TNPSC Thervupettagam

சென்னை வெள்ளம்: புதிய வடிவமைப்புக் கொள்கை

October 28 , 2024 74 days 156 0

சென்னை வெள்ளம்: புதிய வடிவமைப்புக் கொள்கை

  • சென்னையில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி பெருமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்​கப்​பட்​டிருந்தது. பின்னர் அது நீக்கிக்​கொள்​ளப்​பட்டது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பலவீனமடைந்​ததால் முன்கணிப்பு​களை​விடக் குறைவான மழையே பெய்தது. எனினும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்​கப்​பட்டு​ இருந்த முந்தின நாள் (அக்டோபர் 15) கொட்டிய மழையால், பல இடங்களில் வெள்ளம் வடியாமல் இருந்தது. பட்டாளம், வியாசர்​பாடி, பெரம்​பூர், சூளை முதலான வட சென்னைப் பகுதி​களிலும் திருவான்​மியூர், தி.நகர், துரைப்​பாக்கம், வேளச்சேரி முதலான தென் சென்னைப் பகுதி​களிலும் வெள்ளம் வடிய ஒரு நாள் ஆனது.
  • எப்போதும்போல் சமூக ஊடகங்​களில் விவாதம் நடந்தது. சிலர் இந்த மழையைச் சென்னை நகரால் தாங்க முடிய​வில்லையே என்று விமர்​சித்தனர். வானிலை முன்னறி​விப்பு ஆர்வலர் ஒருவர் இதற்கு விடையளித்​தார். சென்னையில் 30 செ.மீ. - 40 செ.மீ. (சென்​டிமீட்டர்) மழை பெய்தால் அது வடிவதற்குத் தாமதமாகவே செய்யும் என்றார் அவர். அப்படிச் சொன்னதால் பல இணையவாசிகளின் தாக்குதலுக்கும் உள்ளானார்.
  • சமூக ஊடகங்கள் ‘வல்லுநர்​’களால் நிறைந்தவை. சில நாள்களுக்கு முன்னர் திருச்​சியி​லிருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் பழுது ஏற்பட்டு, அது வானில் வட்டமடித்தபோது சமூக ஊடகங்​களில் பல விமான​வியல் ‘வல்லுநர்​’களைப் பார்க்க முடிந்தது. கவரைப்​பேட்டை ரயில் விபத்து சமூக ஊடகங்​களில் நிறைந்​திருக்கும் ரயில்வே துறை ‘வல்லுநர்’களை அடையாளம் காட்டியது. இப்போது அவர்களில் பலர் வடிகால் ‘வல்லுநர்​’களா​யினர்.
  • மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடந்திருந்தால் ஒரு சொட்டுத் தண்ணீர்​கூடத் தேங்கி​யிருக்காது என்றார் ஒருவர். அதற்கு எதிர்​வினை​யாற்றிய​ வரின் பதில் அபத்தமானது. நாம் இவர்களை விட்டு​விடு​வோம். இந்த உரையாடல் எழுப்​பி​யிருக்கும் கேள்வி என்ன? கனமழை பொழிந்​தாலும் வெள்ளம் உடனடியாக வடிய வேண்டுமா? அல்லது, எந்த அளவுக்கான மழை பொழிந்தால் அது உடனடியாக வடிய வேண்டும்? இதற்குப் பொறியியல்​ரீ​தியாக விடை காண முயல்​வோம்.

நூறாண்டு மழை:

  • நூறாண்​டு​களில் பெய்யக்​கூடிய அதிக சாத்தியம் உள்ள மழை அளவை நீரியல் நிபுணர்கள் நூறாண்டு-மழை (100-year rain) என்று அழைக்​கிறார்கள். இதைப் போலவே பத்தாண்​டு- மழை, ஐம்பதாண்​டு-மழை என்பனவும் உண்டு. ஒரு நகரத்தில் ஆவணப்​படுத்​தப்பட்ட மழையளவைக் கொண்டு இவற்றைக் கணக்கிடு​வார்கள். நூறாண்​டு-மழை​யானது நூறாண்​டு​களுக்கு ஒரு முறைதான் வருமென்று எடுத்​துக்​கொள்ள முடியாது... இடையிடையேயும் வரும்.
  • வளர்ந்த நகரங்கள் பலவற்றில்கூட நூறாண்டு-மழைக்கான வடிகால்கள் அமைக்​கப்​படு​வ​தில்லை. எடுத்​துக்​காட்டாக, ஹாங்காங்கில் மழைநீர் வடிகால்கள் ஐம்பதாண்​டு-மழையைக் கணக்கில் கொண்டு வடிவமைக்​கப்​பட்டவை. அதாவது, ஐம்பது ஆண்டு​களில் பெய்வதற்குச் சாத்தி​ய​முள்ள அதிகப்​படியான மழையை இவை உடனடி​யாகக் கடத்தி​விடும். அதனினும் கூடுதலான மழை பொழிந்​தால், சாலைகளில் நீர் தேங்கவே செய்யும். ஆனால், சில மணி நேரத்தில் அவை அளவில் பெரிய பிரதான வாய்க்​கால்​களில் வடிந்​து​விடும்.

