TNPSC Thervupettagam

சுதந்திரத்துக்கும் பொறுப்புணர்வுக்கும் இடையிலான சமநிலை

November 28 , 2024 48 days 103 0

சுதந்திரத்துக்கும் பொறுப்புணர்வுக்கும் இடையிலான சமநிலை

  • கருத்துச் சுதந்திரம் என்பது எதை வேண்டுமானாலும் அனுமதிக்கும் ‘தலையிடாமைச் செயல்’ அல்ல; தணிக்கையையும் பொதுவெளியில் கருத்துகள் விவாதிக்கப்படுவதற்கான தடைகளையும் விலக்குவதற்கான கோட்பாடு. இதைப் புரிந்துகொள்வது அவசியம். அண்மையில், எக்ஸ் (முன்பு டிவிட்டர்) தளத்தில் தனது அதிகாரபூர்வக் கணக்குகளிலிருந்து பதிவுகளை வெளியிடுவதை நிறுத்த பிரிட்டனைச் சேர்ந்த ஊடக நிறுவனமான ‘தி கார்டியன்’ முடிவு செய்துள்ளது.
  • பிரிட்​டனின் பாரம்பரிய ஊடக நிறுவனமான ‘தி கார்டியன்’ இது தொடர்பாக வெளியிட்​டுள்ள அறிக்கையை மிகுந்த கவனத்​துடன் வாசிக்க வேண்டும். ‘நாங்கள் நீண்ட காலமாகப் பரிசீலித்துவந்த முடிவு இது. தீவிர வலதுசாரி சதிக் கோட்பாடுகள், இனவாதக் கருத்துகள் உள்பட இந்தத் தளத்தில் அதிகமாக முன்னிறுத்​தப்​படும் உள்ளடக்கம் பெரும்​பாலும் உளைச்சல் அளிப்​ப​தாகவே இருந்​து​வந்​துள்ளது.
  • ‘எக்ஸ்’ நச்சுத்​தன்மை வாய்ந்த ஊடகத் தளம் என்றும் அதன் உரிமை​யாளரான எலான் மஸ்க் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியல் உரையாடல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்​பவராக இருந்​துள்ளார் என்றும் நாங்கள் நீண்ட காலமாகக் கருதிவந்​தோம். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்​சாரம் இதனை உறுதிப்​படுத்து​வ​தாகவே அமைந்தது’ என்று அந்த அறிக்கையில் கூறப்​பட்​டுள்ளது.

இது முதல் நிகழ்வு அல்ல:

