TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 8

August 18 , 2022 721 days 371 0

தமிழ்நாடு: மீனவ சமூகத்திலிருந்து ஒரு பெண் அமைச்சர்

  • இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு பெண் முதல்வராக 41 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1988இல் ஜானகி ராமச்சந்திரன் பதவியேற்றதன் மூலம் இது நடந்தது. இடைப்பட்ட காலத்தில் பெண்கள் பலர் மாநில அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் லூர்தம்மாள் சைமன்.
  • நாகர்கோவிலைச் சேர்ந்த லூர்தம்மாள் அந்தப் பகுதியில் பிரபலமானவராக விளங்கினார். ஒய்.எம்.சி.ஏ. அமைப்பின் செயலாளர், கஸ்தூரி பாய் மாதர் சங்க உறுப்பினர், ரோட்டரி, லயன்ஸ் உறுப்பினர், செவித்திறன் இழந்தோர், வாய் பேச முடியாதோர் சங்கத்தின் தலைவர் என்று நாகர்கோவிலில் பல பரிமாணங்களில் சமூகப் பணியாற்றிவந்தார்.
  • இவருடைய கணவர் சைமன், கேரள அமைச்சராகவும் பின்னர் தமிழக ஆளுநராகவும் இருந்த ஏ.ஜெ.ஜானின் நெருங்கிய நண்பர். 1957இல் மதராஸ் மாநிலத்துக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றபோது, தகுதி வாய்ந்த பெண் வேட்பாளரை நிறுத்த காமராஜர் விரும்பினார்.
  • அப்போது லூர்தம்மாளை காமராஜருக்கு அறிமுகப்படுத்தினார் ஏ.ஜெ. ஜான். லூர்தம்மாளின் பன்மொழிப் புலமையும் அறிவுத் திறனும் காமராஜரைக் கவரவே, குளச்சல் தொகுதியில் வேட்பாளராக அவரை நிறுத்தினார். தேர்தலில் வென்று காமராஜர் இரண்டாவது முறை முதல்வராகப் பதவியேற்றபோது, அவருடைய அமைச்சரவையில் 7 பேர் இடம்பெற்றனர்.
  • அப்போது லூர்தம்மாளுக்கு உள்ளாட்சித் துறையும் மீன்வளத் துறையும் ஒதுக்கப்பட்டது. லூர்தம்மாள், மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • லூர்தம்மாளுக்கு முன்பாக சென்னையில் சமூக சேவைக்காக அறியப்பட்ட ஜோதி வெங்கடாசலம் 1953இல் ராஜாஜி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்.
  • ஜோதி வெங்கடாசலம் சட்ட மேலவை உறுப்பினராக இருந்து அமைச்சரானார். லூர்தம்மாள் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரானவர். அதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அமைச்சர் என்ற சிறப்பை லூர்தம்மாள் பெற்றார்.

ஷெனாயில் ஒலித்த சுதந்திர கானம்

  • ஒரு கிராமிய வாத்தியம், வீட்டு விசேஷங்களில் வாசிக்கப் படும் எளிமையான காற்று வாத்தியம் என்னும் நிலையிலிருந்த ஷெனாயை, இந்துஸ்தானி கச்சேரி மேடைகளில் பிரதான வாத்தியமாக்கிய பெருமைக்கு உரியவர் உஸ்தாத் பிஸ்மில்லா கான்.
  • பிஹாரைப் பூர்விகமாகக் கொண்ட இசைக் குடும்பத்தில் பிறந்தவர் அவர். காசி விசுவநாதர் ஆலயத்தில் ஷெனாய் வாசித்துக்கொண்டிருந்த அவரின் தாய் மாமன் அலி பக்ஷ் விலாயத் கானோடு உத்தரப் பிரதேசத்துக்கு பிஸ்மில்லா கான் வந்தார். பிஸ்மில்லா கானுக்கு, விலாயத் கானே ஷெனாய் வாசிப்பதற்குக் கற்றுக்கொடுத்தார். அலகாபாத்தில் நடைபெற்ற இசை மாநாட்டில் 14ஆவது வயதில் விலாயத் கானோடு இணைந்து முதன்முதலாகப் பொதுவெளியில் ஷெனாய் வாசித்தார் பிஸ்மில்லா கான்.
  • இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, தன்னுடைய பேச்சைத் தொடங்குவதற்கு முன்னதாக பிஸ்மில்லா கானை ஷெனாய் வாசிக்க அழைத்தார். சுதந்திர இந்தியாவில் செங்கோட்டையிலிருந்து முதல் சுதந்திர கானம், பிஸ்மில்லா கானின் ஷெனாயிலிருந்தே மெல்லிய வருடல் இசையாகக் கசிந்து வியாபித்தது.
  • நாட்டில் மத மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, அப்பழுக்கில்லாததாக பிஸ்மில்லா கானின் இசை கொண்டாடப்பட்டது. உலகின் பல பகுதிகளுக்குச் சென்று ஷெனாய் வாசித்திருந்தாலும், கங்கைக் கரையில் வாழும் எளிய மக்களுக்காக வாசிப்பதையே அவர் ஆத்மார்த்தமாக விரும்பினார்.
  • "அமெரிக்காவுக்கு வந்துவிடுங்கள். அங்கு உங்களுக்கென்று இசைப் பள்ளி அமைத்துக் கொடுக்கிறோம்" என்று பிஸ்மில்லா கானை வெளிநாட்டு நண்பர்கள் சிலர் வற்புறுத்தி அழைத்தனர்.
  • அதற்கு, "இந்த கங்கையை உங்களால் அங்கே அழைத்து வந்துவிட முடியுமா?" என்பதே பிஸ்மில்லா கானின் பதிலாக இருந்தது. அவரின் இசைப் பெருவாழ்வில், இந்திய நிலத்தையும் மக்களையும் எந்தச் சக்தியாலும் பிரிக்கவே முடியவில்லை

