- லக்னௌ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராதாகமல் முகர்ஜி ‘பிரின்சிபிள்ஸ் ஆஃப் கம்பேரடிவ் எகனாமிக்ஸ்’ (Priniciples of Comparative Economics) என்ற புத்தகத்தை 1922இல் எழுதினார். இயற்கைச் சூழலானது, இந்தியக் கிராமங்களின் சமூக - பொருளாதார வாழ்க்கை மீது ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் தொடர்பில் இந்தப் புத்தகம் செலுத்தியிருக்கும் அக்கறை குறித்து, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அதைப் படித்தபோது நான் வியப்படைந்தேன்.
சமூகங்களின் சொத்து எப்படி இடம் மாறியது?
- விவசாயிகளின் வேளாண்மைப் பொருளாதாரம் என்கிற வாழ்வாதாரத்துக்கு, பொதுச் சொத்துகள் என்ற இயற்கை வளங்கள் எவ்வளவு முக்கியமானவை என்று அங்கீகரித்த முதல் இந்திய அறிஞர் ராதாகமல் முகர்ஜி.
- தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் விளைநிலங்கள் சொந்தமாக இருந்த காலத்தில் வாய்க்கால்களும் வனப்பகுதிகளும் புல்தரைகளும் கிராமங்களால்தான் நிர்வகிக்கப்பட்டு, தேவைப்படும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. நிலங்கள் மீதான தனிப்பட்ட சொத்துரிமையானது சமூகத்தின் பிற மக்களைவிட நிலங்களை வைத்திருப்பவர்களுக்கு சில உரிமைகளைத் தந்திருந்தாலும், அவற்றின் பயன்பாட்டை அவர்கள் பிறர் தயவில்லாமல் தாங்கள் மட்டுமே மேற்கொண்டுவிட முடியாது என்று முகர்ஜி எழுதியிருக்கிறார்.
- பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு முற்பட்ட காலத்தில் கிராமங்களின் பாசன வாய்க்கால்கள் சமூகத்துக்கே பொதுச் சொந்தமாக இருந்தன. பாசன வசதியை நிர்வகித்தாக வேண்டிய கடமை காரணமாகவே, நிலங்கள் தங்கள் பெயரில் இருந்தாலும் - சமூகத்தின் பிற மக்களுக்கு எதிராக சுயநலத்துடன் செயல்பட முடியாதபடிக்கு நில உடமையாளர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர்.
- பொது உடைமையை எவரும் மனம்போனபோக்கில் பயன்படுத்திவிடாதபடிக்கு ஏரிகள், குளங்கள், பாசன நீரை விநியோகிக்கும் வழங்கு வாய்க்கால்கள் ஆகியவற்றை முழுச் சமூகத்துக்கே சொந்தமாக்கிய நடைமுறையை பூர்விக இந்தியாவில் உருவாக்கியிருந்தனர்.
- வேளாண் உற்பத்திக்கு குளங்கள், ஏரிகள், பாசன வாய்க்கால்கள் மிக மிக முக்கியம். பாசனம் தொடர்பான ‘சமூக உடைமை முறை’ என்ற சுதேசி ஏற்பாட்டுக்கு, பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் நிர்வாக ஆணைகள் மூலம் முக்கியத்துவத்தைக் குறைத்தார்கள் என்கிறார் முகர்ஜி.
- சமூகத்துக்குப் பொதுவானதாக இருந்த வனப் பகுதிகளை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் புதிதாக உருவாக்கிய வனவளத் துறை எடுத்துக்கொண்டது. பிறகு வனவளங்கள் வணிக நோக்கில் சுரண்டப்பட்டன. வனங்களில் கிடைப்பதைப் பயன்படுத்த முடியாதபடிக்கு கிராமவாசிகள் தடுக்கப்பட்டனர். பாரம்பரியமாக அவர்களுக்குச் சொந்தமாக இருந்த வனங்களில் அவர்கள் எதை எடுத்தாலும், அது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவிக்கப்பட்டது.
