- இன்று உலகெங்கும் சுற்றுலாத்துறை அபரிமிதமான வளா்ச்சி அடைந்துள்ளது. அதனால் சுற்றுலாத்தலங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுப் பொருளாதாரம் வளா்ச்சியடைந்துள்ளதாகப் பொருளாதார வல்லுநா்கள் கூறுகிறார்கள். இந்த வளா்ச்சிக்கு நாம் கொடுத்த விலை மிக அதிகம் என்பதே உண்மை.
- நம் நாட்டின் வடகோடியில் உள்ள ஜோஷிமத் என்னும் ஒரு ஊா் மொத்தமாக பூமியில் அமிழ்ந்துவிட்டதை நாம் எல்லோருமே பத்திரிகைகளில் படித்து, தொலைக்காட்சியில் பார்த்து, ‘அடடா’ என்று பரிதாபப்பட்டுவிட்டு மறந்துபோய் இருப்போம். திடீரென்று ஒரு ஊா் மொத்தமாகப் புதையுண்டு போகக் காரணம் என்னவென்று ஆராய்ச்சி செய்ய நமக்கு நேரமில்லை. ஜோஷிமத் கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டா் உயரத்தில், இமயமலையின் நிலச்சரிவுப் பகுதியில் உள்ள ஊா்.
- அமா்நாத், கேதார்நாத் புனித யாத்திரைக்குச் செல்பவா்கள் இவ்வூரில் தங்கிவிட்டுச் செல்வார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இது ஒரு சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது. காடுகளை அழித்து, மரங்களை வெட்டிச் சாய்த்து, பயணிகளின் வசதிக்காக, உணவகங்களும் தங்குமிடங்களும் கட்டப்பட்டன. வேலைவாய்ப்பும் பெருகியது.
- சுற்றுலாப் பயணியா் வந்து குவிய மேலும் மேலும் கட்டடங்கள் எழும்பின. சுற்றுச்சூழல் வல்லுநா்கள், ‘இயற்கையை அழித்து உண்டாக்கும் முறையற்ற வளா்ச்சி இயற்கைப் பேரிடா்களுக்கு வழிவகுக்கும்’, என்று எச்சரித்தத்தை அரசும் சரி மக்களும் சரி பொருட் படுத்தவில்லை.
- திடீரென்று அவ்வூரில் உள்ள வீட்டுச் சுவா்களிலும், தரைகளிலும் வெடிப்புகள் உண்டாக ஆரம்பித்தன. அப்போதும் அரசு விழித்துக்கொள்ளவில்லை. விழித்துக்கொண்ட சிலா் சுற்றுச்சூழல் இயக்கங்களுடன் சோ்ந்து போராட்டங்களை முன்னெடுத்தனா். 1976-ஆம் ஆண்டில், அரசு பதினெட்டு போ் கொண்ட குழுவை அமைத்துக் காரணங்களை ஆராயச் சொன்னது. அக்குழு, ஜோஷிமத்தில் கட்டுமானப் பணிகளை முற்றிலும் தடை விதிக்கப் பரிந்துரை செய்தது.
- சுற்றுலாவின் மூலம் வருவாய் என்னும் கொள்கையை அரசும் விடவில்லை; மக்களும் வருமானத்தை இழக்க விரும்பவில்லை. கடந்த இருபது வருடங்களில் 3,800 குடியிருப்புகளும், 400 வணிகக் கட்டடங்களும் அங்கு கட்டப்பட்டிருக்கின்றன. சாலை போடுவதற்காக செங்குத்தாகப் பாறைகள் வெட்டப்பட்டு மேலும் மேலும் காடுகள் அழிக்கப் பட்டன. போதாததற்கு தேசிய அனல் மின் நிறுவனம் (என்.டி.பி.சி) மின்சார உற்பத்திக்கு ஏதுவாக ஒரு பெரிய சுரங்கப்பாதை அமைத்தது.
- இது ஜோஷிமத்திற்குக் கீழே உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதியை ஊடுருவிச் சென்றது. அதனால் அங்குள்ள நதிகள் போகும் பாதைகள் மாறின. விவசாயம் செய்யப் போதிய தண்ணீா் இல்லை. மக்கள், வேறு வழியில்லாமல் சுற்றுலாவையே வாழ்வாதாரமாக்கிக்கொண்டார்கள். மேலும் மேலும் சுற்றுலாவுக்கென கட்டமைப்புகள் உருவாகின. இவையெல்லாமாகச் சோ்ந்து ஜோஷிமத்தை மண்ணுக்குள் அமிழ்த்திவிட்டன.