வடிவமைப்புக் கொள்கை:

  • சென்னை வடிகால்கள் எத்தனை ஆண்டு மழையைக் கடத்தி​விடக்​கூடியவை? மத்திய அரசின் பொதுநல-சுற்றுச்​சூழல் பொறியியல் துறையின் (Central Public Health and Environment Engineering Organisation- CPHEEO) வழிகாட்டு​தலின்படி, மழைநீர் வடிகால்களை ஐந்தாண்டு வெள்ளத்​வடிவமைத்தால் போதுமானது. சென்னை உள்பட எல்லா இந்திய நகரங்​களும் இந்த வடிவமைப்புக் கொள்கையையே பின்பற்று​வ​தாகத் தெரிகிறது. கடந்த அக்டோபர் 15இல் சென்னையில் பொழிந்த மழையளவு 16 செ.மீ.லிருந்து 30 செ.மீ. வரை பதிவாகி​யிருக்​கிறது.
  • இது 2015, 2023 வெள்ளத்தோடு ஒப்பிடத்​தக்கது (2015 டிசம்பர் 2இல் 29 செ.மீ. 2023 டிசம்பர் 4 இல் 23 செ.மீ.). சென்னை நகரின் வடிகால் வடிவமைப்​புக்குப் பயன் கொள்​ளப்​பட்​டிருக்கும் ஐந்தாண்டு, பத்தாண்டு மழையளவுகள் பொதுவெளியில் பகிரப்​பட​வில்லை. எனில், இப்போது பொழிந்த மழை ஐந்தாண்டு அளவைவிட அதிகமானது என்பதில் ஐயமில்லை. ஆகவே, வெள்ளம் பல இடங்களில் உடனடியாக வடியாமல் தேங்கியதில் வியப்​பில்லை.
  • இந்த ஐந்தாண்டு வரையறையில் இரண்டு பிரச்​சினைகள் உள்ளன. முதலா​வதாக, வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும்போது இந்த வரையறை குறைவானது (ஹாங்காங் - ஐம்பதாண்டு வெள்ளம்). அடுத்​ததாக, காலநிலை மாற்றத்தால் குறைந்த கால அளவில் கடும் மழை பொழிவது அதிகரித்​திருக்​கிறது. ஆகவே, இந்த ஐந்தாண்டு மழை, பத்தாண்டு மழைக்கான பழைய கணக்குகளை முற்றி​லுமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
  • இந்த அடிப்​படை​யில், வருங்​காலத்தில் சாத்தி​ய​முள்ள புதிய வெள்ள அளவுகளைக் கணக்கிட வேண்டும். அடுத்து, ஒரு பேச்சுக்கு 25 ஆண்டு வெள்ளத்தைக் கடத்தும்​படியாக நமது வடிவமைப்புக் கொள்கையை மாற்றுகிறோம் என்று வைத்துக்​கொள்​வோம். அப்போது, இப்போதைய வடிகால்கள் போதுமானவையாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. என்ன செய்ய​லாம்?