  • ‘தி கார்டியன்’ போன்ற ஒரு முன்னணிச் செய்தி ஊடக நிறுவனம் ‘எக்ஸ்’ தளத்திலிருந்து விலகும் முதல் நிகழ்வு இதுவல்ல என்பது குறிப்​பிடத்​தக்கது. எலான் மஸ்க் எக்ஸ் தளத்தின் உரிமை​யாளர் ஆனதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்​காவைச் சேர்ந்த ‘நேஷனல் பப்ளிக் ரேடியோ (என்.பி.ஆர்)’ ஏப்ரல் 2023இல் எக்ஸ்​-இலிருந்து வெளியேறியது.
  • இது தொடர்பாக என்.பி.ஆர். நிறுவனத்​துக்குள் இருப்​பவர்​களுடன் மட்டும் பகிரப்பட்ட குறிப்பு ஒன்றின் அடிப்​படையில் ‘நீமேன் லேப்’ (Nieman Lab) இணைய இதழில் வெளியான செய்திக் கட்டுரை, எக்ஸ் தளத்திலிருந்து வெளியேறிய பிறகு, என்.பி.ஆர். ஊடகத்தின் பயனர்கள் வருகை ஒரு சதவீதம் மட்டுமே குறைந்​திருப்​ப​தாகக் கூறுகிறது. மஸ்க்கின் தலைமையின் கீழ் எக்ஸ் தளத்தில் தினமும் அதிக நேரம் செலவிடும் பயனர்​களின் எண்ணிக்கை குறைந்​து​வருவதை விளக்கும் வகையில் ‘மாஷபில்’ (Mashable) இணைய இதழ் செப்டம்பர் 2023இல் ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்​டிருந்தது.
  • நாம் இந்த மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து மஸ்க் முன்வைக்கும் வாதங்களைக் கட்டவிழ்த்தாக வேண்டியுள்ளது. எக்ஸ் தளத்தில் இயல்பான தன்மையாக ஆகிவிட்ட நச்சு உள்ளடக்​கங்​களின் காரணமாக, அதிலிருந்து விலகி​யிருப்பது ‘என்.பி.ஆர்’, ‘தி கார்டியன்’ போன்ற பாரம்பரிய ஊடகங்கள் மட்டும் அல்ல.
  • டிஜிட்டல் தளங்களில் வெறுப்புப் பேச்சைக் கண்காணித்துத் தடுப்​ப​தற்கான அமைப்பான ‘தி சென்டர் ஃபார் கவுன்​டரிங் டிஜிட்டல் ஹேட்’ (The Center for Countering Digital Hate, (CCDH)) எக்ஸ் தளத்திலிருந்து விலகி​விட்டது. இதற்கு, “எக்ஸ் தளத்தின் சேவை நிபந்​தனை​களில் நிகழவிருக்கும் மாற்றங்​களால் நீதிமன்ற வழக்குகளை எங்களது லாபநோக்கற்ற நிறுவனம் எதிர்​கொள்வது மிகவும் சிரமம் ஆகிவிடும்” என்பன உள்ளிட்ட காரணங்களை அது பட்டியலிட்டிருந்தது.
  • புதிய நிபந்​தனை​களின்படி எக்ஸ் தளம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் டெக்சாஸ் மாகாணத்தின் வடக்கு மாவட்​டத்​துக்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் அல்லது டெக்சாஸ் கவுன்ட்​டியின் மாகாண நீதிமன்​றங்​களில் மட்டுமே விசாரிக்​கப்​படும். இதனால் விளையக்​கூடிய ஆபத்தை சி.சி.டி.ஹெச்.
  • அறிக்கையில் உள்ள பின்வரும் வரிகள் சுட்டிக்​காட்டு​கின்றன: ‘பெரும் பணக்காரரான மஸ்க் தனது தளத்தில் தன்னுடன் முரண்​படுகிற யாருக்கு எதிராக வேண்டு​மா​னாலும் வழக்குத் தொடர்ந்து அவரைத் தனக்குத் தோதான நீதிமன்​றங்​களில் நிறுத்​திவிட முடியும். எக்ஸ் தளம் மேலும் மோசமாகி​விட்​ட​தாலேயே நாங்கள் அதிலிருந்து விலகும் முடிவை எடுத்​தோம்.’
  • பாரம்பரிய ஊடகங்கள் மிகக் கடுமையான நிதி நெருக்​கடி​யிலும், அவை பொறாமை​கொள்​ளத்தக்க வகையில் சமூக ஊடகத் தளங்கள் தொழில்​நுட்​பத்தின் துணையுடன் அனைவரையும் சென்றடையும் நிலையிலும் இருக்கும் சூழலில், இந்த மாற்றங்கள் நிகழ்ந்​து​ வரு​கின்றன. போலிச் செய்தி​களுக்கும் சமூக ஊடகங்​களின் அல்காரிதங்​களுக்கும் தொடர்​பிருப்பது ஆய்வுகள் மூலம் தெரிய​வந்​துள்ளது.
  • சமூக ஊடகத் தளங்களின் பக்கச்​சார்பு கொண்ட உரிமை​யாளர்​களால் இந்தப் போக்கு வளர்த்​தெடுக்​கப்​படு​கிறது. கருத்துச் சுதந்​திரம் என்னும் பெயரில் வெறுப்பு, பொய்த் தகவல்கள், தவறான தகவல்கள், இவற்றால் விளையும் குழப்பம் ஆகியவற்றை இந்தத் தளங்கள் பரப்பு​கின்றன. கருத்துச் சுதந்​திரத்​துக்கும் பொறுப்பு​ணர்​வுக்கும் இடையிலான சமநிலையைப் பேணுவது என்னும் சிந்தனைக்கு மஸ்க்​கினுடைய கதையாடலில் இடமில்லை.

ஜனநாயகமும் நம்பகமான தகவலும்:

  • ஒரு வலுவான ஜனநாயகத்​துக்கும் நம்பகமான தகவல் அளிக்கும் சூழலுக்கும் இடையில் இயல்பானதொரு உறவு உள்ளது. மக்கள் அறிவார்ந்த தெரிவுகளை மேற்கொள்​வதில் ஊடகங்கள் ஆற்றும் பங்கு குறித்து இந்தக் கட்டுரை​யாளர் பிற தளங்களில் விரிவாக எழுதி​யுள்​ளார். ஆதாரத்தின் அடிப்​படையி​லானதை மட்டுமே தேர்வு செய்யும் சிந்தனை, பாரம்பரிய ஊடகங்​களின் மைய அம்சம் ஆகும்.
  • தொழில்​நுட்​பங்​களைத் தவறாகப் பயன்படுத்தி, ஒருவரின் விருப்பு வெறுப்பு​களைத் திணிக்கும் சிந்தனை சமூக ஊடகத் தளங்களின் இயங்கு​விசையாக உள்ளது. அல்காரிதங்​களால் வழிநடத்​தப்​படும் சமூக ஊடகங்​களின் குறைகளைப் பேசுவது பாரம்பரிய ஊடகங்​களின் தோல்விகளை மறைப்​ப​தற்கு அல்ல.
  • தமக்குத் தோதான கருத்துகளையே மீண்டும் ​மீண்டும் எதிரொலிப்பது, வருவாய்க் குறைவு, களத்தில் செய்தி​களைச் சேகரித்து எழுது​வதற்கு மாறாக, கருத்துகளை எழுது​வ​திலேயே குறியாக இருப்பது, முக்கியமான பிரச்​சினை​களில் சாதுரியமாக மெளனம் காப்பது எனப் பாரம்பரிய ஊடகங்​களின் குறைபாடுகள் பலதரப்​பட்டவை. இந்தச் சாதுரிய மெளனங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுபவை. அந்த வகையில் மேற்கத்திய நாடுகளின் ஊடகங்​களுக்கு காஸா போர் என்றால் இந்திய ஊடகங்​களுக்கு அரசமைப்புச் சட்டக்கூறு 370 நீக்கம் போன்ற விவகாரங்கள்.
  • ஆனால், சமூக ஊடகத் தளங்களும் இதுபோன்ற சிக்கலான கேள்வி​களுக்கு விடை அளிப்​ப​தில்லை. மாறாக, அவை பிரச்​சினைகளை ஒன்றாகக் கலந்து, சமரசத்​துக்கும் காயங்கள் ஆறுவதற்​குமான வெளியை அகற்றி, அதிகார மையங்​களின் கரங்கள் வலுவடைவதை நியாயப்​படுத்து​கின்றன. இதனால், மக்களுக்கு அதிகாரமளித்தல் தடைபடு​கிறது. சமூக ஊடகங்​களின் தீவிரப் பரவலினால் பாரம்பரிய ஊடகங்​களும் தாக்கம்​பெற்று​வரு​கின்றன என்பதும் உண்மை.

ஆய்வு முடிவுகள்:

  • ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள சைன்சஸ் போ (Sciences Po) பல்கலைக்​கழகத்தின் பொருளா​தாரத் துறைப் பேராசிரியர் ஜூலியா கேஜ் (Julia Cagé) அவருடைய குழுவினருடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வு ஒன்று, எக்ஸ் தளம் எவ்வாறு மையநீரோட்ட ஊடகங்​களின் செயல்​திட்​டத்தைத் தீர்மானிக்​கிறது என்பதை​யும், இதழாளர்கள் எக்ஸ் தளத்தைச் சார்ந்​திருப்பது அவர்கள் தமது செய்தி​களின் மூலமாக அளிக்கும் தகவல்கள் மக்கள் தெரிந்​து​கொள்ள வேண்டிய​வற்றுக்கு மாறானவையாக திரிக்​கப்​படக்​கூடும் என்பதையும் அம்பலப்​படுத்​தியது.
  • பாரம்பரிய ஊடகங்கள் கடைப்​பிடிக்கும் வணிக மாதிரி, சமூக ஊடகத் தளங்களின் நலன் சார்ந்த விளைவுகள் ஆகியவை குறித்த ஐயங்களை இந்த ஆய்வு எழுப்பு​கிறது. எக்ஸ் போன்ற தளங்கள் இல்லா​விட்டால் மக்கள் இன்னும் சரியான தகவல்​களைப் பெற முடியுமா என்றும் இதழியலுக்கும் ஜனநாயகத்​துக்கும் சமூக ஊடகங்கள் ஊறு விளைவிக்​கின்றனவா என்றும் கேள்விகளை எழுப்பு​கிறது.
  • கருத்துச் சுதந்​திரத்​துக்கான முக்கியக் குறியீடு என்று சமூக ஊடகங்களை வலுப்​படுத்துவதன் மூலம் ‘பதில் கூறும் பொறுப்பு’ என்கிற நம் பொதுவெளியின் முக்கியமான அம்சத்தை வலுவிழக்​கச்​செய்​கிறோம். எக்ஸ் தளத்திலிருந்து விலகும் ‘தி கார்டியனி’ன் முடிவு, பதில்​கூறும் பொறுப்பினை மீட்டெடுப்​ப​தற்காக எடுத்து​வைக்​கப்பட்ட முதல் அடியாக இருக்​கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்