TNPSC Thervupettagam

சுய கட்டுப்பாடும் சமூகப் பொறுப்பும்

September 10 , 2020 1591 days 689 0
  • வாழ்க்கை ஒரு நிமிடத்தில் மாறுமா? தெரியவில்லை. ஆனால், ஒரு நிமிடத்தில் ஒருவர் எடுக்கும் முடிவுதான், அவருடைய வாழ்க்கையை மட்டுமல்ல, மற்றவர்களுடைய வாழ்க்கையையும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் புரட்டிப் போட்டு விடுகிறது.
  • சுய கட்டுப்பாடும் சமூக அக்கறையும் இன்றி தேவையில்லாமல் ஊர் சுற்றி நோய்த்தொற்று சமூகப் பரவலாக மாறுவதற்குக் காரணமாகும் மனிதர்களை எந்த வகையில் சேர்க்கலாம்?
  • நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர அரசும் அதிகாரிகளும் எவ்வளவுதான் போராடினாலும், பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால் அதனால் ஒரு பயனும் இல்லை.
  • இந்தியா உச்சகட்ட பாதிப்பை எட்டிவிட்டால், தேவையான அளவில் தீவிர சிகிச்சைக்கான வசதிகளோ, சுகாதார ஊழியர்களுக்கான பாதுகாப்பு உடைகளோ, சோதனைக் கருவிகளோ இல்லை என்ற நிலையில் மக்களுக்குப் பொறுப்புணர்வு வேண்டாமா?
  • தளர்வுகளற்ற பொது முடக்கத்தின்போதே பலரும் தேவையில்லாமல் ஊர் சுற்றினார்கள்; முகக்கவசம் அணியாமல் வெளியே நடமாடினார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு அடைப்பு என்று அறிவித்ததாலும் அதனைத் தீவிரமாகக் கண்காணித்ததாலும் வேறு வழியில்லாமல் வீட்டுக்குள் இருந்தார்கள்.
  • தளர்வுகள் அறிவித்தவுடன், ஏதோ சிறையைத் திறந்து விட்டதுபோல கடற்கரையில் குவிய வேண்டுமா? இறைச்சிக் கடைகளுக்கும், மீன் மார்க்கெட்டுக்கும் படையெடுக்க வேண்டுமா? சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் முகக் கவசம் அணியாமலும் வெளியே வரலாமா? இப்போதே இப்படியென்றால் பொழுதுபோக்கு இடங்கள், திரையரங்குகள் எல்லாம் திறக்கப்பட்டு விட்டால் நிலைமை என்னவாகும்?
  • அத்தியாவசியத் தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று ஏன் சொல்கிறார்கள் என்று தெரியும். இந்த தீநுண்மித் தொற்றின் தீவிரம் பற்றியும் நாளுக்குநாள் அதிகரித்துவரும் உயிரிழப்பு பற்றியும் அனைவருக்கும் தெரியும்.
  • வசதி வாய்ப்பு உள்ளவர்களைக்கூட மருத்துவர்களால் காப்பாற்ற முடியாமல் போகிறது என்பதும் நமக்குத் தெரியும். ஆரம்பத்தில் மக்களிடம் இத்தொற்று குறித்து இருந்த பயமும் எச்சரிக்கை உணர்வும் தற்போது பெரும்பாலும் நீர்த்துப்போய் விட்டது.

