TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 20

August 31 , 2022 708 days 387 0

தமிழ்நாடு: இந்தித் திணிப்புக்கான எதிர்ப்பும் நேருவின் உறுதிமொழியும்

  • சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களும்; ‘ஆங்கிலம் ஆட்சி மொழியாகத் தொடரும்’ என்று பிரதமர் நேரு அளித்த உறுதிமொழியும் மிக முக்கியமான திருப்புமுனைகள். தமிழகத்தில் பல பத்தாண்டுகளாக இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் அழுத்தமாகப் பதிவாகியிருக்கின்றன.
  • 1937இல் அன்றைய மதராஸ் மாகாணத்தின் முதல்வராகப் பதவியேற்ற ராஜாஜி, இந்தி மொழியைக் கட்டாயமாக்குவது குறித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக 1938 இல் பள்ளிகளில் கட்டாயமாக இந்தி கற்பிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து பெரும் போராட்டங்கள் வெடித்தன. ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். 1940இல் கட்டாய இந்தி உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
  • 1948இலும் இதே போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 1950இல் விலக்கிக்கொள்ளப்பட்டது. 1950இல் இந்தியா குடியரசு நாடாக மலர்ந்த பிறகு, ஆட்சி மொழி குறித்த விவாதங்கள் எழுந்தன. தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்திக்கு எதிராக எழுந்த எதிர்ப்புக் காரணமாக 1965 வரை அவகாசம் அளித்து, பிறகு அது தொடர்பாக முடிவெடுக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த முடிவுக்கு எதிராகத் தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவந்தன.
  • அதன் தொடர்ச்சியாக இந்தி பேசாத மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், அச்சத்தை போக்கும் வகையிலும் 1963இல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஆட்சி மொழிச் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதன்படி 1965க்கு பிறகும் இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டே தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று அன்றைய முதல்வர் பக்தவத்சலம் அறிவித்தார்.
  • இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. பல தீக்குளிப்புச் சம்பவங்கள் நடைபெற்றன. மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். மாநிலம் கொந்தளிக்கும் நிலைக்குச் சென்றதால், 1965இல் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, “நேரு அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றுவோம்” என்று அறிவித்தார். அதன் பிறகே போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.

சமூகம்: நாட்டார் வழக்காற்றியல் முன்னோடி

  • நாட்டார் வழக்காற்றியல் மேற்குலகில் உண்டான ஒரு துறை. வரலாற்றை ஆராயும்போது நாட்டார் வழக்காற்றியல் அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டது இத்துறை.
  • கல்வெட்டு போன்ற காணக்கூடிய பொருள்களின் அடிப்படையிலான வரலாறு என்பது முழுமையான வரலாறாக இருக்க முடியாது. கதைப் பாடல்கள், நாட்டார் கதைகள், நாட்டார் ஓவியங்களைப் போன்ற நாட்டார் அம்சங்களின் அடிப்படையில் வரலாற்றைத் திரும்ப ஆராய வேண்டிய அவசியத்தை இத்துறை வலியுறுத்துகிறது. தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறையின் முன்னோடி நா.வானமாமலை.
  • நாட்டாரிய எழுத்தாளரான வில்லியம் ஜான் தாமஸ், ஆங்கிலத்தில் ‘Folklore’ என்னும் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியதுபோல் தமிழில் முதன்முதலில் நாட்டார் வழக்காற்றியல் என்னும் சொல்லை முன்மொழிந்தவர் நா.வானமாமலை. மக்கள் இயக்கம் சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்ட அனுபவத்தின் அடிப்படையில், மக்களின் வரலாற்றை அவர் தொகுப்பது பொருத்தமானதாக இருந்தது.
  • கட்டபொம்மன் கதைப்பாடல், கட்டபொம்மன் கூத்து, கான்சாகிபு சண்டை, முத்துப்பட்டன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, காத்தவராயன் கதைப்பாடல் ஆகியவற்றை அவர் தொகுத்தளித்தார். இந்தக் கதைப் பாடல்கள் மூலம் பண்பாட்டு வரலாறு மட்டுமல்ல, தமிழின் இன்றைய பொது மனநிலையான ‘நாயக வழிபா’ட்டைப் பற்றியும் நாம் புரிந்துகொள்ள முடியும். கல்வெட்டு, சிற்பம், செவ்விலக்கியம் ஆகியவற்றின் அடிப்படையிலான வரலாற்றிலிருந்து வேறுபட்ட இந்த அம்சம் இந்தத் துறையைக் கவனம் மிக்கதாக்குகிறது.
  • நா.வானமாமலை பண்பாட்டு, மானுடவியல் ஆய்வுகளுக்காக ‘ஆராய்ச்சி’ என்கிற காலாண்டிதழைத் தொடங்கி நடத்திவந்தார். திருநெல்வேலியில் ‘நெல்லை ஆய்வுக் குழு' என்ற பெயரில் ஒரு குழுவதைத் தொடங்கி நாட்டார் வழக்காற்றியல் ஆராய்ச்சியாளர்கள் உருவாகவும் காரணமாக இருந்தார்.

