TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 6

August 16 , 2022 723 days 403 0

மகளிர்: பிகாஜி பறக்கவிட்ட கொடி

  • வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்த பிகாஜி காமா, இந்திய தேசியவாத இயக்கங்கள் வேர்கொள்ளத் தொடங்கிய காலத்தில் வளர்ந்தார்.
  • பிகாஜி விடுதலைப் போராட்டச் செயல்பாடுகளில் ஈடுபட அவரது கணவர் ரஸ்தம்ஜி காமாவோ பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தார். இந்தக் கொள்கை வேறுபாட்டால் மணவாழ்க்கை கசந்தது. பிளேக் நோயால் உடல் நலிவுற்ற பிகாஜி லண்டனில் 1902இல் குடியேறினார்.
  • ஆங்கிலேயர்களின் பொருளாதாரக் கொள்கை யைத் தொடர்ச்சியாக விமர்சித்துவந்த தாதாபாய் நௌரோஜியின் அறிமுகம் பிகாஜிக்குக் கிடைத்தது. இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். .
  • மீண்டும் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டுமென்றால், ‘இனி எந்தப் போராட்டத்திலும் பங்கேற்க மாட்டேன்’ என்று கையெழுத்திட்டுத் தர வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு வலியுறுத்தியது. அதை ஏற்க மறுத்த பிகாஜி, பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்ட வந்தே மாதரம் உள்ளிட்ட புரட்சிப் பாடல்களை அச்சிட்டு விநியோகித்தார்.
  • 1907இல் ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் நடைபெற்ற உலக சோஷலிஸ்ட் மாநாட்டில் பங்கேற்றார். பச்சை, காவி, சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட இந்தியக் கொடியை அதில் அறிமுகப்படுத்தினார். சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடி என்று அவர் பறக்கவிட்ட அந்த மூவண்ணக் கொடியை பிகாஜியும் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவும் இணைந்து உருவாக்கினர்.
  • நாடு விடுதலை பெறுவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே ஜெர்மனி மாநாட்டில் கொடியைப் பறக்கவிட்ட பிகாஜி காமா, “சுதந்திர இந்தியாவின் கொடி பிறந்துவிட்டது.
  • நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரைத் தந்த இந்தியர்களால் இந்தக் கொடி புனிதமடைந்தவிட்டது” என்றார். அந்நிய மண்ணில் பிகாஜி காமா பறக்கவிட்ட இந்த மூவண்ணக் கொடியின் அடிப்படையில்தான் தற்போதைய தேசியக் கொடி உருவாக்கப்பட்டது.

விடுதலை குறித்து அன்றைய தலைவர்கள் 

  • நாளை முதல் நாம் ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவோம். ஆனால், இன்று நள்ளிரவில் இந்தியா எனும் நாடும் பிரிவினைக்கு உள்ளாக்கப்படுகிறது. நாளை மகிழ்ச்சியான நாள் என்றாலும்கூட, ஒரு வகையில் அது நமக்குத் துக்க நாளே. இந்த விடுதலையும் பிரிவினையும் நம் மீது பெரும் பொறுப்பைச் சுமத்தும். அந்தப் பொறுப்பைத் தாங்கும் ஆற்றலை அளிக்குமாறு இறைவனிடம் பிரார்த்திப்போம் - மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
  • சுதந்திரம் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த சுதந்திரம் நம் மீது அதிக பொறுப்புகளைச் சுமத்தியுள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது. சுதந்திரம் பெற்றதன் மூலம், தவறு நடந்தால் ஆங்கிலேயர்களைக் குற்றம்சாட்டும் சாத்தியத்தை நாம் இழந்துவிட்டோம்.
  • இனிமேல் தவறு நடந்தால், நம்மைத் தவிர வேறு யாரையும் நாம் குற்றம் சொல்லிக்கொள்ள முடியாது. தவறுகள் நடக்கும் ஆபத்து அதிகம் உள்ளது. காலம் வேகமாக மாறுகிறது - பாபாசாகேப் பி.ஆர். அம்பேத்கர்
  • நம் வாழ்வின் லட்சியம் நிறைவேறுவதையும், தேசத்தின் சுதந்திரப் போராட்டத்திற்கு மகுடம் சூட்டிய வெற்றியில் பங்கேற்பதையும் காணும்போது, இந்த மகத்தான விடுதலைக்காகத் தியாகம் செய்தவர் களையும், அவர்களின் போராட்டங்களையும் நினைவுகூர்வதே இன்று நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்.
  • சுதந்திரம் கொண்டு வரும் மகிழ்ச்சியில் திளைத்தபடி அவர்களின் நினைவை நாம் போற்றுவோம் - சர்தார் வல்லபபாய் படேல்
  • சுதந்திர தருணத்தில் ஆழமான நேர்மை கொண்ட உள்நோக்கம், பேச்சில் அதிக தைரியம், செயலில் அக்கறை ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம் - கவிக்குயில் சரோஜினி நாயுடு

