- இந்தியாவில் இணையம் அல்லது திறன்பேசிச் செயலி மூலம் பெறப்படும் சேவைப் பணிகளில் (Gig workers) ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் பணி சார்ந்த பாதுகாப்பு அற்றவர்களாக இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
- நிதி ஆயோக் 2022 அறிக்கையின்படி 77 லட்சம் பேர் செயலி வழி சேவைத் துறைகளில் பணிபுரிகிறார்கள். இன்னும் ஐந்தாறு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 2.35 கோடியாக அதிகரிக்கும் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
- கிராஸ்ரூட்ஸ் (People’s Association in Grassroots) என்னும் அமைப்பு டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் மேற்கொண்ட கள ஆய்வின் அடிப்படையில், வளர்ந்துவரும் இந்தத் தொழில்துறையின் பணிச் சூழல் குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
- இந்த அறிக்கையின்படி 43% தொழிலாளர்களின் ஒருநாள் ஊதியம் எல்லாப் பிடித்தங்களும் போக ரூ.500ஆக இருக்கிறது. இதில் 34% தொழிலாளர்களின் மாத வருமானம் ரூ.10,000க்கும் குறைவாக இருப்பதாகவும் அறிக்கை சொல்கிறது. ஆனால், நாள் ஒன்றுக்கு 10 மணி நேரத்துக்கும் கூடுதலாக அவர்கள் உழைக்கிறார்கள்.
- 72% இணைய/செயலி அடிப்படையிலான வாடகை கார் ஓட்டுநர்கள் தங்கள் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். உணவு மற்றும் பிற பொருள்களை வாடிக்கையாளரின் இருப்பிடத்துக்குச் சென்று கொடுக்கும் டெலிவரி தொழிலாளர்களில் 76% பேர் தங்கள் தினசரி இலக்கை எட்டுவதற்குச் சிரமப்படுகிறார்கள்.
- ‘ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் டெலிவரி’ என்பது போன்ற வசீகரமான வணிகத் தந்திரங்கள் இந்தத் தொழிலாளர்களுக்கு மன-உடல்ரீதியிலான நெருக்கடிகளைக் கொடுக்கின்றன. 86% டெலிவரி தொழிலாளர்கள் இதற்கு ஆட்சேபணை தெரிவிக்கிறார்கள்.
- 80% வாடகை கார் ஓட்டுநர்களும் 73% டெலிவரி தொழிலாளர்களும் தங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தில் திருப்தியற்றவர்களாக இருக்கிறார்கள். நிறுவனங்கள் அலுவல் ரீதியாக 20% தரகுக் கூலி எடுப்பதாகச் சொல்லிவிட்டு, 31–40% வரை பிடித்துக்கொள்வதாக 35% தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 41% வாடகை கார் ஓட்டுநர்களும் 48% டெலிவரி தொழிலாளர்களும் தங்களால் வாரத்தில் ஒருநாள்கூட விடுப்பு எடுக்க முடியவில்லை எனச் சொல்லியுள்ளனர்.
- புதிய துறை என்பதால் இணைய/செயலி அடிப்படையிலான இந்தத் தொழிலாளர்களின் விவகாரம் சிக்கல் மிகுந்ததாகவே இருக்கிறது. அதனால், இந்தத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பில் அரசு அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். ஆனால், ஏற்கெனவே இருக்கும் தொழிலாளர் சட்டங்களுக்கு வெளியே இவர்கள் இருக்கிறார்கள். 1970 இல் இயற்றப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம்தான் சமீபத்தில் உருவான இந்தத் துறை தொழிலாளர்களுக்கானதாகப் பாவிக்கப்படுகிறது.
- ராஜஸ்தான், ஹரியாணா போன்ற மாநிலங்கள் இந்தத் தொழிலாளர்களுக்காக நல வாரியம் அமைத்துள்ளன. தமிழ்நாடு மாநில அரசும் இந்தத் தொழிலாளர்களுக்கான நல வாரியத்தில் பதிவுசெய்ய 2023இல் அழைப்பு விடுத்துள்ளது. கர்நாடகம் இந்தத் தொழிலாளர்களுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
- ஆனால், இதற்கெல்லாம் மேல் ராஜஸ்தான் மாநில அரசு இணைய/செயலி அடிப்படையிலான தொழிலாளர்களுக்கெனத் தனிச் சட்டத்தை 2023இல் இயற்றியுள்ளது. இது போன்ற தனிச் சட்டங்கள்தாம் இந்தத் தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யும். மத்திய, மாநில அரசுகள் திறந்த மனதுடன் இதைப் பரிசீலிக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 03 – 2024)