TNPSC Thervupettagam

செய்யாறு சிப்காட் விவகாரம் அரசின் தவறான முன்னுதாரணம்

November 20 , 2023 417 days 289 0
  • திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் மூன்றாவது சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக 3,174 ஏக்கர் விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராடிய விவசாயிகளில் 7 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்துசெய்திருப்பதன் மூலம், இந்த விவகாரத்தில் அரசு தன்னுடைய தவறைத் திருத்திக்கொண்டுள்ளது. எனினும், இதுபோன்ற விவகாரங்களை இன்னும் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம் எனும் குரல்களை அரசு செவிமடுக்க வேண்டும்.
  • செய்யாறில் மூன்றாம் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக 11 கிராமங்களில் பரந்து விரிந்துள்ள நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு தொடங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேல்மா கிராமக் கூட்டுச் சாலையில் ஜூலை 2 முதல் விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். நவம்பர் 4 அன்று சிப்காட் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக 96 பெண்கள் உள்பட 147 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் 19 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
  • இவர்களில் அதிக வழக்குகள் உள்ள 7 பேர் மீது திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டிருந்தாலோ அரசு உடைமைகளைச் சேதப்படுத்தியிருந்தாலோ அவர்கள் மீது வழக்கமான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி வழக்குகளைத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், குண்டர் சட்டம் என்பது தொடர்ச்சியாகப் பல்வேறு சட்டவிரோதக் காரியங்களில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமலில் உள்ள ஒரு சட்டமாகும். விளைநிலங்களைக் காக்கப் போராடிய விவசாயிகள் மீது இந்தச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்தது தவறான முன்னுதாரணமாகும்.
  • அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோரை அச்சுறுத்தும் நோக்கில் குண்டர் சட்ட நடவடிக்கையை எடுத்ததாகவே கருத வேண்டியிருக்கிறது. மேலும், இது அவசர கதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே தெரிகிறது. ஜனநாயகத்தில் அமைதி முறையிலான போராட்டம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வழிமுறை. கடந்த காலங்களில் மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றபோது அவற்றைத் திமுக ஆதரித்த நிலையில், அதுபோன்ற ஒரு போராட்டம் தங்கள் ஆட்சியில் நடைபெறும்போது, அதற்கு மோசமாக எதிர்வினையாற்றுவது முரணான அணுகுமுறை. 6 பேர் மீது குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. எஞ்சிய ஒருவர் மீதும் குண்டர் சட்டத்தை அரசு திரும்பப் பெற முன்வர வேண்டும்.
  • வேலைவாய்ப்பைப் பெருக்கவும் தொழில் வளர்ச்சிக்கும் சிப்காட் தொழிற்பூங்காக்கள் அவசியம் தேவை. அதற்காக விவசாயிகளின் வாழ்வாதாரமான விளைநிலங்களைக் கையகப்படுத்தும்போது அரசு அவசரம் காட்டக் கூடாது. கூடுமானவரை விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாது என்றால், விவசாயிகளிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் அச்சத்தைப் போக்கி, நியாயமான கோரிக்கைகளை ஏற்று, உரிய இழப்பீடுகளை வழங்கி, அவர்களுடைய முழு ஒத்துழைப் போடு நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும். ஒரு நல் அரசுக்கு அதுவே அழகு.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 11 - 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்