- இந்தியாவின் முன்னோடி சுற்றுச்சூழலியர்களுள் ஒருவரும் காந்தியருமான சுந்தர்லால் பகுகுணா (94) கடந்த வெள்ளியன்று கரோனாவுக்குப் பலியானார்.
- இந்திய சுற்றுச்சூழல் போராட்டங்களின் யுகம் ஒன்று அவருடைய மறைவோடு முடிவுக்கு வருகிறது.
- ராஜேந்திர சிங், வந்தனா சிவா போன்ற பல சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கும் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் பகுகுணா.
- அவருடைய பெயரைச் சொன்னாலே பலருக்கும் நினைவுக்கு வருவது 1970-களில் உத்தராகண்டில் உருவான சிப்கோ இயக்கம்தான். உலக அளவில் இது ஒரு முன்னோடி சுற்றுச்சூழல் இயக்கமாகும்.
- இன்றைய உத்தரகாண்டின் தேரி கர்வால் மாவட்டத்தின் மரோடா கிராமத்தில் ஜனவரி 9, 1927-ல் சுந்தர்லால் பகுகுணா பிறந்தார்.
- சிறு வயதிலேயே காந்தி மீது ஈர்ப்புகொண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். அவருடைய தேரி கர்வால் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவ் சுமன் பகுகுணாவின் ஆதர்சங்களுள் ஒருவர்.
- இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் சுந்தர்லால் பகுகுணா காங்கிரஸில் இருந்தார். வினோபா பாவேவாலும் அவருடைய பூதான இயக்கத்தாலும் பகுகுணா வெகுவாக ஈர்க்கப் பட்டார்.
- கிராம மக்களிடையேதான் வாழ வேண்டும் என்ற நிபந்தனையுடன் விமலாவை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.
- சிப்கோ இயக்கத்துக்கு முன்பு மது ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புச் செயல்பாடுகளில் பகுகுணா தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
- சாராய மாஃபியாக்கள் எப்படி அந்தப் பிரதேசத்திலுள்ள பட்டியலின மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்திருக்கின்றன என்பதையும், இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களே என்பதையும் கண்ட பகுகுணா அந்தப் பெண்களுக்காக ஒரு ஆசிரமம் தொடங்கினார்.
- மதுவுக்கு எதிராக பகுகுணா 1968-ல் நடத்திய போராட்டமானது 1971-ல் மது விற்பனைக்கு உத்தர பிரதேச மாநில அரசு தடை விதிப்பதற்கு முக்கியமான காரணமானது.
- பிறகு, சட்டத்தின் வாசல் வழியே மது அந்த மாநிலத்துக்குள் நுழைந்தது என்பது வேறு விஷயம்.
சிப்கோ இயக்கத்தின் பின்னணி
- உத்தராகண்ட் மாநிலம் இயற்கை எழில் பொங்கும் இமயமலைப் பிரதேசத்தில் அமைந்திருக்கிறது. இந்தியாவின் பெரிய நதிகளுள் ஒன்றான கங்கை உற்பத்தியாகி ஓடும் பகுதி அது.
- அதே நேரத்தில், நிலச் சரிவு, வெள்ளம் என்ற இயற்கைப் பேரிடங்களைத் தொடர்ந்து அனுபவித்துவரும் பிராந்தியம் அது.
- சுதந்திரத்துக்கு முன்பும் சரி சுதந்திரம் அடைந்த பிறகும் சரி, வளர்ச்சியின் பேரில் அங்குள்ள இயற்கை வளங்கள் வெகு வேகமாகச் சுரண்டப்பட்டன. மரங்களும் அதிக அளவில் வெட்டப்பட்டன.
- இந்தச் சூழலில், 1970-ல் அலக்நந்தா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடி சுற்றுப்புற கிராமங்களை மூழ்கடித்தது.
- தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது. உயிரிழப்பு, வீடுவாசல் இழப்பு என்று அப்போது ஏற்பட்ட சேதம் அளவிடப்பட முடியாதது.
- மரங்கள் வெட்டப்படுவதற்கும் வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதை மக்கள் உணர்ந்துகொண்டார்கள். இந்தப் பின்னணியில்தான் சிப்கோ இயக்கத்தைப் பார்க்க வேண்டும்.
- உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் காடுகளைச் சார்ந்திருக்கிறது என்ற அக்கறை சிறிதும் இன்றி அப்போதைய அரசு அந்த மக்களைக் கலந்தாலோசிக்காமல் தனியார் நிறுவனங்களுக்குக் காடுகளையும் தாரைவார்த்துக்கொண்டிருந்தது.
- உள்ளூர் மக்களும் மரம் வெட்டிகொண்டிருந்தார்கள் என்றாலும் அது விவசாய உபகரணங்கள் செய்வதற்காகவும் அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்குமாகத்தான் இருந்தது.
- அது மிகச் சிறிய அளவிலான கொடுக்கல்வாங்கல் முறை, காடுகளுக்கும் அங்கே வசிக்கும் மனிதர்களுக்கும் இடையில் நீண்ட காலம் நிலவிய முறை அது.
