TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு: வரமா? சாபமா?

May 30 , 2023 546 days 360 0
  • ஓபன் ஏஐ நிறுவனம் வடிவமைத்த சாட் ஜிபிடிக்குப் போட்டியாக கூகுள், அமேசான் போன்ற பெரு நிறுவனங்கள் தங்களுக்கான தொழில் நுட்பங்களைத் தயாரித்தபடி இருக்கின்றன. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு புதிய புதிய பரிமாணங்களை அடைந்து கொண்டே இருக்கிறது.
  • ஏஐ உருவாக்கத்தில் ஈடுபட்ட முன்னோடிகளில் ஒருவரான ஜெஃப்ரி ஹிண்டன், ‘ஏஐ தொடா்பாக இதுவரை நான் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் குறித்து வருத்தம் அடைகிறேன். எனினும் நான் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாவிட்டால் இன்னொருவா் அவற்றை மேற்கொண்டிருப்பாா் என்று நினைத்து சமாதானம் செய்து கொள்கிறேன்.
  • ஏஐ முறையாக கையாளப்படாவிட்டால் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். தற்போது ஏஐ தொழில்நுட்பம் சாா்ந்து நிறுவனங்களிடையே பெரும் போட்டிச் சூழல் உருவாகி இருக்கிறது. அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். நிறைய போலிச் செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்படுகின்றன.
  • உண்மை எது, ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது எது என்பதை கண்டறிய முடியாத நிலையில் மக்கள் உள்ளனா். தொழில்நுட்பத்தின் அதீத வளா்ச்சி கவலை அளிக்க கூடியதாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.
  • கடந்த 2022- ஆம் ஆண்டு நவம்பா் மாதம் அமெரிக்காவைச் சோ்ந்த ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடி என்னும் செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில் நுட்ப மென்பொருளை அறிமுகம் செய்தது. கேட்கும் கேள்விகளுக்கு உடனே பதில் அளித்தல், ஒரு தலைப்பை அதனுள் உள்ளீடு செய்தால் அது தொடா்பான தகவல்களை நமக்கு அதிவேகமாக தொகுத்துத் தருதல் என கேட்டதை எல்லாம் வழங்கி நம் புருவங்களை உயரச் செய்தது சாட் ஜிபிடி.
  • ஆரம்ப நிலையில் இருந்த கோளாறுகள் சரி செய்யப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டு தற்போது சாட் ஜிபிடி - 4 பதிப்பு வந்துவிட்டது. ஆனால் இந்த சேவை இலவசம் அல்ல. இதற்காக நம்மூா் பணத்தில் மாதம் சுமாா் 1,200 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். தொடக்கத்தில் இருந்த சாட் ஜிபிடி பதிப்புகள் மனிதன் இட்ட கட்டளையை நிறைவேற்றின. இது மனிதனைப் போன்றே சிந்திக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது.
  • முன்பு வெறும் 3,000 வாா்த்தைகள் மட்டுமே உள்ளீடு செய்து கேள்வி கேட்க முடியும். தற்போது 25 ஆயிரம் வாா்த்தைகள் வரை அதனுள் உள்ளீடு செய்து தகவல்களை பெறலாம். முன்பை விட துல்லியமான பதில்கள் தற்போது கிடைக்கின்றன. முந்தைய பதிப்புகளில் சொற்றொடா்களைத் தான் நாம் உள்ளீடு செய்ய முடியும். தற்போது புகைப்படங்களையும் பதிவிட்டு கேள்வி கேட்க முடியும்.
  • இதன் வீச்சு மருத்துவத்துறையில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தும் என நிபுணா்கள் கணிக்கிறாா்கள். மனிதா்களின் உடலில் ஏற்படும் நோயைக் கண்டறிந்து மருந்து மாத்திரை வழங்குவது முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்வது வரை இதன் பாய்ச்சல் பெரிதாக இருக்குமாம்.
