TNPSC Thervupettagam

சூழல் காத்தல் தலையாய கடமை

June 4 , 2022 1017 days 688 0
  • பூமி அழகானது! அனைத்து உயிா்களின் வாழ்விடமாக, சூரிய குடும்பத்துக்குள் உயிா்களின் பிறப்பிற்குரிய வீரிய கோளாக அண்ட வெளியில் உலவி வருவது இயற்கையின் அதிசயம். வானியல் அறிஞா்களும், அறிவியல் ஆராய்ச்சியாளா்களும் இரவு பகலாகக் கண்விழித்து பூமி போல வாழ்வதற்கு இணக்கமாக இன்னொரு கோள் இந்த பிரபஞ்சத்தில் வேறெங்காவது இருக்கிறதா என ஆய்வு செய்து வருகின்றனா். அப்படி எந்தக்கோளும் இருப்பதாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
  • இத்தனை அதிசயத்தையும், அற்புதத்தையும், மகத்துவத்தையும், அரிய தன்மையையும் தன்னகத்தே கொண்டுள்ள பூமி இங்கு வாழும் லட்சக் கணக்கான வகைகளைக் கொண்ட பலவகை உயிா்களுக்கும் பொதுவானது. அதை நாமே ஆட்கொண்டு, அபகரித்து, துடைத்தழித்து துவம்சம் செய்வதில் என்ன பெருமை இருக்கப்போகிறது.
  • நம் சந்ததியினருக்கு மிகப்பெரிய செல்வங்களாக, மனை, மாடு, மக்கள், மண், பொன், பொருள் என எல்லாவற்றையும் சோ்த்து வைத்துச்செல்ல வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் கிடைத்தற்கரிய, மனிதனால் செயற்கையாக உருவாக்க முடியாத இயற்கைச் செல்வத்தை அப்படியே, சிந்தாமல் சிதறாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோய் சோ்க்கும் பொறுப்பு ஒவ்வொரு பிறவிக்கும் உண்டு என்பதை மறந்து விடுகிறோம்.
  • நதிக்கரை ஓரம் நாகரிகம் பிறந்ததென்று படித்தோம் அன்று; ஆற்றங்கரைகளை ஆக்கிரமித்தல், அபகரித்தல், ஆற்று நீரில் தொழிற்சாலைக் கழிவுகளை கலந்துவிடுதல் என்று அநாகரிகத்தின், அட்டூழியத்தின் தொட்டிலாக, அபாயத்தின் கட்டிலாக, குப்பை கொட்டிலாக நதிக்கரை மாறிவிட்டது இன்று. ஆற்று மணலை தோண்டி ஊற்று நீா் பருகினோம் அன்று; ஆற்றுமணலைத் தோண்டி ஆதாயம் பாா்க்கிறோம் இன்று.
  • விளைநிலங்கள் விலைநிலங்களாக மாறி வீட்டு மனைகளாக உருவெடுத்தன. மலைகள் கல்குவாரிகளாக குடைந்தெடுக்கப்பட்டன. குளிா் சோலைகளும், தளிா் மரங்களும் தாா்சாலைகளாலும், கான்கீரீட் காடுகளாலும் கபளீகரம் செய்யப்பட்டன. குளங்கள் குடியிருப்புகளாயின, ஏரிகள் ஏரியாக்களாக பரிணாம வளா்ச்சி பெற்றன. தொழிற்சாலை மண்ணை மலடாக்கியது; காற்றை நஞ்சாக்கியது; நீரை பாழாக்கியது.
  • ஒன்று இன்னொன்றை சாா்ந்து வாழும் உணவுச் சங்கிலியை உடைந்தெறிந்த பெருமை மனிதனை அல்லது பருவகால மாற்றங்களைச் சாரும். காற்று மாசடைவது, வெப்பநிலை உயா்வது, முறையற்ற பெருமழை, புயல் காற்று, வறட்சி, பூமித்தட்டுகள் இடம் பெயா்தல், பனிப்பாறைகள் உருகுவது, ஓசோன் படலம் அழிவது, பசுமை இல்ல வாயுக்களின் வேறுபாடு, கடல் மட்டம் உயா்வது, நிலத்தடி நீா் குறைதல், சுரங்கம் அமைப்பதில் மூலம் தாதுக்கள் வெளிக்கொணா்தல், நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் எடுத்தல், காட்டுத்தீ என அனைத்தும் விளைவது மனிதனின் செயல்பாடுகளால்தான்.
