TNPSC Thervupettagam
June 7 , 2021 1331 days 708 0
  • உலகம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புதான்.
  • இதை ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கும் மேலாக அறிந்திருந்தும் போதுமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கிறோம்.
  • 1974 முதல் ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அப்படியிருந்தும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வு மக்கள் மத்தியில் ஏற்படவில்லை.
  • இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்துக்கான கொள்கை வாசகம் "சூழலியல் மீட்டெடுப்பு' என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • சூழலியலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் காரணமாக பருவநிலை மாற்றமும், அதன் விளைவாக உயிரினங்களுக்கு இனப்பெருக்க அச்சுறுத்தலும் உருவாகியிருக்கின்றன.
  • இதே நிலைமை தொடர்ந்தால், அடுத்த சில நூற்றாண்டுகளில் உலகில் மனித இனமும் அழிவை நோக்கி நகரத் தொடங்கும் என்பதை நாம் ஏனோ உணர மறுக்கிறோம்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

  • கடந்த ஒரு நூற்றாண்டாக உலகெங்கிலும் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. வனப்பரப்பு குறைந்து வருகிறது.
  • இதனால், பல்வேறு உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 1970 முதல் 2016 வரையிலான 46 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு உயிரினங்களின் எண்ணிக்கை சராசரியாக 68% குறைந்திருக்கிறது.
  • சில உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்திருக்கின்றன. வேறு பல அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
  • ஆண்டுதோறும் ஏறத்தாழ 1.1 கோடி டன் நெகிழிப் பொருள்கள் கடலில் கொட்டப் படுகின்றன. இதன் விளைவாக, கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலைச் சொல்லிமாளாது. அது குறித்த ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
  • எண்ணிலடங்கா கடல் வாழ் உயிரினங்கள் இருப்பதால், எவையெல்லாம் முற்றிலுமாக அழிந்திருக்கின்றன என்பது குறித்த சரியான புள்ளி விவரம் கிடைக்கவில்லை.
  • நெகிழியால் ஏற்படும் அச்சுறுத்தலைப் போலவே, புவி வெப்பமயமாதலைத் தொடர்ந்து கடல்நீர் வெப்பம் அதிகரிப்பதாலும் கடல்வாழ் உயிரினங்கள் பல அழிந்து கொண்டிருக்கின்றன.
  • மக்கள்தொகைப் பெருக்கமும், அதனால் தேவைப்படும் கூடுதல் நிலப்பரப்பு அவசியமும் விளைநிலங்களையும், வனப்பகுதிகளையும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றன.
  • வளர்ச்சி என்கிற பெயரில் வனவிலங்கு சரணாலயங்கள்கூட விட்டுவைக்கப்படாமல் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன.
  • இதனால், வனவிலங்குகளும், பறவைகளும், புழு பூச்சிகளும் அழிவை நோக்கி நகர்கின்றன. உலகின் இயற்கை சமநிலையை நிலைநிறுத்த அவையெல்லாம் அவசியம் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
  • வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இதுவரை உலகம் ஐந்து முறை பேரழிவை எதிர்கொண்டிருக்கிறது.
  • உலகின் ஏனைய உயிரினங்கள் பேரழிவை எதிர்கொள்ளும் போதெல்லாம் அதன் தொடர் விளைவாக மனித இனமும் ஏதாவது வகையில் பாதிக்கப்பட்டு பேரழிவுக்கு ஆளாகியிருக்கிறது.
  • இப்போதைய சூழலியல் பாதிப்பு, உலகம் ஆறாவது பேரழிவை நோக்கி நகர்கிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

அடிப்படையை பலப்படுத்த வேண்டும்

  • உலகில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 42 லட்சத்திலிருந்து 70 லட்சம் பேர் காற்றுமாசால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். 10-இல் 9 பேர் அதிக அளவு மாசுபட்ட காற்றைத்தான் சுவாசிக்கிறார்கள்.
  • இது குறித்த அச்சத்தையும் எச்சரிக்கையையும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வெளிப்படுத்தியும்கூட, விழிப்புணர்வு ஏற்படாததன் விளைவைத்தான் உலகம் இப்போது எதிர்கொள்கிறது.
  • தற்போது உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொவைட் 19 கொள்ளை நோய்த் தொற்றுக்கும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் தொடர்பு உண்டு என்று விஞ்ஞானிகள் உறுதிபடத் தெரிவிக்கிறார்கள்.
  • தீநுண்மிப் பரவலில் காற்றுமாசு மிகப் பெரிய பங்கு வகிப்பதாகவும், அதனால் சுற்றுச்சூழலுக்கும் கொள்ளை நோய்த்தொற்று காரணமான மரணங்களுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்பதும் அவர்களது கருத்து.
  • ஒருபுறம் கொள்ளை நோய்த்தொற்றை மருத்துவத் துறையினரின் உதவியுடன் உலகம் எதிர்கொண்டு வருகிறது என்றாலும்கூட, இதுபோன்ற பேரிடர்கள் மனித இனத்தை தாக்காமல் இருக்க வேண்டுமானால், சூழலியல் மீட்பு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • அதாவது, ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் தடுக்கப்பட்டும், மேலும் பாதிப்புகள் ஏற்படாமலும், சூழலியல் மீட்டெடுக்கப்பட்டும், இயற்கை சமநிலையை நாம் உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
  • பல்லுயிர்ப் பெருக்கம் மேலும் தகர்ந்து விடாமல் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும். பருவநிலை மாற்றம் எதிர்கொள்ளப்பட வேண்டும்.
  • அதன் மூலம்தான் மனித இனத்தின் வருங்காலத்தை உறுதிப்படுத்த முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
  • மனிதர்களால் ஏற்படும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் மூன்றில் ஒரு பங்கு, உணவு உற்பத்தித் துறையால் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
  • அதற்கு வனங்கள் அழிக்கப்பட்டு, கூடுதல் நிலங்கள் விவசாயப் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருப்பது முக்கியமான காரணம்.
  • உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் அதிகமாக பயன்படுத்துவதும்கூட காரணிகள் என்பதை மறந்துவிடக் கூடாது.
  • இந்தியாவில் பசுமைப் புரட்சி உணவுத் தன்னிறைவையும், விவசாயிகளுக்கு அதிக மகசூலையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்றாலும்கூட, அதிகரித்த ரசாயன உரங்களின் விளைவாகப் பல்லுயிர்ப்பெருக்க பாதிப்பும், பசுமை இல்ல வாயு வெளியேற்ற அதிகரிப்பும் ஏற்பட்டிருப்பதை மறந்துவிடுகிறோம்.
  • பலவீனமான அஸ்திவாரத்தில் பலமான வீடு கட்டும் முயற்சிதான் இது.

நன்றி: தினமணி  (07 – 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்