ஒத்துழைப்புத் தேவை

  • நமக்கெல்லாம் வராது என்று சிலர் நினைக்கிறார்கள்; வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். தொற்று பரவ ஆரம்பித்த காலகட்டத்தில் இந்த நோய்த்தொற்று, வயதானவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், மூச்சுத் திணறல் உள்ளவர்களைத்தான் எளிதில் தாக்கும் என்று கூறப்பட்டது.
  • அப்போது இளைஞர்கள், தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது, அதனால் தொற்று ஏற்படாது என்று எண்ணி பொது முடக்கத்திற்கு ஒத்துழைப்பு நல்காமல் வெளியே சுற்றினார்கள். ஆனால் இப்போதைய மருத்துவ அறிக்கையில் இளைஞர்களும் தொற்றுக்கு விதிவிலக்கல்ல என்று கூறப்பட்டுள்ளது.
  • அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் மனநலம் குன்றிய சிறுவன் ஒருவனுக்கு, நோய்த் தொற்று வந்துவிட்டது.
  • அவனை மருத்துவமனையில் வைத்துப் பார்த்துக் கொள்வது இயலாத ஒன்று என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. வீட்டிலும் அவனை பெற்றோரால் சமாளிக்க முடியவில்லை.
  • அதனால் அவன் அடம் பிடிக்கிறான் என்பதால் தினமும் அவனை வெளியில் அழைத்துப் போகிறார். மற்றவருக்குத் தொற்று ஏற்படுமே என்ற அச்சமோ, அக்கறையோ இல்லாத இத்தகைய மனிதர்களை என்ன செய்யலாம்?
  • அந்த வீட்டில் வேலை செய்த பெண், அக்குடியிருப்பில் உள்ள பல வீடுகளிலும் வேலை செய்துள்ளார். எனவே தற்போது எல்லோரும் பயந்து போய் கிடக்கிறார்கள்.
  • அலுவலகத்திற்குப் போய்த்தான் வேலை செய்ய வேண்டும் என்ற அவசியம் இருப்பவர்களுக்காகவும், தவிர்க்க இயலாத காரணங்களுக்காக வெளியே போக வேண்டியவர்களுக்காகவும்தான் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.
  • பேருந்துகள் இயங்கத் தொடங்கியதும், வெளியே போகத் தேவையே இல்லாத முதியவர்களும், ஊர் சுற்ற விரும்பும் இளைஞர்களும் பெண்களும் அதிகம் நடமாடுகிறார்கள்.
  • வழிபாட்டுத் தலங்களைத் திறந்தவுடனே கோயிலுக்குப் போயே ஆக வேண்டுமா? இறைவனை வீட்டில் இருந்தே அமைதியாக, நிம்மதியாக வழிபடலாம். நிலைமை சீராகும்வரை ஒத்துழைத்தால் பாதிப்பு படிப்படியாகக் குறையும்.
  • பெரிய வணிக வளாகங்களில் கூட்டம் அலைமோதுகிறது. சமீபத்தில் எந்தப் பண்டிகையும் வரப்போவதில்லை; பள்ளிச் சீருடை, காலணி போன்ற எதுவும் வாங்கும் அவசியம் இப்போது இல்லை. பின் எதற்குப் போகிறார்கள்? இத்தனை நாள்கள் வீட்டிலேயே அடைந்து கிடந்ததால் சலிப்பாக இருக்கிறதாம். இதுதான் அவர்கள் சொல்லும் காரணம்.
  • பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. அவர்களின் உயிர் முக்கியம் என்பதால்தானே பள்ளி, கல்லூரிகளைத் திறக்காமல் இருக்கிறார்கள்?
  • நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கும்போது பக்தர்கள் தினமும் கோயிலுக்குப் போவதைத் தவிர்க்க வேண்டும். மகாபலிபுரம் எங்கேயும் ஓடிவிடப் போவதில்லை.
  • அதை இப்போதுதான் போய் பார்க்க வேண்டுமா? தொடர்வண்டி நிலையங்களில் தற்போது கூட்டம் இன்மையால் அது இளைஞர்களும் பெண்களும் மணிக்கணக்கில் நண்பர்களோடு பேச வசதியான இடமாகி விட்டது.
  • முகக் கவசமும் இல்லை, சமூக இடைவெளியும் இல்லை. இப்படிப்பட்டவர்களால் எத்தனை பேருக்கு நோய்த் தொற்றுப் பரவுமோ?