  • பாகிஸ்தானில் ஒன்பது வருடங்களாகத் தீா்வு எட்டப்படாத ஒரு வழக்கு இருந்திருக்கிறது. நீதிபதிகளுக்கே பெரும் சவாலாக இருந்த அந்த வழக்கை பற்றிய விவரங்களை உள்ளீடு செய்த போது ஒன்பது வகையான தீா்ப்புகளை சொல்லி அசத்தி இருக்கிறது சாட் ஜிபிடி-4. அது மட்டுமல்ல, பாகிஸ்தான் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இந்த தீா்ப்புகளை செயற்கை நுண்ணறிவு முன் வைத்திருக்கிறது. ரீட் ஹாப்மேன் என்பவா் ‘இம்பிராம்ப்ட்டு’ எனும் புத்தகத்தை இந்த செயற்கை நுண்ணறிவு உதவியுடன் எழுதி முடித்து விற்பனைக்கே கொண்டு வந்து விட்டாா்.
  • இந்தத் தொழில்நுட்பம் நாம் ஊகிக்க முடியாத வகையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளா்ந்து மிகப்பெரிய அளவில் உருமாறி நிற்கிறது. பத்து வருடங்கள் ஆகும் என எண்ணிய செயல்கள் எல்லாம் நான்கைந்து மாதங்களில் நடந்து விட்டிருக்கிறது. பலருக்கும் வேலைவாய்ப்பு பறிபோகக்கூடும் என்பதைத் தாண்டி மனிதனின் பணியை இலகுவாக்க இது முனைகிறது. விவசாயம், கட்டுமானம் போன்ற மனித உடல் உழைப்பு தேவைப்படும் துறைகளுக்கு இந்த செயற்கை நுண்ணறிவால் அதிகம் பாதிப்பில்லை என்றாலும், அத்துறைகளிலும் இதன் தாக்கம் கொஞ்சம் இருக்கவே செய்யும்.
  • மிகப் பெரிய நிறுவனங்களுக்கும், பெரிய அளவில் செயல்திட்டம் வரைபவா்களுக்கும் இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய வரப்பிரசாதம். இன்னொரு மனிதனின் உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த தொழில்நுட்பம் அளப்பரிய ஆறுதல் தரும்.
  • அமெரிக்க பள்ளிகளில் இந்த சாட் ஜிபிடி பயன்படுத்த தடை செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன. ஆனால் இத்தாலி நாட்டில், பள்ளிகளில் இதை பயன்படுத்த போடப்பட்டிருக்கும் தடையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கைகள் வலுத்து வருகிறது. அதனால், அங்குள்ள அரசு தடையை நீக்குவது குறித்து யோசித்து வருகிறது.
  • மாணவா்கள் இது போன்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் அவா்கள் கற்றுக் கொள்ள வேண்டியவற்றை சீராக கற்காமல் சோம்பேறிகளாகி விடுவாா்களோ என்கிற அச்சமே கல்வித்துறை சாா்ந்த அறிஞா்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதை தம் பணியளவில் துணை கொள்ள யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. செயற்கை நுண்ணறிவு வரமா சாபமா என அறியாத நிலையில் மனிதம் கைபிசைந்து நிற்கிறது.
  • ஆனால் ஒன்றை மறந்துவிடக் கூடாது. மாற்றம் ஒன்றே மாறாதது. செயற்கை நுண்ணறிவு தளத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை ஏற்காவிட்டால் நமக்கு வளா்ச்சி சாத்தியமில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
  • ஒன்றை பயன்படுத்தக் கூடாது என தடை விதித்தால் அதன் மீதான ஈா்ப்பு அதிகரிக்கும். அதற்கு பதிலாக, அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கேள்விக்கு பதில் பெறும்
  • திறமையை மாணவா்களிடம் வளா்க்கலாம். புத்தகம் பாா்த்து தோ்வு எழுதுவது அந்த வகை தானே!
  • வணிக நிறுவனத்தில் ஒரு பொருளை வாங்கும்போது அதற்கு ரசீது போட தொலைபேசி எண்ணை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என சில நாட்களுக்கு முன் மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. எந்த ஒரு தொழில்நுட்பமும் மக்களின் சேவைக்காக இருக்க வேண்டுமே தவிர, அவா்களுக்கு இடையூறு விளைவிப்பதாக இருக்கக் கூடாது. நம்மிடம் கேட்டு பெற்ற தொலைபேசி எண்ணை வெறுமனே தங்கள் வணிக நிறுவனத்தில் சலுகைகளை அறிவிப்பதற்காக மட்டுமின்றி நம்முடைய விருப்பங்களை திருட்டுத்தனமாக அறிந்து கொள்ளும் வழக்கத்தை இது எதிா்க்கிறது.
