- இந்திய உளவியல் பண்பாட்டு ஆய்வுநோக்கு, உளப்பகுப்பாய்வு சிகிச்சை ஆகியவற்றில் தனிப்பெரும் ஆளுமையாக, உலகெங்கும் அறியப்பட்ட பெரும் சிந்தனையாளராக விளங்கியவர் சுதிர் காக்கர் (1938-2024); அவர் ஏப்ரல் 22 அன்று தன் 85ஆவது வயதில் காலமானார். தனித்துவமிக்க அவரது அறிவுலகப் பயணம், இந்திய மனோவியலைப் புரிந்துகொள்ள இன்றியமையாதது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது பங்களிப்பைச் சுருக்கமாகக் கவனம் கொள்வது அவசியமாகும்.
- பொதுவாக, நம் சமூகத்தில் மனநல மருத்துவம் என்பதை மனநிலை பிறழ்ந்தவர்களை, அதாவது பைத்தியம் என்று கூறப்படுபவர்களை அல்லது போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், தற்கொலை செய்துகொள்ள விழைபவர்கள் ஆகியோரைக் குணப்படுத்துவதற்கான ஒன்றாக அறிந்துள்ளோம்.
- ஆனால் நம் அன்றாட வாழ்வு, சமூகக் கூட்டுறவு, பொது வாழ்க்கை ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களும், அழுத்தங்களும், முரண்பாடுகளும் மனநலம் சார்ந்தவைதான். வேறு வகையில் சொன்னால், உளவியல் என்ற ஆழ்கடலின் மேற்பரப்பில்தான் நாம் தோணிகள் ஓட்டி விளையாடி வருகிறோம்.
உளப்பகுப்பாய்வுச் சிந்தனை:
- உலகளாவிய அளவில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உளவியல் சிந்தனை என்ற மிக முக்கியமான அறிவுத் துறைக்கு கால்கோள் இட்டவர் சிக்மண்ட் ஃபிராய்டு (1856-1939). அவருடைய எழுத்துகள் தொடர்ந்து வாசிக்கப்படுவதுடன், அவருடன் சேர்ந்து இயங்கியவர்கள், அவர்களது சீடர்கள், மறுப்பாளர்கள், மாற்றுச் சிந்தனைகள் எனப் பல்வேறு கோட்பாட்டுத் தளங்களில் பெரும் விரிவு கண்டுள்ள அறிவித் துறை உளவியல் (Psychology).
- மனிதர்களின் தன்னுணர்வுள்ள (conscious) செயல்பாடுகளுக்கும், அவர்களது புலன் அனுபவங்களின் அளப்பரிய பதிவுகள் உருவாக்கியுள்ள நினைவிலி மனதுக்கும் (unconscious), அவற்றில்உருப்பெறும் இச்சைகள், விழைவுகள், உந்துதல்களுக்கும் உள்ள சிக்கலான தொடர்புகளைப் புரிந்துகொள்ளும் பெரும் பணியை மேற்கொள்வதே உளவியலின் பகுதியான உளப்பகுப்பாய்வுச் சிந்தனை (psychoanalytic thinking).
- இந்தச் சிந்தனையின் முக்கியமான ஊற்றுக்கண்ணாக மனிதர்களின் கனவுகளை எடுத்துக்கொண்டார் ஃபிராய்டு. அவருடைய ‘கனவுகளின் அர்த்தங்கள்’ (Interpretation of Dreams, 1900) என்ற நூலே பொதுமன்றத்தில் இந்தச் சிந்தனையின், ஆய்வுத் துறையின் முக்கியத்துவத்தை நிறுவியது.
- மனநோய் சிகிச்சையாளராக மட்டும் நின்றுவிடாமல், மானுடப் பண்பாட்டின் சிக்கலான உளவியல் அடிப்படைகளை ஆராய்ந்து சொன்ன ஃபிராய்டின் மகள்தான் அன்னா ஃபிராய்டு (Anna Freud, 1895-1982). அன்னா இளம் வயதிலிருந்தே தந்தையுடன் இணைந்து உளவியல் ஆய்வில் பெரும் ஆர்வம் கொண்டார். குறிப்பாக, குழந்தைகளின் உளவியல், அதன் வளர்ச்சி குறித்து ஆய்வதில் 1930-களில் விருப்பம் கொண்டார்.
- அந்த நேரத்தில்தான் ஓர் ஓவியராகச் சுற்றிக்கொண்டிருந்த எரிக் எரிக்சன் (Erik Erikson, 1902-1994) குழந்தைகளுக்கு ஓவியம் சொல்லித்தருவதில் ஈடுபாடு கொண்டதால், அன்னாவுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார். அன்னாவிடம் உளவியல் பயின்ற எரிக்சன், அமெரிக்கா சென்று உளவியல் சிகிச்சையாளராகவும், உளவியல் துறைப் பேராசிரியராகவும் வளர்ச்சி கண்டார்.