சிந்தித்துச் செயல்படுவோம்

  • சமீப காலமாக நம் மக்களிடம் ஒரு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது, விடுமுறை நாள் என்றால் வீட்டில் இருப்பது தவறு அல்லது பாவம்; அன்று கண்டிப்பாக குடும்பத்துடன் கடற்கரைக்கோ, கோயிலுக்கோ, வணிக வளாகத்துக்கோ, திரையரங்குக்கோ, பொழுதுபோக்குப் பூங்காவுக்கோ போக வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகி விட்டது.
  • அன்று வீட்டில் சமையல் கிடையாது. உணவகங்களில்தான் சாப்பிட வேண்டும். பல ஆயிரங்களை இறைத்து விட்டு வந்தால்தான் மனைவியின் முகத்திலும் பிள்ளைகளின் முகத்திலும் மகிழ்ச்சி வரும். அந்த மகிழ்ச்சி அடுத்த விடுமுறை நாள்வரை உள்ளத்திலும் உணர்விலும் தேங்கி இருக்கும்.
  • எதுவும் வாங்கத் தேவையில்லாவிட்டால்கூட சும்மா பொழுதைப் போக்கவாவது பெரிய வணிகவளாகங்களில் சுற்றுகிறார்கள்.
  • இறுதியில் ஐஸ்கிரீம் ஒன்றைச் சாப்பிட்டு விட்டு மகிழ்வுடன் வீடு திரும்புகிறார்கள். இதில் எதுவும் தவறில்லை.
  • வாரம் முழுவதும் கடுமையாக உழைப்பவர்களுக்கு இந்த ஒரு நாள் மாற்றம் புத்துணர்ச்சியைத் தருகிறது. எல்லாம் சரிதான். ஆனால் இந்த கரோனா காலத்திலாவது கொஞ்சம் வீட்டில் அடங்கியிருக்கலாம் அல்லவா?
  • உலகமே இத்தொற்றுக்குப் பயந்து போராடிக் கொண்டிருக்கிறது. தொற்றுப் பரவல் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போகிறது."எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்று கூறுவதைப்போல அரசும் அதிகாரிகளும் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு பார்க்கிறார்கள்.
  • ஆனால், நம் மக்களோ எந்தவிதப் பொறுப்பும் இல்லாமல் நடந்துகொள்கின்றனர். காவல் துறையும் ஆறு மாத காலமாகக் கடுமையாக உழைத்து சோர்ந்து போய் விட்டார்கள்.
  • எத்தனை பேர் மீது அவர்களால் வழக்குப் போட முடியும்? முண்டியடிக்கும் கூட்டத்தை அன்பாக எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?
  • சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இக்கால இளைஞர்கள் பலரின் போக்கைக் கண்டு துணுக்குற்றேன்.
  • வீட்டுக்குள்ளேயே இருப்பதால் சிரமமாக இருப்பதாகவும், அதனால் பல மணி நேரம் செல்லிடப்பேசியில் ஏதோ ஒரு விளையாட்டை விளையாடுவதாகவும் கூறினார்கள். பலரும் அந்த விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளார்கள்.
  • அவர்களிடம் நெறியாளர், "நீங்கள் கடைசியாகப் படித்த புத்தகம் எது? எப்போது படித்தீர்கள்?' என்று கேட்டபோது, அங்கு வந்திருந்த இளைஞர்களில் ஒருவர்கூட அண்மையில் எந்தப் புத்தகத்தையும் படித்திருக்கவில்லை.
  • ஆறு மாத ஓய்வைப் பயனின்றிக் கழித்துள்ளார்கள். மாணவர்கள் பாடப் புத்தகத்தைக் கரைத்துக் குடித்திருக்க வேண்டாமா?
  • அரசு "தேர்வு எழுத வேண்டாம் பணம் கட்டினாலே தேர்ச்சி' என்று அறிவித்ததும் மாணவர்கள் "வேண்டாம், நாங்கள் பாடங்களைப் படித்து விட்டோம், தேர்வுக்குத் தயார், தேர்வை எப்போது வேண்டுமானாலும் நடத்துங்கள்' என்று சொல்லியிருந்தால் மாணவ சமுதாயமும் ஆசிரியர் சமுதாயமும் தலை நிமிர்ந்திருக்கும்.
  • பொது முடக்க நாள்களை பயனுள்ள வழிகளில் செலவழித்திருக்கலாம். இப்போதோ பொறுப்பின்றி சுற்றத் தொடங்கி விட்டார்கள்.
  • எந்தச் சட்டத்திற்கும் பணிய மாட்டேன், எந்தத் தண்டனைக்கும் பயப்பட மாட்டேன் என ஊர் சுற்றும் மக்களால் மற்றவர்களும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
  • சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனையை இன்னும் கடுமையாக்க வேண்டும். சுய கட்டுப்பாடும் சமூக அக்கறையும் இல்லாத மனிதர்கள் எப்போது திருந்துவார்கள்?
  • வாழ்க்கையும் உயிரும் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பொழுதுபோக்கு அவசியமா?
  • கூட்டமான இடத்தை தேடிப் போவது அறிவீனம் என்பதுகூடத் தெரியாதா? மகிழ்ச்சியை வெளியில் தேட வேண்டிய அவசியம் இல்லை. மகிழ்ச்சியும் நிம்மதியும் நம் அகத்துள் உள்ளதேயொழிய வெளியில் இல்லை.
  • இந்த நோய்த்தொற்றுப் பரவல் நேரத்தில் பொறுப்பின்றி நடந்து கொண்டால், பாதுகாப்பை அலட்சியம் செய்தால் நாட்டில் லட்சக் கணக்கில் இருக்கும் நோய்த் தோற்று கோடிக்கணக்காக மாறும். அப்புறம் வருந்திப் பயனில்லை. கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது!

நன்றி:  தினமணி (10-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்