- டெல்லியில் அவற்றுக்கு ‘ஃபட் ஃபட்’ என்று பெயர். ஒரு மோட்டார் சைக்கிளை உள்ளூர் தொழில்நுட்பர்கள் ஆட்டோ ரிக்ஷாபோல மாற்றி அமைத்திருந்தார்கள். அவற்றுக்கு எரிபொருள் மண்ணெண்ணெய். இன்றும் அவற்றின் பல்வேறு வடிவங்களை பஞ்சாப், உத்தர பிரதேச சிறு நகரங்களில் பார்க்கலாம்.
ஷீலாவின் முன்னெடுப்பு
- அவை உருவாக்கும் சூழல் கேடுகளை முன்னிட்டு, அவை தடை செய்யப்பட்டன. டெல்லியின் மூன்று முறை முதல்வர் பதவியிலிருந்த ஷீலா தீக்ஷித், அரசியல் எதிர்ப்புகளை மீறி, டெல்லியில் இயற்கை எரிவாயுவினால் ஓடும் ஆட்டோ ரிக்ஷாக்களை, பேருந்துகளை அறிமுகப்படுத்தினார். டெல்லியின் இன்னொரு சாபக்கேடான சட்டத்துக்குப் புறம்பாக கிழக்கு டெல்லி மற்றும் மேற்கு டெல்லியின் ஓரங்களில் இயங்கிவந்த சிறு, குறு தொழில்களை நகருக்கு வெளியே குடியமர்த்தினார்.
- டெல்லியின் விளிம்புகளில், உள் வட்டச் சாலை (inner ring road), வெளிவட்டச் சாலை (outer ring road) எனச் சாலை கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன மெட்ரோ ரயிலும் இயங்கத் தொடங்கி, அடுத்த பத்தாண்டுகளில் டெல்லி ஒரு நவீன நகரமாக தன்னை உருமாற்றிக்கொண்டது. நவீன டெல்லியின் சிற்பிகளுள் ஒருவர் என ஷீலா தீக்ஷித்தையும் சொல்லலாம்.
- சில ஆண்டுகளிலேயே, கட்டுக்கடங்காத மக்கள்தொகைப் பெருக்கம், தனியார் வாகனப் பெருக்கம், டெல்லியின் சுற்றுச்சூழல் நிலையை மீண்டும் மோசமாக்கியது. பெருநகரங்களில், மக்கள்தொகை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசுபடுதல் தவிர்க்க முடியாதது என்னும் மனநிலை நம் பொதுநலத் திட்ட வடிவமைப்பாளர்களிடம் மேலோங்கி உள்ளது. ஆனால், நவீனமாகத் தன்னை உருமாற்றிக்கொள்ள விரும்பும் நகரம் சுற்றுச்சூழல் மாசுபடாமல் மாற்றிக்கொள்ளும் ஒரு பெரும் வாய்ப்பை சரித்திரம் நமக்கு வழங்க உள்ளது.
- அதுதான் இன்று மிக வேகமாக எழுந்து வந்துகொண்டிருக்கும் மின் வாகனத் தொழில்நுட்பம்.
மின் வாகனத்தின் பெருவருகை
- மின் வாகன ஆராய்ச்சிகளை முன்னெடுத்து நடத்திவரும் பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா, “இன்று இல்லையேல், இன்னும் சில ஆண்டுகளில் மின் வாகனங்கள் புழக்கத்துக்கு வந்தே தீரும். டீசல், பெட்ரோல் வாகனங்கள் வழக்கொழிந்து போகும்” என ஆணித்தரமாகக் கூறுகிறார். இவர் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சிப் பூங்காவை (Chennai IIT Research Park) வெற்றிகரமாக நிறுவியவர்.
- மின் வாகனங்கள், பெட்ரோல், டீசல் வாகனங்களைவிட 4 மடங்கு அதாவது 400% அதிகச் செயல்திறன் வாய்ந்தவை என்பது அவரது வாதங்களின் அடிப்படை. ‘மின் வாகனம் 50 மடங்கு குறைவான உதிரி பாகங்களைக் கொண்டது. தயாரிக்க மிகவும் எளிதானது. உலகின் மிக அதிகமான சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளான நகரங்களில், 63 இந்தியாவில் உள்ளன என்பது எல்லாவற்றையும்விட நாம் கவனம் அளிக்க வேண்டிய விஷயம். எனவே, மின் வாகன வழிப் போக்குவரத்தை மற்ற எந்த நாடுகளையும்விட இந்தியா மிக வேகமாக வரவேற்று முன்னெடுக்க வேண்டும்’ என்பதே அவர் முன்வைக்கும் வேண்டுகோள்.
