TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 28

September 9 , 2022 700 days 380 0

தமிழ்நாடு: தமிழகத்திலிருந்து 2 ஆவது குடியரசுத் தலைவர்

  • தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் 1962இல் குடியரசுத் தலைவரானார். அவருக்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து தமிழகத்திலிருந்து ஆர். வெங்கட்ராமன் குடியரசுத் தலைவரானார்.
  • நாடு சுதந்திரமடைந்த பிறகு தமிழக அரசிலும் மத்திய அரசிலும் பல்வேறு பதவிகளை வகித்தவர் ஆர். வெங்கட்ராமன். மதராஸ் மாநிலத்தில் 1957 முதல் 1967 வரை தொழில், தொழிலாளர் நலம், கூட்டுறவு, போக்குவரத்து, வணிக வரி, மின்சாரம் போன்ற துறைகளைக் கவனித்தவர் ஆர். வெங்கட்ராமன். பிறகு மத்தியத் திட்டக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றினார். 1980 முதல் 1984 வரை நிதி, பாதுகாப்பு, உள்துறை போன்ற துறைகளுக்கான மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர்.
  • பின்னர் 1984 முதல் 87 வரை குடியரசுத் துணைத் தலைவராகவும் ஆர். வெங்கட்ராமன் இருந்தார். 1987இல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றபோது, ஆர். வெங்கட்ராமனை காங்கிரஸ் கட்சி சார்பில் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி களமிறக்கினார். இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக வி.ஆர். கிருஷ்ண ஐயர் நிறுத்தப்பட்டார்.
  • இத்தேர்தலில் ஆர். வெங்கட்ராமன் 7,40,148 வாக்கு மதிப்புகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வி.ஆர். கிருஷ்ண ஐயர் 2,81,550 வாக்கு மதிப்புகளைப் பெற்று தோல்வியடைந்தார்.
  • நாட்டின் எட்டாவது குடியரசுத் தலைவராக 1987 ஜூலை 25 அன்று ஆர். வெங்கட்ராமன் பதவியேற்றார்.

திரையுலகம்: தேசியம் ஊட்டிய கலைஞன்

  • நாடகமே சினிமா என்றிருந்த ஐம்பதுகளின் தொடக்கத்தில், நாடக மேடையிலிருந்து திரையுலகில் அடியெடுத்துவைத்தவர் ‘நடிகர் திலகம்' சிவாஜி கணேசன்.
  • சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியச் சமூகத்தைப் பிரதிபலித்த சமூகக் கதாபாத்திரங்களை ஏற்று, மனித உணர்வுகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் தனது தன்னிகரற்ற நடிப்பால் வடிவம் கொடுத்து வெகு மக்களின் கலைஞன் ஆனவர்.
  • வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் வாஞ்சிநாதன், வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், திருப்பூர் குமரன், பால கங்காதர திலகர், பகத் சிங் என இவர் ஏற்று நடித்த சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் கதாபாத்திரங்கள், இப்படித்தான் அவர்கள் வாழ்ந்தார்களோ என்றெண்ணி, பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை அடுத்துவந்த தலைமுறையினருக்கு உணர்த்தின.
  • திரையில் ஈட்டிய செல்வத்தின் பெரும்பகுதியை வளர்ந்துவந்த இந்தியாவுக்கு நன்கொடையாக அளித்து முன்மாதிரியை உருவாக்கிய தேசியக் கலைஞர் சிவாஜி.
  • இயற்கைப் பேரிடர்கள், அண்டை நாடுகளுடனான எல்லைப் பாதுகாப்புப் போர் போன்ற தேசிய நெருக்கடிகளை தேசம் எதிர்கொண்ட எல்லாக் காலகட்டங்களிலும் முதல் ஆளாகவும் முன்மாதிரியாகவும் இருந்து சிவாஜி கணேசன் நன்கொடைகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
  • 1965 இல் இந்தியா-பாகிஸ்தான் போரின்போது தனது மனைவியின் தங்க நகைகள், பெங்களூரில் தனக்குப் பரிசாக அளிக்கப்பட்ட தங்க பேனா ஆகியவற்றைப் பிரதமரிடம் வழங்கினார். கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை விலைக்கு வாங்கி, அங்கே தனது செலவில் கட்டபொம்மனுக்கு நினைவுச் சின்னம் அமைத்தார்.
  • இப்படி நாட்டுக்காகத் தன் தொழிலையும் அதில் ஈட்டிய செல்வத்தையும் பயன்படுத்திய சிவாஜி கணேசனை, இந்தியாவின் கலைத் தூதராகத் தன் நாட்டுக்கு அழைத்து கௌரவப்படுத்தியது அமெரிக்கா.

