TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 27

September 8 , 2022 701 days 416 0

ஆளுமை: மக்களின் தலைவர்

  • சுயராஜ்யம் என் பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்’ என்ற முழக்கமே இன்றுவரை பால கங்காதர திலகரை, நம் கண்முன் நிறுத்துகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக் காலத் தலைவர்களில் முக்கியமானவராகவும் மக்களின் ஆதரவுபெற்ற தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர்.
  • மகாராஷ்டிரத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த திலகர், ஆங்கிலேய அரசு இந்தியர்களைக் காரணமின்றி சிறையில் தள்ளியதால், அவர்களுக்காக வாதாடுவதற்குச் சட்டம் படித்தார். இந்திய வளங்கள் ஆங்கிலேயரால் எப்படிச் சுரண்டப்படுகின்றன என்பதை விளக்கிய தாதாபாய் நெளரோஜியின் நூல், திலகரை விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட வைத்தது.
  • நண்பர்களுடன் இணைந்து மராத்தியில் ‘கேசரி’, ஆங்கிலத்தில் ‘மராட்டா’ ஆகிய பத்திரிகைகளை 1881இல் ஆரம்பித்தார் திலகர். இரண்டு பத்திரிகைகளிலும் அவர் எழுதிய தலையங்கங்களும் கட்டுரைகளும் மக்களை விடுதலைப் போராட்டத்தில் உணர்வுபூர்வமாக ஈடுபடவைத்தன. இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பத்திரிகையாக ‘கேசரி’ மாறியது.
  • காங்கிரஸில் 1889இல் திலகர் இணைந்தார். விவேகானந்தருடன் நெருங்கிப் பழகியபோது ஆன்மிகம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் அவரது கவனம் திரும்பியது. ஆங்கிலேயர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்குக் காரணம் திலகர் எழுதிய தலையங்கங்கள்தாம் என்று கருதிய ஆங்கிலேய அரசு, அவரை 12 மாதங்கள் சிறையில் அடைத்தது. இதன் மூலம் மக்களிடம் திலகரின் செல்வாக்கு பெருமளவு அதிகரித்தது.
  • 1905இல் வங்கத்தை இரண்டாகப் பிரிப்பதை திலகர் கடுமையாக எதிர்த்தார். பிரிவினையை எதிர்த்த விபின் சந்திர பால், லாலா லஜபதி ராய் ஆகியோருடன் சேர்ந்து போராட்டங்களைத் தீவிரப்படுத்தினார். காங்கிரஸ் கட்சி மிதவாதிகள், தீவிரவாதிகள் என இரண்டாகப் பிரிந்தது. திலகர் தீவிரமாகச் செயல்பட்டவர்களின் தலைவரானார்.
  • பிரபுல்ல சாக்கி, குதிராம் போஸ் ஆகியோரை ஆதரித்துக் கட்டுரைகள் எழுதியதற்காக,1908-1914 வரை 6 ஆண்டுகளைச் சிறையில் கழித்தார் திலகர். அன்னி பெசன்ட்டுடன் இணைந்து அகில இந்திய ஹோம் ரூல் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.
  • ஒற்றுமையையும் தேசிய உணர்வையும் உருவாக்க நினைத்து, விநாயக சதுர்த்தி ஊர்வலத்தை அவர் கோலாகலமாக நடத்தினார். இந்தச் செயல் மாற்று மதத்தினரை அவரிடமிருந்து அந்நியப்படுத்தியது. பெண்கள், சாதி போன்ற சமூகக் கருத்துகளில் பழமைவாதத்தையே திலகர் பிரதிபலித்தார்.
  • ஜலியான்வாலாபாக் படுகொலைகளால் திலகரின் மனமும் உடலும் பாதிப்படைந்தன. என்ன நடந்தாலும் போராட்டத்தை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட திலகர், 1920இல் நிரந்தர ஓய்வு நிலைக்குச் சென்றார்.

