- நவம்பரில் சென்னையில் பொழிந்த பெருமழையை வழக்கமான நிகழ்வுகளுள் ஒன்றாக நாம் கடந்து போக முடியாது. நவம்பர் 6 அன்று இரவு நகரில் 23 செ.மீ.மழை பதிவாகியது. 12ம் தேதி வரை மழை தொடர்ந்தது. நகரம் மிதந்தது.
- தேங்கிய நீர் மெல்ல வெளியேறியது அல்லது வெளியேற்றப்பட்டது. வானம் வெறித்தது. இப்படியொரு மழை பொழிவதற்கு இன்னும் சில ஆண்டுகள் வேண்டிவரும். சிலர் அப்படிச் சொன்னார்கள்.
- மேலும் அடுத்தடுத்த செய்திகள் வரிசையில் நின்றன. நகரவாசிகளின் கவனம் சற்றே பிசகியதும் தன் இருப்பைக் காட்ட கடந்த டிசம்பர் 30 அன்று நகர் முழுக்கக் கேட்கும்படியாகக் குரலெடுத்து அழுதது மழை.
- மாலை நாலு மணிக்கும் நாலேகாலுக்கும் இடைப்பட்ட 15 நிமிடங்களுக்குள் நுங்கம்பாக்கம் மழைமானியில் 20 செமீ மழை பதிவாகியது. இது டிசம்பர் மாதம் முழுவதும் சென்னையில் பெய்யக்கூடிய சராசரி மழை அளவைக் காட்டிலும் அதிகம்.
- அன்றைய இரவுக்குள்ளாக அம்பத்தூர், ஆவடி, எம்.ஜி.ஆர் நகர், பூந்தமல்லி, எம்.ஆர்.சி நகர் முதலிய பல இடங்களில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்தது.
- மயிலாப்பூர் காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் 24 மணி நேரத்தில் 24 செ.மீ.மழை பதிவாகியது. நகரத்தின் போக்குவரத்து தடுமாறிப்போனது.
- அண்ணா சாலை, ஈ.வெ.ரா. சாலை, நூறடி சாலை, ராஜீவ் காந்தி சாலை, ஜி.எஸ்.டி சாலை என நகரின் பிரதான சாலைகள் அனைத்திலும் தேங்கியது வெள்ளம். வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. மாலையில் நகர்க் குருவிகள் தத்தம் வீடடைய மூன்று மணி நேரமும் அதற்கு அதிகமாகவும் ஆனது.
- இந்த மழையை யாரும் எதிர்பார்க்கவில்லை. வானிலை மையங்களால் கணிக்க முடியவில்லை. மக்களிடையே பிரபலமான வெதர்மேன்களாலும் முன்னுணர முடியவில்லை.
- அவர்கள் அனைவரும் மழை கொட்டித் தீர்த்ததும் அதைப் புரிந்துகொள்ள முயன்றனர். மேக வெடிப்பு என்றனர் சிலர். பருவநிலை மாற்றம்தான் காரணம் என்றனர் சிலர்.
அரசு வழங்க வேண்டும்
- இது போன்ற திடீர்ப் பெருமழை கடந்த ஆண்டில் உலகின் பல நகரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 2021 ஜூலை 25 அன்று மாலை மூன்று மணிக்கும் ஐந்து மணிக்கும் இடையில் லண்டனில் கொட்டிய மழையினால் நகரின் பிரதான சாலைகளின் போக்குவரத்து நின்று போனது.
- அதே மாதம் சீனாவின் ஜெங்ஜாவ் நகரத்தில் 24 மணி நேரத்தில் கொட்டிய மழையின் அளவு 62 செமீ; அந்த மழை நாளில் ரயில் சுரங்கமொன்றில் சிக்கிய 12 பேரைச் சடலங்களாகத்தான் மீட்க முடிந்தது.
- அதே மாதம் ஜெர்மனியில் இரண்டு மணி நேரத்தில் கொட்டிய மழை ஜூலை மாதம் முழுவதும் அங்கு பெய்யக் கூடிய மழையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது; அதனால் 600 கி.மீ. ரயில் தடங்களும் 80 ரயில் நிலையங்களும் நீரில் மூழ்கின; 180 உயிர்கள் பலியாயின.
- இதில் எந்தப் பெருமழையையும் வானிலை மையங்களால் கணிக்க முடியவில்லை. சூழலியர்கள் பருவநிலை மாற்றத்தின் கெடுவிளைவுகள் இவை என்கிறார்கள். உலகம் வேகமாக நகரமயமாகிவருகிறது.
- நகரங்கள் இடைவெளி இல்லாமல் வீடுகளாலும் வளாகங்களாலும் சாலைகளாலும் நிரப்பப்படுகின்றன. நகரில் நீரை வாங்கிச் செரிக்கும் மண்தரைகள் குறைவு. மழைநீரின் பெரும் பகுதியை வடிகால்கள்தான் கடத்தியாக வேண்டும்.