இசை: இந்திய இசைக்கு உலக அடையாளம்

  • உலகின் புகழ்பெற்ற மேடைகளில் சிதார் இசையை அறிமுகப்படுத்திய பெருமைக்கு உரியவர் பண்டிட் ரவிஷங்கர். மேற்கத்திய நடன பாணியான ‘பாலே’யில் புகழ்பெற்றிருந்த உதயஷங்கர், இவருடைய அண்ணன். சிறு வயதிலேயே உதய்யுடன் மேற்கத்திய நாடுகளில் தங்கியிருந்ததில், மேற்கத்திய இசை வடிவத்தின் எல்லா அம்சங்களும் ரவிஷங்கருக்கு வசமாகியிருந்தன.
  • வாராணசியில் வசதியான குடும்பத்தில் பிறந்த ரவிஷங்கர், இசை மேதை உஸ்தாத் அலாவுதீன் கானிடம் இசைப் பயிற்சி பெற்றார். சரோட் வாத்தியத்தின் மீது பிரியமாக இருந்த அவரை ‘சிதார் வாத்தியத்தில் பயிற்சி எடு’ என்று மடைமாற்றியவர் அலாவுதீன். சிதார் வாத்தியத்தில் நிபுணத்துவத்தை வளர்த்துக்கொண்டு, இந்துஸ்தானி இசையின் இனிமையை ரவி உலகெங்கும் பரப்பினார். முதல் நிகழ்ச்சியே குருவின் மகனும் சரோட் வாத்தியக் கலைஞருமான அலி அக்பர்கானுடன் ஜுகல் பந்தியாக அமைந்தது.
  • 1949லிருந்து சில ஆண்டுகளுக்கு அகில இந்திய வானொலியில் ஷங்கர் பணிபுரிந்தபோது, இந்திய இசைக்கு முக்கியத்துவம் தரும் நிகழ்ச்சிகள் வானொலியில் தொடங்கப்படுவதற்குக் காரணமாக இருந்தார். சுதந்திர நாள், குடியரசு தின அணிவகுப்புகளின் போது ராணுவ இசைக் குழுவினர் வாசிக்கும் `ஸாரே ஜகான் ஸே அச்சா' பாடலுக்கு தற்போது புழக்கத்திலிருக்கும் துள்ளலான மெட்டை அளித்தவர் ரவிஷங்கர்தான்.
  • இசை எல்லைகளைக் கடந்தது என்பதைத் தம்முடைய கலைப் பயணத்தின் கொள்கையாகவே ரவிஷங்கர் வைத்திருந்தார். சாஸ்திரிய இசையில் பழக்கம் இருப்பவர்கள் மட்டுமே ரசித்துவந்த இசையை எளிமைப்படுத்தி எல்லாருக்குமான கலையாக சிதார் இசையை மாற்றியது அவரின் அளப்பரிய பணி.
  • அமெரிக்காவின் புகழ்பெற்ற பீட்டில்ஸ் இசைக் குழுவின் கிடாரிஸ்ட் ஜார்ஜ் ஹாரிஸன், வயலின் மேதை யெஹுதி மெனுஹின் ஆகியோரோடு இணைந்து ரவிஷங்கர் நடத்திய இசை நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றன.
  • இந்த கலப்பிசை (Fusion) நிகழ்ச்சிகளில் சிதார் மூலம் ரவிஷங்கர் செலுத்திய தாக்கத்தின் பயனாக, மேற்குலகக் கலப்பிசை நிகழ்ச்சிகளுக்கு இந்திய வாத்தியங்களையும் கலைஞர்களையும் சேர்த்துக்கொள்வதற்கான புதிய வாசல் திறந்தது. யெஹுதி மெனுஹினுடன் இணைந்து இவர் நடத்திய `கிழக்கைச் சந்திக்கும் மேற்கு’ எனும் இசை நிகழ்ச்சிக்காக பெருமைமிகு கிராமி விருதையும் ரவிஷங்கர் பெற்றிருக்கிறார்.

