TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவின் சிக்கலான பயன்பாடுகளுக்கு மனிதர்கள் தேவை

March 1 , 2024 144 days 134 0
  • கணினியிலும் இணையத்திலும் திறன்பேசிகளிலும் தமிழ் எழுத்துகள் நுழைவதற்கும் பரவலானதற்கும் முக்கியப் பங்காற்றிய முன்னோடிகளில் ஒருவர், மலேசியத் தமிழரான முத்து நெடுமாறன். இவர் உருவாக்கிய எழுத்துருக்களும், கணினிகள், திறன்பேசிகள் போன்றவற்றில் தமிழ் எழுத்துகளை உள்ளிடுவதற்கான தமிழ் முரசு அஞ்சல், செல்லினம் போன்ற மென்பொருள்களும் பரவலாகப் பயன்பாட்டில் இருப்பவை. சென்னையில் நடந்த கணித்தமிழ் மாநாடு 2024இல் உரையாற்ற வந்திருந்தவரிடம் கலந்துரையாடியதிலிருந்து...

அச்சுக் கருவிகள் மட்டுமே பரவலாக இருந்த காலத்திலிருந்து குரல்பதிவை எழுத்தாக மாற்றுதல் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பமுன்னேற்றத்தின் காலம்வரை நீங்கள் தொடர்ந்து இயங்கிவருகிறீர்கள். இந்தப் பயணத்தின் பல்வேறு கட்டங்களில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?

  • தொடக்கத்தில் கணினி என்றால் ஆங்கிலத்தில்தான் பயன்படுத்த வேண்டும் என்னும் மனநிலை தமிழ் மட்டுமல்லாமல், பிற இந்திய மொழிகளைப் பேசியவர்களிடமும் இருந்தது. ஆனால் சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் அந்நாட்டு மொழியைப் பயன்படுத்த முடியாவிட்டால், அந்தக் கணினியை அங்கு விற்கவே முடியாது.
  • முதலில் தமிழை உள்ளீடு செய்வதற்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றுதான் தொடங்கினேன். இன்று இந்தத் துறைக்கு நிறையப் பேர் வந்துவிட்டார்கள். ஒருங்குறி எனப்படும் யூனிகோடு வந்துவிட்டது. தமிழ் உள்ளீட்டைத் தரப்படுத்திவிட்டோம். ஆனால், நமக்கு உள்ள சவால்கள் போதுமான தரவுகள் இல்லாததுதான். இந்திய மொழிகளுக்குப் பொதுவான ஓர் எழுத்துமுறை இருக்க வேண்டும்.
  • கூட்டாகச் செய்தால் நிறைய செய்ய முடியும், எடுத்துக்காட்டாக, குரல் வழியாக உள்ளீடு செய்தல் (text to speech) என்பதைத் தமிழுக்கு மட்டும் சிறப்பாகச் செய்ய வேண்டியதில்லை. பொதுவாக, இந்திய மொழிகளுக்குச் செய்வதைத் தமிழுக்கும் செய்துகொள்ளலாம்.
  • சொற்களைப் பிரித்துக் காண்பிப்பது வேர்ச்சொல் ஆய்வு எனத் தமிழுக்கான பிரத்யேகத் தேவைகள் உள்ளன. இவற்றுக்கான ஆய்வுகள் ஆங்காங்கு மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவை எல்லாம் பரவலாக அனைவருக்கும் கிடைப்பதில்லை. இந்த இடைவெளிகள் நிரப்பப்பட்டுவிடும் என்று நம்புகிறேன்.
  • இந்தப் பின்னணியில், கணித்தமிழ் மாநாடு மிக முக்கியமான முன்னெடுப்பு. இதுபோன்ற நேரடிக் கூடுகைகளில் ஒவ்வொருவரும் தமது தொழில்நுட்பத்தைப் பிறருடன் பகிர்ந்துகொண்டு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

செயற்கை நுண்ணறிவின் மேம்பாட்டால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய சவால்கள், சாதகங்கள் என்ன?

