TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 5

August 16 , 2022 723 days 389 0

மூவண்ணக் கொடியின் வரலாறு

  • இந்திய தேசியக்கொடியின் வடிவமும் குறியீடும் வரலாற்றுரீதியாக பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெறுவதற்காகப் பல தலைமுறைகளாக நடைபெற்ற போராட்டத்தின் ஊடாகப் பரிணமித்ததாகும்.
  • வங்காளப் பிரிவினைக்கு எதிராகத் தேசம் முழுவதும் ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவித்த 1906 ஆகஸ்ட் 7 அன்று, கல்கத்தா கிரீன் பார்க்கில் சுரேந்திரநாத் பானர்ஜி முதன்முதலில் ஏற்றிய தேசியக்கொடிதான் இதன் தொடக்கம்.
  • இந்து-முஸ்லிம் ஒற்றுமையை அடையாளபூர்வமாகப் பறைசாற்றுவதாக அமைந்த இந்த முதல் தேசியக்கொடியின் கீழ்ப்பகுதியில் இருந்த சிவப்புப்பட்டையில் சூரியனும் சந்திரனும் பொறிக்கப்பட்டிருந்தன.

முதல் கொடிகள்

  • பம்பாயின் முன்னணி சுதந்திரப் போராட்டப் பெண் போராளி மேடம் காமாவும் அவருடைய தோழர்களும் ஜொ்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் 1907 ஆகஸ்ட் 22 அன்று நடைபெற்ற சர்வதேச சோஷலிச காங்கிரஸில் ஏற்றிவைத்த மூவண்ணக் கொடி இரண்டாவது அவதாரம். இது தோற்ற அமைப்பில் முதல் கொடியைப் போலவே இருந்தது.
  • அன்னிபெசன்டின் ஹோம் ரூல் இயக்கம், 1917இல் உடனடித் தேவைக்காக மூன்றாவது கொடியை உருவாக்கியது. இந்தக் கொடி ஏற்கெனவே குறிப்பிட்ட இரண்டு கொடிகளிலிருந்தும் வேறுபட்டதாக இருந்தது. டொமினியன் அந்தஸ்தைக் குறிக்கும் வகையிலோ, ஹோம் ரூல் கோரிக்கையை வலியுறுத்தும் விதத்திலோ என்னவோ, கொடியின் இடப்பக்க மேற்புறத்தில் யூனியன் ஜாக் கொடி சித்திரிக்கப்பட்டிருந்தது. தங்களது நோக்கம் முழுமையான சுதந்திரமே என்பதால் தேச பக்தர்கள் இந்தக் கொடியை ஏற்கவில்லை.

காங்கிரஸின் கொடி

  • சுதந்திரப் போராட்டக் களத்தில் காந்தியடிகள் கால்பதித்து, மக்களின் பேரியக்கமாக அதனை மாற்றியபோது, இந்திய தேசிய காங்கிரஸை முன்னெடுத்துச் செல்லும் ஒளிவிளக்காகத் திகழக்கூடிய ஒரு புதிய கொடி தேவை என்பது அழுத்தம் திருத்தமாக உணரப்பட்டது.
  • 1921 ஏப்ரலில் விஜயவாடாவில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் வெள்ளை, பச்சை, சிவப்பு ஆகிய மூவண்ணங்கள் கொண்ட நடுவில் ராட்டையுடன் கூடிய கொடி, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தேசியவாதியும் பேராசிரியருமான பிங்கல வெங்கய்யாவால் வடிவமைக்கப்பட்டு காந்தியடிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
  • அந்தப் புதிய கொடியின் வடிவம் பற்றிச் சில சர்ச்சைகள் எழுந்ததால் 1931 ஏப்ரலில் கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் டாக்டர் பட்டாபி சீதாராமையா தலைமையில் தேசியக்கொடி வடிவமைப்புக் குழு அமைக்கப்பட்டது.
  • இந்தக் குழுவின் பரிந்துரைப்படி காவி, வெள்ளை, பச்சை ஆகிய வண்ணங்களுடன் நடுவில் ராட்டையையும் கொண்டதாக மூவண்ணக்கொடி உருவாக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே இந்திய தேசிய காங்கிரசின் கொடியும் ஆனது.

தாயின் மணிக்கொடி...