மகளிர்: நம்மைப் பேசும் வரலாறு

  • கல்விக்கும் பெண்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்று பலரும் நம்பியிருந்த காலகட்டத்தில் வரலாற்று ஆய்வாளராகத் தடம்பதித்தவர் ரொமிலா தாப்பர்.
  • லக்னோவில் 1931இல் பிறந்த அவர், தன் தந்தையின் ராணுவப் பணி காரணமாகப் பல்வேறு நகரங்களில் படித்தார். வரலாற்றை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தார். 1958 இல் ‘இந்திய வரலாறு’ குறித்த ஆய்வுப் படிப்பை லண்டன் பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்தார்.
  • டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்பட, பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் வருகைதரு பேராசியராகவும் பணியாற்றியுள்ளார்.
  • பண்டைய வரலாற்றை இந்துத்துவமாகக் கட்டமைத்து அதுவே சமூக அறிவியலாக நிறுவப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, பண்டைய இந்தியா குறித்த ஆய்வில் ரொமிலா ஈடுபட்டார். பாடப்புத்தகங்களில் சொல்லியிருப்பவற்றை அகழாய்வுகள் சொல்லும் தரவுகளின் அடிப்படையில் கேள்விக்கு உள்ளாக்குவதாகப் பண்டைய இந்தியா குறித்த இவரது சமூக, கலாச்சார வரலாற்று ஆய்வு அமைந்தது.
  • அசோகர், மௌரியர்கள் குறித்த இவரது ஆய்வு நூல் குறிப்பிடத்தகுந்தது. வரலாற்று ஆய்வில் எவ்விதச் சமரசத்துக்கும் சாய்வுக்கும் இடங்கொடுக்கக் கூடாது என்பது ரொமிலாவின் பார்வை.
  • சிலர் பழங்கால இந்தியாவைப் பொற்காலமாகச் சித்தரிக்க நினைத்து அந்நாளில் நிலவிய சாதியக் கட்டுமானங்களைப் பதிவுசெய்வதில்லை. ஆனால், அதுவும் சேர்ந்ததுதானே இந்தியா என்பது ரொமிலாவின் வாதம்.
  • பழங்காலத்தில் நிலவிய சாதியக் கட்டுமானங்களும் வர்க்கப் பிரிவினைகளும் எப்படி அதிகாரப் படிநிலையை உருவாக்கின என்பது உள்ளிட்ட வரலாறே முழுமையானதாக இருக்கும் என்று சொல்லும் ரொமிலா தாப்பர், வரலாற்று ஆய்வை அப்படித்தான் மேற்கொண்டார். இவரது ஆய்வு நூல்கள் பண்டைய இந்திய வரலாற்றை மறுஆய்வுக்கு உட்படுத்தின.
  • வரலாற்று ஆய்வாளர் என்பதற்காகச் சமகாலத்திலிருந்து ரொமிலா தாப்பர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை. சமகால அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து விமர்சித்துவருகிறார். நாடு விடுதலை பெற்றபோது 15 வயது சிறுமியாகத் தான் கனவு கண்ட முற்போக்கு இந்தியா இன்னும் கைகூடவில்லை என்று தன் அதிருப்தியைப் பதிவுசெய்துள்ளார்.
  • மதத்தின் பெயரால் அத்துமீறலும் வன்முறையும் நிகழ்த்தப்படும்போது, வரலாற்று ஆய்வின் அடிப்படையிலான உண்மையை எடுத்துச் சொல்லி, நாம் தற்போது பேசும் சித்தாந்தத்துக்கும் நம் வரலாற்றுக்கும் தொடர்பில்லை என்பதைக் கவனப்படுத்திவருகிறார்.
  • 1992, 2005 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுகளை ரொமிலா தாப்பர் மறுத்தார். “நான் தொடர்புடைய கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள் தவிர அரசாங்கம் வழங்கும் எந்த விருதையும் நான் ஏற்பதற்கில்லை” என்று அதற்குக் காரணமும் சொன்னார். போலிப் பெருமிதங்களில் மூழ்கிவிடுவதிலிருந்து மக்களைக் காத்துவரும் வரலாற்று ஆய்வாளர்களில் ரொமிலா தாப்பர் தனித்துவமானவர்.