நாமும் பங்குதாரராக வேண்டும்
- இன்று நம்மிடையே புழங்கிவரும் நவீன வாகனங்கள் அனைத்தும் உண்மையில் எரிபொருளை வீணடிக்கும் டைனோசர்கள் என்னும் ‘ஷாக்’ அடிக்கும் உண்மை வெளிப்படுகிறது. எனவேதான், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில், மின் வாகனங்கள் தொடர்பான தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் மிக வேகமாக நடந்துவருகின்றன.
- சென்னையில் அமைந்திருக்கும், இந்தியத் தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சிப் பூங்காவில், பல நிறுவனங்கள் இத்துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றன. “வழக்கம்போல், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள், மேற்கத்திய நாடுகளின் பொருட்களை அப்படியே வாங்கிப் பயன்படுத்திவிடலாம் என நினைக்கக் கூடாது. ஏனெனில், மேற்கத்திய நாடுகளின் போக்குவரத்து என்பது பெரும்பாலும் நீண்ட தூரம் செல்லும் தனியார் வாகனங்கள் மூலமாக நடைபெறுவது ஆகும்.
- டெஸ்லா போன்ற நிறுவனங்கள், மிக நீண்ட தூரம் செல்லக்கூடிய பெரிய கார்களை வடிவமைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவற்றின் விலை மிக அதிகம். அவை இந்தியாவில் பெருமளவில் விற்காது. இந்தியாவின் சந்தை என்பது சிறிய மற்றும் நடுத்தர வாகனங்களுக்கானது” என்கிறார் அசோக் ஜுன்ஜுன்வாலா.
- இந்தியாவில் பல முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களான டாடா, மஹிந்தரா, ஹுண்டாய், அசோக் லேலேண்ட், ஹீரோ போன்ற நிறுவனங்களும், இரண்டு சக்கர வாகனங்களில் ஹீரோ, ஒக்கினாவா, ஏதர், ஆம்பியர், ஓலா போன்ற நிறுவனங்களும் தீவிரமான ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் இறங்கியுள்ளன.
- ஆயினும், இன்னும் இது தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் உற்பத்தி அனைத்துமே ஒரு தொடர் வளர்ச்சி நிலையில், முதிராத நிலையில் உள்ளன. மின் வாகனத்தில் தொழில்நுட்பம் என்பது பெரிதாக இல்லை. மின் வாகனத்தின் பேட்டரிதான் மின் வாகனத்தின் இதயம். இந்த பேட்டரியின் செயல்திறன் மேம்பாடு பற்றிய ஆராய்ச்சிகள்தாம் உலகெங்கும் மிக வேகமாக நடந்துவருகின்றன.
- மின்சார வாகனங்களின் மிகப் பெரும் பிரச்சினைகள் பேட்டரியின் எடை மற்றும் அளவு, சார்ஜ் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றும் காலாவதியான பேட்டரிகளின் மறுசுழற்சி போன்றவை. பெட்ரோல், டீசல் வண்டிகளில், எரிபொருள் தீர்ந்துபோனால், உடனடியாக அருகிலுள்ள பெட்ரோல் பங்க் சென்று எரிபொருளை நிரப்பிக்கொண்டு செல்ல முடியும். ஆனால், பேட்டரி கார்களில் சார்ஜ் செய்ய மணிக்கணக்கில் நேரம் ஆகும்.
வளர்ந்துவரும் பேட்டரி தொழில்நுட்பம்
- பேட்டரியின் அளவும், எடையும் இன்றைய மின் வாகனங்களின் மிகப் பெரும் பிரச்சினை. ஒரு கிலோ மீட்டர் செல்ல ஆகும் பெட்ரொல் எடையைவிட, அதே தூரம் செல்ல ஆகும் பேட்டரியின் எடை 10-12 மடங்கு அதிகமாகும். எனவே, இந்தியச் சூழலுக்கேற்ற பேட்டரி அளவுகள், தொழில்நுட்பம் முதலியவற்றை உருவாக்கிக்கொள்ளும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
- தொடர்ந்த ஆராய்ச்சிகளின் விளைவாக, பேட்டரிகளின் மின்சக்தி அடர்த்தி, 80 வாட்/கி என்பதில் இருந்தது 310 வாட்/கி ஆக உயர்ந்திருக்கிறது. இதன் விளைவாக, பேட்டரிகளின் விலையும் 85% வரை குறைந்துள்ளன. விரைவில் பேட்டரிகளின் மின்சக்தி அடர்த்தி 500 வாட்/கி ஆக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மின் பேட்டரிகளின் செயல்திறன் அதிகரிப்பின் விளைவாக, பேட்டரிகளின் விலைகள் தொடர்ந்து குறையும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், சிறிய எடையுள்ள பேட்டரிகளை உபயோகித்து, மிக அதிக தூரம் வாகனங்கள் பயணிக்க முடியும்.