  • 1947 ஆகஸ்டில் இந்தியா சுதந்திரம் பெறுவதற்குமுன் அரசமைப்பு அவை அமைக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவிற்கான கொடியைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தனிக்குழு ஒன்றை 1947 ஜூன் 23இல் இந்த அவை அமைத்தது.
  • டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் மௌலானா அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, ராஜாஜி, கே.எம்.முன்ஷி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக இருந்தனர்.
  • இந்தியாவிற்கான புதிய மூவண்ணக் கொடியின் வெள்ளைப் பகுதியின் மத்தியில் ராட்டைக்குப் பதிலாக தர்மச்சக்கரத்துடன் கூடிய (சட்டம், நீதிக்கான அசோகப் பேரரசின் சக்கரச் சின்னம்) கொடியை 1947 ஜூலை 22இல் அரசமைப்பு அவை ஏற்றுக்கொண்டது.
  • இந்தப் புதிய கொடியை முறைப்படி ஏற்றுக்கொள்வதற்காக 1947 ஜூலை 27 அன்று அரசமைப்பு அவையில் ஜவாஹர்லால் நேரு ஒரு தீர்மானம் கொண்டுவந்து அறிமுகப்படுத்தினார். அப்போது சுதந்திர இந்தியாவின் மூவண்ணக் கொடியின் முக்கியத்துவம் பற்றி என்றும் நினைவில் இருக்கக் கூடிய வகையில் அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி: “கடந்த காலங்களில் நம்மில் பலரும் பயன்படுத்திவந்த கொடியிலிருந்து இந்தக் கொடி சற்று மாறுபட்டு இருப்பதாக நமக்குத் தெரிகிறது.
  • இதில் உள்ள அடர் குங்குமப்பூ நிறம், வெள்ளை, அடர்பச்சை ஆகிய வண்ணங்களில் மாற்றமில்லை. இதற்குமுன் இருந்த கொடியில் வெள்ளை நிறப் பகுதியில் இந்தியாவின் சராசரி குடிமகனைக் குறிக்கும் விதத்திலும், மக்களின் பெருங்கூட்டத்தைக் குறிக்கும் வகையிலும், அவர்களின் தொழில்களைக் குறிக்கும் விதத்திலும் மகாத்மா காந்தியின் போதனையிலிருந்து கிடைத்த ராட்டைச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ராட்டைச் சின்னம் நீக்கப்படாமல் கொடியில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • ராட்டையின் நூல் நூற்கும் பகுதியைத் தவிர்த்துவிட்டு, சக்கரம் மட்டும் இடம்பெற நாங்கள் ஒப்புக்கொண்டோம். நம் தேசியக்கொடியில் எந்தவிதமான சக்கரம் இருக்க வேண்டும்? அசோகச் சக்கரம் எங்கள் சிந்தனையை மையமிட்டது. அசோகச் சக்கரம் இந்தியாவின் பழம்பெரும் பண்பாட்டின் சின்னம்.
  • இந்திய மக்களாகிய நாம் அனைவரும் காலம்காலமாக எதற்காகப் பாடுபட்டுவந்தோமோ அதைச் சித்தரிக்கும் சின்னம். நான் உங்கள் முன்பாக இந்தத் தீர்மானத்தை மட்டுமன்றி, நம் தேசியக்கொடியையும் சமர்ப்பிக்கிறேன்” என்றார்.
  • இந்தியாவின் முதல் தேசியக்கொடியை 1947 ஆகஸ்ட் 16 அன்று டெல்லி செங்கோட்டையில் அன்றைய பிரதமர் நேரு ஏற்றினார். அதனைத் தொடர்ந்து 16 ஆண்டுகள் அக்கொடியை ஏற்றிச் சிறப்பித்த பெருமையும் அவருக்கு உண்டு.

திருவாவடுதுறை ஆதீனம் நேருவுக்கு வழங்கிய தங்கச் செங்கோல்

  • இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்ததையொட்டி திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண பண்டார சந்நிதி சுவாமிகள் முதல் பிரதமர் பண்டிட் ஜவாஹர்லால் நேருவுக்குத் தங்கச் செங்கோலை வழங்கினார்.
  • டெல்லியில் நேருவின் இல்லத்தில் ஆகஸ்ட் 14 இரவில் அவரைச் சந்தித்த ஆதீனகர்த்தர், சிவனுக்குச் சிறப்பு பூஜைசெய்து செங்கோலையும் பிரசாதங்களையும் எடுத்துச் சென்றிருந்தார்.
  • நேருவுக்கு அருளாசி வழங்கிய அவர் பூஜை பிரசாதங்களுடன் தங்கச் செங்கோலையும் நேருவிடம் அளித்தார். சிறப்புமிக்க இந்தத் தங்கச் செங்கோலை சென்னை நகரைச் சேர்ந்த உம்மிடி பங்காரு செட்டி அண்ட் சன்ஸ் தங்க – வைர நகை நிறுவனம் தயாரித்திருந்தது.

