- வீடுதோறும் சுரங்கம் என்கிறோம். வீதிதோறும் சுரங்கம் என்கிறோம். காஸாவின் மக்கள் அனைவருமே சுரங்கத் தொழிலாளிகள்தாம் என்று ஒருவரியில் கதையை முடித்து விடுகிறோம். உண்மையில் இது எத்தனை பயங்கரமான உயிர் விளையாட்டு என்பதைச் சொற்களால் விவரிக்க முடியாது. காஸாவில் சுரங்கம் தோண்டும் போது இறந்தவர்களின் எண்ணிக்கை என்ற ஒன்று கிடையாது. அதாவது அப்படி ஒரு கணக்கு வைத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் இழப்புகள் மிக அதிகம். இஸ்ரேல் ராணுவத்திடம் சிக்கிச் சாவதைவிட தப்பிக்கச் சுரங்கம் தோண்டி சாவது மேல் என்ற முடிவுக்கு அந்த மக்கள் வந்துவிட்டதாகவே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
- இரண்டாம் உலகப் போருக்கு சற்று முன்பாக ஜெர்மனியில் ஹிட்லரால் பந்தாடப்பட்டு லட்சக்கணக்கான யூதர்கள் போக்கிடம் தெரியாமல் உலகெங்கும் அலைந்தார்கள். எங்கும், யாருமே அவர்களை ஏற்கவில்லை, அரவணைக்கவில்லை. அன்றைக்கு அவர்களுக்கு இடமும் கொடுத்து உயிரும் காத்தவர்கள் பாலஸ்தீன முஸ்லிம்கள். லட்சக்கணக்கான பாலஸ்தீன முஸ்லிம்கள் மனமுவந்து தங்கள் நிலங்களை யூதர்களுக்கு விற்று அவர்கள் அங்கே குடியேற வழி செய்தது சரித்திரம்.
- ஆனால், 1948-ம் ஆண்டு சுதந்திர இஸ்ரேல் உருவானது முதல் யூதர்கள்பாலஸ்தீன முஸ்லிம்களை அழித்தொழிக்க ஆரம்பித்தார்கள். எந்த முஸ்லிம்களின் நிலங்களைக் காசு கொடுத்து வாங்கி அவர்கள் குடியேறினார்களோ, அதே முஸ்லிம்களை அவர்களது நிலத்திலிருந்து விரட்ட ஆரம்பித்தார்கள்.
- இவ்வளவு பேசும்போது இன்னொன்றை சொல்லிவிட வேண்டும்.மேற்படி சுரங்கத் தொழிலில் பாலஸ்தீனர்கள் இன்று விற்பன்னர்களாக இருப்பதற்குக் காரணம், யூதர்கள்தாம். யூதர்கள் தமக்கென ஓர் அரசாங்கம் அமைப்பதற்கு முன்னர் - சரியாகச் சொல்வதென்றால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில் சியோனிச இயக்கமாகத் திரண்டு சில காரியங்கள் செய்தார்கள். பாலஸ்தீனத்தில் நிலம் வாங்கித் தமது மக்கள் குடியேற வழி செய்தது அப்போது நடந்த பணிகளுள் தலையாயது.
- உலகெங்கும் வசிக்கும் யூதர்களிடம் நிதி திரட்டித்தான் நிலம் வாங்கப்பட்டது. அந்தப் பணியை மேற்கொள்ள அவர்கள் ஒரு வங்கியையே திறந்தார்கள். நிதி சேர்த்து, நிலம் வாங்கி, ஆலியா என்கிற முதல் யூதக் குடியேற்றத்தைப் பாலஸ்தீன மண்ணில் நிறுவும் வரை அவர்கள் ஓயவேயில்லை.
