TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 29

September 10 , 2022 699 days 419 0

ஆளுமை: அன்னி பெசன்ட் எனும் இந்தியர்

  • இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்த ஐரோப்பியர்களில் முக்கியமானவர் அன்னி பெசன்ட். எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலைப் போராட்டக்காரர், பிரம்மஞான சபையை இந்தியாவில் நிறுவியவர் என்று பல்வேறு பரிமாணங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியவர்.
  • முற்போக்கு எண்ணங்களைக் கொண்டிருந்த அன்னி பெசன்ட், மகள் நோய்வாய்ப்பட்டபோது நாத்திகராக மாறினார். மதத்தின் மீது தீவிரப் பற்றுகொண்ட கணவருடன் அவரால் சேர்ந்து வாழ இயலவில்லை. படித்தார்; பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தார். மூடப்பழக்கவழக்கங்களை எதிர்த்துப் பரப்புரை செய்தபோது, எதிர்ப்புகளைச் சம்பாதித்தார்.
  • லிங்க்’ பத்திரிகையில் அயர்லாந்திலும் இந்தியாவிலும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களை ஆதரித்துக் கட்டுரைகளை எழுதினார். பெண் விடுதலை, தொழிலாளர் உரிமை, குடும்பக் கட்டுப்பாடு போன்றவற்றுக்காகவும் குரல் கொடுத்தார்.
  • 1889இல் அமெரிக்காவில் ஹெலெனா பிளேவட்ஸ்கியைச் சந்தித்த பிறகு, மீண்டும் ஆத்திகரானார் அன்னி பெசன்ட். 1893இல் இந்தியாவுக்கு வந்தார்.
  • சென்னை அடையாறில் பிரம்மஞான சபையை நிறுவினார். இந்து சாஸ்திரங்களைக் கற்றார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்திய உடை அணிந்து, ஓர் இந்தியராக மாறினார்.
  • ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தார். 1915இல் ‘நியூ இந்தியா' செய்தித்தாளை ஆரம்பித்தார். இதில் இவர் எழுதிய கட்டுரைகள் மக்களின் கவனத்தை ஈர்த்தன. காங்கிரஸ் கட்சி, மிதவாதிகள், தீவிரவாதிகள் எனப் பிளவுபடுவதைத் தடுத்தார்.
  • 1916இல் 'ஹோம் ரூல்' இயக்கத்தை பால கங்காதர திலகருடன் ஆரம்பித்து, நாடு முழுவதும் கிளைகளை உருவாக்கினார். அதன் தலைமைப் பொறுப்பில் இருந்த அன்னி பெசன்ட், இந்தியா முழுவதும் ஏராளமான கூட்டங்களில் பேசி, ஆங்கிலேயருக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டினார்.
  • ஆங்கிலேய அரசு அவர் பேசிய கூட்டங்களுக்குத் தடை விதித்தது. கைது செய்து சிறையில் அடைத்தது. சில மாதங்களில் சிறையிலிருந்து அவர் வெளியே வந்தபோது, அவருடைய செல்வாக்குப் பல மடங்கு அதிகரித்திருந்தது.
  • 1917இல் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அன்னி பெசன்ட். பின்னர் காங்கிரஸிலிருந்து விலகினாலும் விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டார். இங்கிலாந்தில் பிறந்த அன்னி பெசன்ட், 1933ஆம் ஆண்டு 85 வயதில் சென்னையில் ஓர் இந்தியராக நீள்துயில்கொண்டார்.

