பங்கு வகித்தனர். பம்பாய் மாகாணத்திலும் மகாராஷ்டிரம், குஜராத் என்று இரண்டு தனித்தனி மாநிலங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற் கான போராட்டம் வலுவடையத் தொடங்கியது.
  • இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் ஆரம்ப விதை, தேசிய சித்தாந்தத்திலிருந்துதான் ஏற்பட்டது, காங்கிரஸ் கட்சியே இதை நிறைவேற்றித்தருவதாக உறுதிமொழி அளித்திருந்தது என்பவை உண்மைகளாக இருக்க, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சியின் நிலை நேரெதிராக மாறிவிட்டது.
  • இந்தப் போராட்டங்கள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவையாகப் பார்க்கப்பட்டு, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
  • சில வட இந்திய மாநிலங்களின் நில எல்லைகளில் மட்டும் சிறிதளவு மாறுதல்களைச் செய்ய ஜேவிபி அறிக்கை அனுமதி தந்தது. கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய தனி மாநில கோரிக்கைகளை, அவற்றை எழுப்ப இது சரியான நேரமல்ல என்று நிராகரித்தது.
  • விசால ஆந்திரா கோரிக்கையை மட்டும் ஏற்ற ஜேவிபி அறிக்கை, மதராஸ் பட்டணம் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அப்போது அப்படியே கிடப்பில் போட்டது.
  • ஆந்திர மாநில கோரிக்கையை ஏற்றாலும், மொழிவாரி மாநிலப் பிரிவினை கூடாது என்று கூறியதால், ஆந்திர மாநிலம் அமைவதும் உடனடியாக மேற்கொள்ளப்பட மாட்டாது என்பது தெளிவாகிவிட்டது. தனி ஆந்திர மாநிலக் கோரிக்கைக்கான போராட்டம் மேலும் சில ஆண்டுகள் நீடித்தது.
  • பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த பிறகுதான் 1953 அக்டோபர் 1இல் ஆந்திரம் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி மொழிவாரி மாநிலங்கள் தொடர்பான தன்னுடைய நிலையை அப்படியே நேரெதிராக மாற்றிக்கொண்டதால் வன்முறை நிறைந்த போராட்டங்களுக்கு வழியமைத்துவிட்டது.
  • காங்கிரஸின் இந்த நிலையால் மொழிவாரி மாநிலங்களுக்கு ஆதரவாக ஒலித்த வெறியற்ற குரல்கள் வலுவிழந்து, எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பிரிவினைவாத கோஷங்கள் வலுவடையும் நிலை ஏற்பட்டது.