முதல்வரின் ஆனந்தக் கண்ணீர்

  • இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கிய ஆகஸ்ட் 15ஆம் தேதி மதராஸ் நகரமே கோலாகலமாக இருந்தது. நாடே உற்சாகத்தில் திளைத்த அந்தத் தருணத்தில் அன்றைய மதராஸில் என்னென்ன நடந்தன? நாடு சுதந்திரமடைந்தபோது மதராஸ் மாகாண ஆளுநராக இருந்தார் சர் ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை. 1947 ஆகஸ்ட் 15 அன்று தீவுத்திடல் என்று இப்போது அழைக்கப்படும் தீவு மைதானத்தில் நாட்டின் மூவண்ணக் கொடியை அவரே விரித்துக் காட்டினார்.
  • அன்று காலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வராக (பிரதம அமைச்சர்) இருந்த ஓமந்தூர் பி. ராமசாமி சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் கட்டிடத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். தேசியக் கொடியை ஏற்றிய தருணத்தில் மகிழ்ச்சியில் அவருக்கு ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.
  • இன்னொரு புறம் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஃப்ரெட்ரிக் ஜெண்டில், ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நையை சுதந்திர இந்தியாவில் மதராஸ் மாகாணத்தின் ஆளுநராகப் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
  • சுதந்திரம் அடைந்த நாளில் பளபளப்பான ஆடைகளை அணிந்துவந்த குதிரைப் படை வீரர்கள், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகே கடற்கரையோரமாக அணிவகுத்து நின்றனர். மதராஸ் மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். இந்தியாவில் ஆங்கிலேயர் காலடி எடுத்துவைத்த பிறகு, முதன்முதலாகக் கட்டியது செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத்தான்.
  • அந்தக் கோட்டையின் கொத்தளத்தில் நாட்டின் புதிய மூவண்ணக் கொடி கம்பீரமாகப் பறக்கும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு மதராஸ் மக்கள் ஆனந்தக் கூத்தாடினர். நாடு சுதந்திரமடைந்த நாளில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப்பட்ட அந்தக் கொடி கோட்டை அருங்காட்சியகத்தில் இன்றும் பாதுகாக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 15, 1947: நடந்தது என்ன

  • 200 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த ஆங்கிலேயர்களின் ஆட்சியில் அனைத்து உரிமைகளையும் இழந்து, பல கொடிய சித்ரவதைகளை இந்தியர்கள் அனுபவித்துவந்தனர். இந்தியர்களின் வாழ்வில் ஆகஸ்ட் 15, 1947இல் சுதந்திர ஒளி படர்ந்தது. அந்த நாளில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்:
  • ஆகஸ்ட் 15, 1947 அன்று, தில்லியின் சாலைகளில் மக்கள் பெரும் கொண் டாட்டத்தில் ஈடுபட்டனர். நகரெங்கும் மூவண்ணக் கொடிகள் பெருமிதத்துடன் பறந்தன.
  • அதே நாளில், ஜவாஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமரானார்.
  • பதவியேற்பு விழா வைஸ்ரீகல் லாட்ஜில் நடைபெற்றது.
  • சுதந்திர இந்தியாவுக்கு விசுவாசமாக இருப்பதற்கான உறுதிமொழியை எடுக்குமாறு அரசமைப்பு அவை உறுப்பினர்களிடம் இந்தச் சந்தர்ப்பத்தில் ஜவாஹர்லால் நேரு கேட்டுக் கொண்டார்.
  • சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடி கவுன்சில் இல்லத்தின் (தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம்) மேல் ஏற்றப்பட்டது.
  • இந்திய நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை ஜவாஹர்லால் நேரு நிகழ்த்தினார்.
  • அப்போது சீனா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இருந்தனர்.
  • ஜவாஹர்லால் நேரு தனது முதல் நாடாளுமன்ற உரையில், “துரதிர்ஷ்ட வசமான ஒரு காலகட்டத்துக்கு நாம் இன்று முடிவுரை எழுதிவிட்டோம். இந்தியா மீண்டும் தன்னைக் கண்டுபிடித்துக் கொள்ளும்” என்றார்.

