TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 7

August 17 , 2022 722 days 412 0

இந்திய சினிமாவுக்குப் பிரபலம் தேடித்தந்தவர்

  • சுதந்திர இந்தியாவில் சினிமாவை அனைவருக்கும் கொண்டுசேர்த்தவர்களில் முதன்மையானவர் ராஜ் கபூர். நடிகர். தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் எனப் பல தளங்களில் இயங்கிய ராஜ் கபூர், ’இந்தியாவின் மிகச் சிறந்த திரைக் கலைஞர்’ (The Greatest Showman of India) என்று குறிப்பிடப்படும் அளவுக்குத் தன் திரை ஆளுமையால் ஒட்டுமொத்த இந்தியாவையும் வசீகரித்தார்.
  • 1935 இல் வெளியான ‘இன்குலாப்’ இந்திப் படத்தில் சிறுவனாக நடித்ததன் மூலம் பாலிவுட்டில் ராஜ் கபூர் பிரவேசித்தார். நாடு விடுதலை பெற்ற ஆண்டில் ‘நீல் கமல்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
  • 24 வயதில் ஆர்.கே. ஃபிலிம்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிவிட்ட ராஜ் கபூர், அந்த நிறுவனத்துக்காகத் தயாரித்த ‘ஆக்’ (1948) திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் பரிணமித்தார்.
  • இந்திய சினிமாவில் மிக இளம் வயதில் இயக்குநரானவர் என்னும் புகழைப் பெற்றார். தொடர்ந்து அவர் நடித்துவந்த படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன.
  • ராஜ் கபூர், சார்லி சாப்ளினை ஆதர்சமாகக் கொண்டிருந்தார். சில படங்களில் சாப்ளினின் புகழ்பெற்ற ‘தி ட்ராம்ப்’ கதாபாத்திரத்தின் சாயலைக் கொண்ட கதாபாத்திரங் களில் நடித்தார். ‘இந்தியாவின் சார்லி சாப்ளின்’ என்றும் புகழப்பட்டார். ‘பூட் பாலிஷ்’, ‘அப் தில்லி தூர் நஹி’ உள்ளிட்ட சமூக முக்கியத்துவம் வாய்ந்த சிறு முதலீட்டுப் படங்களைத் தயாரிக்கவும் செய்தார்.
  • சில தொடர் தோல்விகளுக்குப் பிறகு ராஜ் கபூர் தயாரித்து, இயக்கி, நடித்த ‘மேரா நாம் ஜோக்கர்’ வெளியான காலத்தில் படுதோல்வி அடைந்தாலும், பிற்காலத்தில் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்றது. ராஜ் கபூர் படங்களுக்குத் தெற்காசிய நாடுகளிலும், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளிலும், சீனா, சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளிலும் பரவலான வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் இந்திய சினிமாக்களுக்கு உலகளாவிய சந்தையை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் ராஜ் கபூர்.

விளையாட்டு: முதல் ஆசிய போட்டி அசத்திய டெல்லி

  • 1940-களின் பிற்பகுதியில் ஆசியாவில் பல நாடுகள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியிருந்தன. இந்தியாவில் புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி நாட்டை நிர்மாணிக்கும் பணிகள் சூடுபிடித்திருந்த வேளையில், தலைநகர் டெல்லியில் 1951இல் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
  • அந்தக் காலகட்டத்தில் கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியாவில் உள்ள சில நாடுகள் இணைந்து விளையாட்டுப் போட்டிகளை நடத்திவந்தன. ஒலிம்பிக் போன்ற விளையாட்டுப் போட்டியை ஆசிய அளவில் நடத்த வேண்டும் என்கிற எண்ணம் பல நாடுகளுக்கும் ஏற்பட்டது.
  • அதன் ஒரு பகுதியாக 1949இல் டெல்லியில் தேசிய ஒலிம்பிக் கமிட்டிகளின் ஆசியப் பொது அவை கூடியது. அதில் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியை 1950இல் டெல்லியில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
  • ஆனால், தயாரிப்புப் பணிகள் தாமதமானதால், 1951இல்தான் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. டெல்லியில் இர்வின் அம்ஃபி தியேட்டர் என்ற விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு அந்த அரங்கத்தின் பெயர் ‘நேஷனல் ஸ்டேடியம்’ என்று மாற்றப்பட்டது. அப்போதே இந்த மைதானத்தைப் புனரமைக்க ரூ. 5 லட்சம் செலவிடப்பட்டது.
  • 1951 மார்ச் 4 -11 வரை நடைபெற்ற இப்போட்டியை அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தொடங்கிவைத்தார். முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 11 நாடுகள், 57 பிரிவுகளில் 9 விளையாட்டுகளில் பங்கேற்றன. மொத்தம் 489 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
  • முதல் போட்டியில் 60 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் ஜப்பான் முதலிடம் பிடித்தது. இந்தியா 15 தங்கம், 16 வெள்ளி, 20 வெண்கலம் என 51 பதக்கங்களை வென்று இரண்டாமிடத்தைப் பிடித்தது.
  • சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக பல நாடுகள் பங்கேற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தி காட்டியதன் மூலம் விளையாட்டுத் துறையில் இந்தியா தன் வலிமையை உலகுக்குப் பறைசாற்றியது.