ஆளுமை: தொலைநோக்குப் பிரதமர்

  • லக்னோவில் 1916 இல் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் காந்தியை நேரு சந்தித்தார். ஜலியான்வாலா பாக் படுகொலைகளைக் கண்ட நேரு, விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
  • 1920 இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதற்காகத் தேச துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, முதல் முறையாகச் சிறை சென்றார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் சுமார் 9 வருடங்களைச் (3,259 நாள்கள்) சிறையில் அவர் கழித்திருக்கிறார்.
  • பிரிவினையால் நாடு கொந்தளிப்பான சூழலில் இருந்தபோது, சுதந்திர இந்தியாவின் இடைக்காலப் பிரதமராக நேரு பொறுப்பேற்றுக்கொண்டார். 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் அவர் ஆற்றிய சுதந்திர தின உரையைப் போல், வேறு ஓர் உரை இல்லை எனலாம்.
  • 1951 இல் திட்டக்குழுவை உருவாக்கி, முதல் ஐந்தாண்டு திட்டத்தைக் கொண்டுவந்தார். அரசமைப்புச் சட்டத்தில் 44ஆவது பிரிவை அறிமுகப்படுத்தினார். இது இந்தியாவுக்கு ‘மதச் சார்பற்ற அரசு’ என்கிற அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது.
  • 1952இல் தேர்தலில் வென்று, இந்தியக் குடியரசின் முதல் பிரதமர் என்கிற சிறப்பைப் பெற்றார். விவசாயம், தொழில்துறை ஆகியவற்றில் அதிகக் கவனம் செலுத்தினார். மதச்சார்பின்மை, மதநல்லிணக்கத்தை ஆதரித்தார்.
  • ஏழைகளின் நிலை மேம்படுவதற்கான திட்டங்களை வகுத்தார். ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைத்தார்.
  • எதிர்கால இந்தியா மாணவர்களின் கையில் இருக்கிறது என்பதால், கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS), இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IIM), இந்திய மேலாண்மைக் கழகங்கள், தேசியத் தொழில்நுட்பக் கழகங்கள் (NIT) உள்பட ஏராளமான உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கினார்.
  • அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தும் விதத்தில் பஞ்சசீலக் கொள்கை, அணிசேரா இயக்கம் போன்றவற்றை உருவாக்கினார். இதனால் உலகத் தலைவர்களில் முக்கியமானவராக மாறினார். 17 ஆண்டு காலம் பிரதமராக இருந்த நேரு, 1964இல் மறைந்தார்.

