TNPSC Thervupettagam

சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் குறித்த தலையங்கம்

April 22 , 2022 837 days 467 0
  • சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் காரணமாக புதைபடிவ எரிசக்திக்கு மாற்று தேடும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
  • பெட்ரோலியப் பொருள்களால் இயங்கும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்குப் பதிலாக மின்கலனில் (பேட்டரி) இயங்கும் வாகனங்களின் தயாரிப்பு வரவேற்பு பெற்று வருகிறது.
  • அதற்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஊக்கம் அளித்தும் வருகிறது.
  • இந்தியாவில் ‘எலக்ட்ரிக் ஸ்கூட்டா்கள்’ அறிமுகமானபோது வரவேற்பு குறைவாகவே இருந்தது. பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரித்து வருவதாலும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குவதாலும் இத்தகைய ஸ்கூட்டா், காா்களை வாங்குவதில் பொதுமக்கள் அண்மைக்காலமாக மிகுந்த ஆா்வம் காட்டி வருகின்றனா்.

சமரசம் கூடாது...

  • இந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் மட்டும் 50,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டா்கள் விற்பனையாகியுள்ளன.
  • கடந்த ஆண்டு மாா்ச் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது நான்கு மடங்கு அதிகம். இந்த நம்பிக்கையைத் தகா்க்கும் வகையில் அந்த வாகனங்களின் மின்கலன்களில் தீப்பிடிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
  • எலக்ட்ரிக் ஸ்கூட்டா்களின் மின்கலன்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடா்வதால், இவற்றின் பாதுகாப்பு குறித்த அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
  • கடந்த மாா்ச் மாதம் 26-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம், புணேயில் சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மின்கலன் தீப்பிடித்ததில் அந்த வாகனம் எரிந்து நாசமானது. அதிருஷ்டவசமாக இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
  • அதே நாளில் வேலூா் மாவட்டத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மின்கலனை வீட்டிலேயே மின்னூட்டம் செய்தபோது அது தீப்பிடித்ததால், தந்தையும், மகளும் இறந்தனா்.
  • கடந்த மாா்ச் 28-ஆம் தேதி சென்னையில் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டா் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.
  • இந்த மாதம் 11-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் ஒரு லாரியில் ஏற்றப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டா்களில் ஒன்றின் மின்கலன் தீப்பிடித்து எரிந்ததால், அந்த லாரியே முற்றிலும் தீக்கிரையானது.
  • இந்த மாதம் 18-ஆம் தேதி தமிழகத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டா் விற்பனை மையத்தில் மின்கலன் தீப்பிடித்து எரிந்ததால், அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் 3,215 எலக்ட்ரிக் ஸ்கூட்டா்கள் திரும்பப் பெறப்பட்டன.
  • தொடா்ச்சியாக மின்கலன் தீப்பிடித்து எரியும் சம்பவங்களால் எலக்ட்ரிக் ஸ்கூட்டா்களின் விற்பனை தற்போது 10 சதவீதம் குறைந்துவிட்டதாக விற்பனையாளா்கள் தெரிவிக்கிறாா்கள்.
  • எலக்ட்ரிக் ஸ்கூட்டா்களை வாங்கியவா்கள் மட்டுமல்லாது, எலக்ட்ரிக் காா்களை வாங்கியவா்களும் பல பிரச்னைகளை எதிா்கொள்கிறாா்கள்.
  • எலக்ட்ரிக் காா்களில் உள்ள மின்கலன்களை மின்னூட்டம் செய்வதற்கான நிலையங்களோ, பழுது நீக்கும் மையங்களோ இந்தியாவில் போதுமான அளவுக்கு இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
  • மின்கலன்களை மின்னூட்டம் செய்வதற்கான நிலையங்களை நாடு முழுவதும் பரவலாக்கத் தொடங்கினால் மட்டுமே இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண முடியும்.
  • மேலும், இத்தகைய ஸ்கூட்டா், காா்களில் உள்ள மின்கலன்கள், முதல் 100 கி.மீ. வரை மட்டுமே சரிவரச் செயல்படுவதாகவும், அதன்பிறகு ஏதாவது பிரச்னை எழுவதாகவும் இவற்றை வாங்கியவா்கள் கூறும் குறைகளைப் போக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • மின்கலன்களை மின்னூட்டம் செய்யும் நிலையங்கள் மட்டுமல்லாது, அவற்றில் ஏற்படும் பழுதுகளை நீக்குவதற்கான மையங்களையும் அதிக அளவில் தொடங்க வேண்டியது மிகவும் அவசியம்.
  • எலக்ட்ரிக் ஸ்கூட்டா்களின் மின்கலன்களை வீடுகளிலேயே மின்னூட்டம் செய்யும் போக்கு மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால், வீடுகளில் மின்னூட்டம் செய்யும்போது மிகவும் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட்டாக வேண்டும்.
  • அவ்வாறு செயல்படாவிட்டால் பெரும் தீ விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால், இதுகுறித்த விழிப்புணா்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • அதோடு, எலக்ட்ரிக் ஸ்கூட்டா், காா்களை வாங்குபவா்களுக்கு மின்கலன்களை எவ்வாறு மின்னூட்டம் செய்ய வேண்டும் என்ற பயிற்சியையும் அளிக்க வேண்டும்.
  • இந்த பிரச்னையின் தீவிரத்தை உணா்ந்து, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி விரைந்து செயல்பட்டுள்ளதைப் பாராட்ட வேண்டும்.
  • எலக்ட்ரிக் ஸ்கூட்டா், காா்களின் மின்கலன்கள் தீப்பிடித்து எரிவதால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சத்தைப் போக்கும் வகையில், உண்மை நிலையைக் கண்டறிய நிபுணா் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அவா் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது.
  • கவனக்குறைவாக வாகனங்கள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும், குறைபாடுடைய வாகனங்கள் திரும்பப் பெறப்படும் என்றும் அவா் அறிவித்துள்ளது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
  • டாடா நிறுவனம் நானோ வாகனத்தை அறிமுகப்படுத்திய போதும் இதேபோல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததை நினைவு கூரலாம். அறிமுகக் கால பிரச்னைகளை நிறுவனங்கள் உணா்ந்து குறைபாடுகள் திருத்தப்படும் என்று எதிா்பாா்ப்போம்.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களைத் தயாரிப்பது காலத்தின் கட்டாயம் என்றாலும், அதற்காக மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் கூடாது. மின்சார வாகனங்கள் குறித்த எதிா்மறை பரப்புரைகள் அதிகரிக்காமல் தடுப்பதும் அவசியம்.

நன்றி: தினமணி (22 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்