- நுகர்வோரின் தயக்கம்
- மின் வாகனத் தொழில்நுட்பங்கள் வளராத நிலையில், இன்று வாங்கும் வாகனத்தின் பேட்டரி தொழில்நுட்பம், அடுத்த சில ஆண்டுகளிலேயெ மாறிப்போகும் ஒரு நிலை உள்ளது. மின் வாகன பேட்டரிகளைச் சார்ஜ் செய்ய பல மணிநேரம் பிடிக்கும் என்பதும், சார்ஜ் தீர்ந்துவிட்டால், பெட்ரோல் - டீசல் வாகனங்கள்போல, விரைவில் சார்ஜ் போட முடியாது என்பதும், நுகர்வோர் இடையே உற்சாகத்தைக் குறைக்கும் விஷயங்கள். இந்தப் பிரச்சினைகள் ஆராய்ச்சிகள் மூலம் தீர்க்கப்பட வேண்டியவை என்பதனால், பெரும்பாலான தனியார் நுகர்வோர், மின் வாகனங்களை வாங்கி சகஜமாக பயன்படுத்த மிக நீண்ட காலம் பிடிக்கலாம்.
அரசு என்னும் வினையூக்கி
- இங்குதான் அரசு ஒரு முழுமையான திட்டமிடுதல் மூலம், விலை மலிவான, சௌகர்யமான ஒரு பொதுப் போக்குவரத்தைத் திட்டத்தை உருவாக்கி, முன்னின்று செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செயல்படுத்துவதன் மூலம், மின் வாகனப் பயன்பாடு பற்றிய நேர்மறைச் சூழலை சமூகத்தில் விரைந்து உருவாக்கிட முடியும். சமூகமும், செயல்திறன் மிக்கதாக மாறும். சுற்றுச்சூழல் மாசு மற்றும் ஒலி மாசு குறையும்.
- பொதுப் போக்குவரத்தில் மின் வாகன உபயோகத்தை அதிகரிக்க, ஒன்றிய அரசு ‘ஃபேம் – பாஸ்டர் அடாப்டேஷன் அண்ட் மேனுபேக்ச்சரிங் ஆஃப் எலெக்ட்ரிக் வெஹிகில்ஸ்’ (Faster Adoption and Manufacturing of Electric Vehicles – FAME) என்னும் திட்டத்தின் கீழ் மாநில அரசுகள், மின் வாகனங்களை வாங்கி பயன்படுத்த, ஒன்றிய அரசு மானியங்கள் வழங்குகிறது. அண்மையில், தமிழ்நாடு அரசு 640 மின் வாகனங்களுக்கான ஒரு டெண்டரை வெளியிட்டுள்ளது.
- இது மிக மிகச் சிறிய நடவடிக்கை. தொடக்க காலத்தில் இந்த வாகனங்களின் விலை அதிகம் என்பதால், மின் வாகன உற்பத்தியாளர்களே இந்த வாகனங்களின் இயக்கத்தையும், பழுது பார்ப்பதையும் செய்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்துத் துறையில் வேலையிழப்பு ஏற்படும் எனப் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் எதிர்க்கிறார்கள். இது எதிர்பார்க்கக்கூடியதுதான்.
- ஒருகாலத்தில், இந்தியாவுக்கு வழிகாட்டியாக இருந்த தமிழ்நாடு போக்குவரத்து நிறுவனங்கள், கடந்து 30 ஆண்டுகளில் பெரும் ஊழல்களினால் சீரழிந்து நிலைகுலைந்து உள்ளன. ஓய்வுபெறும் ஊழியர்களுக்கான ஓய்வூதியத் தொகைகள் கொடுப்பதுகூடத் தாமதமாகிறது. ஆனால், வருங்காலத்தில் செயல்திறன் மிக்க தொழில்நுட்பம் வளர்ந்து வருகையில், பழங்கால போக்குவரத்து நிறுவன அமைப்பும், நடைமுறைகளும் இன்றைய சூழலுக்கு ஒத்துவராது. தமிழ்நாட்டின் மிகப் பெரும் பண விரயம் இரண்டு துறைகளில் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மின்சாரம் மற்றும் பொதுப் போக்குவரத்து.