 சமூகம்: குடும்பக் கட்டுப்பாட்டில் தமிழகம் முதலிடம்

  • குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தேசிய அளவில் செயல்படுத்திய முதல் நாடு இந்தியா. 1952இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • நாளடைவில் இனப்பெருக்க நலன், தாய் - சேய் நலன், பிரசவ கால மரணங்களைக் குறைப்பது போன்றவற்றிலும் அக்கறை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
  • குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு ஆரம்பத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை. ஆனால், காலப்போக்கில் ‘சிறு குடும்பம், சீரான வாழ்வு’ என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்பதைக் குடும்ப நலக் கணக்கெடுப்புகள் உணர்த்தின.
  • மக்கள்தொகைப் பெருக்கத்துக்குக் காரணமானவையாக குழந்தைத் திருமணம், இரண்டு குழந்தைகளுக்கு இடையில் போதிய இடைவெளி இல்லாமல் இருப்பது, கருத்தடை சாதனங்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை உள்ளிட்ட விஷயங்கள் கண்டறியப்பட்டு, அவற்றைச் சீராக்கத் தேசிய அளவிலான கொள்கைகள் வகுக்கப்பட்டன.
  • திருமணமான பெண்கள் மத்தியில் கருத்தடை குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது. ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ என்கிற கருத்தை வலியுறுத்தி பல்வேறு தளங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அரசால் முன்னெடுக்கப்பட்டன.
  • நீடித்த கருத்தடை, தற்காலிகக் கருத்தடை ஆகிய இரண்டு வடிவங்களில் கருத்தடை சாதனங்களும் முறைகளும் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
  • பெண்கள் பயன்படுத்தக்கூடிய கருத்தடை மாத்திரைகளும் ஆண்களுக்கான ஆணுறைகளும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. உடலுக்குள் செலுத்தும் வகையிலான ‘காப்பர் டி’, ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கான கருத்தடைக்கு உதவுகிறது.
  • நிரந்தர அல்லது நீடித்த கருத்தடைக்கான அறுவை சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மக்கள்தொகைப் பெருக்கம் வெகுவாகக் குறைந்ததுடன் பெண்களின் பேறுகால நலன் மேம்பட்டது. கருத்தடை அறுவைசிகிச்சை பெண்ணைவிட ஆணுக்குத்தான் எளிது.
  • ஆனால், அதற்கு ஆண்கள் தயங்குவதால் பெண்களே கருத்தடை அறுவைசிகிச்சைக்கு அதிகமாக உட்படுத்தப்படுகிறார்கள் என்கிறது தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இங்கிருக்கும் சிறந்த மருத்துவக் கட்டமைப்புதான் அதற்குக் காரணம்.

 கல்வி: மறுக்கப்பட்டோருக்கான கல்வித் திட்டங்கள்

  • இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதியக் கட்டுமானத்தின் கீழ்நிலையில் ஒடுக்கப்பட்டுவந்த பட்டியலினத்தவர்களும் மலைப் பகுதிகளில் வாழ்ந்ததால் பட்டியல் பழங்குடியினரும் கல்விரீதியாகப் பெரிதும் பின்தங்கியிருந்தனர்.
  • சுதந்திரத்துக்குப் பிறகு இயற்றப்பட்ட அரசமைப்பின் வழிகாட்டு நெறிகளில் இந்தியக் குடிமக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படுவதற்கும் வாய்ப்புகளைப் பெறுவதற்குமான உரிமையைப் பெற்றவர்களாக அங்கீகரிக்கிறது. அரசமைப்பின் கூறு 46, பட்டியலினத்தவர், பழங்குடியினர் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்கு கல்வி -பொருளாதார வாய்ப்புகளை அரசு மேம்படுத்த வேண்டும் என்கிறது.
  • சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் கல்வி தொடர்பாக அமைக்கப்பட்ட கோத்தாரி ஆணையம், தேசிய கல்விக்கொள்கைகள் உள்ளிட்டவை வாய்ப்பு மறுக்கப்பட்ட அனைத்து பிரிவினருக்கும் கல்வியைக் கொண்டுசேர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தின. ஒடுக்கப்பட்டவர்கள் அதிகாரம் பெறுவதற்கு கல்வி இன்றியமையாதது என்பதை அங்கீகரித்தன.
  • குறிப்பாக தேசிய கல்விக்கொள்கை 1986 பட்டியல் பிரிவினர், பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்கு கல்வி வழங்குவதற்கான திட்டங்களை முன்மொழிந்தது. இதன் அடிப்படையில் பட்டியல் பிரிவினர், பழங்குடியினருக்கு கல்வி அளிப்பதற்கான பல்வேறு திட்டங்கள் மத்திய அரசாலும் மாநில அரசுகளாலும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
  • சர்வ சிக்‌ஷா அபியான் (அனைவருக்கும் கல்வி) இயக்கத்தின் கீழ் இந்த இரண்டு பிரிவினரும் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டன. பட்டியலின, பழங்குடி மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளும் தொடங்கப்பட்டன. மாணவர்களின் பள்ளி இடைநிற்றலைத் தடுப்பதற்காக கல்வி உதவித்தொகை அளிப்பது, உயர்கல்வி ஊக்கத்தொகை ஆகியவை பட்டியல் பிரிவினருக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுவருகின்றன.
  • மத்திய அரசு, அரசு உதவிபெறும் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு முறையே 15%, 7.5% இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீட்டின் அளவு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.
  • 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 73%. இதில் பட்டியலினத்தவருக்கான விகிதம் 66%, பழங்குடியினருக்கான விகிதம் 59%. பன்னெடுங்காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு கல்வி வழங்க அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஓரளவு பலன் அளித்துள்ளன என்றாலும், இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருப்பதையே இந்த எளிய புள்ளிவிவரம் உணர்த்துகிறது.
  • இட ஒதுக்கீட்டு விதிகளை முறையாகப் பின்பற்றாததால் உயர் கல்வியிலும் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் பணிகளிலும் இவ்விரு பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற குற்றச்சாட்டும் களையப்பட வேண்டியிருக்கிறது.

