- சூதாட்டத்தில் நாட்டை இழந்த நிடத நாட்டு மன்னனான நளனின் செயல், வரலாற்றில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை. நளன் என்றொரு மன்னன் இருந்ததைத் தருமனும் அறிந்திருக்கவில்லை. நளன் ஆடிய சூதாட்டம், கலியின் சூழ்ச்சியால் நிகழ்ந்தது; தருமன் ஆடிய சூதாட்டத்திற்குச் சகுனியின் சூழ்ச்சியே காரணம். இரண்டு சூதாட்டத்திற்கும் பின்புலமாக இரண்டு பெண்கள் இருந்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. சுயம்வரத்தில் நளனுக்கு மாலையிடுகிறாள் தயமந்தி. ஏமாற்றமடைந்த தேவர்கள், கலியின் துணையுடன் நளனைப் பழிதீர்க்கச் சூதாடுகின்றனர். மகாபாரதத்தில், துரியோதனனைச் சிரித்து அவமானப்படுத்திய திரௌபதியைப் பழிவாங்க சூதாட்டம் நடத்தப்படுகிறது.
- இந்தச் சூதாட்டத்தைப் பின்னணியாக வைத்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ‘பகல் விளையாட்டு’ என்றொரு சிறுகதையைக் கற்பனையாக எழுதியிருக்கிறார். மகாபாரதத்தை மீள் வாசிப்புக்கு உட்படுத்தி இவர் ‘உபபாண்டவம்’ நாவல் எழுதியிருக்கிறார். கிருஷ்ணை (திரெளபதி) ஐவரையும் மணந்து சில நாள்களே கடந்திருந்தன. ஒரு பகல் நேரத்தில் கிருஷ்ணைக்கு அரச நியதிகளைச் சொல்லிக்கொடுக்க அவளைத் தேடி வருகிறான் யுதிஷ்டிரன் (தருமன்). அவனது நெருக்கம் கிருஷ்ணைக்குக் காம உணர்வைத் தூண்டுகிறது. யுதிஷ்டிரன் அறத்தைக் கடைப்பிடிப்பவன். மன வெக்கையைத் தணிக்க கிருஷ்ணையைப் பகடையாட அழைக்கிறான். விருப்பத்துடன் விளையாடத் தொடங்குகிறாள் கிருஷ்ணை.
- நூறு புரவிகள் பந்தயமாக வைக்கப்படுகின்றன. பகடை உருள்கிறது. யுதிஷ்டிரன் தோற்கிறான். அரண்மனை, கிராமங்கள், நதிகள், படைக்கலன்கள், தானியக் குவியல்கள் என வெற்றிப் பொருள்கள் கிருஷ்ணைக்குச் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. இருவரும் கள்ளைப் பருகுகின்றனர். கிருஷ்ணைக்கு அது வெற்றிக்கான போதை. தொடர் தோல்வியால் யுதிஷ்டிரனின் முகம் வெளிறிப் போகிறது.யுதிஷ்டிரன் அரசை வைத்துப் பகடையை உருட்டுகிறான். கிருஷ்ணைக்குச் சாதகமாகவே காய்கள் உருளுகின்றன. இனித் தன்னிடம் பணயம் என்ன இருக்கிறது எனக் கேட்கிறான். அவள், “உங்கள் சகோதரர்கள்” என்கிறாள். தோல்வியில் துவண்டு நிற்கிறான் யுதிஷ்டிரன்; வெற்றியில் மிதக்கிறாள் கிருஷ்ணை. இறுதியில் இருவரும் ஒருவரையொருவர் பந்தயப் பொருளாக வைத்துப் பகடையை உருட்டுகின்றனர். மீண்டும் பகடைகள் கிருஷ்ணைக்கு வெற்றியைத் தேடித் தருகின்றன. வெறுப்பின் உச்சத்தில் பகடைகளைத் தூக்கி வீசுகிறான் யுதிஷ்டிரன். யுதிஷ்டிரனின் மனதை அறிந்த கிருஷ்ணை, “எல்லாம் வேடிக்கை, வெறும் பகல் விளையாட்டு. ஒரு சொப்பனம். ஜெயித்த யாவும் உங்களுக்குத்தான். எனக்கு எதுவும் வேண்டாம்” என்கிறாள். யுதிஷ்டிரன் இயல்பு நிலைக்குத் திரும்புகிறான். கிருஷ்ணையை அணைத்து முத்தமிடுகிறான். இந்நிகழ்வு, இவ்விருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