சட்டம்: திருமணப் பாதுகாப்பு

  • தனிப்பட்ட மதச் சட்டங்களுக்கும் சடங்குகளுக்கும் பலிகொடுக்கப்பட்ட பெண்ணுரிமையை மீட்கும் நிகழ்வுகள் இந்தியச் சமூகத்தில் மிக அரிதாகவே நிகழ்கின்றன.
  • கணவன் ஒரே நேரத்தில் மூன்று முறை ‘தலாக்’ சொல்வதன் மூலம் மனைவியை விவாகரத்து செய்யும் ‘உடனடி முத்தலாக்’ முறையைத் தடைசெய்யும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 2017 இல் வழங்கியது. இதற்குக் காரணம் உத்தராகண்டைச் சேர்ந்த ஷாயரா பானு.
  • கடிதம் மூலம் ‘முத்தலாக்’ சொல்லி ஷாயரா பானுவை விவாகரத்து செய்திருந்தார் அவருடைய கணவர். உடல்ரீதியான வன்முறைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளான ஷாயரா பானு, பெண்களைச் சிறுமைப்படுத்தும் முத்தலாக் முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
  • சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அடிப்படை உரிமைக்கு எதிரானது ‘உடனடி முத்தலாக்’ என்கிற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
  • அதைத் தொடர்ந்து இஸ்லாமியப் பெண்கள் திருமணப் பாதுகாப்புச் சட்டம், 2019 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ‘உடனடி முத்தலாக்’ நடைமுறை சட்டவிரோதமானது; மீறினால் சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும்.

விளையாட்டு: ரன் இயந்திரத்தின் முதல் சாதனை

  • சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன் முதலாக 10 ஆயிரம் ரன்களை இந்தியாவின் சுனில் கவாஸ்கர் எடுத்ததுபோல, ஒரு நாள் போட்டிகளிலும் அந்தச் சாதனையை ஓர் இந்தியர்தான் படைத்தார். அவர், சச்சின் டெண்டுல்கர்.
  • சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் 1971இல் தொடங்கின. இந்தியா தன்னுடைய முதல் ஒரு நாள் போட்டியை 1974இல் விளையாடியது. டெஸ்ட் அரங்கில் பல சாதனைகளைப் படைத்த வீரர்கள் இருந்ததுபோலவே, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறந்த வீரர்கள் இருந்தார்கள்.
  • என்றாலும் பத்தாயிரம் ரன்களை எட்டும் போட்டியில் ஒரு கட்டத்தில் இந்தியாவின் முகமது அசாரூதினும் சச்சின் டெண்டுல்கரும்தான் இருந்தார்கள். 2000இல் சூதாட்டப் புகாரில் சிக்கி வாழ்நாள் தடையை அசாரூதின் எதிர்கொண்டதால், கிரிக்கெட்டில் இல்லாமல் போனார்.
  • 2000இலேயே 9,800 ரன்களைத் தாண்டிய சச்சின் டெண்டுல்கர், 2001இல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்தூர் நேரு விளையாட்டு அரங்கில் தன்னுடைய 266ஆவது போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியபோது இந்த மைல்கல்லை சச்சின் டெண்டுல்கர் எட்டினார்.
  • சர்வதேச அரங்கில் ஒரு நாள் கிரிக்கெட் தொடங்கி 30 ஆண்டுகள் கழித்து இந்த மைல்கல் எட்டப்பட்டது. 1989இல் ஒரு நாள் போட்டியில் அறிமுகமான டெண்டுல்கர், 12 ஆண்டுகளில் இந்தச் சாதனையைப் படைத்தார்.
  • இந்தச் சாதனை மட்டுமல்ல, இன்றுவரை அதிக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் (463) பங்கேற்ற வீரர், அதிக ரன்களை (18,426) விளாசி ரன் குவிப்பில் முதலிடம் வகிக்கும் வீரர், ஒரு நாள் போட்டிகளில் அதிக சதங்கள் (49) விளாசிய வீரர் உள்ளிட்ட சாதனைகளும் சச்சின் டெண்டுல்கரிடமே உள்ளன.

