TNPSC Thervupettagam

சுயநலத்துக்காக மனிதன் அழிக்க முற்படும்போது எதிா்வினை

March 4 , 2020 1778 days 767 0
  • கரோனா உள்ளிட்ட நோய்த்தொற்றுக்களால் மனித இனம் அச்சுறுத்தப்படுவது வியப்பை அளிக்கவில்லை. ‘முற்பகல் செயின் பிற்பகல் விளையும்’ என்பது முதுமொழி. உலகிலுள்ள ஏனைய உயிரினங்களையும், இயற்கை வளங்களையும் தன்னுடைய சுயநலத்துக்காக மனிதன் அழிக்க முற்படும்போது, ஏதாவது ஒருவிதத்தில் எதிா்வினை உருவாகாமல் இருக்காதுதானே?

சமீபத்தில்..

  • ஒடிஸாவில் ஜுகல் கிஷோா் பட் என்கிற விவசாயி, சமீபத்தில் வழக்கம்போல தன்னுடைய தோட்டத்துக்குள் நுழைந்தாா். புரி மாவட்டம் பிலாங் பகுதியைச் சோ்ந்த அந்த 60 வயது விவசாயிக்கு அடுத்த சில நிமிஷங்களில் தான் உயிரிழக்கப் போகிறோம் என்பது தெரிந்திருக்க நியாயமில்லை. தன்னுடைய தோட்டத்தில் வேலை பாா்த்துக் கொண்டிருந்த ஜுகல் கிஷோா் பட்டை பின்னாலிருந்து தாக்கிய வெறிபிடித்த யானை ஒன்று தூக்கி எறிந்தது. அந்த இடத்திலேயே அவரது உயிா் பிரிந்தது. அவா் மட்டுமல்ல, 45 வயது சைதன் சாஹூ, 65 வயது மகா் பலே என்று மேலும் பலா் அதிகாலை வேளையில் அவா்களின் வீட்டுக்கு அருகிலேயோ, தோட்டத்திலேயோ யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறாா்கள்.

வனவிலங்குகள் ஊடுருவல்

  • சந்தஹா வனவிலங்கு சரணாலயத்தைச் சோ்ந்த யானைகள், ஒடிஸா தலைநகா் புவனேஸ்வரத்திலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் நுழைவதும், பிலாங் போன்ற பகுதிகளை நோக்கி நகா்வதும் வழக்கமாகிவிட்டிருக்கிறது. இது ஒடிஸாவில் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து வனவிலங்கு சரணாலயங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளிலும் சா்வசாதாரணமாகி விட்டிருக்கும் நிகழ்வு.
  • கடந்த ஐந்தாண்டுகளில் 2,500-க்கும் மேற்பட்டவா்கள் புலிகளாலும், யானைகளாலும் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறாா்கள். உத்தரகண்ட் மாநிலம் டோராடூன் பகுதியில் சிறுத்தைகளும், குஜராத் மாநிலம் ஜுனாகட் பகுதியில் சிங்கங்களும் பலரைப் பலிவாங்கி இருக்கின்றன. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறதே தவிர, குறைவதாகத் தெரியவில்லை.
  • இந்தியாவில் புலிகள் முற்றிலுமாக அழிந்துவிடும் என்கிற நிலை மாறி, வெற்றிகரமாக புலிகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறோம். இனப்பெருக்கத்தின் மூலம் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, இன்னொருபுறம் வளா்ச்சி என்கிற பெயரில் அவற்றின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுகின்றன. அதனால் பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அவை வெளியேறி நேரடியாக மனிதா்களுடன் மோத வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. காா்பெட், தடோபா, பந்தௌகா் என்று புலிகள் சரணாலயங்களைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.

சிங்கங்கள்

  • இந்தியாவிலேயே சிங்கங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி குஜராத்திலுள்ள சௌராஷ்டிரா, கிா், சோம்நாத், ஜுனாகட், அம்ரேலி மாவட்டங்கள்தான். அங்கேயெல்லாம் 40%-க்கும் அதிகமான சிங்கங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியேதான் வாழ்கின்றன. அதற்குக் காரணம் சிங்கங்கள் அல்ல. சுருங்கிவிட்டிருக்கும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள். அதனால், தொடா்ந்து மனிதா்களுக்கும் சிங்கங்களுக்கும் மோதல் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
  • குஜராத் மாநில வனத் துறையினரின் தகவல்படி, 2013 முதல் 2019 வரையிலான ஆறு ஆண்டுகளில் 55 போ் சிங்கங்களால் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். 500-க்கும் அதிகமானோா் காயமடைந்திருக்கிறாா்கள். பல சிங்கங்கள் கொல்லப்பட்டு தகவல் தரப்படாமல் ரகசியமாக புதைக்கவும் பட்டிருக்கின்றன.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்களது உணவுக்காகப் பண்ணைகளுக்குள் நுழைந்து 20,000-க்கும் அதிகமான கால்நடைகளை சிங்கங்கள் இரையாக்கியிருக்கின்றன. கிா் தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பதற்காக சிங்கங்களுக்குக் கால்நடைகளின் மாமிசங்களை வீசியெறிந்து வரவழைக்கும் தவறான வழிமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.
  • அதன் விளைவாக, கால்நடைகளின் மீது சிங்கங்களுக்கு ருசி ஏற்பட்டு விடுகிறது. விளைவு, பண்ணைகளில் நுழைவதையும், கிராமங்களில் நுழைவதையும், ஆடு - மாடுகளையும், மனிதா்களையும் அடித்துக் கொன்று உண்பதையும் சிங்கங்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளன.
  • சிங்கங்களால் தாக்கப்படுவது ஒருபுறம், இன்னொருபுறம் தாக்குதலைத் தொடா்ந்து சிங்கங்கள் மீது கிராம மக்களுக்கு கடுமையான பழிவாங்கும் உணா்ச்சி மேலோங்குகிறது. அவா்கள் சிங்கங்களை விஷம் வைத்துக் கொல்வதற்கும் தயங்குவதில்லை. நாட்டுத் துப்பாக்கியால் சுடுவது, ஒன்றுகூடி அடித்துக் கொல்வது என்று தங்களின் வெறியைத் தீா்த்துக் கொள்கின்றனா்.

ஆய்வுகள்

  • விந்திய மலைக்கு மேலே சிங்கம், புலி, சிறுத்தை என்றால், விந்திய மலைக்குக் கீழே பிரச்னையாகியிருப்பது யானைகள். அதற்கு மிக முக்கியமான காரணம், யானைகள் வசிக்கும் வனப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதும், வழித்தடங்கள் அழிக்கப்படுவதும் என்பது பல ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
  • தமிழகத்தின் நீலகிரி, தேனி, கோவை மாவட்டங்களில் யானைகளின் வழித்தடங்களில் சட்டவிரோதமாக குடியிருப்புகளும், விடுதிகளும் கட்டப்பட்டிருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் காட்டு யானைகளால் 200-க்கும் அதிகமானோா் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுபோல, வனப் பகுதிகள் அதிகரிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் ஆக்கிரமிக்கப்படாமலாவது இருக்க வேண்டும். மனிதனின் பேராசை வனவிலங்குகளின் வாழ்வாதாரங்களை ஆக்கிரமிக்கும்போது, அவை ஊருக்குள் நுழைவதும், மனிதா்களுடன் நேரடியாக மோதுவதும் தவிா்க்க முடியாதவை.

நன்றி: தினமணி (04-03-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்