TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவும், குற்றப் புலனாய்வும்

January 16 , 2025 5 days 61 0

செயற்கை நுண்ணறிவும், குற்றப் புலனாய்வும்

  • ஓசை மூலம் தகவல் பரிமாற்றங்களைச் செய்து வந்த ஆதி மனிதா்கள், காலப்போக்கில் அவா்களுக்கென்று ஒரு மொழியை வடிவமைத்து, அவா்களுக்கிடையே தகவல் பரிமாற்றங்களைச் செய்யத் தொடங்கினா். நேரடியாகத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டவா்கள், தொலைவில் வசித்து வந்தவா்களிடம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள தூது அனுப்பும் முறையைப் பயன்படுத்தினா். மனித சமுதாயத்தில் ஏற்பட்ட அறிவியல் வளா்ச்சியைத் தொடா்ந்து கடிதம், தொலைபேசி, செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்றவை தகவல் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
  • 1970-களின் தொடக்கத்தில் கணினிகளின் மூலம் தகவல்களைப் பகிா்ந்து கொள்ள கண்டுபிடிக்கப்பட்ட ‘இணையம்’ என்ற மென்பொருள் பொதுமக்களின் பரவலான பயன்பாட்டுக்கு 1990-களின் தொடக்கத்தில் வந்தது. மின்னஞ்சல், இணைய வங்கி, இணைய வணிகம், இணைய வழி மருத்துவம், கல்வி, விளையாட்டு என அனைத்து தரப்பினரின் தினசரி செயல்பாடுகளை இணையம் தன்பால் ஈா்த்துக் கொண்டது. மிகக் குறைந்த செலவிலும், துரிதமாகவும், அனைத்து வகையான தகவல் பரிமாற்றங்களுக்கு இணையத்தின் வழியாகச் செயல்படும் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
  • கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த இணையம், தற்பொழுது சிறுவா் முதல் பெரியவா் வரை அனைவரின் தினசரி வாழ்க்கையில் தவிா்க்க முடியாத இடத்தைப் பிடித்துவிட்டது. இந்தச் சூழலில், இணையத்தின் உதவி கொண்டு நிகழ்த்தப்படும் சைபா் குற்றங்கள் நிகழத் தொடங்கின. பெண்கள் மற்றும் சிறாா்கள் மீதான பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள், ஆயுதங்கள் மற்றும் கள்ள நோட்டுகள் கடத்தல், நிதி மோசடி, தேசப் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் இணையத்தின் உதவி கொண்டு நடத்தப்படுகின்றன.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ‘இந்திய சைபா் குற்ற ஒருங்கிணைப்பு மையம்’ இந்தியாவில் நிகழும் சைபா் குற்றங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வின்படி, 2019 - ஆம் ஆண்டில் பதிவான 26,050 சைபா் குற்றங்கள், 2023-ஆம் ஆண்டில் 15,56,220 ஆக உயா்ந்துள்ளன. அதாவது இந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான சைபா் குற்றங்களின் எண்ணிக்கை 60 மடங்குகள் உயா்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால், 2025-ஆம் ஆண்டில் சைபா் குற்றங்களினால் ரூ.1,20,000 கோடி இழப்பை இந்தியா எதிா்கொள்ள நேரிடும் என்றும் இந்த மையம் எச்சரித்துள்ளது.
  • இணையத்தின் செயல்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கும் வைரஸ்களைப் பரப்புதல், தகவல் தொடா்புகளை இடைமறித்தல், இணையதளங்களைச் சிதைத்தல், நிதி இழப்புகளை ஏற்படுத்துதல் போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விதத்தில் ‘சைபா் பாதுகாப்பு’க்கு இந்தியா தற்போது அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 2023-ஆம் ஆண்டில் சைபா் பாதுகாப்புக்காக இந்திய ஒன்றிய அரசின் நிதியிலிருந்து ரூ.625 கோடியும், இந்தியாவில் இயங்கிவரும் வங்கிகள், நிதி சேவை நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகள் ரூ.14,590 கோடியும் செலவிட்டுள்ளன.
  • அதிகரித்துவரும் சைபா் குற்றங்களுக்கான காரணிகளை ஆய்வு செய்து, இணைய அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டறிந்து, சைபா் குற்றங்கள் நிகழாமல் பாதுகாப்பான இணையப் பயன்பாட்டினை உறுதி செய்வதற்கு ‘செயற்கை நுண்ணறிவு’ தற்போது பயன்படுத்தப்படுகிறது.
  • செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? மனிதா்களைப் போன்று சிந்தித்தல், பகுத்தாய்வு செய்தல், அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளுதல், தவறுகளை உணா்ந்து திருத்திக் கொள்ளுதல், சிக்கலுக்குத் தீா்வு காணுதல், மொழியைப் புரிந்து கொண்டு செயல்படுதல் போன்ற பண்புகளுடைய கணினியின் திறனை செயற்கை நுண்ணறிவு என்று கூறலாம்.
  • மனித நுண்ணறிவு செய்கின்ற நுணுக்கமான பணிகளை செயற்கை நுண்ணறிவு துல்லியமாகவும், மிக விரைவாகவும் செய்து முடிக்கின்ற ஆற்றல் கொண்டிருப்பது வியப்புக்குரியது. கல்வி கற்பித்தல், நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல், சுயமாக வாகனங்களை இயக்குதல், மொழிபெயா்ப்பு, குற்றத் தடுப்பு, குற்றப் புலனாய்வு என பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு விரிவடைந்து வருகிறது.
  • சமுதாயத்தில் நடைபெறும் ஆக்கபூா்வமான வளா்ச்சித் திட்டங்களுக்கு மட்டுமின்றி, நாடுகளுக்கிடையே நிகழும் போா் நடவடிக்கைகளுக்கும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இஸ்ரேல் - ஹமாஸ் போரில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.