- உண்மையில் தருமனுக்கும் திரௌபதிக்கும் இடையில் இப்படியொரு விளையாட்டு நடந்திருக்குமா என்கிற கேள்வி அவசியமற்றது. அதேபோல திரௌபதி சூதாட்டத்தில் நல்ல பயிற்சி உடையவளா என்பதும் மீபுனைவுத் தன்மைக்குரியது. தருமன், பந்தயப் பொருளாகத் தன்னை வைத்து இழந்த பிறகு என்னை வைத்து இழந்தானா என்ற கேள்வியை கௌரவர் சபையில் திரௌபதி கேட்கிறாள். ‘நாயகர் தாம் தம்மைத் தோற்றபின் - என்னை / நல்கும் உரிமை அவர்க்கில்லை’ என்று வாதாடுகிறாள். இந்தப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போது திரௌபதிக்குச் சூதாட்டம் குறித்தும் அதன் விதிகள் பற்றியும் போதிய அறிவு இருந்திருக்கிறது என்று கருதுவதற்கு இடமிருக்கிறது. யுதிஷ்டிரன் இந்தச் சூதாட்டத்தை மறந்திருக்கவில்லை என்று எஸ்.ராமகிருஷ்ணன் புனைவில் எழுதியிருக்கிறார். அப்படியிருந்தும் சகுனியின் அழைப்பைத் தருமன் எப்படி ஏற்றுக்கொண்டான் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
- கௌரவர்கள் கட்டிய எழிற்பெரு மண்டபத்தைக் காணப் பாண்டவர்களை அழைக்கின்றனர். அதற்கு விதுரன் தூது போகிறான். துரியோதனனின் உள்ளக் கருத்தை உணர்ந்துகொண்ட விதுரன், ‘கொடிய இழிவான சூதாட்டத்தில் ஈடுபடவைக்கும் சூழ்ச்சியொன்றை அவர்கள் மனதில் வைத்துள்ளனர்’ என்று பாண்டவர்களை எச்சரிக்கிறான். இதனைக் கேட்டுத் தருமனும் கவலை அடைகிறான். சூதாட்டத்திற்கு அழைப்பு விடுத்த சகுனியிடம், ‘சூழ்ச்சி பொருந்திய சூதாட்டத்துக்கு என்னை அழைக்கிறாய். இதில் ஏதாவது பெருமைக்குரிய விஷயம் உள்ளதா? தருமத்தின் இயல்பு உள்ளதா? வீரச் சிறப்பு உள்ளதா?’ (பாஞ்சாலி சபதம்) என்று தருமன் கேட்கிறான். சூதாட்டம் இழிவானது என்கிற புரிதல் தருமனுக்கும் இருந்ததையே இப்பதிலுரை தெளிவுபடுத்துகிறது. ‘தேர்ந்தவன் வென்றிடு வான் - தொழில் / தேர்ச்சி இல்லாதவன் தோற்றிடுவான்’ என்று தருமனின் தன்மானத்தைச் சீண்டுகிறான் சகுனி. இறுதியில், சூதாட்டத்தில் தனக்குப் போதிய திறமையில்லை என்பது தெரிந்தும் தருமன் சூதாடுகிறான். விதிதான் தன்னை இயக்குகிறது என்ற முடிவுக்கு தருமன் வந்துவிடுகிறான்.
- தருமனுக்குச் சூதாட்டத்தில் விருப்பம் உண்டு. ஆனால், அந்த விருப்பத்தை வெற்றியாக மாற்றக்கூடிய ஆற்றல் இல்லை. தம்பிகளின் தயவிலேயே கடைசிவரை வாழ்ந்தவன் தருமன். தவிர, குந்தியும் திரௌபதியுமே தருமனின் பாதுகாப்பு அரண்கள். திருமணத்திற்கு முன்புவரை குந்தியின் பாதுகாப்பில் இருந்தவன்; திருமணத்திற்குப் பிறகு அந்தப் பொறுப்பைத் திரௌபதி எடுத்துக்கொள்கிறாள். தருமன் மென்மையானவன்; அறம் உணர்ந்தவன்; கடைசிவரை கௌரவர்களிடம் சமாதானத்தையே விரும்பியவன். தருமன் சூதாட்டத்தையும் விரும்பவில்லை; போரையும் விரும்பவில்லை. போர் திணிக்கப்பட்டது, சூதாட்டத்தைப் போன்று.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 07 – 2024)