TNPSC Thervupettagam

சுதந்திரம் இல்லாத ஆண்கள்

July 2 , 2023 562 days 343 0
  • பெண்களைப் பலவிதங்களில் முடக்கி மூலையில் அமரவைத்துவிட்டதால் இங்கு ஆண்கள் மிகவும் சுதந்திரமாக வாழ்வதுபோல் ஒரு தோற்றம்தான் இருக்கிறதே தவிர ஆழமாகச் சிந்தித்தால் பெண்களுக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் எந்தச் சமூகத்திலும் ஆண்களுக்கும் சுதந்திரம் இல்லை என்பது தெள்ளத்தெளிவாகப் புலப்படும்.
  • ஒருவரை நாம் அடிமையாகப் பாவிக்கும்போது, நமக்குள் அவ்வப்போது ஒரு சந்தேகம் எழுந்துகொண்டே இருக்கும். அவர் என்றைக்காவது நமக்குக் கீழ்படியாமல் போய்விடுவாரோ என்று தோன்றிக்கொண்டே இருக்கும். ஒருவரை நாம் ஏன் அடிமைப்படுத்துகிறோம்? நமக்குள் இருக்கும் பயம்தான் காரணம். நாம் அவரை அடக்கி வைக்காவிட்டால், ஒருவேளை அவர் நம்மைவிட்டுப் போய்விடலாம் என்றோ அல்லது நம்மைவிட அதிகம் வளர்ந்துவிடுவாரோ அல்லது பலம் கொண்டு நம்மைத் தாக்கிவிடுவாரோ என்கிற பயம்.
  • அதனால் அவ்வப்போது நம் பலத்தையும் அவர் பலவீனத்தையும் நாம் சோதித்துக்கொண்டே இருக்க வேண்டும். எப்படிச் சிறையின் உள்ளிருக்கும் கைதி தப்பிக்காமல் இருப்பதற்காகக் காவலாளி சிறைக்கு வெளியே எப்போதும் கவனமாக நிற்க வேண்டுமோ அப்படி. ஆக இருவருக்கும் இது சிறைதான் இல்லையா?
  • பெண்களை முடக்கிவிட்டதில் பெண்களுக்கான பொறுப்புகள் அனைத்தையும் ஆண் சுமந்தாக வேண்டியிருக்கிறது. குடும்பத்தலைவன் என்கிற பெயரில் பெருமை இருக்கலாம். ஆனால், அந்தப் பெயரில் சுமக்க வேண்டிய சுமைகள் எத்தனை? பெண்களைப் பாதுகாக்க வேண்டும், அவர்களின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்தாக வேண்டும்.

சுமத்தப்படும் பாரம்

  • ஒரு குடும்பத்தில் ஆணாகப் பிறந்துவிட்டால், நாளை இந்தக் குடும்பத்தின் பொருளாதார பாரத்தைச் சுமப்பான் என்பதைக் கருத்தில் கொண்டே அவன் வளர்க்கப்படுவான். என்னதான் வீட்டு வேலைகள் அனைத்தையும் பெண் செய்தாலும், பொருள் இல்லாத வீட்டில் அடுப்பு எப்படி எரிப்பாள்? அதை யார் கொண்டு வருவது? பணத்தின் மதிப்பினால் மட்டுமே இன்றோ, நாளையோ பணம் ஈட்டும்/ஈட்டப்போகும் ஆணுக்கு குடும்பங்களில் அவ்வளவு மதிப்பு. அவன் வாழ்வும் அவன் கையில் இல்லாமல்தான் போகிறது. அவனுக்குப் பிடித்த பாடத்தைப் படிக்க இயலாது. எதைப் படித்தால் நாளை நிறைய பொருளீட்டலாம் என்பதுதான் முக்கியம். அவனுக்குப் பிடித்த பெண்ணை மணக்க இயலாது. எந்தப் பெண் நிறைய பொருள் கொண்டுவருவாளோ அவளைத்தான் மணக்க வேண்டும்.
  • தந்தை இறந்துவிட்டால் மகன் குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டும். தாய், உடன் பிறந்த சகோதர, சகோதரிகளைக் கரையேற்ற வேண்டும். முடிகிறதோ இல்லையோ சகோதரிகளுக்கு வாழ்நாள் முழுவதும் சீர் செய்துகொண்டே இருக்க வேண்டும். திருமணத்துக்குப் பிறகு தாய்க்கும் தாரத்திற்கும் நடுவே சிதைந்து சின்னாபின்னமாக வேண்டும். பெண்களுக்குத்தான் குடும்பத்தைவிட்டால் வேறு வேலை இல்லையே! அப்போது அவனைவிட்டால் அவர்கள் இருவருக்குமே வேறு உலகமும் இல்லைதானே? அவர்களும் வேறு என்னதான் செய்வார்கள்? உரிமைப் போராட்டம் நடக்கும். மனைவிக்காகத் தாயை விட்டால், நல்ல மகனில்லை என்கிற அவப்பெயரும், தாய்க்காக மனைவியை விட்டால், மனைவியை வைத்துக் குடும்பம் நடத்தக்கூட இயலாதவன் என்கிற பெயரையும் எடுக்க வேண்டும்.
  • அவனுக்கென வாழ்தல் இயலாது. படித்த பெண்கூட வேலைக்குப் போகாமல் இருக்க அவளுக்குச் சுதந்திரம் உண்டு. ஆனால், ஓர் ஆண் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் வேலைக்குச் சென்றேயாக வேண்டும். உத்தியோகம் புருஷ லட்சணம். இல்லையெனில் அவன் குடும்பமும் அவனை மதிக்காது, இந்த உலகமும் அவனை மதிக்காது.