- சூழலியல் பேராசிரியர் வெரோனிகா பிரவுன் பிபிசிக்கு அளித்த நேர்காணலில் லண்டனின் மழைநீர் வடிகால்களால் இந்தக் குறுகிய காலப் பெருமழையை எதிர்கொள்ள முடியவில்லை என்றார்.
- அது லண்டன். சென்னை எங்கே நிற்கிறது? நமது பிரச்சினை லண்டனைப் போல் குறுகிய காலப் பெருமழையால் மட்டும் வந்ததல்ல. நவம்பர் மாதம் மழையைத் தொடர்ந்து நடந்த உரையாடல்களில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை விழுங்கி நிற்கும் ஆக்கிரமிப்புகளைப் பற்றியும் வடிகால்களைக் குப்பைக்கூளங்களால் அடைத்துவிடும் நகரவாசிகளின் பொறுப்பின்மையைப் பற்றியும் பலரும் பேசினார்கள்.
- இவற்றைச் சரிசெய்தேயாக வேண்டும். அதே வேளையில் மழைநீர் வடிகால்களின் போதாமையைப் பற்றியும், அதன் வடிவமைப்பில் உள்ள குறைபாடுகளைப் பற்றியும் ஆழமான உரையாடல் நிகழவில்லை.
- நவம்பர் மாத இறுதியில் சென்னை நகராட்சி மழைநீர் வடிகால்களின் வரைபடங்களை பொது வெளியில் வைத்தது. நகரின் பல பகுதிகளில் வடிகால்கள் இல்லை. இருக்கும் வடிகால்கள் நடைபாதைகளுக்குக் கீழ் செவ்வக வடிவில் அமைந்தவை.
- சென்னை நகரத்தின் நிலமட்டம் கடல் மட்டத்தைவிட சில அடிகள்தான் உயரமாக இருக்கிறது. பாரம்பரியமான செவ்வக வடிகால்களால் இந்த மழை நீரை வடித்துவிட முடியாது. அதற்குப் போதுமான வாட்டம் நகரத்துக்குள் இல்லை.
- மேலதிகமாக இந்த வடிகால்கள் மழைநீரின் கொள்ளளவுக்கு ஏற்ற ஆழத்தையும் அகலத்தையும் கொண்டிருக்கவில்லை.
- பல இடங்களில் அவை கால்வாயோடோ ஆற்றோடோ இணைக்கப்படவுமில்லை. சில இடங்களில் அவற்றின் வாட்டம் தவறாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
- சென்னை நகரின் இன்னொரு பிரச்சினை, காற்றழுத்த தாழ்வுநிலைக் காலங்களில், கடலில் அலைகள் உயரும்.
- அப்போது ஆறு கொண்டு வரும் மழைநீரைக் கடல் உள்வாங்காது. என்ன செய்ய வேண்டும்? மழைநீர் வடிகால்களைச் சாலைகளின் நீர்வரத்துக்கு ஏற்ப வடிவமைக்க வேண்டும். செவ்வக வடிகால்களால் நீரைக் கடத்த முடியாத இடங்களில் ஆழ்குழாய்கள் தேவைப்படும்.
- போதுமான வாட்டம் இல்லாத இடங்களில் நீர் இறைக்கும் இயந்திரங்கள் தேவைப் படலாம். இந்த வடிகால்கள் பிரதானக் கால்வாய்களோடும், இந்தக் கால்வாய்கள் ஆற்றோடும் இணைக்கப்பட வேண்டும்.
- முகத்துவாரத்தில் சுரங்கப் பாதைகள் மூலமாகக் கடலில் சேர்ப்பிக்க வேண்டி வரலாம். ஆகவே சென்னை நகர் முழுமைக்குமான ஒரு வடிகால் பெருந்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதில் இப்போதைய பிரச்சினையான குறுகிய காலத்துப் பெருமழையையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
- ஆனால், கடந்த சில ஆண்டுகளாகப் பாரம்பரியச் செவ்வக வடிகால்களை மேம்படுத்துவதில்தான் நகராட்சியின் காலமும் பொருளும் வீணாகச் செலவாகியிருக்கின்றன என்பதை இயற்கை நமக்கு மீண்டும் மீண்டும் சொல்கிறது.
- சமீபத்தில் வெளியான அறிவிப்பொன்று உலக வங்கியின் கடனுதவியோடு 45 கிமீ நீளத்துக்கான வடிகால்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தது. இது நகர் முழுமைக்குமான வடிகால் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தால் மட்டுமே பயன் தரும்.
- இந்தியாவில் உருவான முதல் நவீன நகரம் சென்னை. ஒரு நவீன மழைநீர் வடிகால் திட்டத்துக்கு இந்த நகரம் அருகதையானது. அதைத் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (11 - 01 - 2022)