முதல் கல்வி ஆணையங்கள்

  • இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இந்திய பல்கலைக்கழகங்களின் நிலை குறித்து ஆராய்வதற்கும் பல்கலைக்கழக கல்வியில் இந்தியாவின் நிகழ்கால, எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான மேம்பாடுகளைப் பரிந்துரைப்பதற்கும் பல்கலைக்கழகக் கல்வி ஆணையம் 1948இல் அமைக்கப்பட்டது.
  • பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவரும் பிற்காலத்தில் இந்தியாவின் குடியரசுத் தலைவரானவருமான டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், இந்த ஆணையத்துக்குத் தலைமை வகித்தார்.
  • பல்கலைக்கழகக் கல்வி தொழிற்பயிற்சியை அளிப்பதாகவும் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்குப் பங்களிக்கும் வகையிலான அறிவையும் ஞானத்தையும் வழங்குவதாகவும் அமைய வேண்டும் என்று இந்தக் குழு பரிந்துரைத்தது.
  • விவசாயம், வணிகம், பொறியியல், தொழில்நுட்பம், சட்டம் ஆகிய துறைகளுக்கான கல்வியை வழங்குவதற்கான வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. தகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது, ஆசிரியர்களுக்கு மதிப்புக்குரிய ஊதியம் வழங்குதல் ஆகியவற்றுக்கான பரிந்துரைகளையும் அளித்திருந்தது. கிராமப்புறங்களில் புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்க வலியுறுத்தியிருந்தது.
  • 1952இல் இடைநிலைக் கல்விக்காக, அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த டாக்டர் லட்சுமணசுவாமி முதலியார் தலைமையில் அமைக்கப்பட்ட கல்விக் குழு ‘முதலியார் குழு’ என்றழைக்கப்பட்டது. 11இலிருந்து 17 வயதுவரை ஏழு ஆண்டுகள் இடைநிலைக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும், மூன்றாண்டு இடைநிலை வகுப்புகள், நான்காண்டு உயர்நிலை வகுப்புகளாகப் பகுக்கப்பட வேண்டும் என்று இந்தக் குழு பரிந்துரைத்தது.
  • இடைநிலைக் கல்வியானது மாணவர்களுக்கு தலைமைப் பண்பு, தொழிற்பயிற்சி, ஜனநாயகக் குடிமகனுக்குரிய தகுதிகள், ஆளுமை வளர்ச்சி ஆகியவற்றை அளிப்பதாக இருக்க வேண்டும் என்று இந்தக் குழு வலியுறுத்தியது. மாணவர்களின் திறமை வளர்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
  • இடைநிலைக் கல்வியைப் பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடி யினருக்குக் கொண்டு சேர்ப்பதற்கான சிறப்புத் திட்டங்கள் தேவைப்படுவதையும் இந்தக் குழு கவனப் படுத்தியது.

ஆளுமை: இரும்பு மனிதர் 

  • அகமதாபாத்தில் காந்தியின் உரையைக் கேட்டு, வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டுச் சுதேசி இயக்கத்தில் சேர்ந்தவர் வல்லபபாய் படேல். கேடா மாவட்டத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக, மக்கள் வரிவிலக்குக் கேட்டுப் போராடினார்கள்.
  • ஆங்கி லேய அரசு செவிசாய்க்கவில்லை. காந்தியும் படேலும் ‘வரி கொடா’ இயக்கத்தைப் பெரிய அளவில் நடத்தியதன் காரணமாக வரி ரத்துசெய்யப்பட்டது. இது படேலுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரித்தது.
  • 1920இல் குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார் படேல். ஒத்துழையாமை இயக்கத்துக்காக மாநிலம் முழுவதும் பயணித்து, மூன்று லட்சம் மக்களைத் திரட்டினார். தீண்டாமை, சாதிப் பாகுபாடு, மதுபானம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடினார். பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்ற பரப்புரையிலும் ஈடுபட்டார்.
  • மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டபோது, இந்தியக் கொடியை ஏற்றுவதைத் தடைசெய்யும் ஆங்கிலேய சட்டத்திற்கு எதிராக, நாக்பூரில் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தும்படி படேல் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
  • காந்தியும் படேலும் எரவாடா சிறையில் 1932இல் இருந்தபோது, இருவருக்கும் நெருக்கமான நட்பு உருவானது. அடுத்த சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் படேலின் செல்வாக்கு அதிகரித்தது. சோசலிசத்தை ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் அறிவித்தபோது, அது விடுதலையைத் தாமதப்படுத்தும் என்று நேருவுடன் படேல் முரண்பட்டார்.
  • அகமதுநகரில் உள்ள கோட்டையில் 1942 முதல் 1945 வரை முழு காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டார் படேல். அங்கிருந்துகொண்டே போராட்டக்காரர்களுக்கு நம்பிக்கை அளித்துக்கொண்டிருந்தார்.
  • தேசப் பிரிவினையை ஏற்றுக்கொண்ட தலைவர்களில் படேலும் ஒருவர். 1947இல் சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும் முதல் உள்துறை அமைச்சராகவும் படேல் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தியாவில் பிரிந்து கிடந்த 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் மாபெரும் பணியைத் திறம்படச் செய்து முடித்ததால், இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டார்.
  • காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றதால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடைசெய்தார். சில நிபந்தனைகளின் பெயரில் அடுத்த ஆண்டு அந்த இயக்கத்துக்கான தடை நீக்கப்பட்டது. 1950இல் மறைந்த படேல், ‘குடிமைப் பணிகளின் தந்தை'யாக நினைவு கூரப்படுகிறார்.

நன்றி: தி இந்து (18 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்