பொது மராமத்து ஏன் நிலைக்குலைந்தது?
- குளங்களும், வாய்க்கால்களும் தனி அரசுத் துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அவற்றைப் பராமரிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த மாற்றங்களால், பொது மராமத்துப் பணிகளில் மக்கள் ஆர்வம் இழந்தனர். பொறுப்பும் அதிகாரமும் மிக்க அதிகாரிகள் இல்லாததால் குளங்களும் பாசன வாய்க்கால்களும் பாரம்பரியமாகவோ, ஆக்கப்பூர்வமாகவோ பராமரிக்கப்படுவது குறைந்து, அவை பயன்படுத்தப்படாமல் நாளடைவில் தூர்ந்து அழியவிடப்பட்டன என்று எழுதுகிறார் முகர்ஜி.
- ராதாகமல் முகர்ஜி இன்றைக்குப் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்ட பேராசிரியர். ஆனால் அவர் எழுதியவையோ உலகமும் இந்தியாவும் இன்றைக்கு நேரடியாகச் சந்திக்கும் சூழலியல் பிரச்சினைகள் ஆகும்.
- முகர்ஜியின் எழுத்துகளில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் மனிதர்களும் இயற்கையான உலகமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை, வேண்டுமென்றே பொருளாதார லாபத்துக்காகவோ வேறு காரணங்களுக்காகவோ அவற்றை மாற்றுவது இறுதியில் மனிதர்களின் வாழ்க்கைக்கே ஆபத்தாக மாறிவிடும் என்றே எச்சரிக்கின்றன; உலக அளவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அறிஞர்களும் இப்போது இதையேதான் கூறுகின்றனர். 1930களிலேயே இவற்றையெல்லாம் இவ்வளவு தெளிவாகவும் விரிவாகவும் சொல்லியிருப்பதன் மூலம் முன்னோடியாக விளங்குகிறார் முகர்ஜி.
- இயற்கையைப் பொருத்தவரை மனிதன் கட்டுப்பாட்டோடு நடக்க வேண்டும், பொறுப்புடன் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்கிறார். ஆனால் பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் என்ற போர்வையில் நகர்மயத்தை விரைவுபடுத்துவதும் சமூகங்களைத் தொழில்வளத்துக்குத் தயார்படுத்துவதும் இப்போது நடைபெறுகின்றன. வளர்ச்சிக்கும் விரிவுபடுத்தலுக்கும் தடைகள் கூடாது என்பதே வலியுறுத்தப்படுகிறது.
பல துறை ஆர்வலர்
- இன்றைய கல்வியாளர்களைப் போல ராதாகமல் முகர்ஜி ஏதேனும் ஒரு துறையில் மட்டும் ஆராய்ந்து ஆழங்கால்பட்டவர் அல்ல. ஒரேயொரு துறையை மட்டும் படிக்க வேண்டும், ஆராய வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை அவர் வைத்துக்கொள்ளவில்லை. வரலாறு, மெய்யியல், பொருளாதாரம், சமூகவியல் என்று எல்லாத் துறைகள் குறித்தும் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பிற இந்தியப் பொருளாதார அறிஞர்களைப் போல அல்லாமல் அறிவியலிலும் நாட்டம் கொண்டிருந்தார், அதிலும் குறிப்பாக அப்போது உருவாகிக்கொண்டிருந்த சூழலியல் துறை அவரை மிகவும் ஈர்த்திருந்தது.