ஆளுமை: கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்

  • ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஒரு பகுதி இந்தியர்கள் போராடிக் கொண்டிருந்தபோது, இன்னொரு பகுதி இந்தியர்கள் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.
  • அவர்களில் அம்பேத்கரும் ஒருவர். கல்வி ஒன்றே தம்மை உயர்த்தும் என்பதை உணர்ந்திருந்தவர், கடினமான பொருளாதாரச் சூழலிலும் சிறப்பாகக் கல்வி பயின்றார். பரோடா மன்னரின் உதவியால் அமெரிக்காவில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
  • ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி குறித்து ‘The problem of the Rupee: Its Origin and Solution' என்ற முக்கியமான ஆய்வு நூலை 1923இல் வெளியிட்டார். 1934இல் கில்டன் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துகளின் அடிப்படையில் 'இந்திய ரிசர்வ் வங்கி' உருவாக்கப்பட்டது. இவை பொருளாதாரத்தில் அம்பேத்கருக்கு இருந்த நிபுணத்துவத்துக்கான சான்றுகள்.
  • மகாராஷ்டிரத்தின் மகத் நகரில் இருந்த பொதுக்குளத்தில் பட்டியலினத்தவர்கள் நீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து 1927இல் அம்பேத்கர் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தினார். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு 1937 இல் மகத் குளத்தை அனைவரும் பயன்படுத்துவதற்கான உரிமையை பம்பாய் உயர் நீதிமன்றம் வழங்கியது.
  • சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்றால், ‘கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்’ என்ற முழக்கத்தை அம்பேத்கர் முன்னெடுத்தார்.
  • இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. பட்டியலினத்தவர்களுக்குத் தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது.
  • இதை காந்தி எதிர்த்தார். 1932இல் காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையில் ‘பூனா ஒப்பந்தம்' ஏற்பட்டது. இதன் மூலம் தனி வாக்குரிமைக்குப் பதிலாக, தனித் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனைவரும் வாக்களித்தனர்.
  • சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் அம்பேத்கர் பொறுப்பேற்றார். அவர் தலைமையில் அரசமைப்பை உருவாக்கும் பணி நடைபெற்றது. பிரதமர் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1951 இல் பதவியை அம்பேத்கர் ராஜினாமா செய்தார். ‘பாரதிய பௌத்த மகாசபா'வை 1955இல் அவர் தோற்றுவித்தார்.
  • ஆறு லட்சம் இந்துக்கள் அம்பேத்கர் தலைமையில் பௌத்தத்தைத் தழுவினார்கள். ‘புத்தரும் அவரின் தம்மமும்’ என்ற நூலை எழுதிய சில நாட்களில் 1956இல் அம்பேத்கர் மறைந்தார். இந்திய மக்களிடையே செல்வாக்கு அதிகரித்துவரும் தலைவராக பாபாசாகேப் அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார்!