முன்னுதாரணர்களான மக்களவைத் தலைவர்கள்

  • நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையில் மிகவும் முக்கியமான அங்கம் மக்களவைத்தலைவர் பதவி. அவர் உருவாக்கும் நியதிகளும் ஏற்படுத்தும் மரபுகளும்தான் அந்த நாடாளுமன்றத்தின் குரலாகவும் உணர்வாகவும் தரமாகவும் எதிரொலிக்கும்.
  • இந்திய அரசமைப்பு உருவாக்கப் படுவதற்கான அரசமைப்பு நிர்ணய அவைக்கு முன்பு உருவாக்கப்பட்ட மத்திய சட்டமன்றத்தின் அவைத் தலைவராகப் பதவிவகித்த வித்தல்பாய் படேல் போற்றத்தக்க அப்படியொரு பங்கை ஆற்றினார்.
  • அவர் செய்த மிகப் பெரிய சேவை, அரசின் நிர்வாக அமைப்பு வேறு - சட்டமியற்றும் ஜனநாயக அமைப்பு வேறு என்பதைத் தனது ஆணை மூலம் பகுத்தது.
  • பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியில்தான் நாடு அப்போதும் இருந்தது என்றாலும், தனது பதவிக்குரிய செல்வாக்குடன் அவர் ஏற்படுத்திய கம்பீரமான முன்னுதாரணங்கள் பிற்காலத்தில் பதவி வகிப்பவர்களுக்கு மிகச் சிறந்த பாடங்களாகத் திகழ்கின்றன” என்று நினைவுகூர்கிறார் சோஷலிஸ்ட் தலைவரான மது தண்டவதே.

வழிகாட்டிய முன்னுதாரணம்

  • மது தண்டவதே நினைவுகூர்ந்த ஓர் நிகழ்வு: பகத் சிங்கும் அவருடைய தோழர்களும் தேசிய சட்டப்பேரவையின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்தனர். தேசிய சட்டப்பேரவை (நாடாளுமன்றம்) உறுப்பினர் எவரையும் தாக்கும் நோக்கம் அவர்களுக்கு இல்லை.
  • நாடாளுமன்ற அமைப்பையே சீர்குலைக்கும் வகையில் இயற்றப்பட்ட கொடூரமான ‘பொது பாதுகாப்பு மசோதா’ மீது விவாதம் தொடங்கவிருந்த சமயம், மக்களுடைய அதிருப்தியைத் தெரிவிக்கும் விதமாக அவையின் மையப் பகுதி நோக்கி வெடிகுண்டை வீசிவிட்டு அகன்றனர். உடனே அவை ஒத்திவைக்கப்பட்டது.
  • அடுத்த நாள் அவை கூடியது. பார்வையாளர் மாடத்தை, அவைத் தலைவர் வித்தல்பாய் படேல் பார்த்தார். சீருடை அணிந்த ஆங்கிலேயே காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கே அமர்ந்திருந்தார். “அரசு நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த இந்த மனிதர் எப்படி என்னுடைய அனுமதி இல்லாமல் அவையில் வந்து உட்கார்ந்திருக்கிறார்?” என்று வித்தல்பாய் கர்ஜித்தார்.
  • அப்போது உள்துறைக்குப் பொறுப்பாக இருந்த உறுப்பினர், “ஐயா அவர் என்னுடைய அனுமதியின்பேரில்தான் அங்கிருக்கிறார்” என்றார். “நாவை அடக்கிப் பேசுங்கள், இல்லாவிட்டால் உங்களை இந்த அவையை விட்டே வெளியேற்ற வேண்டியிருக்கும்” என்று சற்றும் சூடு குறையாமல் சாடினார் படேல். உள்துறை அமைச்சர் உடனே அமர்ந்துவிட்டார். அந்த அதிகாரி அவசரஅவசரமாகப் பேரவையிலிருந்து வெளியேறியவர், அதற்குப் பிறகு அந்தப் பக்கம் வரவேயில்லை!

