TNPSC Thervupettagam

செம்மொழி அந்தஸ்துக்குத் தகுதியானதா பாலி?

October 29 , 2024 3 days 30 0

செம்மொழி அந்தஸ்துக்குத் தகுதியானதா பாலி?

  • மொழி என்பது ஒரு முறையான அமைவு கொண்ட இணைப்புக் கருவி​யாகும். இது இலக்கணம், இலக்கியம், சொல்வளங்களை உள்ளடக்​கியது; சிக்கலான தொடர்பு முறைகளைப் பெறுவதற்​கும், பயன்படுத்து​வதற்கும் உரிய வல்லமை கொண்டது.
  • தற்போது உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் மொழிகள் பேசப்​படு​கின்றன. ஆனால், இவற்றில் வெறும் 23 மொழிகள் மட்டும்தான் உலக மக்கள்​தொகையில் ஆதிக்கம் செலுத்து​கின்றன. இவ்வாறு பேசப்​படும் மொழிகள் வெவ்வேறு மொழிக் குடும்பங்​களைச் சேர்ந்தவை என்றாலும், அவற்றின் தோற்றம் ஆயிரக்​கணக்கான ஆண்டு​களுக்கு முந்தையது.
  • இன்றும் பயன்பாட்டில் உள்ள முறையான 10 மொழிகளில் தமிழும் சிறப்​புக்​குரிய இடத்தில் இருக்​கிறது என்பது நமக்குப் பெருமை. திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள தென் திராவிட மொழி, நடு திராவிட மொழி, வட திராவிட மொழி உள்ளடக்கிய 28 மொழிகளில் முதன்மை மொழியாக விளங்​கு​கிறது நம் தமிழ்!

செம்மொழிக்கான தகுதி:

  • ஒரு மொழியானது 1,500 ஆண்டுகள் முதல் 2,000 ஆண்டுகள் வரையிலான வரலாறு, பழமையான இலக்கி​யங்கள் கொண்டதாக இருக்க வேண்டும். அல்லது அம்மொழியின் தொடக்கக் கால இலக்கி​யங்கள் உயர் தரத்தில் இருக்க வேண்டும். அம்மொழியின் இலக்கிய மரபுகள், அம்மொழிக்கு உரியவையாக இருத்தல் வேண்டும் என்கிற தகுதிகளே செம்மொழிக்கான அடித்​தள​மாகும்.
  • தொன்மை, தனித்​தன்மை, பொதுமைப் பண்பு, நடுநிலைமை, கிளை மொழிகளின் தாய், பட்டறிவு இலக்கி​யங்கள், பிறமொழித் தன்மை, சமயச்​சார்பு, உயர்சிந்தனை, கலை, மொழிக் கோட்பாடுகள் போன்ற அம்சங்​களில் செம்மொழிகள் குறித்தான தகுதி வரையறுக்கப்படுகிறது.

செம்மொழிகளின் சிறப்​பம்​சங்கள்:

  • உலகச் செம்மொழி​யாகக் கருதப்​படும் மொழிகள் எட்டு என்று வரையறுத்​திருக்​கிறார்கள் மொழியியல் அறிஞர்கள். அவை: கிரேக்கம், சம்ஸ்​கிருதம், லத்தீன், பாரசீகம், அரபு, எபிரேயம், சீனம் மற்றும் தமிழ். இந்தியாவில் ஆரியம் சார்ந்த பயன்பாட்டுக்கு வடமொழி எப்படி விளங்கியதோ, அதைப் போலவே திராவிடம் சார்ந்த பயன்பாட்டுக்குத் திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் மொழி 2,600 ஆண்டு​களுக்கு மேற்பட்ட இலக்கியப் பழமை வாய்ந்தது.
  • ஐரோப்பிய நாகரி​கத்தை அறிந்​து​கொள்ள கிரேக்கம், லத்தீன் மொழிகளைப் போல, இந்திய வரலாற்​றை​யும், சேர, சோழர், பாண்டியர்கள் போன்ற​வர்​களின் வரலாற்​றையும் அறியத் தமிழ் மொழி தேவையாக உள்ளது. தமிழில் செம்மொழித் தகுதிக்கு உரியதாகத் திருக்​குறளும் சங்க இலக்கிய நூல்களும் திகழ்​கின்றன.
  • கிரேக்க மொழி மிகப் பழமையான பாரம்​பரியம் கொண்டது. கிரேக்க இலக்கி​யத்தில் ஹோமர் என்னும் மகாகவியின் காப்பி​யங்களான ‘இலியத்’, ‘ஒடிசி’ ஆகியவை பிரபல​மானவை. பிளாட்டோ, அரிஸ்​டாட்டில் போன்றோரின் தத்துவ மொழிகள் கிரேக்க மொழியின் இலக்கிய வளத்துக்குப் பெரும் சான்றாகும். ஐரோப்பிய நாடுகளில் உள்ள செம்மொழித் தகுதி படைத்த லத்தீன் மொழியில் வர்ஜில் படைத்த ‘அனீயத்’ என்னும் காப்பியம் சிறப்பு​டையது.
  • சிசிரோ, செனகா போன்ற தத்துவ அறிஞர்​களின் சொற்பொழி​வுகள் லத்தீன் மொழிக்கு வலுச்​சேர்க்​கின்றன. செம்மொழியான அரபு மொழியில் குரான் சிறந்த இலக்கிய​மாகக் கருதப்படுகிறது. பொ.ஆ.மு. (கி.மு.) 600இல் வாழ்ந்த கன்பூசியஸ், லாவோட்சு போன்றோரின் தத்துவப் படைப்புகள் சீன மொழியின் இலக்கிய வளத்துக்கு முக்கியச் சான்றுகள்.
  • எபிரேய மொழியில் பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலக்​கட்டத்தில் பழைய ஏற்பாடு எழுதப்​பட்டது. பாரசீகம் அரேபிய வரி வடிவத்தில் எழுதப்பட்ட ஈரான் நாட்டின் ஆட்சி மொழியாகும். இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் எண்கள் பாரசீகம் வழங்கியது​தான். உமர்கய்யாம் என்னும் கவிஞரின் கவிதைகள் உலகம் போற்றக்​கூடிய ஒன்றாகும்.

பாலி மொழியின் சிறப்புகள்:

  • இந்தப் பின்னணியில் இந்திய செம்மொழிகளின் வரிசை​யில், பாலி மொழியும் இணைகிறது. இந்தோ-ஆரிய அல்லது பிராகிருத மொழியான பாலி, பௌத்த சமயத்தின் பழம் பெரும் நூலைக் கொண்ட மொழி என்னும் சிறப்​பையும் பெருமை​யையும் கொண்டது. தேரவாத பௌத்தத்தின் சமய நூல்கள் இம்மொழியில் எழுதப்​பட்​டிருப்பதன் காரணமாக இம்மொழி மிகவும் பிரபல​மானது. இந்தோ ஐரோப்பிய மொழிகள் - இந்திய ஆரிய மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்தது பாலி.
  • பாலி மொழி பல்வேறு வரி வடிவங்​களில் எழுதப்​பட்​டுள்ளது. தேவநாகரியில் இருந்து காரோ வரையும் பல்வேறு இந்திய எழுத்து வடிவங்​களி​லும், ரோமனாக்கம் செய்யப்பட்ட ஆங்கில எழுத்து முறைகளிலும் பாலி எழுதப்​படு​கிறது. சில தேரவாத பௌத்தர்கள் புத்தர் பேசிய மொழியே பாலி என்று கருதுகிறார்கள்.
  • எனினும், பாலி மொழி பற்றிப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. சம்ஸ்​கிருதம் உயர்குடி​யின​ராலும், படித்​தவர்​களாலும் பின்பற்​றப்பட்ட மொழியாய் இருந்தபோது பாலியே சாதாரண மக்களின் மொழியாய் இருந்​திருக்​கக்​கூடும் என்று ஒரு கருத்​தும், பாலி எக்காலத்​திலும் பேசப்​பட்​ட​தில்லை என்று மற்றொரு கருத்தும் உண்டு. பௌத்த நூல்களைக் கற்பதற்​கும், ஓதுவதற்​கு​மாகவே பாலி தற்காலத்தில் பயிலப்​பட்டு வருகிறது.
  • பாலி என்பது பாடலிபுத்திர மொழியுடனான தொடர்பைக் குறிக்​கிறது. கௌதமபுத்​தரின் காலத்தில் மகத மொழியாகப் பாலி அடையாளம் காணப்​பட்டது. மகதி என்பது பாலியின் அசல் பெயர். பேரரசர் அசோகரின் காலம்வரை இம்மொழி பரவலாகப் பயன்படுத்​தப்​பட்டது. இலங்கை, மயன்மார், தாய்லாந்து போன்ற பௌத்த நாடுகளிலும் பௌத்தர்கள் பெரும்​பான்​மையாக வசிக்கும் வங்கதேசம், ஜப்பான், கொரியா, திபெத், சீனா, மங்கோலியா போன்ற பகுதி​களிலும் பாலி மொழி தொடர்ந்து பயன்பட்டு​வரு​கிறது.
  • பொ.ஆ.மு. 500ஆம் ஆண்டு​களில் வாழ்ந்த புத்தர் தனது போதனைகளை வழங்க பாலி மொழியையே பயன்படுத்​தி​யிருக்​கிறார். பௌத்த இலக்கி​யத்தின் திரிபிடகம் பாலி மொழியில்தான் இயற்றப்​பட்​டிருக்​கிறது. முதலாவது வினய பிடகம். இது பௌத்தத் துறவி​களுக்கான துறவற விதிகளைக் கோடிட்டுக் காட்டு​கிறது. நெறிமுறை, நடத்தை, சமூக வாழ்க்கைக்கான கட்டமைப்பை வழங்கு​கிறது.
  • பாலி என்பது உண்மையில் எழுதப்பட்ட மொழியைக் காட்டிலும், உரைகளின் தொகுப்பைக் குறிக்​கிறது. பாலி என்பது திராவிடக் கடன் சொல். அதாவது, ஒரு வரி வரிசை அல்லது தொடர் மற்றும் நீட்டிப்பு மூலம் வாக்கியம் அல்லது உரை. அதே சமயம் பாஷை என்றால் பேச்சு வழக்கு நூல்களின் மொழி பாலி என்பதையும் அறியலாம். உண்மை​யில், தேரவாத மரபு, நாம் இப்போது பாலி என்று அழைக்கும் மகதியுடன் சமனாகிறது.
  • புத்தரின் காலத்தில் மகத மாகாணத்தின் மொழி இது. பல தேரவாத ஆதாரங்கள் வேதத்தின் மொழியை மகதன் அல்லது மகதா என்று குறிப்​பிடு​கின்றன. புத்தர் தனது வாழ்க்கையின் பெரும்​பகுதியை மகத மாகாணத்தில் கழித்​ததால் அவர் ஒருவேளை மகதியைப் பேசியிருக்​கலாம். எனவே, திரிபிடகா மற்றும் மகதியின் மொழியான பாலி பாரம்​பரி​யத்​தின்படி ஒன்றுதான் என்பது பொதுவான கருத்து.
  • தம்மப​தத்தின் பல்வேறு பேச்சு வழக்கு​களில் பல பதிப்புகள் உள்ளன. ஏனென்​றால், தேரவாத நியதியைத் தவிர அனைத்தும் தொலைந்​து​விட்டன. சீன ஆகமங்​களில் பாதுகாக்​கப்பட்ட எச்சங்கள் மட்டுமே மிஞ்சி​யிருக்​கின்றன.
  • பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் மறைந்​துபோன பாலி மொழிக்குச் செம்மொழித் தகுதி வழங்குவதன் மூலம் அம்மொழி புத்துரு​வாக்​கத்​துக்கும் மீட்டுரு​வாக்​கத்​துக்கும் உள்ளாக்​கப்​படக்​கூடும். கூடவே, புத்தரின் மகத்தான பாரம்​பரி​யத்​தையும் மறு கட்டமைப்​புக்கு உள்ளாக்கும்.
  • பாலி மொழிக்கான செம்மொழித் தகுதி புத்தரின் மகத்தான பாரம்​பரி​யத்தைப் போற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் கொள்கிறார். இறந்துபோன மொழியான பாலி மொழியை மீண்டும் உருவாக்கு​வதில் காட்டுகிற அக்கறையை​யும், ஆதரவையும் வாழ்ந்​து​கொண்​டிருக்கிற தமிழ் மொழிக்கும் காட்ட வேண்டும்.
  • தமிழர்கள் கட்டாய மொழித் திணிப்பை எதிர்க்​கிறவர்கள். அதேவேளை, தன்னுடைய தாய்மொழியான தமிழ் மொழி வேற்று மாநிலத்தில் கட்டாயப்​படுத்தித் திணிக்​கப்​பட்​டாலும் அதையும் எதிர்ப்​பவர்கள் என்பதைப் புரிந்​து​கொள்ள வேண்டும். பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் உயிர்ப்போடு இருக்கிற தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழியாக்​க​வும், திருக்​குறளைத் தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என்பதே தமிழர்​களின் தீராத விருப்​பம்​.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்