மகளிர்: இஸ்லாமியப் பெண்களுக்கு நீதி

  • இந்தூரில் வழக்கறிஞராக இருந்த அகமது கானை 1932இல் மணந்தார் ஷா பானு. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். இவர்களுக்கு மணமாகி 14 ஆண்டுகள் கழித்து வேறொரு பெண்ணை அகமது கான் மணந்துகொண்டார்.
  • இரண்டு மனைவியரோடு ஒரே வீட்டில் வசித்துவந்த அகமது, 1975இல் ஷா பானுவை வீட்டை விட்டு வெளியேற்றினார். அப்போது ஷா பானுவுக்கு 62 வயது. வீட்டை விட்டு வெளியேற்றிய மனைவி வாழ்க்கை நடத்த சொற்ப பணத்தை அளித்துவந்தவர், அதை நிறுத்திவிட்ட நிலையில் தனக்குக் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் வேண்டும் என்று 1978இல் ஷா பானு வழக்குத் தொடுத்தார்.
  • ஷா பானு வழக்குத் தொடுத்த சில மாதங்களில் அவரை முத்தலாக் முறைப்படி விவாகரத்து செய்தார் அகமது கான். இஸ்லாம் மதத்தின் தனிச் சட்டப்படி விவாகரத்தான மனைவிக்கு ‘இத்தா’ எனப்படும் குறிப்பிட்ட காலம்வரையில் பணம் கொடுத்தால் போதுமானது என்றும் தன் மனைவிக்குத் தான் இழப்பீட்டுத் தொகை ஏதும் வழங்கத் தேவையில்லை எனவும் அகமது கான் வாதிட்டார்.
  • இதை எதிர்த்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தை அணுகினார் ஷா பானு. திருமணம், வாரிசுரிமை உள்ளிட்ட மதச் சட்டங்களுக்குள் நீதிமன்றம் எந்த அளவுக்குத் தலையிடலாம் என்பதை இந்த வழக்கு விவாதப் பொருளாக்கியது. உயர் நீதிமன்றத்தில் ஷா பானுவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வர உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் அகமது கான்.
  • இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதிகள் குழு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125 (ஜீவனாம்சம்) அனைத்து மதத்தின ருக்கும் பொதுவானதுதான் என்பதை உறுதிசெய்தது. இதையடுத்து அகமது கானின் கோரிக்கையின்பேரில் இவ்வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதிகள் குழு, இஸ்லாமியப் பெண்களின் ஜீவனாம்ச உரிமையை உறுதிசெய்யும் தீர்ப்பை 1985இல் வழங்கியது.
  • இஸ்லாம் பெண்களின் திருமணம், விவாகரத்து உரிமையைப் பாதுகாக்கும் வகையில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் விமர்சனங்கள் எழுந்தன. 1986இல் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி தலைமையிலான அரசு இஸ்லாம் பெண்களின் விவாகரத்து உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.
  • அரசு நிறைவேற்றிய இந்தச் சட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு பெண்களுக்கு வழங்கிய ஜீவனாம்ச உரிமையை நீர்த்துப்போகச் செய்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் விவாகரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய பெண்கள் எஞ்சிய வாழ்க்கை முழுமைக்கும் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் உரிமையை உறுதிசெய்தது.