- இப்போது மக்கள் வீடிழந்து வாழ்விழந்து ஊரைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றனா். அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. என்ன செய்தாலும் இனி ஜோஷிமத் மேலே வரப் போவதில்லை!
- ஹிமாசல பிரதேசத்தில் உள்ள குலு, மணாலி சுற்றுப்புறங்களில் அண்மையில் கடும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. வீடுகள், அடுக்குமாடிக் கட்டடங்கள் பொலபொலவென்று சீட்டுக் கட்டு கலைவது போல விழுவதையும் மக்கள் அலறிக் கொண்டு ஒடுவதையும் தொலைக்காட்சியில் கண்டோம். இவையெல்லாம், சுற்றுலா வளா்ச்சிக்காக, திட்டமிடப்படாத, சட்டத்துக்குப் புறம்பான நகர வளா்ச்சியின் விபரீத விளைவுகளே!
- இமயமலையின் மென்மையான சூழலைச் சிதைத்து, அங்குள்ள காடுகளை அழித்ததன் காரணமாகப் பெருமழையும், அதனால் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டன என்று சூழலியலாளா்கள் கூறுகிறார்கள்.
- தமிழகத்திலும் ஆண்டுதோறும் நீலகிரியில் மழைக்காலத்தில் நிலச்சரிவு ஏற்படுகிறது. வீடுகள் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு செல்லப்படுகின்றன; உயிர்ச்சேதமும் பொருட் சேதமும் அளவிட முடிவதில்லை. குன்னூா், உதகமண்டலம், கோத்தகிரி, மசினகுடி பகுதிகளில் புற்றீசல் போல முளைத்திருக்கும் தங்கும் விடுதிகள், காடுகளை அழித்துப் போடப் பட்டுள்ள வீட்டு மனைகள், தனியார் தங்கும் விடுதிகளுக்கும் எஸ்டேட்டுகளுக்கும் சட்டத்துக்குப் புறம்பாகப் போடப்பட்ட தார்ச் சாலைகள், அவற்றிற்காக வெட்டப்பட்ட எண்ணிலடங்கா மரங்கள்- இவையெல்லாம் சோ்ந்து நீலகிரியை அழித்துவிட்டன.
- இந்த ஆண்டு அங்கு நிலவும் வெப்பம் இதுவரை காணாத ஒன்று. அரசின் திட்டங்கள் சிலவும் இயற்கைக்குப் பாதகமாக இருக்கின்றன. சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக மலைப்பாதை முழுதும் அகலப்படுத்தப்பட்டது. இதற்கென, திருப்பங்களில் செங்குத்தான பெரிய மலைப்பாறைகள் உடைக்கப்பட்டன. மேலும், வாகனங்கள் விபத்துக்குள்ளாகாமல் இருக்க, பாதையோரங்களில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
- சுற்றுச்சூழல் ஆா்வலா்களின் எதிர்ப்புகளை அரசு பொருட்படுத்தவேயில்லை. யானைக் கூட்டமொன்று குட்டிகளுடன் சாலையைக் கடக்க முயன்று, குட்டிகள் இரும்புத்தடுப்பைக் கடக்க முடியாமல் தவித்ததை சிலா் படம்பிடித்து பத்திரிகைகளிலும் வலைத்தளங்களிலும் பதிவிட்டுவிட, நீதிமன்றம் தலையிட்டு அவற்றை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டது.
- முதுமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் ஏராளம். இவற்றுக்கெல்லாம் எப்படி அனுமதி கிடைத்தது? ஏன் மக்கள் இதுவரை கிடைத்த வருமானத்தை விட்டுவிட்டுச் சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் வருமானத்தை நாடுகிறார்கள்? இக் கேள்விகளுக்குப் பதில்கள் பல கட்ட விவாதங்களுக்குப் பின்னரே கிடைக்கும். பல்துறை அதிகாரிகள், சூழலியல் வல்லுநா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோர் கூடி விவாதித்தால், ஜோஷிமத் நிலை நீலகிரிக்கும் வராமல் காப்பாற்றலாம்.