அகிம்சையின் நாயகர்

  • தென்னாப்பிரிக்காவில் இனவெறி அரசாங்கத்தை எதிர்த்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் போராட்டங்களை நடத்திக்கொண்டிந்த காந்தியை, இந்தியா உற்றுக் கவனித்து வந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கும்படி காந்திக்கு கோபால கிருஷ்ண கோகலே அழைப்புவிடுத்தார்.
  • 1915 இல் இந்தியா திரும்பிய காந்தி, ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றார். 1920இல் அந்நியப் பொருள்களைப் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொண்ட காந்தி, தானே கைராட்டை மூலம் தன் துணிக்கான நூலை நெய்துகொண்டார். காந்தியின் சிந்தனைகளும் செயல்களும் நாடு முழுவதும் சென்றடைந்தன.
  • ஜலியான்வாலா பாக் படுகொலைகளை எதிர்த்தும் 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட குறைவான அதிகாரங்களை எதிர்த்தும் ‘ஒத்துழையாமை' இயக்கத்தை காந்தி முன்னெடுத்தார். இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போராட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. சட்டத்தை மீறியதற்காக காந்திக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
  • உணவுக்கு அத்தியாவசியமான எளிய மூலப்பொருளான உப்புக்கு ஆங்கிலேய அரசு வரி விதித்ததை எதிர்த்து, 1930இல் உப்புச் சத்தியாகிரகத்தை அறிவித்தார். சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டிக்கு 385 கி.மீ. தூரம் நடைபயணத்தை மேற்கொண்டார். அகிம்சை வழியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் மூலம் பெருமளவு மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வந்தனர்.
  • வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை 1942இல் ஆரம்பித்தார். காந்தி உள்பட முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டும், இந்தப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. புனேயில் உள்ள ஆகா கான் மாளிகையில் காந்தியும் கஸ்தூர்பாவும் சிறை வைக்கப்பட்டனர்.
  • 18 மாதங்களுக்குப் பிறகு கஸ்தூர்பா அங்கேயே மறைந்தார். 1944இல் சிறையிலிருந்து வெளிவந்த காந்தி, இந்தியாவுக்கு விரைவில் சுதந்திரம் வழங்க வேண்டிய கட்டாயம் ஆங்கிலேயே அரசுக்கு ஏற்பட்டிருந்ததை அறிந்தார்.
  • இந்து, முஸ்லிம் பிரச்சினையை வைத்துப் பிரித்தாளும் சூழ்ச்சியை உருவாக்கியது ஆங்கிலேய அரசு. பிரிவினையை காந்தி எதிர்த்தார். 1947இல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரித்து, ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுக்குச் சுதந்திரத்தை ஆங்கிலேய அரசு அறிவித்தது.
  • தன் வாழ்நாளில் ஏராளமான நாள்களைச் சிறையில் கழித்து, உண்ணாவிரதங்களை மேற்கொண்ட போராட்டக்காரரான காந்தி, சுதந்திரக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை. பிரிவினையால் ஏற்பட்ட வன்முறைகளைத் தடுப்பதற்காக, கண்ணீருடன் போராடிக்கொண்டிருந்தார்.
  • அகிம்சையையே உயிர்மூச்சாகக் கொண்ட 78 வயது காந்தியை, அவரது கொள்கைகளை வெறுத்த நாதுராம் கோட்சே நாடு சுதந்திரமடைந்து ஐந்தே மாதங்களுக்குள் சுட்டுக் கொன்றார்.
  • அகிம்சை’ என்கிற போராட்ட வடிவத்தை அறிமுகப்படுத்திய காந்தியின் கொள்கைகளை அமைதியை விரும்பும் பல நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