- இதில் பொதுப் போக்குவரத்துத் துறையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி, பொதுப் போக்குவரத்து நஷ்டங்களைப் பல மடங்கு குறைத்து, சேவையின் தரத்தை பலமடங்கு அதிகரிக்க வல்லது. எனவே, அடுத்த சில ஆண்டுகளில், இப்போதிருக்கும் ஊழியர்களுக்கு வேலையிழப்பு ஏற்படாத வண்ணம் மெல்ல மெல்ல, இதைத் தனியார்மயமாக்குவதை அரசு திட்டமிட வேண்டும்.
- இந்த யதார்த்தத்தை அரசு போக்குவரத்துத் துறைத் தொழிலாளர் அமைப்புகளுடன் பேசிப் புரியவைக்க வேண்டும். தனியார் துறை வந்தாலும், வேலைவாய்ப்பு இழப்பு நிகழப்போவதில்லை. ஏனெனில், பேருந்துகளை இயக்கவும், மேலாண்மை செய்யவும் பணியாளர்கள் தேவைப்படுவார்கள். தனியார் துறையாக இருந்தாலும், இதில் தகுதியான ஊழியர்கள், சமூக நீதி அடிப்படையில் பணியமர்த்தப்பட வேண்டும்.
தேவை: முழுப் போக்குவரத்துத் திட்டம்
- முழுமையான பொதுப் போக்குவரத்துத் திட்ட அணுகுமுறையைத் தொடங்க சென்னை மிகச் சரியான நகரம். அதிக மக்கள்தொகையும், தினசரி அலுவலகம் செல்லும் மக்கள்தொகையும் அதிகம் என்பதால், இங்கே சிக்கல்களும், புத்தாக்க வாய்ப்புகளும் அதிகம். சென்னையின் பொதுப் போக்குவரத்து முறையில், பேருந்துகள், மெட்ரோ, பறக்கும் ரயில் மற்றும் சென்னை மொபஸில் ரயில் எனப் பல நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இவற்றுள், அனைத்து ரயில்களும் மின்சாரத்தில் ஓடுகின்றன. பேருந்துகள் டீசலில் ஓடுகின்றன.
- எனவே, சென்னைக்கான முழுமையான போக்குவரத்துத் திட்டம் என்பதைக் கீழ்க்கண்ட படிநிலைகளாகத் திட்டமிடப்படலாம்.
- 1. சென்னையில் இயங்கும் மாநகரப் போக்குவரத்துப் பேருந்துகள் அனைத்தும் மின் வாகனங்களாக மாற்றப்பட வேண்டும்.
- 2. பள்ளி மற்றும் பெருநிறுவன ஊழியர்களுக்காக இயங்கும் அனைத்துப் பேருந்துகளும் மின் வாகனங்களாக மாற்றப்பட வேண்டும். இதற்கான குறைந்த வட்டியில் கடனுதவியை வழங்குவதை அரசு செய்யலாம்.
- 3. சென்னையில் மூன்று வகை ரயில்கள் மற்றும் பேருந்துப் போக்குவரத்து இருந்தாலும், அவை தனித்தனி போக்குவரத்து முறைகளாக இயங்கிவருகின்றன.
- 4. இதில் பேருந்துகள் மட்டுமே, மக்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் வரை செல்கின்றன. அதனால், பொதுமக்கள் வேறு வழியின்றி பேருந்துகளை அதிகம் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக, பேருந்துகள் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் பிரச்சினை ஏற்படுகிறது.
- 5. சென்னை போன்ற வெப்ப நகரத்தில், குளிரூட்டப்பட்ட வசதிகள் இல்லாத, நெரிசல் மிகுந்த வண்டியில் பயணிப்பது, அலுவலகம் செல்லும் பலருக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு மிகவும் தொந்தரவாக உள்ளது. எனவே, சாலைகளில் தனியார் வாகனங்கள் அதிகமாகிக்கொண்டே போகின்றன.
- 6. தமிழக அரசு, மிகத் துணிச்சலாக, சென்னைப் போக்குவரத்து முறைகள் அனைத்தையும் குளிர்சாதன வசதிகள் கொண்டவையாக மாற்ற வேண்டும். முதல் தவணையில், குறைந்தபட்சம் 50% பேருந்துகளை சற்றே உயர் கட்டணத்துடன் மாற்றலாம்.
