சூழலியலை, அரசியல் பொருளியலோடு இணைக்கும் நூல்
- நவீனமான இன்றைய வாழ்க்கையில் உலகில் ஏற்பட்டு வருகின்ற அரசியல், பொருளாதார, சூழலியல் மாற்றங்கள் நம்முடைய அன்றாட வாழ்வில் கொடுமையான விளைவுகளை உண்டாக்கி வருகின்றன. அதன் விளைவாகச் சுற்றுச்சூழல் மாசுபட்டுச் சீரழிந்துவருகிறது. நம் வாழ்வியல் முறையை இந்நிலைமைகள் மெல்ல மெல்ல அழித்துவருகின்ற போக்கைக் கண்டுகொள்ளும் ஆற்றல் இல்லாமல் இயல்பாக/மெத்தனமாக இருக்கிறோம்.
- இத்தகுநிலை நம்வாழ்வை அழித்து விடும். கொடுமையான இச்சூழலை உணர்ந்துகொள்ளாமல் யதார்த்தம் இதுதான் என்று அப்பாவித்தனமாக இருந்தால் இறுதியில் என்ன அழிவு நேரும் என்பதைத் தவளையைப் பற்றிக் கூறப்பட்டுள்ள ஒரு செய்தியின் வழியாக இந்நூல் ஆசிரியர் மு.வெற்றிச்செல்வன் அழகாக விளக்குகிறார்.
- மனித வாழ்வை அழிக்கின்ற சுற்றுச்சூழல் கேடுகளுக்கு ஊற்றாக இருப்பது அரசும் அரசியல்வாதிகளும் கார்ப்பரேட்டுகளும்தான். உலகம் முழுமையும் செயல்பட்டு வருகின்ற மனிதகுல அழிவிற்கும் சூழலியல் சீர்கேட்டுக்கும் எந்தவகையிலாவது நாம் தீர்வுகாண வேண்டும். அவ்வாறு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால் நம்முடைய வாழ்க்கையும் நம் சந்ததியினருடைய வாழ்க்கையும் அழிவுக்குள்ளாவதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது.
- எனவே, தீயவிளைவுகளை எதிர்கொண்டு வாழ்வையும் சூழலையும் காத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவ்வாறு சிந்திக்கும்போது வாழ்வைக் காத்துக்கொள்வதற்கு வழிகாட்டிகளாக விளங்கும் அரிய சிந்தனையாளர்களாக மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் நம் முன்னே உள்ளனர். இவர்கள் அனைவரும் அரசியலையும் பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு சிந்தித்தவர்கள்தானே; சுற்றுச்சூழல் குறித்த சிந்தனைகளுடன் இவர்களை இணைத்துப் பார்ப்பது சரிதானா? என்ற கேள்வி எழக்கூடும்.
- இப்படியான கேள்விக்குப்பதில் கூறும் முகமாகச் சுற்றுச்சூழலியல் பற்றிய சிந்தனையும் இன்றைய அரசியல் பொருளாதாரச் சிந்தனையும் பிரித்துப் பார்க்க முடியாமல் இணைந்துள்ளது என்பதை இந்நூலாசிரியர் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். உலகில் மனிதர்களின் வாழ்வைச் சிதைத்து, வதைத்து வருகின்ற வரலாற்றுத் தன்மைகளை மார்க்ஸியம், வர்க்க முரண்பாடுகளின் வழியாக ஆராய்கிறது.
- இந்தியர்களையும் தமிழர்களையும் வரலாறு நெடுகிலும் (சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக) இணைந்து பலம்பெற்ற ஒரு சமூகமாக மாற முடியாமல் தடுக்கின்றவை எவை? என்ற ஆராய்ச்சிக்குப் பதிலாகப் பெரியாரியமும் அம்பேத்கரியமும் வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களைப் பிளவுபடுத்துகின்ற சாதியகோட்பாடுகளே காரணம் என்பதைக் கண்டறிந்தன.