மகளிர்: கவிதை என்னும் போராட்டக் கருவி

  • மலையாளக் கவிஞரும் போராளியுமான சுகதகுமாரி, பெண்களின் உரிமைக்காகவும் சுற்றுச்சூழல் சீரழிவுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல்கொடுத்தவர். 1970களில் நாடறிந்த ‘அமைதிப் பள்ளத்தாக்கு’ போராட்டத்தில் சுகதகுமாரியின் பங்கு முக்கியமானது.
  • இயற்கையையும் பெண்ணையும் ஒப்பிட்டு இவர் எழுதும் கவிதைகளிலும் முன்னெடுக்கும் போராட்டங்களிலும் சுற்றுச்சூழல் மீதான அக்கறை நிறைந்திருக்கும். அட்டப்பாடியில் தரிசு நிலத்தைக் காடாக்கும் முயற்சிக்காக நண்பர்களுடன் இணைந்து ‘கிருஷ்ணவனம்’ அமைப்பைத் தொடங்கினார்.
  • திருவனந்தபுரத்தில் செயல்பட்டுவந்த அரசு மனநலக் காப்பகத்தின் நிலை சுகதகுமாரியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ‘அபயா’ என்கிற அமைப்பை 1985இல் நிறுவினார். ‘அபயா’ தொடங்கப்பட்ட பிறகே மனநலம் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டது. கேரள அரசு மனநல மருத்துவமனைக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டது. பிறகு, ஆதரவற்ற குழந்தைகளுக்கும் வீடற்ற பெண்களுக்கும் ‘அபயா’ ஆதரவுக்கரம் நீட்டியது.
  • 1996இல் கேரள மாநில மகளிர் ஆணையம் தொடங்கப்பட்டபோது அதன் முதல் தலைவராக சுகதகுமாரி பொறுப்பேற்றார். இவரது பதவிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களில் பெண்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் ‘குடும்ப’ திட்டம் முக்கியமானது. களத்தில் மட்டுமல்லாமல் கவிதைகள் வழியாகவும் போராடினார் சுகதகுமாரி. வரதட்சிணை மரணங்கள், குடும்ப வன்முறை, குழந்தைகள் மீதான வன்முறை போன்றவற்றைத் தன் கவிதைகள்வழி எதிர்த்தார். ‘சுகதா டீச்சர்’ என அன்போடு அழைக்கப்பட்ட இவர் கரோனோ தொற்று காரணமாக 2020 டிசம்பரில் மறைந்தார். மக்களுக்காக எழுதப்படுகிற படைப்புகளின் ஆன்மா அழிவதில்லை என்பதை இவரது கவிதைகள் உணர்த்துகின்றன.