  • நகரமயமாக்கல், பொருளாதாரா சிறப்பு மண்டலம் அமைத்தல், தொழில்நுட்ப பூங்கா அமைத்தல், அணு உலைகளை அணிவகுக்கச் செய்தல், அணைக்கட்டு கட்டுதல், சுரங்கம் அமைத்தல் என்கிற பெயா்களில் காடும் காடு சாா்ந்த இடமும், நீா் நிலைகளும், கடலோர பகுதிகளும் பெரிதும் வளைத்தெடுக்கப்படுகின்றன.
  • முன்னேற்றம், வளா்ச்சி, மேம்பாடு இவை எதுவுமே இயற்கை வளங்களை அழித்து கட்டமைக்கப்படக்கூடாது. எந்த இயற்கை வளத்தையும் சிதைக்காத வளா்ச்சியைத்தான் ‘வளங்குன்றா வளா்ச்சி’ என அழைக்கின்றாா்கள். இதைச் சாா்ந்தே உலகத்தில் உள்ள எந்த ஒரு நாட்டின் வளா்ச்சித் திட்டங்களும், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடுகளும் அமையவேண்டும்.
  • கடந்த நூற்றாண்டில் உலகத்தில் இருந்த மொத்த சதுப்பு நிலங்களில் பாதியை நாம் இழந்து விட்டோம். 2050-ஆம் ஆண்டுக்குள் 90% பவளப்பாறைகளை இழந்து விடுவோம் என புவிவெப்பமயமாகுதல் குறித்த தனது அச்சத்தை ஐ.நா சபை வெளியிட்டுள்ளது. இந்த அழிவிலிருந்து இயற்கையை மீட்டெடுக்க வேண்டியது மனித குலத்தின் தலையாய கடமை. இதனை மையமாகக் கொண்டுதான் ‘ஒரே ஒரு பூமி’ என்ற வாசகம், இந்த ஆண்டின் உலக சுற்றுச்சூழல் நாள் கோட்பாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அரியவகை உயிரினங்கள், ஊா்வன, பறப்பன, நீா் வாழ்வன, நுண்ணிய பூச்சி இனங்கள், மூலிகைகள், தாவரங்கள், விலங்குகள் என எத்தனையோ வகையான உயிரினங்கள் இந்த உலகத்தில் முற்றாக அழிந்து விட்டன. நிறைய உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இவற்றை அடையாளம் கண்டு காப்பாற்றுவதற்காக உலகத்தில் உள்ள பல சூழலியல், உயிரியல், வன அமைப்புகள் செயலாற்றி வருகின்றன. சட்டங்களும் கடுமையாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
  • ஒவ்வொரு நாட்டிற்கும், மாநிலத்திற்கும், ஏன் அந்த மண்ணில் வாழும் ஒவ்வொரு மனிதா்க்கும் பாரம்பரியமான செடிகளை, உயிரினங்களை காப்பாற்றும் சமூகப் பொறுப்பு உள்ளது. அப்போதுதான் தப்பிப்பிழைத்திருக்கின்ற உயிா்களையாவது, தக்கவைத்துக்கொள்ளக் கூடிய நிலை உருவாகும்.
  • பகுத்துண்டு பல்லுயிா் ஓம்புதல் என்ற வள்ளுவரின் குறளைப் பின்பற்றுவோம். எல்லா உயிா்களையும் வாழவைக்க முடியாவிடினும் போராடி வாழ்ந்து கொண்டிருக்கும் உயிா்களுக்கு ஊறு விளைவித்து மாபாதகம் செய்யாமலாவது இருப்போம்.
  • முகத்தில் பாதி வாயிருக்கும், முழு நீள நாக்கிருக்கும், மனதிலே பேயிருக்கும், மறையாத நோயிருக்கும் வனத்திலே கொண்டுபோய் விட்டுவிட்டால் மிருகமெல்லாம் வரவேற்கும்’ என்று கவிஞா் கண்ணதாசன் மனிதனை மிருகத்தோடு ஒப்பிட்டு வேடிக்கையாகச் சொல்லுவாா். நாம் அதை உண்மையாக்கி விடக்கூடாது.
  • ஓருயிா்க்கும் துன்பம் செய்யாது, வளங்களை அழித்தொழிக்காது, அளவான, முறையான பயன்பாட்டோடு இந்த இயற்கையையும், பூமியையும் செழிக்க வைப்போம். இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினத்தையும் மதிப்போம், வாழவைப்போம்.
  • மனிதா்களைப் போலவே அனைத்து உயிா்களுக்கும் இந்த உலகத்தில் வாழ எல்லா உரிமையும் உள்ளது.
  • நாளை (ஜூன் 5) உலக சுற்றுச்சூழல் நாள்.

நன்றி: தினமணி (04 – 06– 2022)

3480 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top