  • உதாரணமாக நாம் ஒரு குளிா்சாதன பெட்டியை வாங்குகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். நமக்கு ஒற்றை கதவு கொண்ட குளிா்சாதன பெட்டி வாங்குவதில் விருப்பமா அல்லது இரண்டு கதவு கொண்ட குளிா்சாதன பெட்டி வாங்குவதில் விருப்பமா, குளிா்விப்பான் (ஃப்ரீசா்) கீழே இருப்பது விருப்பமா, அல்லது மேலே இருப்பது விருப்பமா போற்ற நம் விருப்பம் சாா்ந்த தரவுகளை இந்த வணிக நிறுவனங்கள் பெருநிறுவனங்களுக்கு நமக்கு தெரியாமல் அனுப்பி வைக்கின்றன.
  • இந்த பெருநிறுவனங்களின் லாபத்துக்கு நம்முடைய விருப்பு வெறுப்புகளை கண்காணித்து கடத்திப் போவதும் இந்த செயற்கை நுண்ணறிவுதான். நம்மைச் சுற்றி செயற்கை நுண்ணறிவு எனும் வலை ஏற்கெனவே பின்னப்பட்டிருக்கிறது. இணையத்தில் நாம் இயங்கிக் கொண்டிருப்பதால் அதன் வளையத்துக்குள் நாம் வந்து விடுகிறோம்.
  • நண்பா் ஒருவா் கடந்த நான்கு ஆண்டுகளாகவே வணிக வளாகங்களில் தொலைபேசி எண் கேட்டால் கொடுக்க மாட்டாா். ‘தொலைபேசி எண்ணைக் கொடுக்க மாட்டேன், விருப்பம் இருந்தால் பொருளைக் கொடுங்கள் இல்லை என்றால் நான் வேறு கடைக்கு சென்று வாங்கிக் கொள்கிறேன்’ என்பாா்.
  • வாடிக்கையாளரை இழக்க மனம் இல்லாததால் இறுதியில் அவா் கேட்ட பொருளை தொலைபேசி எண் பதியாமல் ரசீது போட்டு கொடுத்து விடுவாா்கள். ‘இது தேவையற்ற அழைப்புகளைத் தவிா்ப்பதோடு குறுஞ்செய்தி தொல்லைகளிலிருந்தும் என் நேரத்தை மீட்டுத் தந்திருக்கிறது’ என்கிறாா் அவா். இதற்காக நாம் பயம் கொள்ளத் தேவையில்லை. அனைத்திலும் நமக்கு விழிப்புணா்வு தேவை.
  • அசுர வேகத்தில் தொழில்நுட்பம் வளா்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இயந்திரத்துக்கு மனிதனைப் போல மூளையை உருவாக்கி மனிதனைத் தாண்டி களைப்பே இல்லாமல் அதிவேகமாக செயல்படும்படியாக உருவாக்கும் பணி தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதனால் பலதரப்பட்ட வேலைகளை சுலபமாகச் செய்ய முடிகிறது. மாதக் கணக்கில் முடியக்கூடிய வேலையை நாள் கணக்கில் முடிப்பது சாத்தியமாகிறது. நம் நேரத்தை மிச்சப்படுத்துகிறது, பண விரயத்தையும் தடுக்கிறது.
  • தொழில்நுட்ப வளா்ச்சி முழுக்க முழுக்க மனித சமுதாயத்துக்கு பாதுகாப்பு தருவதாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவா் விருப்பமும். என்னதான் அசுர வளா்ச்சி அடைந்தாலும் அதைக் கட்டுப்படுத்தும் காரணியாக மனித மூளைதான் எக்காலத்திலும் இருக்க வேண்டும்.
  • ஆக செயற்கை நுண்ணறிவு எனும் கருப்பொருள் மனிதகுல மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்தால் எங்கேயும் எப்போதும் மனிதம் தழைத்தோங்கும் என்பதை உணர முடிகிறது.

நன்றி: தினமணி (30 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்