ஆழ்குழாய்​களும் சுரங்​கங்​களும்:

  • நமது வடிகால்​களின் போதாமை ஒரு புறமிருக்க, அவற்றின் வடிவத்​திலும் சிக்கல் இருக்​கிறது. சென்னை நகர வடிகால்கள் செவ்வக வடிவி​லானவை. மேலும், இவை இயல் ஈர்ப்​பாற்​றலுக்கு (gravitational force) உட்பட்டு இயங்குபவை. மேலும், சென்னை நகரம் மிகுதியும் சமதளத்​திலானது. ஆகவே, ஈர்ப்​பாற்றலை முழுவது​மாகச் சார்ந்​திருப்​ப​தால், நீர் வேகமாக வடிவதில்லை. மேலதி​கமாக, சென்னையின் நிலமட்டம் கடலின் நீர்மட்​டத்​தைவிட அதிக உயரத்தில் இல்லை. ஆகவே, வடிகாலின் அடிமட்​டத்தைக் கடலின் நீர்மட்​டத்​துக்கு மேலே அமைத்​துக்​கொள்​வதால் வடிகால்களுக்குப் போதிய ஆழம் கிடைப்​ப​தில்லை. இவை தவிர, இந்த வடிகால்கள் சாலைகளின் ஓரத்தில் நிறுவப்​படு​வதால் அவற்றின் அகலமும் மட்டுப்​படு​கிறது.
  • ஆதலால், செவ்வக வடிகால்​களுடன் மேலதி​க​மாகவோ புதிதாகவோ வட்ட வடிவிலான குழாய்​களைப் பதித்து​விடலாம். செவ்வக வடிவத்​தைவிட வட்ட வடிவக் குழாய்களே நீரை வேகமாகக் கடத்த வல்லவை. சாலையின் அகலம் இவற்றைக் கட்டுப்​படுத்​தாது. ஏனெனில், இவற்றைச் சாலையின் நடுவில்கூட நிறுவ முடியும். வேகமாக வடிவதற்கு ஏற்றபடி வாட்டத்தைக் கூட்டி ஆழமாகவும் நிறுவ முடியும். ஈர்ப்​பாற்​றலுக்கு இயைபாக அமைக்​கப்பட முடியாத இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்​கலாம்.
  • இந்த வடிகால்கள் போய்ச் சேரும் பிரதான வாய்க்​கால்​களிலும் அளவில் பெரிய ஆழ்குழாய்கள் அமைக்​கலாம். இப்போதைய முதன்மை வாய்க்​கால்​களின் நீர் கடத்தும் திறன், புதிய வடிவமைப்​புக்குத் தேவைப்​படும் திறனை​விடப் பல இடங்களில் குறைவாக இருக்​கும். இப்படியான இடங்களில் சுரங்​கப்​பாதைகளை அமைக்​கலாம். ஹாங்காங், சிங்கப்​பூர், மலேசியா முதலான பல நாடுகளில் இப்படியான வடிகால் சுரங்​கங்கள் பல்லாண்டு காலமாக மழைநீரைக் கடத்திவரு​கின்றன.
  • இவை மெட்ரோ ரயில் சுரங்​கங்​களைப் போல வட்ட வடிவத்​திலானவை. சாலைப் போக்கு​வரத்தைப் பாதிக்​காமல் நிலத்​தடியில் குடைந்​து​விடலாம். வடிகால் வடிவமைப்பு தவிர, நீர் தேங்கு​வதற்கு வேறு காரணங்​களும் உள்ளன. நீர்ப்​பிடிப்புப் பகுதி​களில் மேற்கொள்​ளப்​பட்​டிருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். நீர்நிலைகளும் வாய்க்​கால்​களும் தூர் வாரப்பட வேண்டும். வடிகால்களை அடைத்​துக்​கொண்​டிருக்கும் குப்பைக் கூளத்தை அகற்ற வேண்டும்; இதில் மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.

நிதி தாரீர்! 

  • நமது மழைநீர் வடிகால்​களின் வடிவமைப்புக் கொள்கையை மாற்றி, ஆழ்குழாய்​களும் நீரேற்று நிலையங்​களும் சுரங்​கங்​களும் அமைக்க அதிக செலவாகும். தமிழகம் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலத்தில் நிதி ஒரு பிரச்​சினையாக இருக்கக் கூடாது. ஆனால், நமது வரி வருவாய் மத்திய அரசுக்குப் போய், அங்கிருந்து மாநிலங்​களுக்குப் பகிரப்​படு​வ​தால், நமக்குப் போதுமான நிதி கிடைப்​ப​தில்லை. தமிழகம் போன்ற நகர்மயமான மாநிலங்​களின் உள்கட்​டமைப்பை விரிவாக்கியே தீர வேண்டும். இதற்கு அவசியமான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். சென்னை நகரத்தின் மழைநீர் வடிகால்கள் விரிவாக்​கப்​படவும் நவீனமாக்​கப்​படவும் வேண்டும். அதற்கு இந்த நகரம் தகுதி​யுடைத்​து!

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்