மாநிலப் பிரிவினைக்கு வித்திட்ட மொழி உணர்வு

  • மத்திய அரசு வலுவாக இருக்க வேண்டும் என்ற சித்தாந்தத்துக்கு ஏற்பக் கூட்டாட்சி அமைப்பு முறையில் மத்திய அரசே எதையும் திட்டவட்டமாகத் தீர்மானிக்க வேண்டும் என்ற வகையில் அரசமைப்பே பல்வேறு கட்டுப்பாட்டு அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
  • நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்யும் உரிமையையும் அதிகாரத்தையும் மத்திய அரசுக்கு அளித்திருப்பதன் மூலம், உயர்ந்த அதிகாரமுள்ளது எது மத்திய அரசா – மாநில அரசுகளா என்பதற்கான விடையைத் தந்திருக்கிறது அரசமைப்பு.
  • அரசமைப்பு ஏற்படுத்திய இந்த ஏற்பாடுகளுக்கும் மேலாக, அனைத்திந்திய அளவில் தனக்கு ஈடு இணையில்லாத மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக ஜவாஹர்லால் நேரு திகழ்ந்தார். மாநில அலகுகளை எப்போதும் தனது கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கருதிய ஆளும் (காங்கிரஸ்) கட்சியின் தலைவராக நேரு கோலோச்சினார்.
  • இந்த அரசியல் உடைமைகளுக்குச் சிகரம் வைத்தாற்போல ‘மத்திய திட்டக் குழு’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. பொருளாதார – சமூக வளர்ச்சித் திட்டங்களில் மாநில அரசுகள் எவற்றையெல்லாம் செய்ய வேண்டும், எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்று கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் அதிகார வர்க்கத்துக்கெல்லாம் உயர் அதிகாரபீடமாகச் செயல்பட்டது ‘மத்திய திட்டக் குழு’.
  • புதிய தேசத்தை உருவாக்குவது என்பது புதிய லட்சியமாகிவிட்டது. நாட்டை நவீனப்படுத்த விரும்பிய அரசியல் தலைவர்கள் அதை மக்களுடைய மனங்களில் உருவேற்றியதால், வலுவான மத்திய அரசு தேவை என்ற கருத்துக்கு அது கவசமானது. பாசன வசதிக்காக உருவாக்கப்பட்ட மிகப் பெரிய நீர்த்தேக்கங்களையும் தொழில் வளர்ச்சிக்காக அரசுத் துறையில் கட்டிய பெரிய தொழிற்சாலைகளையும் ‘புதிய இந்தியாவின் கோயில்கள்’ என்று வர்ணித்தார் நேரு.
  • புதிய, வளமான, சமத்துவ சமுதாயம் ஏற்பட ஐந்தாண்டு திட்டங்கள், புதிய அடிப்படை செயல்திட்டங்களாக ஏற்கப்பட்டன. நேருவும் ஐந்தாண்டு திட்டங்களுக்கான மாதிரிகளை உருவாக்கிய பி.சி. மஹாலனோபிஸும் புதிய குருமார்களாகப் போற்றப்பட்டனர். இது ஏற்படுத்திய உற்சாகமும், ஆர்வமும் எல்லோரையும் மயக்கத்தில் தள்ளிவிட்டது. அதில், ஐந்தாண்டு திட்டங்களை நிறைவேற்ற அனைத்து மாநிலங்களுமே மத்திய அரசின் ஆணையைத்தான் கேட்டு நடக்க வேண்டும் என்பதைச் சற்றே மறந்துவிட்டனர்.