மகளிர்: விடியல் தந்த விசாகா நெறிமுறை

  • வேலைக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக 2013ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சட்டத்துக்கு முன்னோடியாக விளங்கியது ‘விசாகா நெறிமுறைகள்’. ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரி தேவி மீது நிகழ்த்தப்பட்ட கொடூரம்தான் விசாகா நெறிமுறைகள் உருவாக்கப்படக் காரணம்.
  • ராஜஸ்தான் மாநிலப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் பணியாளராகச் செயல்பட்டவர் பன்வாரி தேவி. கிராமப்புறப் பெண்கள் மத்தியில் சுகாதாரம், கல்வி போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இவரது வேலை. 1990-களில் பரவலாக இருந்த குழந்தைத் திருமண நடைமுறையை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் இவர் ஈடுபட்டிருந்தார்.
  • 1992இல் இவர் முன்னெடுத்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்துக்குக் கிராம மக்கள் ஆதரவளிக்கவில்லை. இருந்தபோதும் ஒன்பது மாதப் பெண் குழந்தைக்கு நடைபெறவிருந்த திருமணத்தைக் காவலர்கள் உதவியுடன் தடுத்து நிறுத்தினார். இதனால் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர், பன்வாரி தேவியின் கணவரைத் தாக்கி, பன்வாரி தேவியைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினர். இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். ஆனால், காவல்துறையினர் 52 மணி நேரம் கழித்தே புகாரைப் பதிவுசெய்தனர்.
  • மாவட்ட நீதிமன்றத்தில் பன்வாரி தேவிக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். பன்வாரி தேவிக்கு நிகழ்ந்த இந்த அநீதிக்கு எதிராகப் பெண்ணிய அமைப்புகள் குரல்கொடுத்தன. இதில் அரசு எந்த விதத்திலும் பொறுப்பேற்கவில்லை என்பதைக் கண்டித்து வீதிகளில் இறங்கிப் போராடினர்.
  • பணியிடங்களில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் சீண்டல் காரணமாகப் பெண்களே வேலையைவிட்டு நீக்கப்படுகின்றனர். அவர்களைப் பணியிலிருந்து நீக்குவதன் வாயிலாக அரசு, தனியார் நிறுவனங்கள் தங்கள் கடமையிலிருந்து தப்பித்துக்கொள்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் இப்படியொரு சூழலில் வேலையின்றி நிராதரவாக நிற்பதைச் சுட்டிக்காட்டிப் பெண்கள் அமைப்பினர் போராடினர்.
  • பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவது வேலை வழங்கும் நிறுவனங்களின் பொறுப்பு என்பதை வலியுறுத்தியும் பன்வாரி தேவிக்கு நீதி கேட்டும் ‘விசாகா’ என்கிற பொதுவான பெயரில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவைப் பெண்கள் தாக்கல்செய்தனர்.
  • அதன் விளைவாக 1997இல் உருவாக்கப்பட்டதுதான் பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான ‘விசாகா நெறிமுறைகள்’. எவையெல்லாம் பாலியல் சீண்டல், பணி வழங்கும் நிறுவனமும் பணியாளரும் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் போன்றவை அதில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

