- பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஹரியாணாவில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், தான் வெற்றி பெற்றால், திருமணம் ஆகாத ஆண்களுக்கு வெளி மாநிலங்களில் பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பேன் என வாக்குறுதி அளித்திருந்தார். நாளிதழ்களில் வந்த இந்தச் செய்தி படிக்க சுவாரஸ்யமாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னையை சுருக்கெனச் சொன்னது இச்செய்தி.
- இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னையான வறுமையை நாம் பெருமளவு வென்று விட்டோம். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 41.50 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை பாராட்டு தெரிவித்துள்ளது.
- மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகளால் மக்கள்தொகையில் பெண்களின் எண்ணிக்கை, 2014-ஆம் ஆண்டில் 1,000 ஆண்களுக்கு 918 என்ற அளவுக்கு குறைந்தது. இதனால் பல மாநிலங்களில், பல சமூகங்களில் திருமணம் செய்ய பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
- இது பெரும் பிரச்னையாக உருவெடுக்கும் என்பதை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, 2015 ஜனவரியில் ஹரியாணாவில், "பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ' என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். மக்கள்தொகையில் பாலின இடைவெளி அதாவது ஆண்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள மாவட்டங்களில், பெண் குழந்தைகள், பெண்கள் நலனுக்கான இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கேலி செய்தன. ஆனால், இன்று அத்திட்டம் நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் என வெகுவாக மேம்பட்டுள்ளது.
- பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை 2014-15இல் 75.51 சதவீதமாக இருந்தது. 2021-22இல் 79.4 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. பொருளாதார ரீதியாக தற்சார்பு அடையாவிட்டால் பெண்கள் முன்னேற முடியாது என்பதை உணர்ந்த பிரதமர் மோடி, பெண்களின் முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.
- பிரதமரின் அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டம் அதில் முக்கியமானது. இத்திட்டத்தினால் சுமார் 20 கோடி பெண்கள் முதல் முறையாக வங்கிக் கணக்கு தொடங்கினார். கரோனா பேரிடர் காலத்தில் அவர்களுக்கு மாதம் ரூ. 500, மூன்று மாதங்களுக்கு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
- பெண்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கும் "லக்பதி தீதி' திட்டத்தின்கீழ், 2 கோடி பெண்களுக்கு ரூ. 1 லட்சத்திலிருந்து, ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதலில் மூன்று சதவீதத்தை, "லக்பதி தீதி' திட்டத்தின்கீழ் வட்டியில்லா கடன் பெற்ற பெண்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
- பெண் தொழில்முனைவோர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய அரசு மின்சந்தை (ஜெம்) என்ற திட்டத்தை மோடி அரசு துவக்கியது. இதனால், பெண்களிடம் இருந்து 14.76 லட்சத்திற்கும் அதிகமான ஆர்டர்கள் மூலம் ரூ. 21,265 கோடி அளவுக்கு பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன.
- பெண்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக மோடி அரசு மாற்றியது. இந்த முற்போக்கான நடவடிக்கை உலக அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது. 2016-இல் தொடங்கப்பட்ட பிரதமர் சுரக்ஷித் மாத்ரிவா அபியான் திட்டத்தின்கீழ் 4 கோடிக்கும் அதிகமான கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு முந்தைய சிகிச்சையையும், பிரதமர் மாத்ரு வந்தனா திட்டத்தின்கீழ் 3 கோடிக்கும் அதிகமான கர்ப்பிணிகள் நிதியுதவியும் பெற்றுள்ளனர்.
- ஏழைகளின் சொந்த வீடு கனவை நனவாக்கும் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால் அசையா சொத்து உள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்திட்டம் பெண்களுக்கு பெரும் சுதந்திரத்தை அளித்துள்ளது.
- சில மாதங்களுக்கு முன்பு குற்றவியல் சட்டங்களில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்து தண்டனை வழங்க விரைவு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கவும், பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கவும் இச்சட்டங்கள் வழிவகுக்கின்றன.
- பிரதமர் மோடியின் ஆட்சியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட, வீடுகள் தோறும் கழிப்பறை, வீடுகள் தோறும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு, வீடுகள் தோறும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்கும் இந்திரதனுஷ் திட்டம், செல்வமகள் சேமிப்புத் திட்டம், முத்தலாக் தடை சட்டம் என்று பல்வேறு திட்டங்கள் பெண்களின் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
- பிரதமர் மோடி 2014 ஆகஸ்ட் 15-ஆம் தேதி தனது முதல் சுதந்திர தின உரையில், பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் ஆண்கள் மாற வேண்டும். தங்கள் மகன்களின் நடத்தையை மாற்றுமாறு தாய்மார்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதுதான் மோடியின் அணுகுமுறை.
- நூறு ஆண்டுகளுக்கு முன்பே, பெண் விடுதலையையும், ஆண் - பெண் சமத்துவத்தையும் வலியுறுத்திய மகாகவி பாரதியார், 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்...' என்றார். மகாகவியின் கனவு, நம் பிரதமர் மோடியின் ஆட்சியில் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி வருகிறது.
- அனைத்துக் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளில், பெண்களுக்காக இதையெல்லாம் செய்வோம் என வாக்குறுதி அளிப்பார்கள். இதுதான் காலம்காலமாக நடந்து வருகிறது. ஆனால், மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்காக செய்தவற்றைச் சொல்லி வாக்கு கேட்கிறது.
நன்றி: தினமணி (14 – 03 – 2024)