TNPSC Thervupettagam

சுறாப்பார் எனும் இயற்கைப் புதையல்

November 30 , 2024 47 days 79 0

சுறாப்பார் எனும் இயற்கைப் புதையல்

  • உலகக் கடல்களின் குறிப்பிட்ட பகுதிகள் மீன்வளம் மிகுந்து காணப்படுகின்றன. உயிரினங்கள் வளரவும் இனம்பெருக்கவும் தகுதியான சூழல் நிலவும் இப்பகுதிகள் மீன்வளத்திட்டு என்றழைக்கப்படுகின்றன. மீனவர்கள் சுறாப்பார் என்கின்றனர். உயிர்ச்சத்துகளும் மழைப்பொழிவும் இப்பகுதிகளின் உயிர்ப் பன்மைக்குக் காரணமாக அமைந்துள்ளன.
  • மீனினங்களின் வகையும் தொகையும் மிகுந்துள்ள இப்பகுதிகள் ஆண்டின் எல்லாப் பருவங்களிலும் அறுவடை நிகழ்த்த ஏற்ற இடமாகும். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இழுவைமடித் தொழில்நுட்பத்தைப் பரவலாக்கும் முயற்சிகள் பன்னாட்டளவில் மேற்கொள்ளப்பட்டன. சோதனை மீன்பிடிப்பயணங்களின் அடிப்படையில் இழுவைமடிக்கான சாத்தியத்தையும் நன்மைகளையும் விளக்குவதற்கு அறுவடைப் புள்ளிவிவரங்கள் தொடர்ச்சியாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

பீட்ரோ பாங்க்:

  • பாக் நீரிணையின் வாய்ப் பகுதிக்கு நேராகவும், இலங்கையின் பாயின்ட் பீட்ரோவுக்கு வடக்காகவும் ஆழ்கடலில் 3,367 ச.கி.மீ. பரப்பில் அமைந்திருக்கிறது, பீட்ரோ பாங்க் மீன்வளத் திட்டு. இந்திய, இலங்கைக் கிழக்குக் கடற்கரைக் கண்டத்தட்டுகளின் தொடர்ச்சியாக, வடகிழக்காக கோடியக் கரைக்கும் (Point Calimere) முல்லைத் தீவுக்குமான (இலங்கை) நேர்கோட்டில், 18-180 மீட்டர் ஆழத்துக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் வடகிழக்காக அமைந்துள்ள இம்மீன்வளத் திட்டு, ராமநாதபுரம் கடற்கரையிலிருந்து 194 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. வடமராச்சி மீனவர்கள் இந்தத் திட்டை பீட்டர் பேங்க் என்கின்றனர்.
  • சுறாப்பார் ஆய்வுகள் நிகழ்ந்த காலத்திலேயே பீட்ரோ பாங்க் மீன்வள வாய்ப்புகள் குறித்து இலங்கைத் தரப்பில் ஆய்வு செய்யப்பட்டது. 1907க்கும் 1961க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆய்வுக் கலன்கள், விசைமீன்பிடி (இழுவைமடி) கலன்கள், நாட்டுப் படகுகளின் தூண்டில் அறுவடை ஆவணங்களின் அடிப்படையில் பீட்ரோ பாங்க் மீன்வள வாய்ப்புகள் இலங்கைத் தரப்பில் ஆய்வு செய்யப்பட்டது.
  • மீன்பிடி முறைகள், கருவிகள் குறித்து உள்ளூர் மீனவர்களுடன் ஆய்வாளர்கள் நிகழ்த்திய கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் பல தரவுகள் ஒப்பீடு செய்யப்பட்டன. பாயின்ட் பீட்ரோ, தாழையடி- முல்லைத் தீவு கடற்கரைகளில் புலம்பெயர்ந்து வந்த ஒற்றைத்தடி வள்ளம், இயந்திரப் படகு, நாட்டுப்படகு மீனவர்கள் பீட்ரோபாங்கின் தென்விளிம்பில் குறிப்பிட்ட தொலைவுக்குள் தூண்டில் மீன்பிடித்தலில் ஈடுபட்டனர். விசைப்படகுகள் இழுவைமடி உள்ளிட்ட பலவகையான மீன்பிடி முறைகளைக் கையாண்டு வந்தன.

ஜேம்ஸ் ஹார்னெல்:

  • இலங்கையின் முத்துக்குளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜேம்ஸ் ஹார்னெல், பொ.ஆ. (கி.பி.) 1907இல் குமரிமுனைக்குத் தெற்கே ஆழம் குறைந்த பகுதிகளில் இழுவைமடிக் களங்களை இனம் காண்பதற்கான பரிசோதனை முயற்சிக்கு எஸ்.டி.வயலெட் என்கிற கப்பலை அனுப்பிவைத்தார். அதன் தலைமை மாலுமி கிப் குமரிமுனைக்குக் கிழக்கு, வடமேற்கு, மேற்கில் 30 மீட்டர் ஆழத்துக்கு அப்பால் இழுவைமடி இயக்க ஏதுவான மணற்பாங்கான தரைப்பரப்பு இருப்பதைக் கண்டறிந்தார்.
  • தொடர்ந்து, மதராஸ் மீன்வளத் துறைத் தரப்பிலும், இலங்கை அரசின் தரப்பிலும் பீட்ரோ பாங்கின் பொருளாதார மதிப்பைக் கணக்கிடுவதற்குப் பல கப்பல்கள் அனுப்பப்பட்டன. லில்லா, லேடி கோஷன், லேடி வெலிங்டன், எம்.எஃப்.வி.கவுஹார் கலீல், எம்.எஃப்.வி.டூட்டிக்கொரின் என்பவை அவற்றில் சில.
  • மீன்வள ஆய்வுக் கப்பல்கள் 80 முதல் 160 கிலோமீட்டருக்கு அப்பால் இழுவைமடிக் களங்களை அடையாளம் கண்டிருந்தன. இலங்கைத் தரப்பில் புல்புல், டோங்கோல், ரக்லன் கேஸில், ப்ரக்கோங்க்ளென், மேப்பிள் லீஃப் போன்ற கப்பல்கள் ஆய்வு நடத்தின. இலங்கையின் இழுவைமடிக் கலன்கள் சுறாப்பாரில் 1928இல் தொழில் ரீதியாக மீன்பிடிக்கத் தொடங்கின. 1935இல் அதைத் தடை செய்த இலங்கை அரசு, 1945இல் மீண்டும் அனுமதித்தது.

சுறாப்பாரின் மீன்வளம்:

  • சுறாப்பாரில் ஏராளமான கலன்கள் நீண்ட காலம் அறுவடை செய்யத்தகுந்த செழுமையான மீன்வளம் உள்ளது என ஹார்னல் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். பிற்காலத்தில் அது வாட்ஜ் பாங்க் என்று அழைக்கப்பட்டது. குமரிமுனைக்கு 50 மைல் வடக்காக 10,360 ச.கி.மீ. பரப்பில் அமைந்துள்ள இம்மீன்வளத்திட்டு, கிழக்கில் ஒடுகலாகவும் வடமேற்கு, வடக்கு நோக்கி 50 மைல் வரை விரிவடைந்தும் உள்ளது.
  • மணப்பாடு முதல் குமரிமுனை வரையுள்ள கடற்கரை தொட்டு 16 மீட்டர் ஆழம் வரையுள்ள தரைப்பகுதி பவளத்திட்டுகளும் பாறைகளும் நிறைந்தது. குமரிமுனையிலிருந்து திருவனந்தபுரம் நோக்கிச் செல்லும் தோறும் இப்பரப்பு 49 மீட்டர் ஆழம் வரை விரிகிறது. ‘தென்னிந்தியாவுல கொச்சி மடைய உட்டா மணப்பாடு- ஒவரி மடைதாம் பெரிய மடை; (உவரி) சிலுவைக் கோவில்ல தொடங்கி, வாடைய வெலங்க வர பரந்து கெடக்க பெரிய மடை’ என்கிறார் அந்தோணிசாமி (1952, உவரி).

சுறாப்பாரின் அமைப்பு:

  • குமரி நில விளிம்பிலிருந்து 18 மீட்டர் ஆழம் தொடங்கி 90 மீட்டர் ஆழம்வரை சீரான சரிவாகப் போகும் கடலடித் தரை, அதற்கு அப்பால் செங்குத்துச் சரிவாக மாறி, கண்டத்தட்டின் எல்லை வரை நீடிக்கிறது. இதன் நடுவில், 60 மீட்டர் ஆழத்தில் தட்டையான பாறைப் பரப்புகளும் குன்றுகளும், சேற்றுப் பார்மடைகளும் மணல் தரையும் ஒருங்கே அமைந்த சுறாப்பார் உள்ளது. சேற்றுமடைப் பகுதிகளும் மணல் பரப்புகளும் இழுவைமடி இயக்க உகந்த பகுதிகள்; மற்றவை தூண்டில் மீன்பிடி முறைக்கு ஏற்றவை.
  • அதிகபட்ச அறுவடைகள் ஜூலை - அக்டோபர் மாதங்களில் கிடைக்கின்றன. மணப்பாட்டுக்குத் தெற்கு-தென்கிழக்காக 54 கிலோமீட்டர் தொலைவில், 36 மீட்டர் ஆழம் தொடங்கி 180 மீட்டர் ஆழம் வரை செழுமையான மீன்வளம் உள்ளது. குமரிமுனைக்குத் தெற்கே இப்பரப்பு 63 கிலோமீட்டர் வரை விரிவுபெறுகிறது. குமரிமுனைக்குத் தென்மேற்கே 45 கி.மீ. தொலைவில் 9 மீ முதல் 60 மீட்டர் வரை உயரமான கடலடிப் பாறைகள் சுறாப்பாரின் வடபுறமாக அமைந்துள்ளன.
  • இங்கு தூண்டில் முறையில் மட்டுமே மீன்பிடிக்க முடியும். வடகிழக்கு, தென்மேற்குப் பருவமழைகளின் நேரடித் தாக்கம்பெறும் பரப்பு இது. கடுமையான நீரோட்டம் நிலவும் வடமேற்குப் பருவமழைக் காலத்தின் ஓரிரு மாதங்கள் தவிர, மற்ற காலத்தில் விசை மீன்பிடிக் கலன்களை இங்கு இயக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்