- இதுவரை கூட சரி என்று சொல்லலாம். பாலஸ்தீன மண்ணுக்கு அவர்களும் உரிமையாளர்களே என்னும் புராண அடிப்படையில். ஆனால் இந்த சியோனிச இயக்கத்தின் இன்னொரு முகம் வேறு மாதிரியானது. ராஜதந்திர ரீதியில் நிலம் வாங்கிக் குடியேற்றங்களை நிறுவியது ஒரு புறமென்றால், கொரில்லா தாக்குதல்களின் மூலம் பிராந்தியத்தில் அச்ச உணர்வை விதைத்து, மக்களை நிலைகுலைய வைப்பது அன்றைய தேதியில் அவர்களுக்கு மிக முக்கியப் பணிகளுள் ஒன்றாக இருந்தது.
- மக்கள் மத்தியில் அம்மாதிரியான திடீர் தாக்குதல்களை நடத்துவதன் மூலம் பாலஸ்தீன பிராந்தியத்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த பிரிட்டன் அரசின் கவனத்தை எப்போதும் தம் பக்கம் திருப்பி வைத்துக் கொள்வதே அவர்களது நோக்கம்.
- சியோனிச தீவிரவாதிகள்தாம் முதல் முதலில் பாலஸ்தீனத்தில் சுரங்கம் தோண்டியவர்கள். நீள நீளமான சுரங்கப் பாதைகள் அமைத்து அங்கே பதுங்கியிருந்து, திடீர் திடீரென எங்காவது மேலெழுந்து வந்து சரமாரியாகச் சுட்டுவிட்டுக் காணாமல் போய்விடுவார்கள். பின்னாளில் அவர்களுக்குத் தனி நாடு அமைத்துக் கொடுத்து இன்று வரை போஷித்து வரும் பிரிட்டனின் துருப்புகளையே அப்படித் தாக்கி அழித்த சம்பவங்கள் உண்டு.
- ஒரு தேசமாக இஸ்ரேல் உருக்கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்ட பின்பு அவர்களுக்குச் சுரங்கங்களின் தேவை இல்லாமல் போய்விட்டது. இன்று வரை அந்த தேவை அவர்களாலேயே பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு இன்றியமையாததாக இருக்கிறது.
- காஸாவில் ஹமாஸின் சுரங்க சாம்ராஜ்ஜியம் உருவானதன் அரசியல் பின்னணி இதுதான்.
- ஹமாஸுக்கு எகிப்தில் ஏராளமானதொடர்புகள் உண்டு. அரசு சார்ந்ததொடர்புகள் ஒருபுறம் என்றால் பலஇயக்கங்களுடன் அவர்கள் நெடுங்காலத் தொடர்பு வைத்திருக்கிறார்கள். ஆயுதக் குழுக்கள் மட்டுமல்ல. ஹமாஸுக்காக எகிப்தில் நிதி வசூல் செய்து தரக்கூடிய அமைப்புகளும் சில இருந்தன. தவிர வர்த்தகத் தொடர்புகள். எங்கெங்கிருந்தோ ஆயுதங்களும் மருந்துப் பொருட்களும் மற்றவையும் எகிப்துக்கு வந்து இறங்கிவிடும். அங்கிருந்து காஸாவுக்குள் அவற்றை எடுத்து வரவேண்டிய அவசியம் அவர்களுக்கு இருந்தது. இந்த சுரங்க வழித் தடங்கள் முதலில் அதற்கே பெருமளவில் பயன்பட ஆரம்பித்தன.
- இஸ்ரேலுக்கு அப்போது அது சுத்தமாகத் தெரியாது. எல்லையோர காஸாவாசிகளின் வீட்டுச் சுரங்கங்கள் அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளின் மீது அவர்கள் ராக்கெட் வீசித்தாக்குவார்கள். ஆனால், இவ்விஷயத்தில் அரசும் பொதுமக்களும் கைகோத்து வேலை செய்ய ஆரம்பிப்பார்கள் என்று இஸ்ரேல் கற்பனைகூடச் செய்ததில்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 12 – 2023)