உணர்ச்சிகரமான அரியதொரு தருணம்

  • தற்போது நாடாளுமன்ற மக்களவை கூடும் இடமே, சுதந்திரம் வழங்குவற்கான சம்பிரதாய நிகழ்ச்சிகளுக்கும் தேர்வுசெய்யப்பட்டிருந்தது.
  • இந்தியா சுதந்திரம் அடைவதை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு அந்த மண்டபத்தில் எப்படி இடம் தருவது என்கிற மிகப் பெரிய கேள்வி எழுந்தது.
  • உறுப்பினர்கள் அமரும் பகுதியைத் தவிர அங்கிருந்த மாடங்களில் சில நூறு பேருக்குத்தான் இடம் தர முடியும். அரசமைப்பு அவையின் அப்போதைய தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜவாஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோருடன் இது குறித்து ஆலோசனை கலந்தேன்.
  • அரசமைப்பு அவையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரேயொருவரை மட்டுமே தங்களுடைய விருந்தாளியாக அழைக்கலாம் என்று முடிவுசெய்து, அதற்கான அழைப்பு அட்டைகளும் வழங்கப்பட முடிவு செய்யப்பட்டது.
  • ராஜேந்திர பிரசாத் இதைக் கண்டிப்புடன் பின்பற்றினார். பண்டிட் நேரு தன்னுடைய மகள் இந்திராவுக்கு மட்டும் ஒரு அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டார். சர்தார் படேலும் தன்னுடைய மகள் மணிபென் படேலுக்காக ஒரு சீட்டு பெற்றார். தங்களுக்கு மேலும் ஒரு சீட்டுதருமாறு எனக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் மூவரிடமும் பலரும் முறையிட்டனர்.
  • அதை ஏற்க அந்த மூவருமே மறுத்துவிட்டனர். ஏற்கெனவே ஒரு அழைப்பு அட்டை பெற்றிருந்த மத்திய அமைச்சர் ஒருவர், இன்னொன்று வாங்கி வரும்படி அவருடைய மனைவியை அனுப்பினார்.நான் கண்டிப்பாக மறுத்தவுடன் மிகவும் கோபப்பட்டு, அந்த அறையிலிருந்து அவர் வேகமாக வெளியேறியதை என்னால் மறக்கவே முடியாது. பிரபல பத்திரிகையாளர் ஒருவர், ஆறு அனுமதிச் சீட்டுகள் தர முடியுமா என்று கேட்டார்.
  • வாய்ப்பே இல்லை என்று மறுத்துவிட்டேன். சில நாள்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் தாழ்வாரத்தில் என்னைச் சந்தித்த அவர், “நீங்கள் தராவிட்டால் என்ன உங்களுடைய அலுவலக உதவியாளர்கள் மூலம் அதைப் பெற்றுவிட்டேன்” என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறினார். உங்களைப் போன்ற கண்டிப்பான அதிகாரிகள் இருக்குமிடத்தில், மேல்நிலை அதிகாரிகளை அணுகுவது தவறான முடிவு என்கிற பாடத்தைக் கற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
  • அப்போது டெல்லியில் சில வெளிநாடுகளுக்குத்தான் தூதரகங்கள் இருந்தன. அன்றிரவு 11.30 மணி நிகழ்ச்சியின்போது காபி அருந்த வருமாறு தூதரகத் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. வெளியுறவு அமைச்சகத்தில அப்போது பணிபுரிந்த ஐசிஎஸ் அதிகாரியொருவர், இரவு விருந்து நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் வழக்கமாக வரும் கோட்-சூட்டுடன் கழுத்தில் கறுப்பு நிற டை அணிந்து கம்பீரமாக வந்திருந்தார்.
  • சுதந்திரம் பெறும் நிகழ்ச்சிக்குக்கூட பிரிட்டிஷாரின் உடையலங்கார விதிகளைக் கடைப்பிடித்து வந்திருக்கிறாரே என்று பலரும் புருவங்களை உயர்த்தி அவரைப் பார்த்தனர். அதே அதிகாரி அடுத்த நாள் நடந்த நிகழ்ச்சிக்கு இந்தியர்களின் பாரம்பரிய ஆடையில் வெகு அமெரிக்கையாக வந்திருந்தார்.
  • பிறகு வெளியுறவுத் துறையில் பல பொறுப்புகளைத் திறமையாகவும் அர்ப்பணிப்போடும் வகித்து சுதந்திர இந்தியாவுக்கு மிகச் சிறந்த தொண்டு புரிந்தார். பிரதமர் நேருவின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் ஒருவராகவும் அவர் திகழ்ந்தார்.

உணர்ச்சிகரமான ஒலிபரப்பு

  • நள்ளிரவு 12 மணிக்கு 12 முறை ஒலிப்பதற்காக சிறப்பு கடிகாரம் ஒன்றைத் தயார் செய்திருந்தோம். அது சரியாக அடிக்குமா என்பதை இயக்கிப் பார்த்த பிறகே திருப்தியடைந்தேன். அன்றைய தினம் அது 12 முறை ஒலித்து முடித்தவுடன் ஒலிபெருக்கி இருக்கும் இடம் நோக்கி நகர்ந்து, கையில் வைத்திருந்த தாளில் இருந்து ஒவ்வொரு தலைவரின் பெயரையும் வாசித்தேன்.
  • அகர வரிசையா – வயது மூப்பு அடிப்படையிலா, எந்த வரிசையில் அவர்களை அழைத்தேன் என்பதை மறந்துவிட்டேன். அந்த முழு நிகழ்ச்சியும் நேரடியாக வானொலியில் ஒலி பரப்பானது.
  • பம்பாய், மதராஸ் ஆகிய நகரங்களில் அப்போது அதைக் கேட்ட என்னுடைய நண்பர்கள் பலர், தலைவர்களின் பெயர்களை வாசிக்கும்போது என்னுடைய குரல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்ததாகவும் லேசாக நடுக்கம்கூடத் தெரிந்ததாகவும் கூறினர். நாட்டின் சுதந்திரத்துக்காக அரும்பாடுபட்ட அந்தத் தியாக சீலர்களின் பெயர்களை அழைக்கும்போது உணர்ச்சி வசப்பட்டுத்தான் இருந்தேன்.