அறிவியல்: வளர்ச்சியை வழிநடத்திய அறிவியல் கொள்கைகள்

  • சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிப் போக்கை, நான்கு முதன்மையான அறிவியல் தொழில்நுட்பக் கொள்கைகள் வழிநடத்தின. அவை, அறிவியல் கொள்கை தீர்மானம் [Scientific Policy Resolution (SPR) – 1958], தொழில்நுட்பக் கொள்கை அறிக்கை [Technology Policy Statement (TPS) - 1983], அறிவியல் - தொழில்நுட்பக் கொள்கை [Science and Technology Policy (STP) –2003], அறிவியல், தொழில்நுட்பம் - புத்தாக்கக் கொள்கை [Science, Technology and Innovation Policy (STIP) – 2013] ஆகியவை.
  • 1958 இல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தலைமையிலான அரசாங்கம் வரைவு செய்த முதல் அறிவியல் கொள்கை, இந்தியாவில் அறிவியல் மனோபாவத்துக்கு (scientific temper) அடிக்கல் நாட்டியது. அறிவியல் தொழில்நுட்பத்துக்கான முதலீடுகளே மக்கள் நல அரசை உருவாக்கும் என்ற அறிதலில் இருந்து இந்தக் கொள்கை பிறந்தது. ஆக, அறிவியல் தொழில்நுட்பம் சமூக-பொருளாதார மாற்றத்துக்கான கருவியாக மாறியது.
  • முதல் அறிவியல் கொள்கையின் விளைவாக, அடுத்த 30 ஆண்டுகளில் வலுவான அறிவியல் அடித்தளம் இந்தியாவில் அமைந்தது. 1980-களில்புதிய துறைகளாக அறிமுகமான தரவு, மின்னணுவியல், உயிரித் தொழில்நுட்பம் ஆகியவற்றின் தொழில்நுட்ப அடித்தளத்தை வலுப்படுத்தக் கோரியது, இரண்டாவது அறிவியல் கொள்கை.
  • சமச்சீரான, நீடித்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு உருவானது மூன்றாவது கொள்கை. சமூக-பொருளாதார முன்னுரிமைகளில் அறிவியல், தொழில்நுட்ப இணைவு புத்தாக்கச் சூழலை உருவாக்கும் அம்சங்களைக் கொண்டிருந்த நான்காவது கொள்கை, LIGO, LHC – CERN, ITER, SKA போன்ற உலகளாவிய பெரும் அறிவியல் முன்னெடுப்புகளில் இந்தியாவின் பங்கெடுப்பை அதிகரித்தது. தேசிய அறிவியல், தொழில்நுட்பம் - புத்தாக்கக் கொள்கை என்று பெயரிடப்பட்டிருக்கும் ஐந்தாவது அறிவியல் தொழில்நுட்பக் கொள்கையின் வரைவு- அபி தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற விவாதங்கள்: காணாமல் போன நெறிமுறைகள்

  • தொடக்க காலத்தில் இருந்ததைப் போல நாடாளுமன்ற விவாதங்கள் சூடும் சுவையுமாக நல்ல தரத்தில் இல்லைதான். அதற்காக அன்றைய நாடாளு மன்றத்தையும் இன்றைய நாடாளுமன்றத்தையும் ஒப்பிட்டு மதிப்பிடுவது, பல காரணங்களுக்காக தவறான முடிவுக்கு நம்மை இட்டுச் சென்றுவிடும். முதலாவதாக, ‘அந்தக் காலத்திலே…’ என்று பேசத் தொடங்கினால் அப்போது எல்லாமே நன்றாக இருந்ததைப் போலவும், இப்போது எல்லாமே கெட்டு விட்டதைப் போலவும் முடிவுக்கு வரத் தோன்றும். அது சரியல்ல.
  • இரண்டாவது, நாடு சுதந்திரம் அடைந்த முதல் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பலர் விடுதலைப் போராட்டத்திலும் கலந்துகொண்டவர்கள்.
  • அந்த வகையில் அவர்களைச் சுற்றி, தியாக ஒளிவட்டம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இதனாலேயே அவர்களுடைய செயல்கள் அனைத்தும் ஆக்கபூர்வமாகவும் நியாயமாகவும் அனை வராலும் பார்க்கப்பட்டன. மூன்றாவதாக, தொடக்க காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில் பலர் வெளிநாடுகளின் பிரபலமான பல்கலைக் கழகங்களிலும் இந்தியாவின் உயர் கல்விநிலையங்களிலும் படித்தவர்கள் மேல்தட்டைச் சேர்ந்தவர்கள். விவாதங்களைத் தொடங்குவதிலும் தொடர்வதிலும் தனித்திறமை பெற்றிருந்தனர்.
  • அவர்களில் பலருடைய நுனி நாக்கு ஆங்கிலமும் தோரணையான உச்சரிப்பும் கேட்போரை மையல் கொள்ள வைத்தன. அவர்களில் பலர் வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக, தொழிலதிபர்களாகவும் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்தி யவர்கள். எனவே, அவர்களுடைய மிடுக்கான தோற்றமும் எழிலான பேச்சும் அனைவரையும் கவர்ந்தன. அறிவார்ந்த அவர்களால், மற்றவர்களுடைய பேச்சில் சமத்காரமாக குறுக்கிடவும், அனைவரும் பாராட்டும் வகையில் நகைச்சுவையாகப் பேசவும் முடிந்தது.

