TNPSC Thervupettagam

செருப்பென்றால் இழிவா

October 9 , 2023 460 days 614 0
  • செருப்பு பற்றிய இக்குறிப்புக்கு, செருப்பு தொடர்பான வசவுகளைத் தலைப்பிடக்கூட நமக்குத் தயக்கமாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் ரொம்பச் சாதாரணமாகச் செருப்பைக் கையிலெடுத்து விடுகிறார்கள். சென்னையின் ‘தேசிய வச’வுடன் அது போட்டியிட்டால், வெற்றிபெறாவிட்டாலும் செருப்பு கணிசமான வாக்குகளைப் பெற்றுவிடும். கோபம் கொண்ட பலர் எடுப்பதெல்லாம் அதுவாகவே இருக்கிறது.
  • ‘செருப்புப் பிஞ்சிடும்’, ‘அடி... செருப்பால’ என்பனவற்றை இன்று தமிழ் மேடைகளில் மிகச் சாதாரணமாகக் கேட்க முடிகிறது. அந்த வசவுகள் பற்றியது அல்ல இக்குறிப்பு; செருப்பை இழிவானதாகக் கருதும் மனப்போக்கு பற்றிய வருத்தத்தைப் பதிவுசெய்வதே இங்கு நோக்கம்.

இழிபொருளான காலணி

  • கல்லிலிருந்தும் முள்ளிலிருந்தும் அசுத்தத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றுவதால் செருப்பை நன்றி உணர்ச்சி ததும்பத்தானே மனிதர்கள் பார்த்திருக்க வேண்டும். இருப்பினும் இழிவுக் குறிப்பை அதன் மேல் எப்படி ஏற்றினோம்? அண்டை அயலிலும் விசாரித்தேன். மலையாளத்திலும் செருப்புக்கு இழிவுப் பொருள்தான். ஆனால், நம்மைப் போல அங்கு அரசியலர் வசவுக்கு அதிகம் அதைப் பயன்படுத்துவதில்லை என்கிறார்கள்.
  • ‘எவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்கினாலும் செருப்பைக் காலில்தான் போடுகிறோம்; எவ்வளவு குறைந்த விலையில் கிடைத்தாலும் குங்குமத்தை நெற்றியில் வைத்து கொண்டாடுகிறோம்’ என்பது போன்ற வசனங்களை எல்லாம் நம்மூர் ஆரூர்தாஸ்கள் எழுத முடிந்திருப்பது, அதற்குள்ள இழிவுப் பயன்பாட்டால்தான்.
  • செருப்புத் தயாரிப்பு தொழிலாக (Industry) மாறுவதற்கு முன், செருப்பைத் தயாரிக்கிறவர், அந்த உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர், அதன் பராமரிப்பில் தொடர்புடையவர் எனச் செருப்போடு தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது ஆதிக்கம் கற்பித்த இழிவைச் செருப்புகளின் மேலும் சுமத்திவிட்டார்களோ என்று தோன்றுகிறது. தூய்மையற்ற இடங்களில் புழங்குவதாலும் அது வசையாகி இருக்கக்கூடும். தொடப்பக்கட்டை, விளக்குமாறு போன்ற சொற்களும் வசவாக இருப்பதை இங்குக் கருதலாம்.

ஆயிரம் பெயர்கள்

  • ‘செருப்பாக உழைத்தான்’ என்பது போன்று அதற்குள்ள நற்பெயர் அடங்கி, இழிவுப்பொருள்தான் மேலோங்கி நிற்கிறது. இயேசு செருப்பு அணிந்ததில்லை என்கிறார்கள். ஆனால், தமிழ் பைபிளில் சப்பாத்து என்ற பயன்பாடு இருக்கிறது. எந்தச் சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பு அது என்று பார்க்க வேண்டும். ‘பாதரட்ஷை போல் உன்றன் பாதம் தொடர்வது இன்றி வேறு கதியறியேன்’ என்று பாடிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சம்ஸ்கிருதச் சொல்லையே செருப்புக்குப் பயன்படுத்தியுள்ளார்.
  • காலணி என்ற சொல், இன்று அதிகப் புழக்கத்தில் உள்ளது. இது திராவிட இயக்கம் ஏற்படுத்திய தமிழ் மலர்ச்சியில் உருவான காரணப் பெயர். மிதியடி என்ற சொல்லும் புழக்கத்தில் இருப்பினும் கதவுத் தடுக்கிற்கும் மிதியடி என்ற சொல்லையே பயன்படுத்தும் வழக்கமும் இருக்கிறது.
  • அடையல், அரணம், கழல், குத்திச் செருப்பு, குறட்டுச் செருப்பு, தொடுதோல், தோற்பரம், நடையன், பாதக்காப்பு, பாதக் குறடு, அரண், அடிபுனை தோல் என்றெல்லாம் செருப்புக்கு ஆயிரம் பெயர்கள். ஆனால், வெகு சிலவே வழக்கில் பயில்கின்றன. இறைவனோடு, அரசனோடு தொடர்புடைய செருப்புகள் பாதுகைகளாகின்றன. அவற்றுக்கு ஒரு இதிகாசம் பட்டா பிஷேகமே செய்திருக்கிறது.