கூட்டாட்சி’ செழிக்கிறதா

  • சுதந்திரத்துக்குப் பிறகு மக்களுடைய மனங்களில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை காங்கிரஸ் தலைமை உணர்ந்துகொண்டது. கட்சியிலும் அதற்கேற்ற மாற்றங்களைச் செய்தது, தென்னிந்தியர்களை காங்கிரஸ் கட்சித் தலைவர்களாக நியமித்தது.
  • 1960இல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக சஞ்சீவ ரெட்டி நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பட்டியலினத்தைச் சேர்ந்த டி. சஞ்சீவய்யாவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. 1964இல் காமராஜர் சகாப்தம் தொடங்கியது.
  • காமராஜர் அரசியலில் பிரதமர்களைத் தேர்ந்தெடுக்கும் செல்வாக்கு பெற்ற ‘கிங் மேக்கர்’ ஆனார். அது தமிழ்நாட்டில் வளர்ந்துவந்த திராவிட செல்வாக்குக்கு எதிர் சக்தியாக விளங்கியது.
  • அரசியல் நிர்வாகத்தில் காங்கிரஸ் கட்சி இப்படி திறமையுள்ள ஸ்தாபனமாக வளர்ந்துவந்த அதே வேளையில், நாட்டை நவீனப்படுத்த வேண்டிய அதன் தலைவர்கள் மக்களுடைய எதிர்பார்ப்புகளுக்கேற்ப ஆட்சி செய்யத் தவறியதால் கூட்டரசின் வலு குறையத் தொடங்கியது.
  • 1962 இல் நிகழ்ந்த சீனப் படையெடுப்பும் 1965இல் பாகிஸ்தானுடனான போரும் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தி, தேசிய உணர்வுக்குப் புத்துயிர் ஊட்டின. ஆனால், பொருளாதாரரீதியாக மக்களுடைய வாழ்க்கைத்தரம் மோசமானது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி வலுவான மத்திய அரசு இருந்தால்தான் நாடு முன்னேறும் என்கிற காங்கிரஸின் கருத்து சரிதானா என்று மக்களிடம் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.
  • 1966-67இல் ஏற்பட்ட கடுமையான உணவு தானியப் பற்றாக்குறை அவர்களுடைய வாதங்களுக்கு வலுசேர்த்தது. 1967 பொதுத் தேர்தலில் பல மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது.
  • அதற்கு முந்தைய மூன்றாண்டுகள் செல்வாக்குமிக்க காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் 1967 தேர்தலில் திமுகவின் மாணவர் அணித் தலைவரிடம் தோல்வி அடைந்தார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த நிகழ்வானது, ‘வலுவான மத்திய அரசு’ என்கிற காங்கிரஸ் தலைமையிலான நிர்வாக முறையால் களைத்துப்போன மக்களுடைய எதிர்வினையாக மாறியது.

