TNPSC Thervupettagam

சுமையை முதலில் இறக்குவோமா?

July 14 , 2024 183 days 129 0
  • உள்ளூர்ப் பள்ளியாக இருந்தாலும் 100 மீட்டர் தூரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் வரையிலும்கூடக் குழந்தைகள் புத்தகப் பையைத் தூக்கிச் சுமக்க வேண்டி இருக்கிறது. வெளியூரில் படிக்கிற குழந்தைகள் பேருந்தில் செல்லும்போதும் இறங்கி நடந்து செல்லும்போதும் மூட்டை தூக்கும் தொழிலாளிபோல நடந்து செல்கிறார்கள். ஆனால், இந்தச் சுமை அவர்களின் வயதுக்கு மீறிய சுமை.

அதிகரிக்கும் சுமை:

  • அவர்களது எலும்பும் உடலும் முதிர்ச்சி அடையாத நிலையில் மிக அதிகமான எடையைக் குழந்தைகள் சுமந்து செல்ல வேண்டி இருக்கிறது. உடல்நலக் கோளாறுகளையும் தோற்ற மாறுபாட்டையும்கூட ஏற்படுத்திவிடும் என்று ஆண்டாண்டு காலமாக மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள். நாம் அவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டே புத்தகங்களின் கனத்தை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறோம்.
  • காலையில் சாப்பிட்டும் சாப்பிடாமலும் வீட்டுப் பாடங்கள் தருகிற நெருக்கடிகள், பள்ளியில், வகுப்பறையில் காத்திருக்கும் நிகழ்வுகள் தொடர்பான அச்சங்கள், பெண் குழந்தைகள் எனில் மாதவிடாய் பிரச்சினைகள் என இவ்வளவும் தருகிற அழுத்தத் தோடுதான் புத்தகப் பையின் கனத்தையும் அவர்கள் சுமக்க வேண்டும்.
  • பாடப் பொருளின் கனம், ‘தரம்’ என்கிற பெயரில் வருடாவருடம் அதிகரித்துக்கொண்டே போகிறது. அது மட்டும் அல்லாமல் காத்திருக்கும் நுழைவுத் தேர்வுகளுக்கான தயாரிப்பு என்கிற பெயரிலும் கூடுதல் சுமை குழந்தைகள் மீது சுமத்தப்படுகிறது. ஒரு புத்தகப் பை சுமையானது, ஒரு குழந்தையின் எடையில் பத்து சதவீதம் இருக்கலாம் எனப் பொதுவாக வரையறுக்கப்படுகிறது.

மாற்றம் வேண்டும்:

  • மிக அதிகபட்சமாக ஓர் ஐந்தாம் வகுப்பு குழந்தை 25-30 கிலோ எடையுடன் இருக்கலாம். ஆனால், நடைமுறையில் குழந்தைகள் எடுத்துச் செல்கிற புத்தகங்கள், குறிப்பேடுகளின் எடை என்னவாக இருக்கிறது என்பதை பெற்றோர் ஒவ்வொருவரும் சோதித்துப் பார்க்க வேண்டும். நிறையப் படிக்கவைப்பதில் நாம் பெருமைப்படலாம். நிறையச் சுமக்க வைப்பதில் என்ன பெருமை வேண்டி இருக்கிறது?
  • உதாரணத்திற்கு, அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனின் பையில் எடுத்த பட்டியல் இது: கையேடுகள் - 4, பெரிய அளவு குறிப்பேடுகள் பாடவாரியாக தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல், கணினி அறிவியல்) - 7, பாடநூல்கள் - 3, நன்னெறி நூல் -1, கட்டுரை ஏடுகள் - 2, ஓவிய ஏடு -1, நில வரைபட ஏடு -1, செய்முறைப் பயிற்சி ஏடு -1, எழுத்துப் பயிற்சி ஏடுகள் -2, சிறு தேர்வுகளுக்கான ஏடுகள் (பாடவாரியாக) - 5, பள்ளி டைரி -1. மெட்ரிக் உள்ளிட்ட இன்ன பிற வாரிய பள்ளிகளில் இதைவிட அதிகமாக இருக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை.
  • புத்தகங்கள் பெரிதாக இருந்தால் தரமாக இருக்கும் என்றும் அதிகம் சுமக்க வைத்தால் சிறந்த பள்ளி என்றும் எந்த ஆய்வின் முடிவில், யார் கண்டுபிடித்தார்கள்? குழந்தைகளை நேசிக்கிற சமூகமாக நாம் நடித்துக் கொண்டிருக்கிறோம். அளவுக்கு மீறி அனைத்து விதங்களிலும் அவர்களைத் துன்புறுத்தி மகிழ்கிறோம். அவர்களது நல்ல எதிர்காலத்திற்காக என்கிற பெயரில் இதையெல்லாம் அவர்களையே நம்ப வைக்கிறோம்!

‘பை’ இல்லா நாள்:

  • மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் ஓர் அம்சம் கவனிக்கத்தக்கது. வாரத்தில் ஒரு நாள் புத்தகப் பை இன்றி குழந்தைகள் பள்ளிக்கு வருவது. தமிழக அரசால் அமைக்கப்பட்ட கல்விக் கொள்கைக் குழுவும் புத்தகத்தைப் பார்த்து அல்லது அருகில் வைத்துக்கொண்டு தேர்வு எழுதுவது என்பது போன்ற அம்சங்களை வலியுறுத்தி இருக்கிறது. கூடுதலாகத் திட்டமிடாத வகுப்பறைகள் குறித்தும் பேசுகிறது. ஒத்த வயதினரும் ஆசிரியர்களும் உள்ள, சம அளவிலான வட்ட மேசை உரையாடல்கள் வலியுறுத்தப்படுகின்றன. மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை இவை.
  • பாடப் பொருள் சுமையைக் குறைக்க வேண்டும், புத்தகப் பை சுமையும் குறைய வேண்டும். மாநிலக் கொள்கை பரிந்துரைகளில் உள்ளதுபோல அறிவைப் பெறுபவர்களாக மட்டுமன்றி, அறிவை உருவாக்குபவர்களாகவும் நம் குழந்தைகள் மாற வேண்டும். புத்தகத்தில் இருப்பதை மட்டும் உள்வாங்குபவர்களாக இல்லாமல், கிடைக்கிற அறிவைக் கொண்டு புதிய கண்ணோட்டங்களில் சிந்திப்பவர்களாக விளங்க வேண்டும். அதற்குப் புத்தகங்களின் கனம் குறைய வேண்டும்.
  • வகுப்பறையில் புத்தகமே மையமாக விளங்கும் போக்கு மாற வேண்டும். இருக்கிற புத்தகங்களையும் வகுப்பிலேயே வைத்து விட்டுச் செல்கிற வாய்ப்பை வழங்குகிற வகையில் ‘வகுப்பறை லாக்கர்கள்’, ஏற்படுத்தித் தரப்பட வேண்டும். நிறைய மாநிலங்களில் நிறைய வழக்குகள் நடந்திருக்கின்றன. ஆமாம், இது குறித்துப் பேசிப் பேசி வருடங்கள் கடந்துவிட்டன. களத்தில் இறங்கிடக் காலம் அழைக்கிறது.
  • சிட்டுக் குருவிகளின் சின்ன சிறகுகளில் நாம் கட்டி வைத்திருக்கும் கற்களைக் கழற்றி எறிவோம்... அவர்கள் பறந்து போய் வரட்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்