இலக்கியம்: மகாகவி விதைத்த ஒருமைப்பாடு

  • இந்திய விடுதலைப் போராட்டத்தில் இலக்கியத்தின் பங்களிப்பும் கவனம் கொள்ளத் தக்கது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியா என்னும் ஒருமைப்பாட்டை விதைத்து அதன் மூலம் இந்திய விடுதலை என்னும் சிந்தனையின் கீழ் மக்களைத் திரட்டப் பாடல்கள் ஒரு காரணியாக இருந்தன. அந்த வகையில் மகாகவி பாரதியார், முக்கியமானவர்.
  • பாரதியின் கவிதைகள், தமிழ் உலகுக்கு தமிழையும் தேசிய உணர்வையும் ஊட்டக் கூடியதுமாக எல்லாத் தரப்பினராலும் இன்றைக்குக் கொண்டாடப்படுகிறது. ஆனால், சுதந்திரத்துக்கு முன் பாரதியின் கவிதைகள் ஒரு தீவிரவாதச் செயற்பாட்டாளரின் எழுத்துகள் என்ற ரீதியில்தான் பார்க்கப்பட்டன.
  • அதனால் அவர் பெரும் வேதனைப்பட்டார். பாரதியின் பாடல்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது பாடப்பட்டு, எழுச்சி ஊட்டப் பயன்படுத்தப்பட்டன. அதனால் பிரிட்டிஷ் ஆட்சியாளார்கள், அவரது பாடல்களுக்குத் தடைவிதித்தனர். பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்ட பாண்டிச்சேரியில் பாரதி தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிவந்தது.
  • அவரது தேசிய உணர்வுமிக்க பாடல்கள் இன்றும் மிகப் பிரபலம். தேச விடுதலையின் மீது பிடிப்பைக் கொண்டிருந்த பாரதி, தன் கவிதைகளில் அதை வெளிப்படுத்தினார். ‘வந்தே மாதரம்’ என்கிற பாட்டில் அன்றிருந்த இந்திய மக்கள் தொகை முப்பது கோடியைக் குறிப்பிட்டு ‘இந்திய மக்கள்’ எனப் பொதுமைப்படுத்தியிருப்பார்.
  • 'மன்னும் இமயமலையும் இன்னறு நீர்க்கங்கையும் எங்கள் பாரத நாட்டினுடையது' என ’எங்கள் நாடு’ பாடலில் உரிமை பாராட்டுகிறார் பாரதி. ‘முப்பது கோடி முகமுடையாள்/ உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என ‘எங்கள் தா’யில் இந்தியாவை ஒரு தேவியாக்கி வர்ணிக்கிறார்.
  • முப்பது கோடி ஜனங்களின் சங்கம்/முழுமைக்கும் பொது உடைமை/ஒப்பிலாத சமுதாயம்/உலகத்துக்கொரு புதுமை’ எனத் தனித்துவமான சுதந்திர இந்தியத் துணைக்கண்டத்தைப் பற்றி பாரதி முன்பே முன்னுணர்ந்து எழுதினார். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே மகாகவி பாரதி சுதந்திரப் பள்ளுப் பாடியுள்ளார். தாயின் மணிக்கொடி பறப்பதையும் சிலாகித்துள்ளார்.
  • இந்தியாவில் மலரவிருக்கும் ஜனநாயக அரசு அமைப்பைப் பற்றி ’எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை/எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ எனக் குறிப்பிட்டுள்ளார். பாரதி சுதந்திர இந்தியாவை வரவேற்றும் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவுக்கு விடை கொடுத்தும் தனித்தனியே இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார். சுதந்திர இந்தியாவை வரவேற்கும் பாடல் இன்றைய இளைய தலைமுறைக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது.
  • "ஒற்றுமைக்குள் உய்யவே நாடெல்லாம்
  • ஒரு பெரும் செயல் செய்வாய், வா! வா! வா!"

வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர தின நள்ளிரவு

  • நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த 1947 ஆகஸ்ட் 14 – 15 நாள் களுக்கு இடைப்பட்ட அந்த நள்ளிரவு, சந்தேகமே இல்லாமல் நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகும். சுதந்திரமான இந்தியாவின் உதயத்தை அது உணர்த்தியது.
  • நாட்டின் சுதந்திரத்துக்காகத் தங்களுடைய இன்னுயிரை ஈந்தவர்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திய உச்சகட்ட நிலை அது.
  • பவித்திரமான வரலாற்றுத் தருணமாக மட்டும் அது அமையவில்லை, நம்முடைய சமூகத்தில் நிலவும் விநோதமான முரண்பாடுகளை வெளிக்கொண்டுவரும் நேரமாகவும் அது அமைந்திருந்தது.
  • துணிச்சலாக சிந்திப்பவர்கள் - மூடநம்பிக்கைகளுக்கு அடிமையானவர்கள், மிகுந்த நேர்மை மிக்கவர்கள் – ஊழல் செய்யும் தன்மை உள்ளவர்கள், தீவிரமான தனித்துவம் கொண்டவர்கள் – மற்றவர்களுடன் இணைந்து செயல்பட்டே சாகசத்தில் ஈடுபட விரும்புகிறவர்கள் ஆகியோரைக் கொண்டதுதான் நம்முடைய தேசிய ஆளுமை.
  • இந்தியாவுக்கான சுதந்திரத்தை இந்திய அரசமைப்பு அவையிடம் ஆகஸ்ட் 15 நள்ளிரவு வழங்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு தீர்மானித்திருந்தது.
  • முக்கியமான அரசியல் முடிவுகளை எடுக்கும்போது ஜோதிடர்களை ஆலோசிக்கும் வழக்கம் பிரிட்டிஷ்காரர்களுக்குக் கிடையாது. ஆனால், நல்ல நாள் பார்ப்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் பலர் டெல்லியில் இருந்தனர் (இப்போதும் இருக்கின்றனர்).
  • ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நட்சத்திரங்களின் இருப்பு எப்படி, அன்றைக்கு சுதந்திரம் பெறுவது எதிர்காலத்துக்கு நல்லதா என்று அவர்கள் பிரபல ஜோதிடர்களிடம் ஆலோசனை நடத்தினர். ‘ஆகஸ்ட் 15 சரியல்ல - ஆகஸ்ட் 14 தான் சுதந்திரம் பெறுவதற்கு மிகவும் உகந்த நாள்’ என்பதே அவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்து.
  • ஆனால், ஆகஸ்ட் 14-ல் பாகிஸ்தானுக்குத்தான் முதலில் சுதந்திரம் வழங்கப்படும் என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்துவிட்டதால் வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு அன்றைய நாள் காலை கராச்சி நகருக்கு சென்றுவிட்டார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து பாகிஸ்தான் (கிழக்கு பாகிஸ்தானும் சேர்த்து) விடுதலை பெறுவதை அன்று காலை முறைப்படி அறிவித்துவிட்டு, பிற்பகலிலேயே விமானம் ஏறி அவர் டெல்லி வந்துவிட்டார்.
  • ஆனால், நட்சத்திரங்களின் சேர்க்கை சரியில்லாததால் சுதந்திரம் பெறுவதற்கான நாள் சரியில்லை என்கிற மிகப் பெரிய பிரச்சினைக்கு, அறிவாற்றல்மிக்கவரான சர்தார் கே.எம். பணிக்கர் மிக எளிதான தீர்வைக் கண்டறிந்து விட்டார் என்பதே என்னுடைய நினைவு.
  • மலையாள அறிஞரும் ஆங்கிலத்தில் இந்திய வரலாற்றை மிகச் சிறப்பாக எழுதியவருமான பணிக்கர் இந்து மதத்தின் மறைபொருள்கள் பலவற்றைக் குறித்து ஆழ்ந்து கற்றவர், அத்துடன் நல்ல நகைச்சுவை உணர்வுமிக்கவர்.
  • பிரிட்டிஷ்காரர்கள் குறித்த நாளை மாற்றாமலும், நட்சத்திர சேர்க்கையால் எதிர்கால இந்தியாவுக்கு எந்தவித தீமையும் வராமலும் இருக்க, தானொரு வழியைக் கண்டறிந்துவிட்டதாகக் கூறினார்.
  • இந்திய அரசமைப்பு அவையின் உறுப்பினர்கள் அனைவரும் நள்ளிரவுக்கு அரை மணி நேரம் முன்னதாக - அதாவது ஆகஸ்ட் 14 இரவு 11.30 மணிக்கே – அவையில் கூடிவிடுவார்கள். இதனால் நட்சத்திரங்கள் சாந்தியடைந்துவிடும்.
  • புதிய சுதந்திர இந்தியாவுக்கான விசுவாசப் பிரமாணத்தை சரியாக நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு அவர்கள் மேற்கொள்வார்கள், பிரிட்டிஷார் கணக்குப்படி அது ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் கொடுத்ததாகிவிடும். இந்தத் தீர்வு எல்லோருக்கும் திருப்தியாக இருந்தபடியால், அதற்கான ஏற்பாடுகள் செய்யத் தொடங்கப்பட்டன.

