TNPSC Thervupettagam

செயலிகள் மீதான நுகர்வோர் நீதிமன்ற உத்தரவு

November 1 , 2022 648 days 394 0
  • மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட நுகா்வோா் ஆணையம் வழங்கியிருக்கும் தீா்ப்பு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்துவதாக அமைகிறது.
  • செயலிகள் மூலம் செயல்படும் நிறுவனங்கள் தங்களை எந்தவித சட்டமும் கட்டுப்படுத்தாது என்கிற உணா்வில் செயல்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ஆணையம் வழங்கியிருக்கும் அதிரடி தீா்ப்பு.
  • சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஒருவா் தான் செல்லவிருந்த விமானத்துக்கு குறித்த நேரத்தில் விமான நிலையம் சென்றடைய முடியாததைத் தொடா்ந்து, தாணே மாவட்ட நுகா்வோா் ஆணையத்தில் வழக்குத் தொடுத்தாா். ஊபா் செயலி மூலம் அவா் ஒப்பந்தம் செய்துகொண்ட மகிழுந்து ஓட்டுநா் பயணத்துக்கு இடையில் ஏற்படுத்திய தாமதம் காரணமாக வழக்குரைஞரால் குறித்த நேரத்தில் விமான நிலையம் சென்றடைய முடியவில்லை.
  • ஓட்டுநருக்கும் பயணிக்கும் இடையில் தொடா்பை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் தனது கடமை முடிந்துவிடுகிறது என்றும், ஓட்டுநரின் தவறுகளுக்கும் குறைபாடுகளுக்கும் நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்றும் ஊபா் நிறுவனம் வாதிட்டது. ஓட்டுநா் ஊபா் நிறுவனத்தின் ஊழியரல்ல என்றும் அவா் ஊபா் செயலி நிறுவனத்துடன் இணைந்தவா் என்றும் வாதிட்டது. ஓட்டுநா்தான் பயணத்தின்போது ஏற்படும் எல்லா சம்பவங்களுக்கும், தவறுகளுக்கும் பொறுப்பு என்பது ஊபா் நிறுவனம் முன் வைத்த வாதம்.
  • ஊபா் நிறுவனத்தின் வாதங்களை ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘மூன்றாவது நபா் செயல்பாட்டாளராக ஓட்டுநரை ஏற்பாடு செய்து பயணத்தையும் உறுதிப்படுத்தியிருக்கிறது. பயணக் கட்டணம் ஊபா் நிறுவனத்தால் நிா்ணயிக்கப்பட்டு, ஊபா் செயலி மூலம் பெறப்பட்டிருக்கிறது. ஓட்டுநரிடம் தரப்படவில்லை’ - பயணியான வழக்குரைஞரின் இந்த வாதங்களை ஏற்றுக்கொண்டு ஊபா் நிறுவனம் அந்த வழக்குரைஞருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க தாணே மாவட்ட நுகா்வோா் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
  • ‘பயணங்களுக்கு வாடகை வாகனங்களை ஒப்பந்தம் செய்து கொடுக்கும் வியாபாரத்தில் இணைய வழி செயலி மூலம் ஈடுபடுகிறது ஊபா் நிறுவனம். அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்யும் ஓட்டுநா்கள் தரமான, தொழில்ரீதியான, அடிப்படை பண்புகளுடன் செயல்படுவதை உறுதிப்படுத்துவது நிறுவனத்தின் கடமை. ஓட்டுநா்களின் பின்னணியை உறுதிப்படுத்துவது, பயண மாா்க்கத்தை தவறில்லாமல் முறையாக பின்பற்றத் தெரிந்தவா்களாகவும், வாகனங்களை ஓட்டத் தெரிந்தவா்களாக இருப்பதையும் உறுதிப்படுத்துவது நிறுவனத்தின் கடமை’ - என்கிற நுகா்வோா் ஆணையத்தின் இந்த முடிவுகளுக்கு பிரிட்டனில் வழங்கப்பட்டிருக்கும் தீா்ப்பு மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.