உற்சாகமான ஒழுங்குக் குலைவு!

  • உண்மையிலேயே அந்தத் தருணம் உணர்ச்சிமயமாகவே இருந்தது என்பதை பண்டிட் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோருடன் வெளியே வந்தபோது உணர்ந்தேன். அவர்கள் இருவரும் உடனடியாக வைஸ்ராய் இருந்த அரசு இல்லத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. வைஸ்ராய் இல்லமே, கவர்னர் ஜெனரலின் புதிய இல்லமாக உருமாறியிருந்தது.
  • புதிய இந்திய அரசில் பொறுப்பேற்றவர்கள், சுதந்திர நாட்டின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்குமாறு மவுண்ட் பேட்டன் பிரபுவை முறைப்படி கேட்டுக்கொள்ள அங்கு செல்ல வேண்டியிருந்தது.
  • இதற்கான வழிமுறைகள் ஏற்கெனவே கச்சிதமாகத் திட்டமிடப்பட்டிருந்தன. மவுண்ட் பேட்டனும் தலைவர்களை வரவேற்கக் காத்திருந்தார். ஆனால், நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம். சுதந்திரம் கிடைத்துவிட்ட உற்சாகத்தில் இருந்த அவர்களைக் காவல்துறையால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
  • இரண்டு தலைவர்களையும் அழைத்துச் செல்ல காரை அங்கே வரவழைக்க மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. சுதந்திரம் கிடைத்ததை உறுதிசெய்து கொண்ட மக்கள், தங்களுடைய தலைவர்களைப் பார்த்துவிட வேண்டும் என்கிற துடிப்பில் இருந்தனர். உற்சாக மிகுதியால் கீழ்ப்படிய மறுத்தனர்.
  • நாட்டின் பிரதமராக பதவியேற்றுக்கொண்ட நேரு, தன்னைப் பலமுறை சிறையில் தள்ளிய பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதியான மவுண்ட் பேட்டன் பிரபுவையே, நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரலாகப் பதவி வகிக்குமாறு கேட்டுக்கொள்வதற்காகத் தயாராகியிருந்தார். இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும்போது, பிரிட்டிஷார் வெளியேறுவதை சிறு பிசகும் இல்லாமல் சிறப்பாக சிந்தித்து அவர் திட்டமிட்டிருந்தார்.
  • அதற்காக மட்டுமல்ல, நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு எதிராக விடுதலை பெறப் போராடினோம் என்றாலும், பிரிட்டிஷ் மக்களுடன் நமக்கு எந்தவித தனிப்பட்ட பகையுமில்லை என்கிற மகாத்மா காந்தியின் போதனைகளே அவருக்கு இதற்கு வழிகாட்டின.
  • இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் பல ஆண்டுகள் தன்னை எல்லா வகையிலும் வருத்திக்கொண்டு போராடிய காந்தி மகான், நாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நாளில் அதை நேரில் காண டெல்லியில் இல்லை, வகுப்புக் கலவரத்தை நிறுத்த வங்காளம் சென்றுவிட்டார். ஒரே நாடாக இருந்ததை இந்தியா – பாகிஸ்தான் என்று பிரிப்பது தவறு, பேராபத்தானது என்றே அவர் கருதினார். எனவே, அந்த முடிவைக் கேட்டு அவர் வருந்தினார். பிற்காலத்தில் நடந்த சம்பவங்களையெல்லாம் பார்க்கும்போது முதலிலிருந்தே அதை அவர் எதிர்த்தது எவ்வளவு நியாயம் என்பது புரிகிறது.
  • ஜோதிடர்கள் கருத்துப்படி நட்சத்திரங்கள் நன்றாக இருந்த நேரத்தில் உதயமான பாகிஸ்தான், பிறகு பாகிஸ்தானாகவும் வங்கதேசமாகவும் மீண்டும் பிளவுபட்டுவிட்டது. பாகிஸ்தான் என்ற தனி நாடு எந்தக் காரணத்துக்காகக் கேட்டு வாங்கப்பட்டதோ அந்தக் கருத்தே சரியில்லை என்பதை அந்தப் பிரிவினை காட்டி விட்டது.

நன்றி: தி இந்து (17 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்