பட்டம்மாளின் சுதந்திர தாகம்

  • சுதந்திரம் அடைந்த இரவில் அனைத்திந்திய வானொலி நிலையத்தில் மகாகவி பாரதியின் `ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று...' என்னும் பாடலைப் பாடினார் ‘கான சரஸ்வதி’ டி.கே.பட்டம்மாள். நாட்டின் திருப்புமுனைத் தருணத்துக்குக் கவிதையும் இசையும் கூடிய அந்தப் பாடல் தனி அழகு சேர்த்தது.
  • அனைத்திந்திய வானொலி நிலையத்தின் மரபுப்படி இந்தப் பாடலைப் பாடியதற்கான சன்மானம் டி.கே.பட்டம்மாளுக்கு அனுப்பப்பட்டது. "நாட்டின் சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில் பாடியதற்கு எனக்கு எதற்குச் சன்மானம்?" என்று அதைப் பெற்றுக்கொள்ள மறுத்தார் பட்டம்மாள்.
  • அவர் சன்மானத்தை ஏற்றுக்கொள்ளாத விஷயம் மத்தியத் தகவல் ஒலிபரப்பு அமைச்சர் வரை சென்றது. ஆனால், கடைசிவரை சன்மானத்தை உறுதியாக மறுத்துவிட்டார் பட்டம்மாள்.
  • திரைப்படங்களில் பாடுவதற்கு டி.கே.பட்டம்மாளுக்கு வாய்ப்புகள் வந்தாலும், நிறைய தேசபக்திப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் மட்டுமே திரைக்காகப் பாடுவேன் என்று உறுதியோடு இருந்தார்.
  • கே.சுப்பிரமணியம் இயக்கிய `தியாக பூமி' திரைப்படத்தில் `பாரத புண்ணிய பூமி, ஜெய பாரத புண்ணிய பூமி', `தேச சேவை செய்ய வாரீர்' ஆகிய பாடல்களைப் பாடி நாட்டின் விடுதலைக்காக மக்களைத் தயார்படுத்தியவர் பட்டம்மாள்.
  • தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் என எந்த மொழியாக இருந்தாலும், பாட்டில் ஸ்ருதி சுத்தம் எந்த அளவுக்கு இருக்குமோ, அதே அளவுக்கு பட்டம்மாளிடம் உச்சரிப்பு சுத்தமும் கனகச்சிதமாக இருக்கும்.
  • பாடும் பாட்டில் இப்படி உறுதியை வெளிப்படுத்தும் பட்டம்மாள், பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். பிரபலமானவர்களிடமும் பாமர ரசிகனிடமும் ஒரே மாதிரியான அன்பை வெளிப்படுத்தக்கூடிய குழந்தை உள்ளத்தோடு வாழ்ந்தவர். அவருடையது இசைப் பெருவாழ்வு.

ஆகஸ்ட் 15 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது

  • 1929 இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜவாஹர்லால் நேரு, பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலிருந்து பூரண சுதந்திரத்துக்கு அழைப்புவிடுத்தார்.
  • அதையொட்டி 1930 ஜனவரி 26 இந்திய சுதந்திர நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறும்வரை ஒவ்வோர் ஆண்டும் காங்கிரஸ் கட்சி ஜனவரி 26ஐ அடையாளபூர்வ சுதந்திர நாளாகக் கொண்டாடிவந்தது.
  • இந்த நிகழ்வின் வரலாற்று முக்கியத்துவத்தை நினைவுகூரும் விதமாகவே ஜனவரி 26 இந்தியக் குடியரசு நாளாகப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • அதே நேரம், ஆகஸ்ட் 15 சுதந்திர நாளாக எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டது? அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயும் கவர்னர் ஜெனரலுமான மவுண்ட் பேட்டன் 1948 ஜூன் 30க்குள் ஆட்சிநடத்தும் அதிகாரத்தை இந்தியர்களுக்கு வழங்கும் அதிகார மாற்றம் நிகழ்ந்துவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திடம் கூறியிருந்தார்.
  • ஆனால் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை உறுதியாகிவிட்டதால், அது தொடர்பான வன்முறையையும் ரத்தம் சிந்துதலையும் இதற்கான தருணத்தில் தவிர்க்க விரும்பினார். எனவே, 1948 ஜனவரி 30 வரை காத்திருக்காமல் முன்னதாகவே இந்தியாவுக்கான அதிகார மாற்றத்தை நிறைவேற்றிவிட முடிவெடுத்தார்.
  • இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிப்பதற்கான மசோதா பிரிட்டிஷ் நாடாளுமன்றமான ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் 1947 ஜூலை 4 அன்று நிறைவேறியது. ”விரைவில் சுதந்திரம் கொடுத்தாக வேண்டும். ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் ஏதேனும் ஒரு தேதி என்று நினைத்தேன். பிறகு ஆகஸ்ட் 15ஐத் தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதே நாளில்தான் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்திருந்தது” என்று மவுண்ட் பேட்டன் கூறினார்.
  • இரண்டாம் உலகப் போரில் தோல்வியுற்று பிரிட்டனை உள்ளடக்கிய நேச நாடுகளிடம் சரணடைவதாக 1945 ஆகஸ்ட் 15 அன்று ஜப்பானிய பேரரசர் ஹிரோஹிடோ அறிவித்திருந்தார். அதை நினைவுகூரும் விதமாக அந்தத் தேதியை மவுண்ட் பேட்டன் அறிவித்தார்.

நன்றி: தி இந்து (16 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்