பொறுப்பை உணர்த்தியவர்

  • பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவைத் தலைவராகப் பதவி வகித்த பி.ஜி. மவ்லாங்கர் குறித்து நினைவுகூர்ந்தார் தண்டவதே. ஆளுங்கட்சிக்காரர்களின் எண்ணிக்கையைப் பார்த்து மிரள்பவரும் அல்ல, எதிர்க்கட்சிகளின் கூச்சல் – அமளிகளுக்கு அரண்டு போகிறவரும் அல்ல அவர்.
  • உயர் அதிகாரத்தில் இருப்பவர்களிட மிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர். ஒரு முறை பிரதமர் நேரு, மவ்லாங்கருக்கு ஒரு குறிப்பு எழுதி அனுப்பினார். “உங்களுடன் பேசி முடிவுசெய்ய வேண்டிய அவசர வேலை இருக்கிறது, உங்களால் என்னுடைய அறைக்கு வர முடியுமா?” என்று மிகவும் வினயமாகக் கேட்டிருந்தார். அதே சீட்டில் மவ்லாங்கர் தன்னுடைய கையெழுத்தில் இப்படி பதில் எழுதி அனுப்பினார்: “நாடாளுமன்ற நியதிகள், நடைமுறைகளின்படி அவைத் தலைவர் பதவி வகிப்பவர் யாருடைய அறைக்கும் அலுவலகத்துக்கும் ஆலோசனைக்காகச் செல்வதில்லை.
  • நீங்கள் குறிப்பிடும் வேலை மிகவும் அவசரமானது என்றால், நீங்கள் என் அறைக்கு வரலாம்” என்று அதில் குறிப்பிட்டார். அதே சீட்டில் நேரு மீண்டும் பதில் குறிப்பு எழுதினார். “கவனப்பிசகாக மிகப்பெரிய அபத்தமான காரியத்தைச் செய்துவிட்டேன். அதற்காக மன்னிப்பு கோருகிறேன். இதோ நானே உங்களுடைய அறைக்கு வருகிறேன்” என்று அதில் எழுதினார் நேரு.
  • மவ்லாங்கரின் பதவிக் காலத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்து மகாசபை உறுப்பினர் என்.சி. சட்டர்ஜி தொடர்பாக ஒரு சம்பவம் நடந்தது. (பின்னாளில் மக்களவைத் தலைவராகப் பதவி வகித்த மார்க்சிஸ்ட் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியின் தந்தைதான் என்.சி. சட்டர்ஜி). சிறப்பு பதிவுத் திருமணங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா தொடர்பாக அன்றைய மதராஸ் மாநகரத்தில் சட்டர்ஜி ஒரு கண்டனக் கூட்டத்தில் பேசினார்.
  • நாலைந்து விடலைப் பிள்ளைகள் சேர்ந்து அந்த மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றிவிட்டார்கள்” என்று சட்டர்ஜி குறிப்பிட்டார். உடனே மாநிலங்களவையில் சட்டர்ஜிக்கு எதிராக உரிமைப் பிரச்சினைக்காக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு சட்டர்ஜிக்கு, மாநிலங்களவை செயலர் நோட்டீஸ் அனுப்பினார்.
  • சட்டர்ஜிக்கு நாடாளுமன்ற விதிகள் அனைத்தும் அத்துப்படி. மக்களவை உறுப்பினரான தனக்கு அப்படியொரு நோட்டீஸை அளித்ததற்காக மாநிலங்களவை செயலர் மீதே உரிமைமீறல் பிரச்சினை எழுப்பி, பதில் நோட்டீஸ் அனுப்பிவிட்டார் சட்டர்ஜி. சட்டர்ஜியின் இந்த நோட்டீஸ் குறித்து மக்களவையில் அறிவித்தார் மவ்லாங்கர். அப்போது பிரதமர் நேரு கோபத்தில் கொந்தளித்தார்.
  • மாநிலங்களவைக்கு எதிராகவே உரிமைப் பிரச்சினை கொண்டுவரும் அளவுக்கு அவருக்கு (சட்டர்ஜி) நெஞ்சுத்துணிவும் அகந்தையும் இருக்கிறது, அவருடைய உரிமைப் பிரச்சினைத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் அனுமதிக்கக் கூடாது” என்று எதிர்த்தார் நேரு. மவ்லாங்கர் உடனே எழுந்தார், “மாண்புமிகு பிரதமர் அவர்களே, இருக்கையில் அமருங்கள். மக்களவைக்கு நான் தலைவராக இருக்கும்வரை, இன்னொரு அவையின் விசாரணை வரம்புக்கு என்னுடைய அவை உறுப்பினர்களை நான் ஒப்புக்கொடுக்க மாட்டேன்” என்று உறுதிபட அறிவித்தார்.

