TNPSC Thervupettagam

சென்னையில் உயிருக்கு மதிப்பிருக்கிறதா

May 31 , 2023 591 days 327 0
  • மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றித் தருவதுதான் அரசு நிர்வாகத்தின் அடிப்படைப் பண்பு. ஆனால், சென்னை மாநகர மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுவதை சேவைத் துறைப் பணி என்னும் அளவில் மாற்றி குடிநீர் விநியோகம், சாலை வரி, வீட்டு வரி, சொத்து வரி என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மதிப்பு வைத்துப் பணம் ஈட்டும் நிறுவனமாக மாறிவிட்டது, பெருநகரச் சென்னை மாநகராட்சி. அதன் விளைவாக, நகரத்தின் வளர்ச்சிக்குக் கொடுக்க வேண்டிய அக்கறையை மக்களின் வாழ்க்கைக்கு, உயிர் பாதுகாப்புக்குக் கொடுக்க முடியாமல் போகிறது.

அபராதம்... அபராதம்:

  • பெருநகரச் சென்னை மாநகராட்சியின் பணிகளை அதன் இணையப் பக்கங்களில் சமீபத்தில் பார்வையிட நேர்ந்தது. இரண்டு வாரங்களில் மட்டும் பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.11,55,090 அபராதமும் கட்டுமானக் கழிவுகளைக் கொட்டிய நபர்களுக்கு ரூ.9,93,300 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.
  • அரசு, மாநகராட்சிக் கட்டிடங்கள், பெயர்ப் பலகைகள், பொது இடங்களில் விதிகளை மீறிச் சுவரொட்டி ஒட்டிய 1,072 நபர்கள்மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு, ரூ.1,87,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல, பொது இடங்கள், நடைபாதைகளில் 563 நிரந்தரக் கட்டுமானங்களுடன் கூடிய ஆக்கிரமிப்புகள், 1,366 தற்காலிகக் கூடாரங்கள் என 1,929 ஆக்கிரமிப்புகள் கடந்த மூன்று வாரங்களில் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
  • இது மட்டுமல்ல, பெருநகரச் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மே 20ஆம் தேதி உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றுள்ளது.
  • அக்கூட்டத்தில், ‘நமக்கு நாமே திட்டம், நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம், சிங்காரச் சென்னை 2.0, சாலைகள் - நடைபாதைகளைச் சீரமைத்தல், பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நவீன மீன் அங்காடி அமைத்தல், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், புதிய பூங்காக்கள் அமைத்தல், மயான பூமிகளை மேம்படுத்துதல், மாநகரைப் பசுமையுடன் பராமரிக்க மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது’ எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
  • இவ்வளவு பணிகள் நடைபெற்றுவருவதாகக் கூறப்பட்டாலும், மனித உயிர்களுக்கு என்ன மதிப்பு அளிக்கப்படுகிறது எனப் பார்த்தால் மிஞ்சுவது பெருத்த ஏமாற்றம்தான்.

நீதி கிடைக்காத மரணங்கள்:

  • சில சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்: அண்ணா சாலை கிரீம்ஸ் ரோடு மெட்ரோ ரயில் நிலையப் படிக்கட்டுக்கு அருகில் பழைய கட்டிடத்தை இடிப்பதற்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. ஆனால், விதிமுறைகளின்படி அந்தக் கட்டிடம் இடிக்கப்படுகிறதா என்று மேற்பார்வை செய்யும் பணிகளில் அதிகாரிகள் யாரும் ஈடுபடவில்லை.
  • இதன் விளைவாக, ஜனவரி 27 காலை விதிமுறைகளை மீறி இடிக்கப்பட்ட கட்டிடத்தின் சுவர் இடிந்து, மெட்ரோ ரயில் நிலையப் படிக்கட்டில் இறங்குவதற்காக நடைபாதையில் நடந்து சென்ற இளம் பெண் பத்மப்ரியா பரிதாபமாக உயிரிழந்தார். நீதி கேட்டு அதே இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. ஆனால், அரசு நிர்வாகமோ இறந்த இளம் பெண்ணின் சடலத்தைச் சாதுரியமாக அவரது சொந்த ஊரான மதுரைக்கு அனுப்பி வைப்பதிலேயே கவனம் செலுத்தியது.
  • மார்ச் 6 அன்று, தி.நகர் ஏஜிஎஸ் திரையரங்கம் அருகில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டின் மரம் விழுந்து ஆட்டோவில் வேலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த மாற்றுத் திறனாளிப் பெண் சூர்யா மரணமடைந்தார். மாற்றுத்திறனாளிகள் சங்கம் போராட்டம் நடத்தியது; மனு கொடுத்தது. ஆனால், இறந்தவர் குடும்பத்தைச் சென்னை மாநகராட்சி ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
  • பிரசவத்துக்குப் புளியந்தோப்பு மாநகராட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தலித் பெண் ஜனகவள்ளி, உரிய சிகிச்சை கிடைக்காமல் ஏப்ரல் 6 அன்று இறந்தார். மக்கள் விடியவிடியப் போராடினர். காவல் துறை உயர் அதிகாரி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துபூர்வமாக வாக்குறுதி அளித்தார்.
  • சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் எதிரிலுள்ள சாலையில் மாநகராட்சி மழைநீர் கால்வாய்ப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தப் பணியாளர் கனகராஜ் பணியிடத்தில் மின்சாரம் தாக்கி ஏப்ரல் 13 அன்று உயிரிழந்தார். எந்த அடிப்படை விதிகளையும் கடைப்பிடிக்காமல் பணியில் ஈடுபடச் செய்ததால் ஏற்பட்ட மரணம் அது.

