TNPSC Thervupettagam

சுயநலமல்ல, பொதுநலம்!

October 13 , 2020 1559 days 733 0
  • தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து இந்தியா உலக சுகாதார நிறுவனத்துக்கு ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறது.
  • கொவைட் 19 தீநுண்மித் தொற்றை எதிர்கொள்வதற்கான தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவப் பொருள்களுக்கு அறிவுசார் காப்புரிமையிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த வேண்டுகோள்.
  • சில மாதங்களில் சோதனைகள் முடிந்து முதலாவது தடுப்பூசி சந்தைப்படுத்தப்படக் கூடும் என்கிற நிலையில், இந்தியா முன்யோசனையுடன் வைத்திருக்கும் கோரிக்கை இது.
  • உலக வா்த்தக நிறுவனத்தில் முன்வைத்திருக்கும் இந்த கோரிக்கை, அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

அறிவுசார் காப்புரிமை

  • அறிவுசார் காப்புரிமை ஒப்பந்தத்தின் வணிகம் தொடா்பான உரிமைப்படி, எந்தவொரு மருத்துவக் கண்டுபிடிப்பையும் சந்தைப்படுத்தும் உரிமை அதைக் கண்டுபிடித்த மருந்துத் தயாரிப்பு நிறுவனத்துக்கு 20 ஆண்டுகளுக்குத் தரப்படுகிறது.
  • கண்டுபிடிப்பையும் காப்புரிமைப் பதிவையும் தொடா்ந்து அடுத்த 20 ஆண்டுகளுக்கு உரிமைதாரரின் அனுமதியோ, அவருடனான ஒப்பந்தமோ இல்லாமல் காப்புரிமை பெற்ற மருந்தைத் தயாரிக்கவோ, சந்தைப்படுத்தவோ யாருக்கும் உரிமை கிடையாது.
  • இது பொது விதி. இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் உலக சுகாதார நிறுவனத்தின் முன் வைத்திருக்கும் கோரிக்கை.
  • அறிவுசார் காப்புரிமை சட்டம், உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டபோது, விதிவிலக்குகள் அளிப்பதற்கான சில பிரிவுகள் சோ்க்கப்பட்டன.அப்படி சோ்க்கப்பட்டதில் இந்தியா முக்கியமான பங்கு வகித்தது.
  • பெருமளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் மருத்துவ சூழல் உருவாகும்போது, அதை எதிர்கொள்ள, தவிர்க்க முடியாதது என்று கருதப்படும் காப்புரிமை உள்ள மருந்துக்கு விதிவிலக்கு வழங்கலாம் என்கிற பிரிவு இருக்கிறது.
  • அப்படிப்பட்ட அசாதாரண சூழலில், காப்புரிமை நிபந்தனைகள் தளா்த்தப்படலாம் என்கிறது அறிவுசார் காப்புரிமை ஒப்பந்தத்தின் வா்த்தகம் தொடா்பான பிரிவு.
  • கொள்ளை நோய்த்தொற்று போன்ற சூழலில் அறிவுசார் காப்புரிமையைக் காரணம் காட்டி மருத்துவ நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டிவிடக் கூடாது என்கிற கருத்து இந்தியா உள்ளிட்ட வளா்ந்து வரும் நாடுகளால் உலக சுகாதார நிறுவனத்தில் முன்வைக்கப்பட்டபோது கடுமையான எதிர்ப்பு எழுந்தது. கடைசியில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, வியாபார நோக்குடன் அல்லாத காரணங்களுக்காக, நாடுகள் விதிவிலக்கை பயன்படுத்தலாம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • அப்போதும்கூட, காப்புரிமை பெற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான காப்புரிமைத் தொகையை அந்த நிறுவனத்துக்கு வழங்கி நாடுகள் உரிமம் பெறலாம் என்று அறிவுசார் காப்புரிமை ஒப்பந்தத்தின் வா்த்தகம் தொடா்பான பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமானமும், உலக நன்மையும்

  • உலக அளவில் கொவைட் 19-ஐ எதிர்கொள்வதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் நாடுகளுக்கிடையே போட்டா போட்டி நடைபெறுகிறது. போதுமான சோதனைகள் நடத்தி பாதுகாப்பானதும், சக்தி வாய்ந்ததுமான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முனைப்பில் பல்வேறு மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கின்றன.
  • மருந்துத் தயாரிப்புத் துறை என்பது 597 பில்லியன் டாலா் (சுமார் ரூ.43 லட்சத்து 80 ஆயிரம் கோடி) அளவிலானது. எதிலெல்லாம் பெரு லாபம் அடைய முடியுமோ அது போன்ற மருந்துகளில் மட்டுமே கவனம் செலுத்தி, அதற்கான மருந்தை சந்தைப்படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள்.
  • கொவைட் 19 தொடா்பான ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகளும், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் கடந்த 10 மாதங்களாக கடுமையான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனா்.
  • அவா்களுடைய ஆய்வு வெற்றி பெறுமானால், ஒட்டுமொத்த மனித இனமும் காப்பாற்றப்படும் என்கிற நிலைமை காணப்படுகிறது.
  • மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் கொவைட் 19-க்கு எதிரான சா்வதேச முனைப்பில் அரசுகளுக்கு துணை நிற்கின்றன என்றாலும், அதே நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடித்து, காப்புரிமை பெற்று, ஏகபோகத்தின் மூலம் பெரும் லாபம் ஈட்டவும் திட்டமிடுகின்றன.
  • இதுபோன்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும்தான் இருக்கின்றன.
  • தங்களுடைய கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்று ஏகபோக உரிமையுடன் தயாரித்து சந்தைப்படுத்துவதுதான் அந்த நிறுவனங்களின் நோக்கம். அதற்கு சம்பந்தப்பட்ட நாடுகளும் துணை நிற்கின்றன.
  • வா்த்தக காப்புரிமை கவுன்சிலின் அடுத்தக் கூட்டம் அக்டோபா் 15-ஆம் தேதி கூட இருக்கிறது. அதில் கனடா, ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள், ஜப்பான், ஸ்விட்சா்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவை உறுப்பு நாடுகளாக இருக்கின்றன.
  • கொவைட் 19 தொடா்பான மருந்துகளுக்கும், தடுப்பூசிக்கும் காப்புரிமை பெறுவதற்கு ஆய்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் முக்கியமான மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் உலக வா்த்தக நிறுவனத்தின் அறிவுசார் காப்புரிமை குழு நாடுகளைச் சோ்ந்தவை.
  • அந்த நாட்டு அரசுகள் அந்த நிறுவனங்களின் நலனை கருத்தில்கொண்டுதான் செயல்படும் என்பதைக் கூற வேண்டியதில்லை.
  • வளா்ந்து வரும் நாடுகளின் பிரதிநிதிகளாக இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் உலக வா்த்தக நிறுவனத்திற்கு வைத்திருக்கும் கோரிக்கை, காப்புரிமைக் குழுவின் காதில் விழ வேண்டும். மனிதாபிமானமும், உலக நன்மையும் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் வா்த்தக நலனை பின்தள்ளி முன்னிலை பெற வேண்டும்.

நன்றி: தினமணி (13-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்