TNPSC Thervupettagam

செயல்பாட்டின் வழி நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம்

April 20 , 2020 1731 days 767 0
  • கரோனாவின் தொடக்க நாட்களில் இந்தக் கிருமிக்கு எதிராகப் பெரும் போராட்டத்தைக் களத்தில் நின்று சந்தித்துவரும் மருத்துவர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரையிலான சேவையாளர்களுக்கு அவரவர் வீட்டின் முன் நின்று கை தட்டி பாராட்டிய அதே சமூகம், தனக்குப் பக்கத்தில் வரும் அவர்கள் மீது கடும் வக்கிரத்தையும் வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.

தண்டனைக்குரிய குற்றங்கள்

  • சென்னையில் கரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த மருத்துவரின் உடலைத் தகனம் செய்வதற்காக மயானத்துக்கு எடுத்துவந்தபோது அதற்குப் பொதுமக்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தது வெட்கக்கேடு. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அடுக்ககங்களிலும் வாடகை வீடுகளிலும் உள்ள மருத்துவர்கள் கரோனா பணிக்கு என்று சென்று திரும்பும்போது அவர்களுடைய அண்டை வீட்டார்களாலும் வீட்டின் உரிமையாளர்களாலும் தொந்தரவை எதிர்கொள்வது என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்கெனவே நடந்தேறிவருகிறது.
  • இதே விதமான வக்கிர வெளிப்பாடு வீடு நோக்கி வரும் தூய்மைப் பணியாளர்களிடமும் வெளிப்படுவதைச் சமூக வலைதளங்களில் வளையவரும் காணொலிகளில் காண முடிகிறது. முன்னதாக, கரோனா தொற்றுக்குள்ளானவர்களைச் சிகிச்சைக்குக் கூட்டிச் செல்லச் சென்ற மருத்துவர்கள், அவர்களுக்குத் துணையாகச் சென்ற காவல் துறையினரை அவமதித்து, சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தவர்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • இவை எல்லாமே தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்பட வேண்டும்.
  • நாட்டு மக்கள் பாதுகாப்புக்காக கரோனா தடுப்புப் பணியில் இன்று ஈடுபட்டிருப்போரின் சேவையையும் தியாக உணர்வையும் வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது.

நன்றியுணர்வைச் செலுத்த வேண்டும்

  • குறிப்பாக, கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தொடங்கி தூய்மைப் பணியாளர்கள் வரையிலானவர்கள் அவர்கள் அணிந்திருக்கும் சுயபாதுகாப்பு உபகரணங்கள் காரணமாகவே எட்டு மணி நேரம் வரை எதையும் சாப்பிட முடியாது, தாகமெடுத்தால் தண்ணீர் குடிக்க முடியாது, சிறுநீர் கழிக்க முடியாது; வியர்வைக்கும் மூச்சடைப்புக்கும் இடையே பணியாற்ற வேண்டும். வழக்கமான ஓய்வற்ற உழைப்பு அது. குடும்பத்தினரிடமிருந்தும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் நாட்கள். வேறு எவரையும்விட அவர்களுக்கு கரோனா தொற்றும் வாய்ப்பு அதிகம். உலகம் முழுவதும் கணிசமான மருத்துவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது; பலர் இறந்திருக்கிறார்கள் என்று தெரிந்தும்தான் இப்பணியில் தன்னுயிர், குடும்ப நலன் கருதாது தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான நன்றியுணர்வைக் கண்ணியமான செயல்பாடு வழியாகவே இச்சமூகம் செலுத்த வேண்டும்.

நன்றி: தி இந்து (20-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்