இன்றைய உறுப்பினர்கள்

  • இப்போது நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் வெவ்வேறு பிரதேசங்களையும் இனங்களையும் மொழிகளையும் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். நாட்டில் நிலவும் பன்மைத்துவத்துக்கு இவர்களே உண்மையான அடையாளங்கள், பிரதிநிதிகள்.
  • இப்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பகுதி அல்லது மக்களுடைய தேவைகளை, விருப்பங்களை, லட்சியங்களை நேரடியாகப் பேச வந்திருக்கின்றனர். கடந்த காலத்தில் இருந்த நவநாகரிக உறுப்பினர்களைப் போல இவர்களால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியாவிட்டாலும், அவரவர் மொழிகளில் மக்களுக்கானவற்றை நேரடியாகப் பேசப் பழகியவர்கள். இன்றைய இந்தியாவின் உண்மையான பிரதிநிதிகள் இவர்கள்தான். நாடாளுமன்றம் என்பது இந்தியாவை அப்படியே பிரதி எடுத்ததைப் போன்ற நுண்ணிய பிரதிபிம்பம்.
  • அரசியல் கட்சிகளிடையே கொள்கை, நோக்கம் அடிப்படையில் ஏகப்பட்ட பிரிவுகள் ஏற்படுமென்றால், நாடாளுமன்றம் அதற்கு விதிவிலக்காக பழையபடியே தொடர முடியாது. தொடக்க காலத்தில் பல பிரச்சினைகளுக்குக் கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டதால் நீண்ட விவாதமோ, நிறைய விவாதங்களோகூட தேவையில்லாமல் போயின. இப்போது நிலைமை அப்படியல்ல.
  • ஒவ்வொரு பிரச்சினையையும் பொருளாதார – சமூகக் கண்ணோட்டங்களுடன் பார்ப்பதுடன் நிலம், மதம், மொழி, இனம் ஆகிய பின்னணிகளோடும் பொருத்திப் பார்த்தாக வேண்டியிருக்கிறது. மக்களிடையே தங்களுடைய உரிமைகள், விருப்பங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துவருவதால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவற்றையெல்லாம் வலியுறுத்தியாக வேண்டியிருக்கிறது.

சகிப்புத்தன்மை போதவில்லை

  • முன்பிருந்த நாகரிகமான அணுகுமுறை இல்லையே என்று கவலைப்படுவதைவிட, ஒருவர் சொல்வதை இன்னொருவர் கேட்பதற்குக்கூட சகிப்புத்தன்மை இல்லாமல் போய்விட்டதே என்றுதான் அதிகம் கவலைப்பட வேண்டியிருக்கிறது. பழமையான அந்தப் பொற்காலத்தில், நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சியின் முக்கியப் பிரமுகரைக் கண்டித்து பிரதமர் நேருவால் பேச முடிந்தது.
  • பதிலுக்கு அவரும் பேசும் சுதந்திரத்தையும் உரிமையையும் பெற்றிருந்தார். “(மகாவீர்) தியாகி, கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் என்ற வகையில் கூறுகிறேன், கூட்டத்திலிருந்து வெளியேறுங்கள்” என்பார் நேரு. “உங்களைத் தலைவராக்கிய தொண்டன் என்ற முறையில் கூறுகிறேன், என்னைப் பேச அனுமதிக்க மறுக்கும் நீங்கள் வெளியேறுங்கள்” என்பார் தியாகி.
  • இருந்தும் இருவருக்கும் பரஸ்பர அன்பும் மரியாதையும் இம்மியளவும் குறையாது. நேருவும் தியாகியும் மோதிக் கொண்ட அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி துணைத் தலைவரான எஸ்.என். மிஸ்ரா அதைப் பற்றி மேலும் கூறுகிறார்: “இருவருக்குமான வாக்குவாதத்தில் நாடாளுமன்றத்தின் குவிமாடமே வெடித்து சுக்குநூறாகிவிடுமோ என்று நாங்கள் எல்லாம் பயந்தோம். அந்த விவாதத்துக்குப் பிறகு இருவரும் சிரித்துக்கொண்டே ஒருவரையொருவர் அணைத்தபடி பேசிக்கொண்டிருந்தனர். பிறகு மற்றவர்களைப் பார்த்து நேரு கூறினார், ‘நாங்களிருவரும் இன்று நேற்றல்ல, ஐம்பதாண்டுக் கால நண்பர்கள்’ என்று. சில வாரங்களுக்குள் தியாகியை மத்திய அமைச்சரவையிலும் நேரு சேர்த்துக்கொண்டார்” என்கிறார் மிஸ்ரா.