தண்டவதே மீது குற்றச்சாட்டு

  • பல்ராம் ஜாக்கர் மக்களவைத் தலைவராக இருந்தபோது இப்படியொரு சம்பவத்தில் தானே பலியாகவிருந்ததை மது தண்டவதே நினைவுகூர்ந்தார். மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த அப்துல் ரஹ்மான் அந்துலே தொடங்கிய ‘இந்திரா காந்தி பிரதிபா பிரதிஷ்டான்’ என்ற அறக்கட்டளை தொடர்பான விவகாரத்தில் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு விவாதம் நடைபெற்றது.
  • பிறகு பேரவையின் உரிமையை மீறிவிட்டதாகக் கூறி, என் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்டு மக்களவைத் தலைவர் பல்ராம் ஜாக்கருக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் அந்த நோட்டீஸ் மீது அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஒரு நாள் நானே அவையில் அதைப் பற்றிப் பேசினேன்.
  • மக்களவைத் தலைவர் அவர்களே, மகாராஷ்டிர சட்டப்பேரவையில் எனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட உரிமை மீறல் பிரச்சினை ஓராண்டாக உங்களின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது. இந்த மக்களவை கலைக்கப்படுவதற்கு முன்னதாக - அல்லது என்னுடைய ஆயுள் முடிவதற்கு முன்னதாக, இதில் எது முதலோ அந்தக் காலத்துக்குள்ளாக இதன் மீது ஒரு முடிவெடுத்துவிடுங்கள்” என்றேன். அடுத்த நாளே அந்தத் தீர்மானத்தை ஏற்பதில்லை என்ற முடிவை அவர் எடுத்துவிட்டார்.

ஊழலுக்கு ஆதாரம்

  • நாடாளுமன்ற நெறிமுறைகளும் ஜனநாயகமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று துடிப்பாகச் செயல்பட்ட உறுப்பினர்கள் குறித்து ஏதேனும் கூற முடியுமா என்று கேட்டதற்கு மது தண்டவதே அளித்த பதில்: 1957இல் தொழிலதிபர் முந்த்ரா மீதான ஊழல் புகார் குறித்து மக்களவையில் பிரச்சினை எழுப்பப்பட்டது. பெரோஸ் காந்தி (இந்திரா காந்தியின் கணவர் – ராஜீவ் காந்தியின் தந்தை) அதை எழுப்பினார்.
  • எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு மோசடியாகச்சில பங்குகளை முந்த்ரா விற்றது தொடர்பானது அந்த ஊழல். பத்திரிகைகளில் எழுதப்படுவதையெல்லாம் ஆதாரமாகக் கொண்டு அவையில் பேசக் கூடாது என்று சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அப்போது மக்களவைத் தலைவராக அனந்தசயனம் பதவிவகித்தார்.
  • முதன்மை நிதிச் செயலருக்கும் நிதியமைச்சருக்கும் இடையில் நடந்த ரகசியக் கடிதப் பரிமாற்றங்கள் தொடர்பான விவரங்கள் என் சட்டைப்பையில் இருக்கின்றன, அவற்றை அவையில் தாக்கல்செய்ய மக்களவைத் தலைவரின் அனுமதி கிடைக்குமா” என்று பெரோஸ் காந்தி கேட்டார்.
  • அதையும் பல உறுப்பினர்கள் ஆட்சேபித்தனர். ஆனால் அனந்தசயனம் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னுதாரணத் தீர்ப்பை அளித்தார். பிற்காலத்தில் நானும் ஜோதிர்மய பாசு (மார்க்சிஸ்ட் தலைவர்) உள்பட பலர் அதைப் பயன்படுத்திக் கொண்டோம்.
  • அவையில் தான் தாக்கல் செய்யவிருக்கும் ரகசியத் தகவல் அல்லது ஆவணங்களுக்கு அவை உறுப்பினர் முழுப் பொறுப்பு எடுத்துக்கொள்ளத் தயார் என்ற நிலையில், அதை நான் அனுமதிப்பேன்” என்றார். அதன் பிறகு பெரோஸ் காந்தி அந்த விவரங்களை அவையில் தாக்கல் செய்தார்.
  • அதன் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணை அறிக்கை கிடைத்ததும் தொழிலதிபர் முந்த்ரா கைது செய்யப்பட்டார். டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவியை விட்டு விலகினார். இவற்றை மது தண்டவதே நினைவுகூர்ந்தார்.

நன்றி: தி இந்து (10 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்