இந்திரா காந்தியின் போர்க்குணம்

  • மாநில அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளை மக்கள் ஏற்றுக்கொண்டதைப் போல, சில மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் அமைந்தாலும், வலுவான மத்திய அரசு அவசியம் என்று கருதியவர்கள் தங்களுடைய நிலையை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.
  • மத்திய அரசின் ஆதிக்கத்தை எதிர்க்கும் சக்திகளுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் இந்திரா காந்தி இறங்கினார். தன்னுடைய சிந்தனை வேகத்துக்கேற்ப செயல்பட முடியாத மூத்த தலைவர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியை 1969 இல் உடைத்தார், 1971இல் மக்களவை பொதுத் தேர்தலை ஓராண்டு முன்னதாக அறிவித்து, மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே வேளையில் பொதுத் தேர்தலை நடத்தும் நடைமுறையை மாற்றினார்.
  • பாகிஸ்தானுடனான போரில் பெருவெற்றி பெற்றதாலும் வங்கதேசம் என்கிற புதிய அரசை உருவாக்கப் பெரிதும் காரணமாக இருந்ததாலும் இந்திரா காந்திக்கு நாடு முழுவதும் செல்வாக்கு அதிகரித்திருந்தது. அதையொட்டிய பொதுத் தேர்தல் அவருக்கிருக்கும் செல்வாக்கை அறிவதற்கான கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு போலவே மாறியது.
  • இந்திரா காங்கிரஸ்’ என்று அழைக்கப்பட்ட – அவருடைய தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பெருவெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. தனிப்பட்ட அவருடைய அரசியல் செல்வாக்கு, புதிய அரசியல் பாணியானது. காங்கிரஸ் கட்சிக்குள் அவர் தனிப்பெரும் தலைவரானார், மாநில காங்கிரஸ் தலைவர்கள் சுயசெல்வாக்கு இல்லாமல் செல்வாக்கிழந் தார்கள்.
  • பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி, இந்தியா சாதாரண நாடல்ல, கடுமையான முடிவுகளையும் எடுக்கவல்ல நாடு என்ற பெயரை சர்வதேச அரங்கில் இந்திரா ஏற்படுத்தினார். மத்திய அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக இடைவிடாமல் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த கட்சிகளைக் கட்டுக்குள் வைக்க, நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார்.
  • இதற்கிடையில், இந்திரா காந்தி ஆட்சியில் வேளாண்மையில் நவீனத் தொழில்நுட்பங்களையும் வீரிய விதைகள், பூச்சிக்கொல்லி, உரம் ஆகியவற்றையும் பயன்படுத்தி பசுமைப் புரட்சி ஏற்பட்டது. உணவு தானிய உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்தது. இறக்குமதிக்கு அவசியமில்லாமல் போனது.
  • விவசாயத்தில் ஈடுபட்டுவந்த இடைநிலைச் சாதியினர் வருவாய் உயரவும் மகிழ்ச்சி அடைந்தனர். அதே வேளை அரசியல், சமூக, பொருளாதாரத் தளங்களில் தங்களுக்கும் அதிக அதிகாரமும் பங்களிப்பும் வேண்டும் என்று விரும்பினர். அவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றும் வகையில் கட்சியின் அமைப்புகளில் மாற்றம் செய்ய இந்திரா காந்தி தவறினார்.
  • மாநிலங்களில் ஆட்சி செய்த மாற்றுக் கட்சி அரசுகளைக் கலைக்க அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்த அவர் தயங்கவேயில்லை. இதனால் பிற கட்சிகளுடன் சமரசம் கண்டு தீர்வுகளை ஏற்படுத்திய கலாச்சாரம் மறைந்தது. சமரசம் மூலம் தீர்வுகாண விரும்பாத போக்கால், காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டது.
  • சர்வதேச எல்லைக்கு அருகில் இருக்கும் பஞ்சாப், காஷ்மீர், அசாம் மாநிலங்களில் பிரிவினைப் போக்கும் மத்திய அரசுக்கு எதிரான விரோத மனப்பான்மையும் அதிகரித்தன. இம் மூன்று மாநிலங்களுடன் வட கிழக்கு மாநிலங்களிலும் பிரிவினைப் போக்கு தலைதூக்கியது. வடகிழக்கில் அரசுக்கு எதிரான கலகங்கள் அரசியல் சமரசங்களால் அல்ல, இரும்புக்கரத்தால்தான் ஒடுக்கப்பட்டன. இந்தத் தொடர் போராட்டங்களின் காரணமாக மத்திய அரசு களைத்துப் போனது. காங்கிரஸும் சமரசம் காண முடியாமல் திகைத்தது.

கூட்டாட்சி உணர்வு நீடிக்குமா?