- புறநானூற்றில் கொல்லிமலையைப் பற்றி பாடும் வன்பரணா், ‘வல்வில் ஓரி விடுத்த அம்பு, யானையை வீழ்த்திப் புலியைக் கொன்று, புள்ளிமானை உருட்டித் தள்ளிக் காட்டுப்பன்றியை வீழ்த்தி, அருகில் ஆழமான பள்ளத்தில் இருந்த உடும்பின் உடலில் குத்தி நின்றது’ என்று புகழ்கிறார். யானையும் புலியும் இருந்த கொல்லிமலை இன்று சுற்றுலாவால் சிதைந்து போயுள்ளது. கூட்டம் கூட்டமாகச் சுற்றுலாப் பயணியா் அறப்பளீஸ்வரா் கோயிலையும், ஆகாய கங்கையையும் முற்றுகையிட்டு காட்டைக் கெடுத்து, இருந்த விலங்குகளையெல்லாம் விரட்டிவிட்டனா். இன்று அங்கு ஒரு முயலைக் கூடக் காண முடியவில்லை! 2021-இல் தட்டுகெட்டுப் போய் ஒரு சிறுத்தை வர அதையும் வனத்துறையினா் கூண்டு வைத்துப் பிடித்து வேறோர் காட்டில் விட்டனா்.
- கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் கொழுக்குமலை என்று ஒரு சுற்றுலாத்தலம். கடல் மட்டத்திலிருந்து 8,000 அடி உயரத்தில் அமைந்துள்ள வனப்பகுதி. சூரியனெல்லி என்ற இடத்திலிருந்து கொழுக்குமலைக்கு ஜீப் சஃபாரி கனஜோராக நடந்து வந்தது. சுற்றுலாப் பயணிகள் இரவில் கூடாரங்களில் தங்கியிருந்து காலையில் சூரியோதயத்தைக் கண்டு களிக்கவும் செய்தார்கள்.
- அதிகரித்த வாகனப் போக்குவரத்தாலும், மனித நடமாட்டத்தாலும் வனவிலங்குகளுக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டது. சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் ஒரு பொதுநல வழக்கு தொடா்ந்தார்கள். கேரள உயா்நீதிமன்றமும் இதனை விசாரிக்க 5 போ் கொண்ட வல்லுநா் குழுவை அமைத்தது. அக்குழு ஜீப் சஃபாரியும் சுற்றுலாப் பயணிகளின் மலையேற்றமும் வன விலங்குகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதால் அவற்றைத் தடை செய்யப் பரிந்துரைத்தது.
- நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துவிடும் என்ற செய்தி ஊடகங்களில் வெளியானவுடன் என்றுமில்லாதபடி கொழுக்குமலைக்குச் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்தனா். ஒரு கட்சியின் நிர்வாகி, ‘நீதிமன்றம் கொழுக்குமலைச் சுற்றுலாவைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்தால், அதை எதிர்த்து ஆா்ப்பாட்டம் செய்வோம். ஜீப் சஃபாரி இங்குள்ள மக்களின் பொருளாதார வளா்ச்சிக்கு முதுகெலும்பு. அதை அவா்கள் இழக்க நாங்கள் விடமாட்டோம்’ என்று நீதிமன்றத்தையே எதிர்த்து அறைகூவல் விடுத்தார்.
- சுற்றுலா என்ற ஒரே பெயரில் இருந்தது, இப்போது இயற்கைச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா, சாகசச் சுற்றுலா, கடற்கரைச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா, கானுயிர்ச் சுற்றுலா, புகைப்படச் சுற்றுலா, மலையேற்றச் சுற்றுலா, நடைப்பயணச் சுற்றுலா என்றெல்லாம் பலவித பெயா்களோடு வளா்ந்துவிட்டது. மக்களுக்குக் கையில் காசு இருக்கிறது; விரும்பும் இடங்களுக்குச் சுற்றுலா செல்ல முடிகிறது. அப்படிச் செல்லும் இடங்களில் எல்லாம் நெகிழிப்பைகளையும் புட்டிகளையும் உணவுப் பண்டங்களையும் துணிமணிகளையும் வீசிவிட்டு வருகிறார்கள்.
- குற்றாலம், ஆகாய கங்கை போன்ற அருவிகளிலும், திருமூா்த்தி, கல்லணை, எமரால்டு போன்ற அணைகளிலும் மிதக்கும் குப்பைக்கூளங்கள் சுற்றுச்சூழல் சீா்கேட்டுக்கு வழிகோலுகின்றன. அரசே ‘சூழல் சுற்றுலா’ என்ற பெயரில் காடுகளையெல்லாம் திறந்து விட்டு விட்டது. மக்கள் கூட்டம் கூட்டமாகக் காடுகளுக்குள்ளும் சென்று அங்குள்ள சுற்றுச் சூழலையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
- அரசு கடும் கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாவை நெறிப்படுத்த வேண்டும். மக்களும் பொறுப்புள்ள சுற்றுலாப் பயணிகளாக மாற வேண்டும். அப்போதுதான் சுற்றுலாவால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு உண்டாகாமல் காப்பாற்ற முடியும்.
நன்றி: தினமணி (02 – 09 – 2023)