- மக்களின் உரிமையை மதிக்காமல் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மரம் வெட்டும் உரிமையை வழங்கியது மாநில அரசு. அதை எதிர்த்து சமோலி மாவட்ட மக்களிடையே உருவானதுதான் சிப்கோ இயக்கம்.
- ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தி, அது எதுவும் பலனளிக்காததால் சிப்கோ இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவரான சந்தி பிரசாத் பட் ஒரு யோசனை கூறினார்.
- மரம் வெட்டும் ஆட்கள் வரும்போது எல்லோரும் மரங்களை அணைத்துக்கொண்டு நிற்பது. இந்தியில் ‘சிப்கோ’ என்ற சொல்லுக்குக் கட்டிப்பிடித்தல், அணைத்தல் என்பது பொருள்.
- இப்படிப் பிறந்ததுதான் இந்த இயக்கம். சந்தி பிரசாத் பட், சுந்தர்லால் பகுகுணா, கௌரா தேவி போன்றோர் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார்கள்.
மரங்களைக் கட்டிப்பிடித்தல்
- நிறுவனங்களின் கூலித் தொழிலாளர்கள் மரம் வெட்ட வரும்போது ஆண்கள், பெண்கள் எல்லோரும் மரங்களைக் கட்டிக்கொண்டு நின்றார்கள். மரவெட்டிகளால் ஏதும் செய்ய முடியவில்லை.
- கூடிய விரைவில் அந்தப் பிரதேசம் முழுக்க இந்த இயக்கம் பரவியது. காந்திய முறையில் ஒரு சுற்றுச்சூழல் இயக்கம் பிறந்ததை இந்தியாவே வேடிக்கை பார்த்தது.
- பகுகுணாவும் அவரது மனைவியும் கிராமம் கிராமமாகச் சென்றார்கள். சிப்கோ இயக்கத்தின்போது காஷ்மீர் முதல் கோஹிமா வரை 4,800 கி.மீ.
- பாத யாத்திரையை பகுகுணா மேற்கொண்டபோது மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று பலரும் அவருடன் சென்று, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். சிப்கோ இயக்கம் பெருவெற்றி அடைந்தது.
- சிப்கோ இயக்கத்தின் சிறப்பு என்னவென்றால் அது ஒற்றைத் தலைமையைக் கொண்டதல்ல; கூடவே பெருமளவில் பெண்களை ஈடுபடுத்திய இயக்கம் அது.
- மரத்தைக் கட்டிக்கொண்டு பெண்கள் நிற்கும் ஒரு புகைப்படம் அந்த இயக்கத்தின் வரலாற்றைச் சொல்லிவிடும்.
- நெருக்கடி நிலையின்போது சிப்கோ இயக்கம் தடைபட்டது என்றாலும் 1977-லிருந்து மறுபடியும் தொடங்கியது.
- இந்திரா காந்தி மற்படியும் ஆட்சிக்கு வந்தபோது பகுகுணாவை வரவழைத்துச் சந்தித்தார். அதன் விளைவாக, இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டருக்கு மேல் மரங்களை வெட்டுவதற்கு 15 ஆண்டு காலத் தடையை 1981-ல் விதித்தார்.
- இதுவரையிலான இந்தியப் பிரதமர்களிலேயே சுற்றுச்சூழல் மீது பெரும் அக்கறை கொண்டிருந்தவர் என்றால் அது இந்திரா காந்திதான். அதற்கு சாலிம் அலி, சுந்தர்லால் பகுகுணா போன்றோர் பங்களித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
- சிப்கோ இயக்கத்தோடு பகுகுணா ஓய்ந்துவிடவில்லை. பாகீரதி நதியின் குறுக்கே தேரி அணை கட்டப்படுவதை எதிர்த்து 1995-ல் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
- இந்த அணை உருவாக்கும் பாதிப்புகள் குறித்து ஆராயக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் உறுதியளித்ததை அடுத்து 45-வது நாளில் உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொண்டார்.
- தேவ கவுடா ஆட்சிக் காலத்திலும் அந்த அணையை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். எனினும், அந்த அணை கட்டி முடிக்கப்பட்டு 2004-ல் நிரப்பப்பட்டது.
- “எனக்குத் தெரிந்தவரை ஒட்டுமொத்த உலகத்திலேயே மரங்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர் சுந்தர்லால் பகுகுணாதான்” என்று ‘மரங்களின் மனிதர்’ ரிச்சர்ட் பார்பே ஒருமுறை குறிப்பிட்டார்.
- ‘சுற்றுச்சூழல்தான் நீடித்த பொருளாதாரம்’ என்ற முழக்கத்தை சிப்கோ இயக்கத்தின்போது பகுகுணா உருவாக்கினார்.
- வளர்ச்சியைக் காரணம் காட்டி காடு, மலை உள்ளிட்ட இயற்கை வளங்கள் எப்போதையும் விட அதிகமாகச் சுரண்டப்படும் தற்காலத்தில், அதனால் எப்போதையும்விட அதிகமாக நாம் பாதிப்புக்குள்ளாகிக்கொண்டிருக்கும் சூழலில் சுந்தர்லால் பகுகுணாவின் முழக்கம் இப்போதுதான் மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (24 - 05 – 2021)