கவலையும் வியப்பும்

  • அரசமைப்பு அவையின் இடைக்கால செயலாளராக நான் பொறுப்பு வகித்தேன். அதற்கும் சில மாதங்களுக்கு முன்னால் வரை பிரிட்டிஷ் இந்தியாவின் திட்டமிடல் – வளர்ச்சித் துறையின் செயலாளராக இருந்தேன்.
  • நான் செயலாளராக இருந்த துறையைக் கலைத்துவிடுவது என்று கவர்னர் ஜெனரல் முடிவெடுத்துவிட்டார் என்பதை ஒரு நாள் காலை பத்திரிகையைப் படித்தபோது தெரிந்துகொண்டு துணுக்குற்றேன்.
  • காலை உணவை முடித்துவிட்டு, அந்தத் துறையின் உறுப்பினரான சர் அக்பர் ஹைதரியைச் சந்தித்தேன். என்னுடைய வேலை போய்விட்டதே என்ற கவலையைத் தெரிவித்ததுடன், இப்படி என்னிடம் முன்கூட்டி சொல்லாமலேயே செய்துவிட்டார்களே என்கிற ஆதங்கத்தையும் கொட்டினேன்.
  • இதற்காக வருத்தப்படுவதாகக் கூறிய ஹைதரி, சுதந்திர நாள் நெருங்குவதால் அரசின் நடவடிக்கைகள் இப்படி திடீர் திடீரென எடுக்கப்பட வேண்டியிருப்பதாக சமாதானப்படுத்தினார்.

ஜின்னா எதிர்ப்பு

  • பாகிஸ்தானுக்குத் தலைவராகப் பொறுப்பேற்கவிருந்த முகமது அலி ஜின்னா, அப்போது வைஸ்ராயாக இருந்த வேவல் பிரபுவைச் சந்தித்தார். சுதந்திரம் வழங்கப்பட்ட பிறகு திட்டமிடல் – வளர்ச்சிக்கான துறை ஒரு நாட்டுக்காகச் செயல்படுமா அல்லது இரண்டு நாடுகளுக்கும் சேர்த்து செயல்படுமா என்று ஜின்னா கேட்டிருக்கிறார்.
  • ஒரு நாட்டுக்காகத்தான் (இந்தியா) என்றால், அது பாகிஸ்தானை பாரபட்சமாக நடத்துவதாகிவிடும். எனவே, இனி பிரிட்டிஷ் அரசுடன் சுதந்திரம் தொடர்பான பேச்சுவார்த்தை களில் ஈடுபட மாட்டேன் என்று கண்டிப்பாக எச்சரித்திருக்கிறார்.
  • இதற்கு ஒரே தீர்வு அந்தத் துறையையே இத்துடன் மூடிவிடுவதுதான் என்று வேவல் பிரபு முடிவெடுத்துவிட்டார் என்பதை அறிந்தேன். இந்த வேலைக்குப் பதிலாக எனக்கு புதிய வேலை தர இரண்டொரு நாள்கள் பிடிக்கும் என்று ஹைதரி என்னிடம் கூறினார்.

புதிய பொறுப்பு

  • இந்தியாவுக்கான புதிய அரசமைப்பு அவையை உருவாக்கத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், புதிய அரசமைப்பை உருவாக்குவதுடன் அந்தப் பணி முடிக்கப்படும் வரை, அதுவே தேசிய சட்டப் பேரவையாக (நாடாளு மன்றத்துக்கு இணை) செயல்படும் என்றும் கூறிய ஹைதரி, அதன் நிர்வாக நடவடிக்கை களுக்குப் பொறுப்பாளராக என்னை நியமிக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்தார். அரசமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கத் தனியாக ஆலோசகர் பதவி ஏற்படுத்தப்பட்டது.
  • மிகச் சிறந்த நீதிமானான சர் பி.என். ராவ் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவர் கூச்ச சுபாவம் கொண்டவர், அதிகம் யாருடனும் கலந்து பழகமாட்டார், எப்போதும் தன்னுடைய வேலையிலேயே மூழ்கியிருப்பார்.
  • அரசமைப்பு அவை தேவைப்படும் தகுதியான ஊழியர்களைத் தானே நியமித்துக்கொள்ளலாம் என்று சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தற்காலிக அடிப்படையில் நானும் பி.என். ராவும் நியமிக்கப்பட்டிருந்தோம்.

நன்றி: தி இந்து (16 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்