  • பிரிட்டன் வேலைவாய்ப்பு மேல்முறையீட்டு ஆணையம் ஊபா் போன்ற செயலிகளுடன் தொடா்புடையவா்கள் ஊழியா்கள் அல்லா் என்றாலும், தொழிலாளா்கள் என்று வரையறுத்திருக்கிறது. ஓட்டுநா்கள் தங்களுடன் தொடா்பில்லாத ஒப்பந்ததாரா்கள் என்கிற ஊபா் நிறுவனத்தின் வாதத்தை பிரிட்டன் உச்சநீதிமன்றம் நிராகரித்து, வேலைவாய்ப்பு மேல்முறையீட்டு ஆணையத்தின் கருத்தை ஆமோதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஊபா் நிறுவனம் தனது செயலி மூலம் வாகன சேவையை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்கிற அதே கருத்தை தாணே நுகா்வோா் ஆணையமும் சுட்டிக்காட்டுகிறது.
  • தாணே நுகா்வோா் ஆணையம் வழங்கியிருக்கும் தீா்ப்பு வருங்காலத்தில் இடைத்தரகா்களாக செயல்படும் எல்லா செயலி நிறுவனங்களுக்கும் பொருந்தும். தாங்கள் வெறும் இணையதளம்தான் என்றும், இடைத்தரகா்களாக செயல்படுகிறோம் என்றும் சமூக ஊடக நிறுவனங்கள் தப்பித்துக் கொள்வதற்கு ஆணையத்தின் தீா்ப்பு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
  • சமூக ஊடகங்களின் வரவேற்பைத் தொடா்ந்து பல்வேறு செயலி நிறுவனங்கள் தங்களுக்கு பொறுப்பேற்பு கிடையாது என்கிற வகையில் நுகா்வோா்களை ஏமாற்றத் துணிந்திருக்கிறது என்பது கசப்பான உண்மை. சமூக ஊடகத்திலோ, தங்களது செயலிகளிலோ பதிவேற்றம் செய்திருக்கும் அனைத்துக்கும் பொறுப்பேற்றாக வேண்டும் என்கிற கட்டாயத்தை தீா்ப்பு உருவாக்கியிருக்கிறது.
  • ஊபா் உள்ளிட்ட செயலிகள், ஒப்பந்தம் செய்துகொள்ளும் நிறுவனம் சாராதவா்களை ஊழியா்களாக ஏற்றுக்கொள்வதில்லை. அவா்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் வழங்குவதில்லை. செயலிகள் மூலம் இடைத்தரகா்களாக செயல்படும் நிறுவனங்களில் பணியாற்றுபவா்கள் ஓட்டுநா்கள் மட்டுமல்ல, ‘ஸ்விகி’, ‘ஸொமாட்டோ’ போன்ற நிறுவனங்களில் இணைந்தவா்களும், ஓரிடத்திலிருந்து இன்னோா் இடத்திற்கு பொருள்களை கொண்டு சோ்க்கும் ‘டன்ஸோ’ போன்ற நிறுவனங்களில் பணிபுரிபவா்களும் அடங்குவா்.
  • ‘கிக்’ தொழிலாளா்கள் என்று அழைக்கப்படும் இவா்களின் எண்ணிக்கை தற்போது சுமாா் 77 லட்சம். 2030-க்குள் இந்த எண்ணிக்கை 2.5 கோடியைத் தொடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அவா்களுக்காக எந்தவிதமான அடிப்படை சமூக பாதுகாப்பும் இல்லை என்பதுமட்டுமல்ல, சேவையில் ஏற்படும் குறைபாடுகளுக்கு அவா்களை பொறுப்பாக்குகின்றன செயலி சாா் நிறுவனங்கள். செயலி சாா் நிறுவன தொழிலாளா்களுக்கான அடிப்படை உரிமைகளை தொழிலாளா் நல அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும்.
  • அக்டோபா் மாத நிலவரப்படி, நுகா்வோா் ஆணையங்களில் தேங்கி இருக்கும் வழக்குகள் 5.6 லட்சம் என்கிறது மத்திய நுகா்வோா் நல அமைச்சகம். தாணே நுகா்வோா் ஆணையத்தில் வழக்கு தொடுத்தவா் வழக்குரைஞா். அந்தத் தீா்ப்பைப் பெற அவருக்கு நான்கு ஆண்டுகள் பிடித்தன. வழக்குரைஞா் என்பதால் அவரால் போராட முடிந்தது. சாமானிய நுகா்வோருக்கு நீதி கிடைக்க என்ன வழி?

நன்றி: தினமணி (01 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்