தலைதூக்கும் தாழ்வு மனப்பான்மை

  • இங்கே ஆணுக்கும் இலக்கணங்கள் உண்டு. ஆண் என்றுமே பலம் பொருந்தியவனாக இருக்க வேண்டும். அப்படி அவனுக்குப் பலவீனங்கள் இருந்தால் அவை மறைக்கப்பட வேண்டும். குழந்தைப் பருவத்திலிருந்தே, “ஆம்பள பையன் அழலாமா?” என்று சொல்லிச் சொல்லி அவன் உணர்வுகளை அவன் உள்ளுக்குள்ளேயே அழுத்திக்கொண்டு எப்போதும் ஒரு வீரனைப் போலே வாழ வேண்டும்.
  • இது மட்டுமல்லாமல் அவன் வீரனாக இருக்க வேண்டும். தன் வீட்டுப் பெண்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் களமிறங்கிப் போராட வேண்டும். இல்லையென்றால், “நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?” என்று கேள்வி எழும். அத்தனை ஆண்களுக்குமா போர்க் குணமோ, இல்லை அதற்கான உடற்கட்டோ இருக்க முடியும்? அமைதியை விரும்பும் ஆண்களும் இருக்கத்தானே செய்வார்கள்? வீண் பிரச்சினை செய்துகொள்ள விரும்பாமல் ஒதுங்கிப்போக நினைக்கும் ஆண்களும் இருக்கத்தான் செய்வார்கள் இல்லையா?
  • எப்படிப் பெண் உருவம் இப்படி இருந்தால்தான் அழகு என்று ஒரு பொதுப்புத்தி இருக்கிறதோ அதேபோல் ஆணுக்கும் சில இலக்கணங்கள் உண்டு. பார்ப்பதற்குக் கம்பீரமாக இருக்க வேண்டும், முடியை மாதா மாதம் வெட்டிக்கொள்ள வேண்டும், மீசை - தாடியை ஓர் அளவிற்கு மேல் வளர்க்கக் கூடாது. இப்படி ஏராளம் உண்டு. இந்தச் சமூக உருவ இலக்கணத்தில் தங்கள் உருவம் விழாததால் அவர்களுக்குள்ளும் தாழ்வு மனப்பான்மை வளரத்தான் செய்கிறது.

பகிரக்கூட இடமில்லை

  • பெரும்பாலும் ஆண்கள் தைரியசாலிகளாக, பாதுகாவலர்களாக, குடும்பத்துக்கு வெளியில் சென்று பொருள் ஈட்டும் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அவர்களால் குடும்ப நபர்களின் எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்க இயலாமல் போகையில் தன் இயலாமையை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளக்கூட மனம் கூசி உள்ளுக்குள் மறுகி மனபாரத்துடனே காலம் கடத்துகிறார்கள். வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணின் அநாவசியத் தேவைகள் சிலவற்றைப் பூர்த்திசெய்ய இயலாமல் போனால்கூட அப்பெண்களின் கூர்முனை வார்த்தைகளுக்கு ஆளாக நேர்கிறது.
  • தன்னை வீட்டில் முடக்கி அடிமையாக்கிவிட்ட ஆண், தனக்கான பொருள்ரீதியான அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்யட்டுமே என்றும் செய்துதான் ஆக வேண்டும் என்றும் இவர்களுக்காகக் காலை முதல் மாலை வரை நான் உழைத்துத் தேயும்போது, எனக்கானவற்றை அவனால் முடிகிறதோ இல்லையோ எப்படியாவது செய்தாக வேண்டியது அவன் கடமை என்று பெண்கள் எண்ணுவதில் பெரிதாகத் தவறொன்றும் இல்லையே.
  • ஆண் இதுபோன்ற காரணங்களால் தனிமைப்பட்டும், மனம் திறந்து பேசினால் கேலிக்கு ஆளாவோம் என்ற அச்சத்திலும் (பெண்களுக்காவது சிறிது அனுதாபங்கள் தேறும். தோழிகளிடமோ, வேறு யாரிடமோ மனதில் உள்ளதைக் கொட்டி ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்) தன்னைத்தானே வருத்திக்கொண்டு போராடுகிறான்.
  • ஆணுக்கு உடை அணிவதிலும், எந்த நேரத்திலும் வெளியில் செல்வதிலும் இன்னும் பெண்ணுக்கு இல்லாத பல சுதந்திரங்கள் இருக்கலாம். ஆனாலும், அவன் விரும்பும் வாழ்வை வாழ அவனுக்குமே இங்கு இடமில்லை. ஆக, பெண்களை அடிமைப்படுத்தியதால் தானும் அடிமையாகிப்போனான் ஆண். சமநிலையில் வாழ இயலாத மனிதர்கள் என்றுமே தங்கள் வாழ்வு தொலைத்து நிம்மதியின்றி தவிப்பவர்களாகத்தான் இருப்பார்கள். இதில் யாருக்கு என்ன பயன்?

நன்றி: தி இந்து (02 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்