  • நாம் என்ன கற்பனை செய்கிறோமோ அது நிகழ்வதற்கான வாய்ப்புகள் இப்போது அதிகரித்திருக்கின்றன. அதற்குப் பல காரணங்கள். திறன்பேசிகளின் திறன் வளர்ந்துகொண்டே செல்கிறது. செயற்கை நுண்ணறிவுச் சில்லுகள் மூலம், செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைத் திறன்பேசியிலேயே நேரடியாக இணைத்துவிடமுடிகிறது.
  • டிஜிட்டல் வெளியின் எல்லைகள் விரிவடைந்துகொண்டே இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது மொழி மாதிரிகள் (Language models). மீண்டும் சொல்கிறேன்... நமக்கு நிறைய தகவல்கள், தரவுகள் தேவை. அவற்றை வைத்துத்தான் செயற்கை நுண்ணறிவைச் சரியாக இயங்கவைக்க முடியும். எனவே, நிறைய தகவல்கள், தரவுகளை நாம் சேகரிக்க வேண்டும்.
  • விவசாயம் தொடர்பான செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றால், விவசாயம் குறித்த தகவல்கள், தரவுகள் நிறைய தேவை. அவை தரமான, சரியான தகவல்களாக இருக்க வேண்டும். இந்தப் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த முடியும்.
  • உயர் நிலைக் கல்விக்குச் செல்லும்போது பள்ளியில் கால்குலேட்டர் கொடுக்கப்பட்டது. கால்குலேட்டர் இருந்தால் எப்படிக் கணக்குப்போடுவாய் என்று என் அம்மா கேட்டார். அடிப்படைக் கணக்குகளுக்குத்தான் கால்குலேட்டர், அதைவிட கடினமான கணக்குகளை நாம்தான் போட வேண்டும். அதுபோல் அடிப்படையான பணிகளைச் செயற்கை நுண்ணறிவு செய்துகொடுத்துவிடுகிறது. அதைவிட முக்கியமான, சிக்கலான பணிகளில் மனிதர்கள் கவனம் செலுத்த முடியும்.
  • முன்பு இணையத்தில் ஒரு விஷயத்தைத் தேட வேண்டும் என்றால்,கூகுள் போன்ற தேடுபொறிகளை நாட வேண்டும். அதிலிருந்து பல தளங்களுக்குச் சென்று நமக்குத் தேவையான தகவல்களைப் பெறவேண்டும்.
  • ஆனால், இப்போது உங்களுக்குத் தேவைப்படும் தகவலைச்சரியான கேள்வியாக சாட்ஜிபிடியில் உள்ளீடு செய்தால், அது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தொகுத்துக் கொடுத்துவிடும். இதை வைத்துக்கொண்டு, அடுத்தகட்ட வேலைகளைச் செய்துவிடலாம். இதுதான் செயற்கை நுண்ணறிவின் முக்கியப் பயன்பாடு.
  • இன்று இளைஞர்கள் பலர் கணினி, திறன்பேசியில் தமிழைப் பயன்படுத்துகிறார்கள். இது தவிர தமிழ் எழுத்துரு, தமிழ் உள்ளீடு ஆகிய துறைகளில் இளைஞர்களுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? - முதலாவது, மொழி சார்ந்து வாய்ப்புகள் இல்லை. மக்கள் சார்ந்துதான் உள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு பொருளைச் சந்தைப்படுத்துகிறோம். இதை வாங்குபவர் பேசும் மொழி தமிழாக இருக்கும்போது, விற்பவர் பேசும் மொழி ஆங்கிலமாக இருந்தால் அது வாங்குபவரைச் சென்று சேராது. ஒருவருடன், அவரது தாய்மொழியில் பேசுவதன் மூலமாகத்தான் அவரது மனதைத் தொட முடியும்.
  • இது அடிப்படையான சந்தை இலக்கணம். இதைப் புரிந்துகொள்வது மிக அவசியம். எந்த விஷயத்தைச் செய்ய வேண்டும், எந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று இளைஞர்கள் யோசிக்க வேண்டும். பயனர்களுக்கு முதன்மை இடம் அளித்து (putting the users first) சிந்திக்க வேண்டும். அவர்களுக்கு என்ன தேவை, அவர்களுக்கு எப்படிச் சொன்னால் புரியும் என்றெல்லாம் யோசித்தால், செயற்கை நுண்ணறிவில் பல மொழிகள் ஏன் தேவை என்பதன் அத்தியாவசியம் அவர்களுக்குப் புரியும்.

கணித்தமிழின் எதிர்காலத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

  • தொடக்கப் பள்ளியில் இருக்கும்போது எல்லாப் பாடங்களையும் படிப்போம். மேல்நிலைப் பள்ளியில் கலை, அறிவியல் என்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படும். கல்லூரியிலோ அறிவியலிலேயே பொறியியல், மருத்துவம் எனப் பல துறைகள் உண்டு. அதுபோல் கணினியில் தொடக்கத்தில் விசைப்பலகை, எழுத்துரு என்று இருந்தது.
  • பிறகு கூடுதல் தேவை ஏற்பட்டபோது தரவுத்தளங்கள், தேடுபொறிகள் போன்றவை வந்தன. இப்போது செயற்கை நுண்ணறிவிலேயே பல பிரிவுகள் வந்துவிட்டன. தமிழ்க் கணினி என்று சொன்னால், பல பிரிவுகளை உள்ளடக்கியதுதான். தமிழ்க் கணினியைப் பாடமாக எடுங்கள் என்று சொன்னால், அதில் பொருள் இல்லை. எந்தத் துறை அல்லது பிரிவு என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
  • அப்புறம் இதில் ஒருமொழியில் மட்டும் தேர்ச்சிபெற்றால் போதாது. பன்மொழிகளில் இயங்க வேண்டும். அனைத்து மொழிகளிலும் செயற்கை நுண்ணறிவு எப்படி இயங்குகிறது என்பதற்கான அடிப்படைத் தத்துவம் ஒன்றுதான். தாய்மொழியில் ஒரு விஷயத்தைச் செய்யும்போது, அதில் கூடுதல் ஈடுபாட்டுடன் செய்ய முடியும். அதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். அப்படிக் கற்றுக்கொண்டதைப் பிற மொழிகளுக்கும் பயன்படுத்தினால் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் ஏராளம்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்