- முகர்ஜியின் மறைவுக்குப் பிறகு, அவர் எழுதியவற்றைப் பட்டியலிட்டபோது மொத்தம் 47 நூல்களை அவர் எழுதியிருப்பது தெரியவந்தது. இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் (The Foundations of Indian Economics 1916), பிரதேச சமூகவியல் (Regional Sociology 1926), மாறிவரும் வங்காள முகம் (The Changing Face of Bengal 1938), சமூக சூழலியல் (Social Ecology 1940), இந்திய உழைக்கும் வர்க்கம் (The Indian Working Class 1945), கலையின் சமூகக் கடமை (The Social Function of Art (1948), விழுமியங்களின் சமூகக் கட்டமைப்பு (The Social Structure of Values 1949), தார்மிக நெறிகளின் இயக்கவியல் (The Dynamics of Morals 1951), இந்திய நாகரிகத்தின் வரலாறு (The History of Indian Civilization 1956), சமூக அறிவியலின் மெய்யியல் கோட்பாடுகள் (The Philosophy of Social Science 1960), இந்தியக் கலையின் மலர்ச்சி (The Flowering of Indian Art 1964) அவற்றில் சில.
- முகர்ஜி எழுதிய பல புத்தகங்கள் மேலோட்டமானவை அல்லது இடைக்காலத்தில் படித்துக் கொள்வதற்கானவை என்றும் கருதலாம். ஆனால், மனித சூழலியல் துறை குறித்து எழுதியதில் அவர்தான் இந்திய முன்னோடி. இது தொடர்பாக அவர் எழுதியிருப்பவை நிலைத்து நிற்கக் கூடியவை.
- வாழ்க்கையைப் பின்னிப் பிணைத்திருக்கும் இயற்கையுடனான வலைப்பின்னல் குறித்து அவருக்கு ஆழ்ந்த புரிதல் இருந்திருக்கிறது, அதை மிகவும் மதித்திருக்கிறார். சுற்றுச்சூழலியல் என்ற தனிப் பிரிவு தோன்றுவதற்கு முன்னதாகவே அதைப் பற்றி ஆழமாகச் சிந்தித்திருக்கிறார். அவரை ‘சூழலியல் சமூகவியலாளர்’ என்றோ, ‘சமூகவியல் பொருளியலாளர்’ என்றோ அழைக்கலாம். இப்படிப்பட்ட கல்விப் புலங்கள் தோன்றுவதற்கு முன்னாலேயே அவற்றை அவர் தோற்றுவித்துவிட்டார்.
- மனித நாகரிகம் நிரந்தரமாக வாழ, ‘பயன்பாட்டு மனித சூழலியல்’ மிகவும் அவசியம் என்று 1938இல் எழுதிய நூலில் குறிப்பிட்டிருக்கிறார் முகர்ஜி. உள்ளுணர்வால் தூண்டப்பட்டு சூழலுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்வதைவிட, இயற்கையின் அறம் சார்ந்த அடிப்படையில் மனிதர்கள் சூழலியல் வலுப்பெற ஒத்துழைப்பார்கள் என்று எதிர்காலம் குறித்து நம்பிக்கையையும் தெரிவித்திருக்கிறார். உடனடியாக பலன் பெற்றுவிட வேண்டும் என்று சூழலைச் சிதைத்து - இயற்கையைச் சுரண்டும் ஆசையைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள், அதற்காகப் புதிய விழுமியங்களைக் கற்பிக்காதீர்கள், நாளைய உலகம் எப்படியிருக்க வேண்டும் என்றும் சிந்தியுங்கள், இதுவரை பிறந்திராத மனித இனத்தின் நன்மை கருதி சில தியாகங்களைச் செய்யுங்கள் என்று சக மனிதர்களுக்கு அவர் வேண்டுகோளும் விடுக்கிறார்.
- ராதாகமல் முகர்ஜி அன்றே விடுத்துள்ள இந்த வேண்டுகோள் எவ்வளவு தீர்க்கதரிசனமானது, இன்றைக்கும் நினைவில் கொள்ள வேண்டியது – கடைப்பிடித்து ஒழுக வேண்டியது!
நன்றி: அருஞ்சொல் (11 – 12 – 2022)