கல்வித் தகுதி அவசியமில்லையா?

  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இப்போது இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள், ஆரம்ப கால உறுப்பினர்களைவிட கல்வியிலும் அறிவிலும் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்லர். தற்போதைய நிலைமை பெருமளவு மாறியிருக்கிறது. அவை உறுப்பினர்கள் பற்றிய குறிப்புகளை ஆராய்ந்தால் உண்மைகள் தெரிகின்றன.
  • பள்ளியிறுதி வகுப்பைக்கூட முடிக்காமல் மக்களவை உறுப்பினர்களானவர்கள் எண்ணிக்கை (1991-96) இப்போது 3.57% முதலாவது மக்களவையில் இவர்களுடைய எண்ணிக்கை 23.2%, முதல் மக்களவையில், பள்ளியிறுதி வகுப்பு வரை படித்தவர்கள் எண்ணிக்கை 18.4%, இப்போது அது அதில் பாதி மட்டுமே. பட்டதாரிகள், முதுகலைப் பட்டதாரிகள், ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் உள்ளிட்டவை பெற்றவர்கள் 1991-96-ல் 76.39%. முதலாவது மக்களவையில் 58.40% மட்டுமே.
  • நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட குறைந்தபட்சக் கல்வித் தகுதி வரையறுக்கப்படவில்லை. இது குறித்து அரசமைப்பு அவையிலும் (பூர்வாங்க நாடாளுமன்றம்) விவாதிக்கப்பட்டது. அப்படியொரு தகுதியை நிர்ணயிக்கத் தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.
  • நாடாளுமன்ற உறுப்பினர் ஆகக் குறைந்தபட்ச கல்வித்தகுதி அவசியம் என்று அவைக்குத் தலைமை வகித்த பாபு ராஜேந்திர பிரசாத் விரும்பினார், ஆனால் பெரும்பான்மை உறுப்பினர்கள் வேண்டாமென்று சொன்னதும் அதை ஏற்றார். “நாட்டின் நிர்வாகப் பதவிகளுக்கும் நீதி பரிபாலனத்துக்கும் குறைந்தபட்சம் இன்னின்ன படிப்புகள் படித்திருக்க வேண்டும் என்று நாம்தான் நிர்ணயிக்கிறோம், சட்டமியற்றும் நமக்கு அப்படியொரு குறைந்தபட்சத் தகுதி தேவையில்லை - தேர்ந்தெடுக்கப்பட்டால் போதும் என்பது முரண்பாடாக இருக்கிறதே” என்றுகூட அவர் அங்கலாய்த்தார்.

நேருவின் அக்கறை

  • நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்படவும் ஆரோக்கியமான நல்ல முன்மாதிரிகள் ஏற்படவும் பிரதமர் ஜவாஹர்லால் நேரு எடுத்துக்கொண்ட பெரு முயற்சிகளையும் இடைவிடாமல் காட்டிய அக்கறையையும் குறிப்பிடாமல் போனால், அன்றைய நாடாளுமன்றத்தையும் இன்றைய நாடாளுமன்றத்தையும் ஒப்பிடும் பணி முழுமை பெறாது.
  • அவையில் சுதந்திரமாகவும் தடங்கல்கள் இன்றியும் விவாதங்கள் நடைபெற நேரு எடுத்துக்கொண்ட அக்கறை ஈடு இணையற்றது. அவை உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கும் ஜனநாயகம் அவரிடம் இருந்தது. ‘தேசப் பாதுகாப்பு கருதி, இதையெல்லாம் சொல்ல முடியாது’ என்று எந்த விதிகளுக்குப் பின்னாலும் அவர் ஓடி ஒளிந்தவரல்ல. இரண்டு அவைகளிலும் முக்கிய விவாதங்கள் நடைபெறும்போது அவர் முழு நேரமும் அமர்ந்து கேட்பார். இப்போதோ, அந்தோ பரிதாபம்!

நன்றி: தி இந்து (31 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்