  • கூட்டாட்சித் தத்துவத்தை உணர்ந்து அதைக் கடைப்பிடித்தால்தான் நிர்வாகம் நடத்த முடியும் என்கிற நிலை ஏற்பட்டது. பொருளாதார நிலையின் உச்சத்திலிருந்து 1992-1997 காலத்தில் நாடு சரிந்தது. எனவே, மத்திய அரசின் ஆணவமும் குறைந்தது. இதுவரை சோதித்துப் பார்க்கப்படாத அரசியல் கூட்டணி முறையை மாநிலக் கட்சிகள் இணைந்து முயன்றுபார்த்தன. அகில இந்திய தேசியக் கட்சிகளை ஒதுக்கிவிட்டு கூட்டணிகள் அமைந்தன.
  • 1996இல் ஏற்பட்ட ‘ஐக்கிய முன்னணி அரசு’, அதிகாரப் பரவலாக்கலை முதன்மைக் கடமையாக வரித்தது. ஆனால் ஐக்கிய முன்னணி அரசு அப்படி அறிவித்த போதிலும் வலுவான மத்திய அரசு என்கிற கொள்கையை நீர்த்துப் போகச் செய்யும் அளவுக்கு அதனால் எதையும் செய்ய முடியவில்லை.
  • மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை ஆராய்ந்து பரிந்துரை கூற நியமிக்கப்பட்ட நீதிபதி சர்க்காரியா தலைமையிலான ஆணையமும் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தும் எந்தவிதப் பரிந்துரையையும் அளிக்க முயலவில்லை.
  • மாநிலங்களுக்கு இடையிலான பூசல்களைத் தீர்க்க மத்திய அரசை நடுவராக அழைக்கும் போக்கே நீடிக்கிறது. அனைத்திந்திய அடிப்படையிலான பொருளாதாரமும் அனைத்திந்திய அளவிலான நடுத்தர வர்க்கமும் உருவான நிகழ்வானது, மாநிலக் கட்சிகளின் சுயாட்சிக் கோரிக்கைகளுக்குத் தடைக்கற்களாகிவிட்டன.
  • மாநிலத் தலைவரான லாலு பிரசாத் செல்வாக்குமிக்க அரசியல் தலைவராக வளர்ந்தாலும் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் மத்திய அரசின் கருவியான மத்தியப் புலனாய்வுக் கழகத்தால் விசாரிக்கப்பட்டு சிறைத் தண்டனைக்கும் ஆளாகிவிட்டார்.
  • எது எப்படியிருந்தாலும், கூட்டாட்சி அரசு முறை திறன்மிக்கதாக விளங்கும் அளவுக்கு சமரசம் காண்பதும் விட்டுக்கொடுப்பதும் அவ்வப்போது தொடர்கிறது. மாநிலக் கட்சித் தலைவரான தேவ கவுடா 1996 ஆகஸ்ட் 15 இல் செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து இந்தியில் உரையாற்றியதை இதற்கு நல்ல உதாரணமாகக் கொள்ளலாம். ஐக்கிய முன்னணி அரசில் மாநிலக் கட்சிகள் தில்லி சிம்மாசனத்தை அடுத்தடுத்து கைப்பற்றின.
  • சர்தார் கே.எம். பணிக்கர் தேசிய அரசியலில் உத்தரப் பிரதேசத்தின் ஆதிக்கம் குறித்துக் கவலைப்பட்டு புத்தகம் எழுதியிருந்தார். அதற்கு நேர்மாறாக இது நடைபெற்றது. கடந்த ஐம்பதாண்டுகளில் கூட்டாட்சித் தத்துவத்தில் எதிரெதிராக நிற்கும் இருதரப்பும் செய்த அதிகாரத் துஷ்பிரயோகங்களாலும், தவறுகளாலும் தேர்தல்களில் தண்டனையும் பெற்றுவிட்டன. கடந்த ஐம்பதாண்டு கால அனுபவத்தின்படி பார்த்தால் வலுவான மத்திய அரசின் கீழ் இந்தக் கூட்டாட்சி உணர்வு நீடிக்கும் என்றே தெரிகிறது.

நன்றி: தி இந்து (09 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்