மாநிலங்களின் லட்சியம்

  • வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை’ என்ற ஜனநாயக உரிமை காரணமாக மக்களை ஜனநாயகரீதியாகத் திரட்ட வேண்டியிருந்தது. இதனால் மாநிலங்களைச் சேர்ந்த படித்த - மக்களைக் கவரும் பேச்சாற்றல் மிக்க தலைவர்கள் அதிகார பீடத்தில் தங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று பிரதேச, மொழி அடிப்படையில் வலியுறுத்தத் தொடங்கினர்.
  • மத்திய அரசுக்கு எல்லாம் தெரியும்’ என்ற அரசியல் கலாச்சாரத்தைக் கேள்வி கேட்ட அவர்களுடைய உரிமைக் குரல்கள், கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க காங்கிரஸ் கட்சி கையாண்ட தீர்வு காணும் முறைமைக்கு பெரிய சோதனையாக அமைந்தன.
  • தங்களுக்குத் துளியும் விருப்பமோ, மனச் சமாதானமோ ஏற்படாவிட்டாலும் தெலுங்கு பேசும் மக்களுக்குத் தனி மாநிலம் வேண்டும் என்ற ஆந்திரர்களின் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். இது மொழி அடிப்படையில் மாநிலங்களை உருவாக்கும் பெரிய ஆவலைத் தூண்டிவிட்டது.
  • தங்களுடைய மொழி அடிப்படையில் மாநிலத்தை திருத்தியமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அத்துடன் நிற்காமல், எந்த விவகாரமாக இருந்தாலும் அதற்கு என்ன தீர்வு என்று மத்திய அரசுக்குத் தெரியும் அல்லது மத்திய அரசே முடிவெடுக்கும் என்பதைக் கேள்வி கேட்கவும் தொடங்கினர்.
  • வெவ்வேறு மொழி பேசும் மக்களிடையே தங்களுடைய சமூகத்துக்கு என்ன தேவையோ அதை மாற்று மொழிக்காரர்கள் புரிந்துகொள்ளவில்லை அல்லது அக்கறை காட்டவில்லை என்கிற கருத்து வலுப்பட்டதை, மாநிலங்களின் மறுசீரமைப்புக்காக மத்திய அரசால் நிறுவப்பட்ட ஆணையமும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
  • தேசிய கண்ணோட்டத்துக்கு உள்பட்டு மாநில – மொழி அடிப்படையிலான உரிமைகளுக்கும் பெருமைகளுக்கும் இடம் தரலாம் என்றும் வலுவான மத்திய அரசு வேண்டும் என்றும் கருத்தைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தேசம் முழுவதையும் தானே ஆண்டதால் விட்டுக்கொடுக்க முடிந்தது. இப்படிக் கோரிக்கைகளை எழுப்பியவர்களுக்கும் தேசிய உணர்வு இருந்ததாலும், பிற மொழி, இன, சமூக மக்களுடன் கலந்து பழகும் பண்பு இருந்ததாலும் மாநிலங்களைப் புதிதாக உருவாக்குவதும் ஓரளவுக்கு சுமுகமாகவே நடைபெற்றது.