- இதன் விளைவாக இந்தியச் சமூகமும் தமிழ்ச் சமூகமும் தங்களுடைய பலத்தை இழந்து 1000 ஆண்டுகள் அடிமைகளாகச் சிக்கிச் சீரழிந்துபோனதையும் உணர்ந்துகொண்டனர். எனவே, இவ்வாறான அரசியலைச் சார்ந்த அடிமைத்தளையில் இருந்து விடுதலை அடைவது மட்டுமல்லாமல் சமூக விடுதலைக்காகவும் போராட வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய கடமைக்குள்ளாயினர். அத்தகைய கடமைகள் எப்படிப்பட்டவை என்பதையும் அவற்றை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் மக்களுக்கு விளக்கும் வகையில் நூலின் பகுதி அமைந்துள்ளது.
- இவற்றுள் முக்கியமானது ஆளும் வர்க்கமும் பொருளாதார வலிமை நிறைந்த மனிதர்களும் பூமியின் வளங்களைத் தங்களுக்கும் தங்களுடைய வாரிசுகளுக்கும் சொத்துக்களாக மாற்றிக் கொள்கின்ற நிகழ்வுகள் சமூகத்தில் பாரதூரமான மாற்றங்களை உண்டாக்கி வருகின்றன. அதாவது, இயற்கை அமைப்புகளின் மீதான பொதுமக்களின் உரிமைகளைத் தனியார் மயப்படுத்துவது என்பது ‘ஓர் அடிமை முறை’ என மார்க்ஸியம் கூறுகிறது.
- அரசியல் பொருளாதாரத் தளத்தில் நடைபெறுகின்ற திட்டமிட்டச் செயல்பாடுகளைப் பொதுமக்கள் இயற்கையாக நடைபெறுகின்ற யதார்த்தமான ஒன்றெனக் கருதிக் கொண்டு வாழ்கின்ற அவலநிலையில் உள்ளனர் அல்லது ஆக்கப்படுகின்றனர். இப்படியான பொதுக்கருத்து நிலையில் கட்டுண்டு கிடக்கின்றனர்.
- இத்தகைய கருத்துநிலை இயல்பானதன்று. இதை ஏற்றுக் கொண்டு வாழ்தல் அறியாமையாகும் என்று உணர்த்துவதுதான் ஜனநாயகச் சிந்தனையாகும். இத்தகைய நவீன சிந்தனையை இந்திய/தமிழக மக்களுக்கு உணர்த்தி விழிப்படையச் செய்வதான அரசியல் நடவடிக்கைகளை அம்பேத்கரும் பெரியாரும் தங்களுடைய பணியாகக் கொண்டனர். அதை இந்நூலின் வழியாக நுட்பமாக விளக்குகிறார் நூலாசிரியர்.
- அதாவது, சூழலியல் அரசியலை மனித விடுதலையோடு தொடர்புப்படுத்திய நுட்பமான பார்வையை இந்நூலின் மூலம் முன்வைத்துள்ளார். சூழலியல் நீதி பற்றி வெற்றிச்செல்வன் எழுதுவது குறிப்பிடத்தக்கது. அதாவது, நூலின் ஒட்டுமொத்த அரசியல் கருத்துநிலையை இப்பகுதியில் வாசகர்களுக்குப் புரியவைத்துவிடுகிறார் நூலாசிரியர். அதாவது சாதி, மதம், முதலாளித்துவ அமைப்புகள் உள்ளிட்டவற்றால் மனித வாழ்வு, இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. அதிலிருந்து விடுதலையடைய வேண்டும்.
- வேட்டைக் காடாக மனித உடல்களும் மாறிப் போன நிலையில் சமூக அரசியல் நடவடிக்கைகளோடு சூழலியல் அரசியலை முன்வைத்துள்ள பார்வை சமகாலப் பொருத்தப்பாடுடையது. அதை இந்நூலின் மூலம் செய்துகாட்டியுள்ளார் வெற்றிச்செல்வன். சூழலியலை, அரசியல் பொருளாதாரச் சிந்தனைகளோடு இணைத்து ஆராய்கின்ற ஆசிரியர் அதனை மார்க்ஸியத்துடனும் அம்பேத்காரியத்துடனும் பெரியாரியத்துடனும் பொருத்தி எளிய நடையில் விளக்குகின்றார். இந்த நூல் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை வாசிப்புச் சுவை உள்ளதாக இருப்பது பாராட்டத்தக்கது.
நன்றி: இந்து தமிழ் திசை (15 – 02 – 2025)