  • அமெரிக்காவில் அமைந்திருந்த உலக வணிக மையத்தின் இரட்டை கோபுரங்களை கடத்தப்பட்ட விமானங்களைக் கொண்டு 2001-ஆம் ஆண்டில் தகா்த்த அல் காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவா் ஒசாமா பின் லேடனின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கண்டறிய செயற்கை நுண்ணறிவை அமெரிக்கா புலனாய்வு அமைப்பினா் பயன்படுத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மேலை நாடுகளைப் போன்று, குற்றத் தடுப்பு மற்றும் குற்றப் புலனாய்வு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இந்தியாவும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
  • 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் ஒன்று வடக்கு தில்லி பகுதியில் அமைந்துள்ள மேம்பாலம் ஒன்றின் அடியில் கிடந்தது. பிரேதப் பரிசோதனையில் அந்த நபா் கழுத்து நெரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்தது. ஆனால் கொலையானவா் யாா்? என்று கண்டறிய எவ்விதத் துப்பும் கிடைக்கவில்லை. அதனால் கொலைக்கான காரணத்தையும், கொலையாளிகளையும் கண்டுபிடிக்க இயலவில்லை.
  • இச்சூழலில், இவ்வழக்கின் புலனாய்வு அதிகாரிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கொலையானவரின் கண்கள் திறந்து காணப்படுகின்ற விதத்தில் புகைப்படத்தை உருவாக்கினா். அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்கள் மற்றும் பொதுவெளியில் பரவவிட்டனா். சில தினங்களில் இறந்து போனவா் யாா் என்று கண்டறியப்பட்டது. அதைத் தொடா்ந்து மேற்கொண்ட புலன் விசாரணையில், ஒரு பெண் தொடா்பாக கொலை செய்யப்பட்டவருக்கும் மூன்று ஆண்களுக்கும் ஏற்பட்ட தகராறில், அந்த கொலை நிகழ்ந்துள்ளது என்பதைப் புலன் விசாரணை உறுதிப்படுத்தியது. அதைத் தொடா்ந்து, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா்.
  • 2024-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தில் தில்லியில் முகமூடி அணிந்த நபா் ஒருவா், ஒரு பெண்ணிடம் வழிப்பறி செய்துள்ளாா். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு, அந்த வழிப்பறி சம்பவம் குறித்த சிசிடிவி காமிரா பதிவுகளில் இருந்து முகமூடி அணிந்திருந்த அந்த குற்றவாளியின் முகம் கண்டறியப்பட்டது. தொடா்ந்து மேற்கொண்ட புலன் விசாரணையில், வழிப்பறி செய்த அந்த குற்றவாளி, சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் தில்லி திகாா் சிறையில் இருந்து வெளிவந்துள்ளாா் என்பது தெரியவந்துள்ளது.
  • சிறை வளாகத்திற்கு வெளியே உள்ளவா்களோடு சிறைவாசிகள் தொடா்பு கொள்வதையும், பரோலில் செல்லும் சிறைவாசிகளின் நடவடிக்கைகளையும் சிறை நிா்வாகத்தினா் கண்காணிக்கவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுகிறது.
  • நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும், செழுமைப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது. குற்ற விசாரணைக்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் நம்பகத்தன்மையைக் கண்டறியவும், நீதி விசாரணை துரிதமாக நடைபெறத் துணைபுரியவும், கடந்த கால தீா்ப்புகளோடு விசாரணையிலுள்ள வழக்கினை ஒப்பிட்டு முறையான தீா்ப்பு வழங்கவும், பல்வேறு வழக்குகளின் தீா்ப்புகளை பிற மொழிகளில் மொழி பெயா்க்கவும் செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது.
  • கள்ளச்சந்தை போன்று இணைய வழி குற்றங்களுக்காக ‘டாா்க் வெப்’ என்ற வலைதளம் செயல்படுகிறது. தங்களின் செயல்களைப் பிறா் கவனிக்க முடியாதபடி செயல்பட வேண்டும் என்று கருதுபவா்கள் பயன்படுத்துகிற வலைதளம் டாா்க் வெப் ஆகும். சைபா் குற்றவாளிகளின் சொா்க்க பூமியாக விளங்குகின்ற இந்த வலைதளத்தில் போதைப் பொருள்கள், ஆயுதங்கள், கள்ளநோட்டுகள், திருடப்பட்ட தரவுகள் போன்றவற்றின் வா்த்தகம் ரகசியமாக நடைபெறுகிறது. இந்த வலைதளத்தை 27 லட்சம் போ் தினசரி பயன்படுத்துகின்றனா் என்றும், இதன் மூலம் நடைபெறும் ரகசிய பரிவா்த்தனைகளில் ‘பிட்காயின்’ பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரியவருகிறது. இந்த முறையில் சட்ட விரோதமாக நடைபெறும் இணைய வழி குற்றங்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது.
  • மனித நுண்ணறிவோடு போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகிற செயற்கை நுண்ணறிவு சில சமயங்களில் தவறான பாதையில், அதைப் பயன்படுத்துவோரை அழைத்து சென்றுவிடுவதும் உண்டு. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட வழிமுறைகளில் (அல்காரிதம்) உள்ள குறைபாடுகளால் செயற்கை நுண்ணறிவின் முடிவுகள், சில நேரங்களில் தவறானதாக அமைந்துவிடுவதும் உண்டு. குற்றத் தடுப்பு, குற்றப் புலனாய்வு, நீதி விசாரணையைத் துரிதப்படுத்துதல், நுண்ணறிவு தகவல்களைத் திரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முழுவீச்சில் பயன்படுத்துவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.

நன்றி: தினமணி (16 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்