அலைக்கழிப்பின் அவலம்:

  • ஜனகவள்ளி மற்றும் கனகராஜ் ஆகிய இரண்டு மரணங்களுக்கு நீதி கேட்டு, சென்னைப் பெருநகர மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. மரணச் செய்திகளைக் கேட்டு ஆணையர் அதிர்ச்சி அடைந்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வருத்தமும் தெரிவித்தார். ஒரு வார காலத்தில் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கையளித்தார். ஆனால், அந்த வார்த்தைகள் இன்னும் வார்த்தைகளாகவே இருக்கின்றன.
  • வாரங்கள் ஓடிவிட்டன. உயிரிழந்தவர்களின் உறவினர்களோடு மீண்டும் ஆணையரைச் சந்தித்து முறையிடப்பட்டது. உயர் அதிகாரிகள் விடுமுறையில் இருந்ததால், விசாரணை மேற் கொள்ளப் படவில்லை என்று மீண்டும் ஒரு வார கால அவகாசம் கேட்டார் ஆணையர். ஆனால், அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவே இல்லை.
  • இதற்கிடையே, அவகாசம் கேட்ட ஆணையர் பணிமாறுதலுக்கு உள்ளானார். இப்போது புதிய ஆணையரிடம் கோரிக்கையின் நியாயங்களும், அலைக்கழிப்பின் அவலமும் வலியும் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. உதவியாளரை அழைத்து ஒரே நாளில் கோப்புகள், விவரங்கள் தனக்கு வர வேண்டும் என்கிறார். உயிரிழந்த குடும்பங்கள் அதிகாரியின் கண்களை நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றன‌.

மனித உயிரின் மதிப்பு:

  • நாள்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன. இறந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் தயாராக இல்லை. இப்படியான இறப்புக்குக் காரணங்களைக் கண்டறிந்து, அடுத்த மரணம் நிகழாமல் தடுக்கும் பரிதவிப்பு எங்குமே வெளிப்படவில்லை. ஒரு மரணம் எந்த அளவு பரபரப்புச் செய்திகளுக்கு உள்ளாக்கப்படுகிறதோ அதை வைத்துதான் மதிப்பிடப்படுகிறது. இந்த நகரத்துக்கு உயிர் கொடுக்க உழைப்பையும் உயிரையும் கொடுக்கும் மனிதர்களின் வலிகள், அவர்தம் குடும்பங்களின் பாடுகள் எதுவும் அதிகாரவர்க்கத்துக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.
  • சிங்காரச் சென்னை 2.0 திட்டப் பணிகளுக்காகப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த ஓட்டத்தில் இந்த நகரத்தை உருவாக்கிய, உழைப்பைச் செலுத்துகிற, உயிர் கொடுத்த மக்களின் நலனுக்கு இடமிருப்பதாகத் தெரியவில்லை. அரசின் அலட்சியத்தால் உயிரிழந்த மக்களுக்கு நீதி கேட்டு மனு கொடுக்கச் செல்லும்போதெல்லாம், வெள்ளையர் காலத்தில் கட்டப்பட்ட ‘வெள்ளை மாளிகை’ எகத்தாளமாக நகைப்பதுபோலவே தோன்றுகிறது.
  • அரசு அலுவலகங்கள் மக்களின் நம்பிக்கைகளைப் பெற்றதாக இருக்க வேண்டும். மக்களின் சார்பில், மக்களின் பொதுச் சொத்தை நிர்வகிக்கும் வகையில் அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகளும் செயல்பட வேண்டும் என்பது வெறும் எதிர்பார்ப்பு மட்டும் அல்ல; அது மக்களின் உரிமை, மக்கள் பிரதிநிதிகளின் கடமை. ஜனநாயகத்தில் சாமானிய மனிதர்கள் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

நன்றி: தி இந்து (31 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்