- 7. சென்னையில் பேருந்து நிலையங்கள், போக்குவரத்துக் கழகத்தின் பணிமனைகள், சாலைகள், அரசுக் கட்டிடங்கள் அமைந்திருக்கும் பொதுவெளிகளில், சூரிய ஒளி மின்னுற்பத்திப் பேனல்கள் நிறுவப்பட்டு, அதனால் உற்பத்தியாகும் மின்சாரத்தை, குறைந்த விலையில், இந்தப் பொதுப் போக்குவரத்துத் துறைக்கான மின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கொடுக்கலாம். இதன்மூலம் பயணக் கட்டணங்களை மிதமாக வைத்துக்கொள்ள முடியும்.
- 8. பறக்கும் ரயில், மெட்ரோ போன்ற ரயில் போக்குவரத்துகள், மக்கள் வசிக்கும், பணிபுரியும் இடங்களில் இருந்து விலகியிருப்பதால், அவற்றில் மக்கள் பயணம் செய்வது மிகக் குறைவாக உள்ளது. இந்தக் குறையைப் போக்க, இந்த ரயில் செல்லும் நிலையங்களில் இருந்து அருகிலுள்ள பேருந்து நிலையங்களுக்கு குடியிருப்புப் பேருந்து நிறுத்தங்கள் வழியே செல்லும் வகையில் குளிரூட்டப்பட்ட சிறு மின் வாகனங்களை இயக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இந்த வாகனங்களை அந்தந்த ரயில் நிர்வாகங்களே இயக்க வேண்டும்.
- 9. பல்வேறு ரயில்கள், பேருந்துகள் என பயணிகள் எளிதில் மாறி மாறிப் பயணம் செய்யும் வகையில், மாத மின்னணுக் கட்டண அட்டைகளை அறிமுகம் செய்ய வேண்டும். இதனால், ரயில், பேருந்து எனப் பல வகைப் போக்குவரத்து முறைகளைப் பயணிகள் எளிதில் பயன்படுத்த முடியும்.
- 10. இதற்கான ஓர் ஒருங்கிணைந்த நிறுவனம் உருவாக்கப்பட்டு, அதை நீண்ட கால நோக்கில் மேலாண்மை செய்ய, உலகில் இதுபோன்ற துறையில் அனுபவம் வாய்ந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தலாம். இதற்கான மிக வெற்றிகரமான உதாரணம் – சென்னையில் ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில், ஒனிக்ஸ் என்னும் சிங்கப்பூர் நிறுவனம் மிக வெற்றிகரமாக சென்னையின் திடக்கழிவு அகற்றும் பணியைச் செய்தது. ஆனால், ஒப்பந்த காலம் முடிந்ததும், குறைவான விலையில் டெண்டர் என்னும் முறையில், உள்ளூர் நிறுவனம் ஒன்று எடுத்து சொதப்பியது. அதுபோன்ற தவறுகள் ஏற்படாமல், இதில் செயல்திறன் முன்வைக்கப்பட்டு, அதில் அனுபவம் உள்ள நிறுவனத்துடன், நீண்ட கால நோக்கிலான ஒப்பந்தம் வெளிப்படையான முறையில் உருவாக்க வேண்டும்.
- 11. இப்படி ஒரு வெற்றிகரமான பொதுப் போகுவரத்து முறை செயல்படுத்தப்பட்டவுடன், சிங்கப்பூர் போல, தனியார் போக்குவரத்து வாகனங்களுக்கு (கார்கள் / மோட்டார் சைக்கிள்கள்) அதிக வரி விதிக்கப்பட வேண்டும். இதனால், பொதுப் போக்குவரத்து மேலும் ஊக்குவிக்கப்படும்.
- அடுத்த ஐந்தாண்டுகளில், பயணிகள் மிகவும் சௌகர்யமாகப் பயணம் செய்யும் ஒரு முழுமையான வழியைத் திட்டமிட்டுச் செயல்படுத்துதல், நீண்டகால நோக்கில், சென்னை தொழில் முதலீட்டாளர்களையும், பணிபுரிபவர்களையும் ஈர்க்கும். சென்னையில் காற்று மாசு, ஒலி மாசு இவையிரண்டும் வெகுவாகக் குறையும்.
- சூழல் மாசு. ஒலி மாசு குறைந்த, பயணிகளுக்கு சௌகர்யமான, தரமான, முழுக்க மின்சக்தியால் இயங்கும் பொதுப் போக்குவரத்து முறை, சென்னை உலகத்தரம் வாய்ந்த நகரம் என்னும் இலக்கை அடைவதற்கான மிக முக்கியமான தேவை.
நன்றி: அருஞ்சொல் (24 – 11 – 2022)