மாநில மறுசீரமைப்பு ஆணையம்

  • இந்தப் பின்னணியில்தான் 1953 டிசம்பரில் மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம் (எஸ்ஆர்சி) உருவாக்கப்பட்டது. மாநிலங்களை மறுசீரமைப்பது தொடர்பாக விருப்பு-வெறுப்பில்லாமலும் திறந்து மனத்துடனும் ஆராயுமாறு ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.
  • 1955 ஜூன் 30க்குள் அறிக்கை தர வேண்டும் என்று முதலில் பணிக்கப்பட்ட அந்த ஆணையத்துக்கு 1955 செப்டம்பர் 30 வரையில் கால நீட்டிப்பு தரப்பட்டது. மொழிவாரியாகத்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் புறக்கணிக்க ஆணையத் தால் முடியவில்லை.
  • தேசப் பிரிவினையால் அச்சமேற்பட்டு எதிர்மறையான அணுகுமுறைக்குச் சென்ற காங்கிரஸ் தலைமையிடமும் மாற்றங்கள் ஏற்பட்டன.
  • மொழிவாரி மாநிலங்கள் வேண்டும் என்று சுதந்திரத்துக்கு முன்னதாக தேசிய இயக்கம் கொண்டிருந்த உணர்வு மாநில மறுசீரமைப்பு ஆணையத்தையும் தொற்றிக்கொண்டது. “இப்போதுள்ள மாநிலங்களின் அமைப்பு பிரிட்டிஷ் ஆட்சியை விரிவுபடுத்தும்போது நேரிட்ட விபத்துகளாலும் சூழல்களாலும் ஏற்பட்டவையே.
  • தேசியவாத உணர்வு மக்களிடையே தலையெடுத்திருப்பதால், வெறும் நிர்வாக வசதிக்கான கண்ணோட் டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாகாணப் பிரிவினைகளை உரிய நடவடிக்கைகள் மூலம் சமப்படுத்துவது அல்லது எதிர்சமன் படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் மூலம் சரிசெய்தாக வேண்டும்” என்று ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்தது.
  • தேசிய ஒருமைப்பாடு, நிர்வாக வசதி, செலவுகளைக் குறைப்பது என்று பல்வேறு அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருந்தாலும் மொழிவாரியாக மாநிலங்கள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காமல் விட்டுவிடவோ, ஒத்திப்போடவோ முடியாது என்பதை ஆணையம் வலியுறுத்தியது.
  • எனவே, அது ஏற்படுத்திய வழிகாட்டி நெறிகள் யதார்த்த நிலைக்கு மிகவும் அணுக்கமாகவே இருந்தன. தேசிய இயக்கம் கொண்டிருந்த உணர்வுக்கும் அது நெருக்கமாக இருந்தது.
  • ஹைதராபாத் பகுதியில் இருந்த தெலுங்கு மொழி பேசும் மாவட்டங்களை ஆந்திர மாநிலத்துடன் சேர்த்துவிட வேண்டும் என்று மாநில மறுசீரமைப்பு ஆணையம் பரிந்துரைத்தது. மதராஸ் மாகாணத்தில் இருந்த மலபார் மாவட்டமும் கொச்சி – திருவிதாங்கூர் சமஸ்தானங்களுக்கு உள்பட்ட பகுதிகளும் இணைக்கப்பட்ட கேரளம் உருவாக்கப்பட வேண்டும் என்றது.
  • அதே போல மைசூர் மாநிலத்துடன் பம்பாய் – ஹைதராபாத் பிரதேசங்களில் கன்னடம் பேசியவர்கள் வசித்த பகுதிகளையும் மதராஸ் மாகாணத்தின் சில பகுதிகளையும் இணைத்து கர்நாடகம் உருவாக்கப்பட ஆணையிட்டது.
  • மராட்டி பேசும் மக்களைக் கொண்ட பகுதிகளுடன் பம்பாய் மாகாணத்தைத் தனி பகுதியாகப் பிரிக்க வேண்டும், விதர்பா பிரதேசம் தனி மாநிலமாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. விதர்பா இதுவரையில் மகாராஷ்டிரத்திலிருந்து பிரிக்கப்படவில்லை.
  • மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் எல்லைகளிலும் சிறிய மாற்றங்களைச் செய்ய அது பரிந்துரைத்தது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைய வேண்டும் என்ற கருத்தை மாநில மறுசீரமைப்பு ஆணையமும் சரியென்று ஏற்றுக்கொண்டது என்பதுதான்.
  • இது தொடக்கம்தான். மாநில மறுசீரமைப்பு ஆணையம் 1956-ல் அளித்த அறிக்கை அடிப்படையில் கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. பம்பாய் மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு குஜராத்தி பேசும் மக்களுக்காக குஜராத் என்னும் தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. பம்பாயுடன் பிற மராட்டிய பகுதிகள் இணைந்து மகாராஷ்டிரம் என்ற புதிய பெயரைப் பெற்றது.
  • பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து மதராஸ் மாகாணத் துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது. பஞ்சாப் மாநிலம் - பஞ்சாப், ஹரியாணா, இமாசலப் பிரதேசம் என்று மூன்றாகப் பிரிக்கப் பட்டது. இதே அடிப்படையில் வட கிழக்கில் அசாம் என்ற பெரிய மாநிலத்திலிருந்து ஏழு மாநிலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.
  • பின்னோக்கிப் பார்க்கும்போது, காங்கிரஸ் அஞ்சியதைப்போல மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பதற்குப் பதிலாக ஒற்றுமைப் படுத்தியிருக்கிறது. மத்திய அரசு வலுவாக இருந்தால்தான் நாட்டின் ஒருமைப்பாடு காக்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை, கூட்டாட்சித் தத்துவத்துக்கு கணிசமான சேதத்தையே விளைவித்தது. மொழிவாரி மாநிலங்கள் என்ற கொள்கை தேசிய இயக்கத்தின் நெறிமுறைகளுக்கு இயைந்ததாகவே இருக்கிறது.

நன்றி: தி இந்து (12 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்