சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு விடிவு எப்போது?
- இந்தியாவின் 3,000 நகர்ப்புற உள்ளாட்சிகளில் மத்திய அரசு நடத்திய கணக்கெடுப்பின்படி, கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபவர்களில் 91.9% பேர் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்களில் 68.9% பேர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 14.7%, பட்டியல் பழங்குடியினர் 8.3% என்கிறது இந்தக் கணக்கெடுப்பு. நாட்டின் விளிம்புநிலை மக்களின் அவல நிலைக்குப் புதிய சான்று என்றே இதைக் கருத வேண்டியிருக்கிறது.
- 2018-2023 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 443 பேர் கழிவுநீர்த் தொட்டி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்துள்ளனர் என மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே மக்களவையில் தெரிவித்துள்ளார். கழிவுநீர்த் தொட்டி சுத்தப்படுத்தும் தொழிலாளர்களுக்கான அமைப்பான சஃபாய் கரம்சாரி ஆந்தோலன் அறிக்கை, இதற்கு மாறாக 1,760 பேர் இந்தக் காலகட்டத்தில் உயிரிழந்ததாகக் கூறுகிறது.
- இந்த இழப்புக்குக் காரணம் முறையான கருவிகள் இன்றி இந்தத் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபடுவதுதான் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கையால் கழிவுநீர் சுத்தப்படுத்தும் தொழில் தடுப்புச் சட்டம் 2013இல் கொண்டுவரப்பட்டது. ஆனால் எவ்வளவு தூரம் நடைமுறையில் இருக்கிறது என்பது கேள்விக்கு உரியது.
- தேசியக் கழிவுநீர்த் தொட்டி சுத்தப்படுத்தும் தொழிலாளர் நிதி, மேம்பாட்டு ஆணையப் புள்ளிவிவரங்களின்படி 58,098 பேர் இந்தத் தொழிலில் ஈடுபடுகிறார்கள். கழிவுநீர் சுத்தப்படுத்தும் தொழில் 530 மாவட்டங்களில் முற்றிலும் இயந்திரமயமாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. மீதி மாவட்டங்களில் கையால் சுத்தப்படுத்தும் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிய முடியும்.
- சஃபாய் கரம்சாரி ஆந்தோலன் கூற்றுப்படி நாடு முழுவதும் 20 லட்சம் தொழிலாளர்கள் மோசமான சூழலில் இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் 69 ஆண்டுகள். மேற்சொன்ன இந்த அமைப்பின் அறிக்கையின்படி, கையால் கழிவுநீர் சுத்தப்படுத்தும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் சராசரி ஆயுள் காலம் 45 ஆண்டுகள்தான். இதிலிருந்து அந்தத் தொழிலாளர்களின் சுகாதார, பொருளாதார நிலையையும் பாதுகாப்பின்மையையும் உணர்ந்துகொள்ள முடியும்.
- கையால் கழிவுநீர் சுத்தப்படும் தொழில் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த பத்து ஆண்டுகளில் ரூ.1,273 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் ரூ.231 கோடி இதற்காகச் செலவுசெய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்துக்கு மேலாக 2022இல் கையால் கழிவுநீர் சுத்தப்படுத்தும் முறையை ஒழித்து இந்தப் பணியை முற்றிலும் இயந்திரமயப்படுத்துவதற்காக ‘நமஸ்தே’ (National Action for Mechanized Sanitation Ecosystem - NAMASTE) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் செயல்பாட்டில் முன்னேற்றம் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், இதற்கான நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாக இருக்கிறது.
- கடந்த நிதியாண்டில் ஏறத்தாழ ரூ.97 கோடி மட்டுமே இதற்கென ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியாண்டில் அதிலிருந்து வெறும் ரூ.3 கோடி ரூபாய் மட்டுமே அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் அறிக்கையின்படியே இந்திய அளவில் இன்னும் 50% மாவட்டங்களில் கையால் கழிவுநீர் சுத்தப்படுத்தும் முறையை ஒழிக்க வேண்டியுள்ளது. இதற்குத் தேவையான நிதியை ஒதுக்கித் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டுக் கையால் கழிவுநீர்த் தொட்டி சுத்தப்படுத்தும் தொழிலாளர்களை அதிலிருந்து விரைவாக மீட்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 10 – 2024)