- கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றால் பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் செயல்படாமல் போனதைத் தொடர்ந்து, இணையவழி வகுப்புகள் நடத்த வேண்டிய அவசியம் உருவானது.
- பள்ளியோ கல்லூரியோ, மாணவர்கள் அனைவரிடமும் கணினியோ, கைக்கணினியோ, அறிதிறன்பேசியோ இருந்தாக வேண்டிய கட்டாயம் அதனால் ஏற்பட்டது.
- மாணவர்களால் தடைபடாமல் கல்வியைத் தொடர முடிந்தது என்றாலும்கூட, இன்னொருபுறம் இணையவழியில் அவர்களுக்குத் தேவையில்லாத பலவும் ஆக்கிரமிக்கத் தொடங்கின.
- அவற்றில் முக்கியமானது 'ஆன்லைன் கேம்ஸ்' என்று பரவலாக அறியப்படும் இணையவழி விளையாட்டுகள்.
ஆன்லைன் விளையாட்டு ஆபத்து
- சிறுவர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் அதிகரித்துவரும் ஆபத்தாக மாறியிருக்கிறது இணையவழி விளையாட்டுகளின் மீதான அவர்களது போதை.
- சில விளையாட்டுகளால் தற்கொலைகள் நேர்ந்ததைத் தொடர்ந்து, அவை தடை செய்யப்பட்டன. ஆனால், அபாயகரமான பல புதிய இணைய விளையாட்டுகள் இப்போது நுழைந்திருக்கின்றன.
- 12 வயது நிரம்பியவர்கள் பெற்றோரின் அனுமதியுடன்தான் இணைய விளையாட்டுகளில் பங்குபெற வேண்டுமென்கிற கண்
- துடைப்பு அறிவிப்புகள் செய்யப்பட்டாலும்கூட, அந்த விளையாட்டுகள் நான்கு, ஐந்தாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களால்கூட இரவு - பகல் பாராமல் விளையாடப் படுகின்றன என்பதுதான் நிஜ நிலைமை. சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்துதான் இந்தப் பிரச்னை பொது வெளியில் கவனம் ஈர்த்திருக்கிறது.
- போதைக்கு அடிமையானவர்களைப் போல, சில குழந்தைகள் இந்த இணையவழி விளையாட்டுகளின் மீது பைத்தியமாக மாறியிருக்கின்றனர். அடிதடி, கைகலப்பு, துப்பாக்கியால் சுடுதல் உள்ளிட்ட வன்முறை அடிப்படையில் உருவாக்கப்படும் பல இணைய விளையாட்டுகள் நகரம், கிராமம் என்கிற வேறுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பு குழந்தைகள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
- பல குடும்பங்களில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதத்துக்கும், பிரச்னைக்கும் இந்த விளையாட்டுகள் காரணமாக இருக்கின்றன என்பது காவல்துறையினருக்கும் அரசுக்கும்கூட நன்றாகவே தெரிந்துதான் இருக்கிறது.
- நாம் எண்மவழி வாழ்க்கை முறைக்கு மாறிக்கொண்டிருக்கும் வேளையில் அறிதிறன்பேசி, கணினி, மடிக்கணினி, கைக்கணினி போன்றவற்றில் அடுத்தத் தலைமுறையினர் ஈர்ப்பும், ஈடுபாடும் காட்டுவதை வரவேற்க வேண்டும்.
- தங்களது அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், கருத்துப் பரிமாற்றத்துக்கும், ஆக்கபூர்வ பொழுதுபோக்குக்கும் இணையம் பயன்படுத்தப்படுவது வரவேற்புக்குரியது.
- ஆனால் சிறுவர்களையும், இளைஞர்களையும் உளவியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் தடம்புரளச் செய்யும் இணையவழி விளையாட்டுகள் வரவேற்புக்குரியவை அல்ல.
- 'சைபர் சூப்பர் ஹைவே' என்று அழைக்கப்படும் இணைய நெடுஞ்சாலையில் காணப்படும் ஆபத்துகள் குறித்து சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் புரிதலை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
- குழந்தைகளுக்கு சாலை விதிகளைக் கற்றுக் கொடுப்பதுபோல இணையவழியில் பயணிப்பதற்கான விதிமுறைகளையும் உருவாக்கி புரிதலை ஏற்படுத்த வேண்டிய கடமை நமக்குண்டு.
- அதிகம் கல்வி கற்காத பெற்றோர், தங்களது குழந்தைகளின் இணைய பயன்பாட்டை வியந்து பார்க்கிறார்களே தவிர, அவர்கள் செல்லும் பாதை சரியானதுதானா என்பதைத் தெரிந்து கொள்வதில்லை.
- அதனால், பல குழந்தைகள் பேராபத்தில் சிக்கி விடுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
- இணையவழி விளையாட்டுகளையும், அவற்றின் வழிமுறைகளையும் கட்டுப்படுத்தவும், நெறிமுறைப் படுத்தவும் முறையான விதிமுறைகள் இல்லை என்பதால் விபரீதங்களுக்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது.
- பெற்றோரைக் கொலை செய்வதற்கும், இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கும் இளைஞர்கள் தயாராகிறார்கள் என்பதிலிருந்தே, எந்த அளவுக்கு இணைய விளையாட்டுகள் அவர்களை உளவியல் ரீதியாக பாதித்திருக்கின்றன என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.
- சிறுவர்களும், இளைஞர்களும் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பினரும் இணையவழி விளையாட்டுகளிலும் சூதாட்டத்திலும் ஈடுபடும் நிலைமை காணப்படுகிறது.
- கடந்த ஆண்டு தமிழக அரசு இணையவழி ரம்மி விளையாட்டை தடை செய்தது. சட்டத்தை நிறைவேற்றும்போது போதுமான காரணங்கள் கூறப்படவில்லை எனவும், முறைப்படுத்தும் உரிய விதிகள் இல்லாமல் இணையவழி விளையாட்டுகளை ஒட்டுமொத்தமாகத் தடை செய்ய முடியாது எனவும் கூறி அந்தச் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
- விரைவிலேயே புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு இணையவழி ரம்மி விளையாட்டு தடை செய்யப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
- 1960-இல் சூதாட்டத்துக்கும் திறன் அடிப்படையிலான விளையாட்டுகளுக்கும் வேறுபாடு வரையறுக்கப்பட்டிருக்கிறது.
- அதைப் பயன்படுத்தி, இணையவழி சூதாட்டம் பல நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் ரூ.5,000 கோடிக்கும் அதிகமான அளவு பணம் புரளும் துறையாக அது மாறியிருக்கிறது.
- இணையவழி ரம்மி மட்டுமல்ல, இணையவழியிலான எல்லா விளையாட்டுகளையும் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தேசிய அளவில் விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
- பள்ளிக் குழந்தைகள் இணைய விளையாட்டுகளில் நுழைந்து, கல்லூரிக்குச் செல்லும்போது இணையவழி சூதாட்டத்தில் இணைந்து விடுகின்றனர். வருங்கால சந்ததியினர் குடிகாரர்களாகவும், சூதாடிகளாகவும் ஆகிவிடக் கூடாது!
நன்றி: தினமணி (27 - 08 - 2021)