- குறிப்பாக, குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்து பெரியவர்களாகும் பல்வேறு வாழ்நிலைகளில் உளவியல் மாற்றங்கள், தகவமைப்புகள் எப்படி நிகழ்கின்றன என்பதை ஆராய்ச்சி செய்பவராக உருவானார். அடையாளச் சிக்கல் (identity crisis) என்பதன் முக்கியக் கோட்பாட்டாளர் எரிக் எரிக்சன். பல்வேறு மானுடவியலாளர்களுடன் பணியாற்றிய எரிக்சன், பண்பாட்டுப் பரப்பின் உளவியல் கூறுகளைப் பற்றி முக்கியப் பங்களிப்புகளைச் செய்தார்.
- எரிக் எரிக்சனின் புகழ்பெற்ற நூல், ‘காந்தியின் சத்தியம்’ (Gandhi’s Truth: On the Origins of Militant Non-Violence, 1969). அந்த நூலுக்காக அவர் அகமதாபாத்தில் தங்கியிருந்தபோதுதான் இளம் சுதிர் காக்கர் அவரைச் சந்தித்தார். பொறியியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்டங்களைப் பெற்றிருந்த சுதிர் காக்கர், தான் எந்தத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற நிச்சயமின்றி இருந்தார். எரிக் எரிக்சனைச் சந்தித்து அவர் பணிகளைக் குறித்து அறிந்தவுடன், அவரைக் குருவாக ஏற்று அவர் துறையிலேயே பணியாற்ற முடிவு செய்தார்.
- எரிக் எரிக்சனின் வழிகாட்டுதலில் ஜெர்மனி சென்று உளவியல் பயின்று, அமெரிக்கா சென்று அவரது உதவியாளராகப் பணியாற்றினார். பின்னர் இந்தியா திரும்பி, டெல்லியில் உளவியல் பேராசிரியராகவும், சிகிச்சையாளராகவும் பணியாற்றத் தொடங்கினார்.
- இந்தியாவின் தனிப்பெரும் உளவியல் சிந்தனையாளராக விளங்கி, பல மாணவர்களை உருவாக்கி, இத்துறையில் ஈடுபடுத்திய காக்கர், உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகைதரும் பேராசிரியராகப் பணியாற்றினார். சுதிர் காக்கர் பெற்ற கெளரவப் பட்டங்களையும், விருதுகளையும் பட்டியலிட்டால் கட்டுரை மிகவும் நீண்டுவிடும். இத்தனைக்குப் பிறகும் அவருடைய ஆளுமை எளிமையும், பண்பும் மிக்கதாக இருப்பதை அவர் உரையாடல் காணொளிகளில் நீங்கள் காணலாம்.
இந்தியாவின் உளவியல்:
- ஃபிராய்டின் உளவியல் சிந்தனைகள் மேற்கத்தியப் பண்பாட்டு வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. இவற்றின் அடிப்படையான பல கூறுகள் மானுடப் பொதுமை கொண்டவை என்றாலும், இந்தியப் பண்பாட்டு வரலாறுகளின் தனிப்பட்ட கூறுகள், இந்திய மனோவியலைக் கட்டமைப்பதில் எப்படிப் பங்காற்றுகின்றன என்பதைப் பிரித்தறிவதும் அவசியம். அந்த வகையில்தான் தனது தனிப்பெரும் பங்களிப்பை நிகழ்த்தினார் சுதிர் காக்கர்.
- இந்தியாவில் குழந்தைமை, அந்தரங்க வாழ்க்கை, பாலியல், பாலுறவு, மத வழிபாடுகள், சடங்குகள், புராணங்கள், கடவுளர்கள், புனிதர்கள், மத அடையாளங்கள், வன்முறை எனப் பல்வேறு அம்சங்களைக் குறித்துப் பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார் சுதிர் காக்கர். அத்துடன் நில்லாமல், புனைவெழுத்திலும் நாவல்கள் மூலம் பல உளவியல் பரிமாணங்களை எழுதியுள்ளார்.
- மத அடையாள அரசியலின் பண்பாட்டு வறுமையையும், வன்முறை வெடிப்புகளையும் அதற்கு மாற்றாக வைக்கப்படும் மதச்சார்பற்ற அடையாளம் என்பதன் போதாமையையும் குறித்து முக்கியமான பதிவுகளைச் செய்துள்ளார். எரிக்சனின் அடிச்சுவட்டில் காந்தியின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்த காக்கர், மதங்களின் அடிநாதமான ஆன்மிகச் சிந்தனையின் வளமான பகுதிகளை ஒருங்கிணைப்பதே ஆரோக்கியமான பண்பாட்டைச் சாத்தியமாக்கும் என்று கருதினார்.
- சுதிர் காக்கரின் ஆய்வுகளும், சிந்தனைகளும் பொதுமன்றத்தில் பல விவாதங்களையும், சில சமயம் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளன. எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளன. ஓர் இந்தியத் தன்னிலையின் உருவாக்கத்தைப் புரிந்துகொள்ள விரும்பும் யாரும் தவிர்க்க முடியாத ஓர் அறிஞர் சுதிர் காக்கர்.
நன்றி: இந்து தமிழ் திசை (30 – 04 – 2024)