மொழி உணர்வு

  • பம்பாய் மாகாணத்தில் குஜராத்தி மொழிக்காரர்களுக்கும் மராட்டியர்களுக்கும் நாளுக்கு நாள் இடைவெளி அதிகமாகிக் கொண்டே வந்தது. இறுதியாக, 1960 இல் பம்பாயைத் தலைநகரமாகக் கொண்டு மகாராஷ்டிரம், அகமதாபாத்தைத் தலைநகரமாகக் கொண்டு குஜராத் என்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
  • பஞ்சாப் மாநிலத்தில் இந்தி பேசும் - சீக்கியர் அல்லாத மக்கள் வசித்த பகுதிகளைத் தனியாகப் பிரித்து ஹரியாணா என்ற மாநிலத்தை 1966இல் உருவாக்கினார்கள். பிறகு வட கிழக்குப் பகுதியில் அசாமிலிருந்து வெவ்வேறு மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அடுத்து இப்போது உத்தராகண்ட், விதர்பா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைப் பிரித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுவருகின்றன.
  • கூட்டாட்சி முறை நமக்குத் தேவைதானா என்கிற கேள்வியை மொழி அடிப்படையிலான மாநிலப் பிரிவினைக் கோரிக்கைகள் எழுப்புகின்றன. அது போதாது என்று, தேசிய ஆட்சி மொழியாக – இணைப்பு மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் கொள்கையும் இப்போது இந்தி பேசாத மக்களிடையே குறிப்பாக தென்னிந்தியர்களிடையே எதிர்ப்பை வளர்த்துவருகிறது. சுதந்திரம் அடைந்த 15 ஆண்டுகளுக்குள் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி இடம்பெற வேண்டும் என்ற கால வரம்பு தென்னிந்திய மாநிலங்களைத் தொடர்ந்து கொந்தளிக்க வைக்கிறது.
  • இந்தியை ஆட்சி மொழியாக ஏற்பதே நாட்டின் தன்மானத்துக்குப் பெருமை’ என்கிற கருத்தை, இந்தி பேசாத மாநிலங்கள் ஏற்கத் தயாராக இல்லை. இதை, வட இந்தியா தன்னுடைய மொழியையும் கலாச்சாரத்தையும் தென்னிந்தியா மீது திணிப்பதற்கான முயற்சி என்றே அவை பார்க்கின்றன. ராஜாஜி இப்படிக் கூறியுள்ளார்: “(இந்தி தான் பெருமைக்குரியதா?) இந்த நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருக்கும் மக்களும் அவர்களுடைய மொழிகளும் இந்தியாவுக்குப் பெருமையில்லையா? வெற்றிகரமான ஜனநாயக வழிமுறைகளில்தான் நியாயம் இருக்கிறது, இதைப் புறக்கணிப்பது நாசத்துக்கே வழிவகுக்கும்”.

கையாண்ட காங்கிரஸ்

  • அரசின் தேசிய மொழிக் கொள்கையால் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் உணர்ச்சிவசப்பட்டனர், அவரவர் மொழியைக் காக்க உணர்ச்சிகரமாகத் திரண்டனர், மொழி அடையாளத்தைக் காப்பதில் உறுதியாக இருந்தனர். இந்த விவகாரத்தில் இவ்வளவு எதிர்ப்பு ஏற்பட்டுவிட்டதே இந்தியக் கூட்டாட்சி இதைத் தாங்குமா, இந்தியா ஒரே நாடாக நீடிக்குமா என்றெல்லாம் சந்தேகங்கள் ஏற்பட்டன. மொழிப் போராட்டங்கள் உச்சம் பெற்றிருந்தாலும், மொழிவழி மாநிலப் பிரிவினைகள் நடந்து முடிந்தாலும் இந்தியா இன்னமும் கூட்டரசாகவே தொடர்வது மிகப் பெரிய அற்புதம்தான்.
  • இதில் அரசியல் சமரசம் ஏற்படப் பெருமளவு காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சி. தீவிரமான கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை, தீவிரமான தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை. கட்சிகளின் மாநிலத் தலைவர்களேகூட இந்த மொழிப் போராட்டக்காரர்களின் அணிகளில் ஊடுருவி, கோரிக்கைகளை வலியுறுத்திய போதும் காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைவர்கள், பதற்றத்தைத் தணித்து சமரசத்தை ஏற்படுத்த தங்களுடைய திறமை, அனுபவம் ஆகிய அனைத்தையும் பக்குவமாகப் பயன்படுத்தினர். மொழிவழிக் கோரிக்கைகளால் ஏற்பட்ட கோபம் இருந்தாலும், தங்களை மத்திய அரசு ஒதுக்கிவிட்டது என்று போராட்டக்காரர்கள் ஒருபோதும் நினைத்துவிடாமல் அரவணைத்தது காங்கிரஸ் கட்சி.

நன்றி: தி இந்து (08 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்