காலணிப் பரிசு

  • தோலால் ஆன காலணிகளே காலப் பழமை யானவை என்கிறது ஒரு ஆய்வு. 5,600 ஆண்டு பழமையான காலணி ஆர்மேனியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ‘கூகுளார்’ தெரிவிக்கிறார். மரத்தாலான செருப்படிகளும் காலப் பழமையானவையே. காந்தி மரத்தாலான செருப்பையும் பயன்படுத்தியவர். தென்னாப்ரிக்காவில் சிறையில் இருந்தபோது, தன் கைகளினாலேயே காலணிகளைச் செய்து, தென்னாப்ரிக்கத் தலைவர் ஸ்மட்ஸ்க்குப் பரிசளித்தார் காந்தி.
  • 1939இல் காந்தியின் 70ஆவது பிறந்தநாளின்போது ஸ்மட்ஸ் அச்செருப்புகளைத் திருப்பிப் பரிசளித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவற்றின் ஒளிப்படத்தைத்தான் பரிசளித்தார் என்று தெரிகிறது. செருப்பு இங்கு அபூர்வப்பொருளாக மாறியிருக்கிறது.
  • வெள்ளைச் செருப்பு உள்பட, எந்த வகைச் செருப்பின் மீதும் எனக்கு ஆச்சரியம் இல்லை. ஆனால், மரத்தாலான செருப்பு பற்றி ஒரு ஐயம் இருந்துகொண்டே இருக்கிறது. நம்மூர் ஆதீன கர்த்தர்கள் அணியும் செருப்புகளைப் பார்த்திருப்பீர்கள். கட்டை விரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையில் குமிழ் வைத்த ஒரு பிடிமானம் இருக்கும். அது அநேகமாக உலோக ஏற்பாடு. அதாவது, கட்டைவிரலை நுழைத்துக்கொண்டு நடப்பார்கள்.
  • பின்னால் எந்தப் பிடிமானமும் இல்லாமல் எப்படி மர அடி, காலோடு நகர்கிறது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். தோல், ரப்பர் முதலிய வேறுவகைச் செருப்புகள் லேசானவை. இதே அமைப்பிலான அவை, காலோடு நகர்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மரப்பாதுகைகள் எடை குறைந்ததாக இருக்கக்கூடும் என்பது என் எண்ணம். சிறுவயதில் ஒரு ஆதீனத்துக்கு அப்பாவோடு செல்ல நேர்ந்தபோது ஏற்பட்ட சந்தேகம் இது. இதைப் பற்றி இதற்கு மேல் விவரிக்க முடியாது.

நிலை மாறுமா  

  • பக்தர்கள் இறைவனின் திருவடியைத் தலையில் தாங்கித் தன் பக்தியைச் செலுத்தும் மரபும் வைணவத்தில் இருக்கிறது. பெருமாளின் திருப்பாதம் பொறிக்கப்பட்ட கிரீடத்துக்குச் சடாரி அல்லது சடகோபம் என்று பெயர். வீட்டுக்குள் அணிந்துகொள்ளும் கனமற்ற செருப்பை ‘ஸ்லிப்பர்’, ‘ஹவாய் சப்பல்’ என ஐந்தாறு விதமாக அழைக்கிறார்கள். தமிழில் இவற்றுக்குப் பெயர் இருக்காது. நம் பண்பாட்டில் செருப்பை வீட்டுக்குள் முன்பு அனுமதித்ததில்லை.
  • 1944இல் கடலூரில் பெரியார் மீது செருப்பு ஒன்று வீசப்பட்டது. கூட்டம் முடிந்ததும் பெரியார் வந்து மற்றொரு செருப்பைத் தேடியதாகச் சொல்வார்கள். வீசியவர் எஞ்சிய ஒற்றைச் செருப்பை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? அதை அங்கேதானே போட்டுவிட்டுப் போயிருப்பார் என்ற அனுமானத்தில் பெரியார் சென்றிருக்கிறார். இது உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், செருப்பு ஒன்று போடப்பட்ட இடத்தில் இன்று சிலை ஒன்று முளைத்திருக்கிறது என்பது மட்டும் யதார்த்தம்.
  • ‘செருப்பால் அடித்தாலும் திருட்டுக் கை நில்லாது’, ‘செருப்பு போட்டவன் கூடவும் சன்னியாசி கூடவும் துணை போகாதே’ என்பது போன்ற பழமொழிகளும் நம் பண்பாட்டில் மிகுதி. தொடர்புடைய சமூகம் இன்று தன் சமூக மதிப்பைக் கோரி எழுந்து நிற்கத் தொடங்கிவிட்டது. செருப்பு வசைச் சொல்லிலிருந்து என்றைக்கு நற்சொல்லாக மாறப்போகிறதோ?

நன்றி: இந்து தமிழ் திசை (09 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்